அப்போது சைரன் ஒலித்தபடி அதிவேகமாய் வந்து நின்ற காவல்துறையின் வாகனத்திலிருந்து குதித்து ஓடிவந்த காவல்துறையினர் நடுவில் புகுந்து, பெரும்பாட்டுக்கு மத்தியில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இன்னுமே மேலதிகமாகக் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நிலமை அதி தீவிரமானது.
பிள்ளைகள் தாக்கப்பட்டதில் இரத்தம் கொதிக்க நின்ற பெற்றவர்களையும், நடந்ததைக் கேள்விப்பட்டு இன்னும் வந்து குவியத் தொடங்கிய பொது மக்களையும் கண்டு பிரச்சனை பெரிசாகப் போகிறது என்று தெரிந்துபோயிற்று. உடனேயே, “பெற்றார், பொது மக்கள் எல்லாரும் வெளில போங்கோ. இது பள்ளிக்கூடப் பிரச்சனை.” என்று போலீஸ் அறிவித்தது.
அதைக் கேட்டுப் பெற்றோர்கள் கொந்தளிக்கத் துவங்கினர். “காட்டுமிராண்டிக் கூட்டம் வந்து எங்கட பிள்ளைகள்ல கை வைப்பினமாம்(வைப்பார்களாம்). காயப்படுத்துவினமாம். டீச்சரை தள்ளி விழுத்துவினமாம். ஆனா ஏன் எண்டு கேட்ட பெற்றவர்கள் வெளில போகோணுமோ? பள்ளிக்கூடப் பிரச்னையைப் பள்ளிக்கூடம் பாக்கட்டும். இப்ப காயப்பட்ட எங்கட பிள்ளைகளுக்கு நீதி வேணும்.” என்று நின்றனர் பெற்றோர்கள்.
பிரச்சனை அதி தீவிரமாக மாறுவதை உணர்ந்து நிர்வாகசபையோடு வந்திருந்த அடியாட்கள் ஒவ்வொருவராகச் சத்தமே இல்லாமல் நழுவினர்.
இந்த நிலையில் யாழ் மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் தலைமையிலான போலீஸ் உயர் அதிகாரிகள் கல்லூரிக்கு விரைந்து வந்தனர்.
கல்லூரி வளாகத்துக்குள் நின்றிருந்த பழைய மாணவர்கள், பெற்றவர்கள் என்று எல்லோரையும் வெளியேறுமாறு அறிவித்தனர். மாணவிகள் மீது நடத்தப்பட்ட காடைத்தனமான தாக்குதலுக்கு மிகவும் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதுவரை, காயம்பட்டிருந்த மாணவியருக்கு முதலுதவி செய்து, சற்று ஆழமான காயம் என்றால் வைத்தியசாலைக்கு அனுப்புவதில் கவனமாக இருந்த பிரமிளாவுக்குச் சினம் பெருகிற்று! அநியாயம் நடந்தபோது பாதுகாக்காத காவல்துறையின் கண்டனத்தை வைத்து ஒரு மாணவியின் வலியைப் போக்க முடியுமா?
சக ஆசிரியையிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகரிடம் வந்தாள்.
“கண்ணுக்கு முன்னால இத்தனை அநியாயம் நடந்தும் வெளில காவலுக்கு நிண்ட போலீஸ் தடுக்கவே இல்ல. கண்டும் காணாத மாதிரி நிண்டது. அப்படியான காவல்துறை இனி நடவடிக்கை எடுக்குமா? இத நாங்க நம்போணுமோ?” என்று கொந்தளித்தாள்.
“சாதாரணப் பொது மக்களுக்கே தெரியும், அனுமதி இல்லாமல் முறையான காரணம் இல்லாமல் ஒரு பாடசாலைக்க ஆரும் வரக் கூடாது எண்டு. அப்படியிருக்க நிர்வாகசபையோட சேர்ந்து வந்த கும்பலை வாசல்ல நிண்ட போலீஸ் எப்பிடி அனுமதிச்சவே? என்ன காரணம் சொல்லி வந்தவே? இப்படித்தான் