ஏனோ மனம் தள்ளாடுதே 48 – 2

மருந்தையும் வாங்கிக்கொண்டு வந்து, காரை எடுத்தபடி, “வீட்டுக்கு வா!” என்றான் மீண்டும்.

எதிர்பாராமல் நடந்துபோனது பாரிய விடயம்தான். அதைச் சமாளிக்க, அவளைச் சமாதானப்படுத்த அவள் வேண்டுமே!

கூடவே, அவனால் அவள் இல்லாத அறைக்குள் போகவே முடியவில்லை. சுடு சொற்களைக் கொட்டினாலும் அவள் வேண்டும். முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் அவள் வேண்டும். அவனோடு சண்டையே பிடித்தாலும் அவள் மட்டும்தான் வேண்டும்!

அவளோ சத்தமே இல்லாமல் இருந்தாள்.

“அதுதான் கோவத்தில் அவசரப்பட்டுட்டன் எண்டு சொல்லுறன் தானே.” தன்னால் முடிந்தவரை தளைந்து போனான்.

“அவன் செய்தது ஒண்டும் எனக்குத் தெரியாதே பிரமி. நீயாவது சொல்லியிருக்க வேண்டாமா? தீபா சொல்லாட்டி இப்பவும் தெரிஞ்சு இருக்காது.” என்றான், அதையெல்லாம் அவள் தன்னிடம் சொல்லியிருக்க வேண்டும் என்கிற மனக்குறையோடு.

“எல்லாரும் எல்லாத்தையும் மறைச்சுப்போட்டுக் கடைசில என்னைக் குற்றவாளியா ஆக்கினா எப்பிடி பிரமி?”

அவள் தன் மௌன விரதத்தைக் கைவிட மாட்டேன் என்று நின்றாள். அதைத் தாங்க மாட்டாமல், “கொடுமை செய்றாயடி டீச்சரம்மா!” என்றான் கடுப்புடன்.

அவள் அசைய மறுத்தாள். அவனுக்குப் பொறுமை பறந்துகொண்டிருந்தது. “ஏதாவது சொல்லு பிரமி. வீட்டை வாறியா?” மெதுவாகக் குரல் உயர்ந்தது.

அப்போதும் யன்னல் புறமாகப் பார்வையைப் பதித்தபடி இருந்தவளிடம், “உனக்குத் திமிர் கூடிப்போச்சு. வேற ஒண்டும் இல்ல!” என்றான் பல்லைக் கடித்தபடி.

“நீ என்ன சொல்லுறது? நான் கார வீட்டுக்குத்தான் விடப்போறன். நீ வாறாய்!” என்று முடித்தான் அவன்.

அப்போதும் அசைந்தாள் இல்லை அவள். அவனுடைய கார் பேசாமல் அவளின் வீட்டின் முன்னால் சென்று நின்றது. கதவைத் திறந்துகொண்டு இறங்கியவளை நன்றாக முறைத்துவிட்டு அவனும் இறங்கினான்.

அவனும் தன்னுடன் வீட்டுக்குள் வரப்போகிறான் என்று உணர்ந்து, “நீங்க வரவேண்டாம்.” என்றாள், அவள்.

முகம் கருத்துப் போயிற்று அவனுக்கு. சட்டென்று ஒரு மூர்க்கம் நிறைந்த கோபம் உண்டாக, “ஏன் வரக்கூடாது? வந்தா என்ன? நானும் வருவன். நீ நட!” என்றான், பல்லைக் கடித்துக்கொண்டு.

இறங்கிப்போனா ஆகத்தான் சேட்டை விடுறாள்!

அவனுடன் மல்லுக்கட்டும் நிலையில் அவள் இல்லை. “எனக்கு ஏலாம இருக்கு. நான் கொஞ்சம் படுக்கோணும். அரியண்டம்(தொல்லை) தராம போங்கோ.” என்றாள் அலுப்புற்ற குரலில்.

அவன் மாட்டேன் என்று நின்றான். “நீ படு. நானும் உன்னோட வந்து இருந்திட்டு போறன் எண்டுதானே சொல்லுறன்.” அவனுக்கு அவளின் அருகாமை வேண்டுமாயிருந்தது. யாரிடமும் மனதைச் சொல்லிப் பழக்கமில்லை. தன் தேவைகளைச் சொல்லியும் பழகவில்லை. மனதிலிருப்பதைக் கொட்ட நண்பர்கள் இல்லை. அம்மா அப்பாவோடு அந்தளவுக்குச் சீரான உறவும் இல்லை. தம்பி தங்கைகளைப் பயப்படுத்தியே வைத்திருந்தான். அப்படியானவனுக்கு அவன் தேவை அவளின் அருகாமை என்பதை எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. வாயால் சொல்கிற அளவுக்கு இறங்கவும் முடியாது.

அவனின் மனைவியோ அவனைக் கொஞ்சமும் விளங்கிக் கொள்ளாமல் வீட்டுக்கு வராதே என்கிறாள். அவ்வளவு கோபம் வந்தது அவனுக்கு. ஆனாலும் பல்லைக் கடித்து அடக்கினான்.

முகத்தைத் திருப்பிப் பிடரிக் கேசத்தை அழுத்திக் கோதியவனுக்குக் கோபம் அடங்கமாட்டேன் என்றது.

“வெளிக்கிடுங்கோ!” என்றாள் மீண்டும்.

அவனுக்குப் பொறுமை பறந்து போயிற்று. “நீ என்ன சொல்லுறாய் எண்டு விளங்குதா உனக்கு.” என்று, கோபத்தில் விழிகள் சிவக்க அவளை நெருங்கினான்.

அவளுக்கு நிற்கவே முடியவில்லை. இதில் இவன் வேறு! “அப்பா வருத்தத்தில இருக்கிறார். இப்ப நீங்களும் அவரும் பாக்கிறது நல்லதுக்கில்ல. வீண் சண்டை சச்சரவுதான் வரும். தயவு செய்து போங்க!” என்று, அவன் வயிற்றில் பிடித்துத் தடுத்தாள்.

“அப்பிடி என்ன கதைப்பாராம் உன்ர அப்பா. அதையும் ஒருக்கா நானும் பாக்கிறன்?” என்று, சண்டைக்கு நின்றவனுக்கு ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்தாள் அவள்.

அவனும் பார்த்தான். அவள் விழிகளில் என்ன இருந்ததோ அப்படியே அடங்கினான் அவன். மனம் மட்டும் கொந்தளித்துக்கொண்டு இருந்தது. இடுப்பில் கையை வைத்து முகத்தைத் திருப்பி ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான்.

“இப்ப என்ன? உனக்கு நான் வரக்கூடாது அவ்வளவுதானே. போறன். நீ நல்ல சந்தோசமா இரு!” என்றுவிட்டு, காருக்குள் ஏறி சரக்கென்று ரிவர்ஸ் எடுத்துக்கொண்டு புழுதி பறக்கப் பறந்தான்.

நொடி கலங்கி நின்றுவிட்டு, வீட்டுக்குள் நடந்தாள் பிரமிளா.

அவனுடைய கார் வீட்டுக்குள் நுழைந்து மரத்தின் கீழே ஓய்வு பெற்ற கணத்தில், “வீட்டுக்கு போய்ட்டீங்களா?” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள் பிரமிளா.

‘பெரிய பாசம், போடி!’ என்று மனது முறுக்கிக்கொண்டாலும், “வந்தாச்சு வந்தாச்சு!” என்று கடுப்புடன் பதில் அனுப்பிவிட்டவன், இத்தனைக்கும் காரணமானவை தேடிக்கொண்டு போனான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock