“இல்ல, அண்ணா சொல்ல மாட்டன்!” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு அப்படியே நின்றான் தமையன். நெஞ்சில் என்னவோ செய்தது.
“தம்பி, சின்ன பிள்ளை, அவன் சந்தோசமா வாழட்டும் எண்டு நினைச்சா நீ என்ன எல்லாம் செய்திருக்கிறாய். ஆனா உன்னில பிழை இல்ல. உன்ர அண்ணி சொன்ன மாதிரி என்னிலதான் பிழை. உனக்குப் பிழையான உதாரணமா நான் இருந்திட்டன். அத நீ உனக்குச் சாதகமா பயன்படுத்தி இருக்கிறாய். அப்பிடித்தானே?”
மோகனனின் கண்களிலிருந்து கண்ணீர் மாத்திரமே வழிந்தது.
“அவளை எனக்குப் பிடிச்சிருந்தது. தெரியுமாடா அது உனக்கு?”
மோகனனுக்கு மெல்லிய அதிர்ச்சி. தமையனையே பார்த்தான்.
“அவள் எல்லாம் என்னை மாதிரி ஒருத்தன எந்தக் காலத்திலையும் விரும்பமாட்டாள். அது தெரிஞ்சதாலதான் கிடைச்ச சந்தர்ப்பத்தை வச்சு அவளைக் கட்டினனான். அப்பவும் அவளுக்கு வேற ஆரையும் பிடிச்சிருக்கா, விரும்புறாளா எண்டு விசாரிச்சனான். அதுக்கே அவள் இன்னும் என்னை மன்னிக்க இல்ல. ஆனா நீ, அதையே உனக்குச் சாதகமா பயன்படுத்தப் பாத்து இருக்கிறாய்?”
பதில் சொல்ல வராது நின்றான் மோகனன்.
“நான் செய்ததே எவ்வளவு பெரிய பிழை, அதை எப்பிடி நேராக்கப் போறன் எண்டு தெரியாம நான் இருக்க நீ எனக்கு மேலயே போயிருக்கிறாய். உன்னை என்ன செய்ய?”
அச்சத்துடன் நோக்கினான் மோகனன்.
“ரஜீவனுக்கு ஏன் அடிச்சனி?”
மோகனனுக்குப் பயத்தில் உதடு உலர்ந்து, தொண்டை எல்லாம் காய்ந்து போயிற்று.
“சொல்லு!”
“யாழிய வீடியோ எடுத்தவன் எண்டு.”
“அப்ப உன்னை நான் என்ன செய்றது?”
அவனுக்கு மீண்டும் உதறல் எடுத்தது. “அண்ணா பிளீஸ். இனி இப்பிடி நடக்க மாட்டன். தெரியாம செய்திட்டன். அவள் எனக்கு வேணும் எண்டுற ஆசையில செய்திட்டன் அண்ணா.”
தன் கெஞ்சலுக்குச் சற்றும் இரங்காமல் நின்ற தமையன் அவனுக்குள் பெரும் கிலியை உண்டாக்கினான்.
“அண்ணா பிளீஸ்…”
“அப்பா இருக்கிறார். அண்ணா இருக்கிறார். காசு பணம் இருக்கு. இதுதானே உன்ன இப்பிடி ஆட வச்சது? இது எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு விட்டா?” அவன் கேள்வியில் இவனுக்குச் சர்வமும் ஆடியது.
“அவள் சொன்னவள், உன்ர போக்குச் சரியில்ல, திருத்து எண்டு. நான்தான்டா கேக்கேல்லை. உனக்காக அவளையே குறை சொல்லி இருக்கிறன். கடைசில பாத்தா… அவள் சொன்னதுதான் சரியா இருந்திருக்கு.” என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டான்.
சற்று நேரம் தரையைப் பார்த்தபடி நின்றான். எதையோ முடிவாகச் சிந்திக்கிறான் என்று புரிந்தது.
என்ன சொல்லப் போகிறாரோ என்று நெஞ்செல்லாம் நடுங்க அவனையே பார்த்திருந்தான் மோகனன்.
சற்று நேரத்தில் நிமிர்ந்தான் கௌசிகன். அவன் விழிகளில் தீர்க்கம். “இன்னும் பத்து நாள்ல விசா வரும். சவுதிக்கு போறாய். லேபர் வேலை. மூண்டு வருசம். போய்ப் பாரு. வாழ்க்கை எண்டா என்ன, கஷ்டம் எண்டா என்ன, உழைப்பு எண்டா என்ன எண்டு அங்க போனா தெரியவரும்.” என்றான் முடிவாக.
“அண்ணா…” தன்னை மறந்து அலறினான் மோகனன். “என்னால ஏலாது. நான் போக மாட்டன். வேணுமெண்டா கொழும்பு பிராஞ்ச் நான் கவனிக்கிறன். இஞ்ச வராமையே இருக்கிறன்.” அறையை விட்டு வெளியேறப் போன தமையனின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.
“இல்ல! இது உனக்கும் தண்டனை. உனக்கு மோசமான அண்ணனா இருந்த எனக்கும் தண்டனை!” என்றுவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியேறினான் கௌசிகன்.
வாசலில் பெரும் அதிர்ச்சியும் கண்ணீருமாக நின்ற அன்னையைக் கருத்தில் கொள்ளாமல் வீட்டிலிருந்தும் வெளியேறினான்.
தன் ஹோட்டல் அறைக்குள் சென்று அடைந்துகொண்டவனுக்கு அவள் இல்லாத அவர்களின் அறையில் இருக்க முடிவதே இல்லை. அதில், மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஹோட்டலில் ஒரு அறையைத் தற்போதைக்குத் தனக்கேற்ப மாற்றிக்கொண்டிருந்தான்.
பால்கனியின் கம்பியைப் பற்றிக்கொண்டு நின்றவனின் நெஞ்சு முழுக்கப் பெரும் புழுக்கம்.
அன்று, மாணவிகளைப் போராட வைத்து, பெற்றவர்களை அவர்களுக்குக் காவலுக்கு வைத்து, பழைய மாணவிகளைத் துணைக்கழைத்து, போதாக்குறைக்குப் போலீஸ், கல்வி அமைச்சர், ஆசிரியர் சங்கம் என்று எதையும் விட்டுவைக்காமல் எல்லா இடமும் முறையிட்டு என்று அவள் வகுத்தது மிகச் சிறந்த வியூகம்.
அந்த வியூகத்தை உடைப்பது எப்படி என்று அவன் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில்தான், உச்சியில் ஓங்கி அடித்தது போன்று, தனபாலசிங்கம் தொடர்ந்து பணியாற்றலாம் என்றும், நிர்வாகசபையைக் கண்டித்தும் அமெரிக்க மிஷனிடமிருந்து மெயில் வந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கொதித்து எழுந்துவிட்டான் கௌசிகன்.
ஒரு பெண் இத்தனை பெரிய புரட்சியை நடத்துவாளா? அவளிடம் அதுவும் அவன் தோற்பதா? தனபாலசிங்கத்தை அசைத்தால் மாத்திரமே இந்த வெற்றியைத் தனக்குரியதாக மாற்றலாம் என்று கணித்தவனாகத்தான் காலையிலேயே அவரைச் சந்திக்கக் கல்லூரிக்குச் சென்றான்.
அவன் சென்றபோது, மேசையில் அந்தப் பேப்பர் விரிந்து கிடக்க, முகமெல்லாம் வியர்த்து வழிய, அவனை மிகுந்த வெறுப்புடன் நோக்கினார் தனபாலசிங்கம்.
அப்போதுதான் அவனும் அதைப் பார்த்தான். பார்த்த கணத்தில் மிகுந்த அதிர்ச்சிதான்.
அப்போதுதான் தனபாலசிங்கமே, “நானே ராஜினாமா செய்றன்! எங்களை விட்டுடுங்க. இதுக்கு மேல ஏலாது!” என்றார் எல்லாம் வெறுத்துப் போனவராக.
“முடிவில மாற்றம் இல்லையே?”
“மாறமாட்டன்!” என்று அவர் சொன்னதும், இதைச் செய்தவனை நொறுக்கிவிடும் சினத்துடன் வெளியே வந்தவனைத்தான் பிரமிளா பெரும் சீற்றத்துடன் எதிர்கொண்டாள்.
அன்று, அவளை அவனுக்குப் பிடிக்காதுதான். நடிக்கிறாள், நாடகமாடுகிறாள் என்று நினைத்தான்தான். என்றாலும், ஒரு பெண்ணாக அவளுக்கு இழைக்கப்பட்டது பெரும் பாவம் என்று, தன்னால் முடிந்தவரை அந்த மேகசீன் இருந்த கடைகள் எல்லாவற்றிலிருந்தும் அதை அள்ளி எரித்துப் போட்டிருந்தான்.
என்னதான் அவன் வேகமாகச் செயல்பட்டாலும் இன்றைய நவீன உலகத்தில் வெளியே கசிந்துவிட்ட ஒன்றைத் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியமாயிற்றே. கோபத்துடன் மோகனனைப் பிடித்துக் கடுமையாகக் கண்டித்துக்கொண்டு இருந்தபோதுதான் செல்வராணி வந்து அறைந்தார்.
அவரிடம் உண்மையைச் சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. செய்தது என்னவோ மோகனன்தான். ஆனால், செய்ய வைத்தது, ‘என்னவாவது செய்’ என்ற அவனுடைய வார்த்தையாகிப் போயிற்றே!
அன்று, என்னால்தான் என்கிற எண்ணம் அவனைக் கடுமையாகத் தண்டிக்க விடவில்லை. இன்றோ, அதுவே மிகப்பெரிய தவறாக வந்து நின்றிருந்தது.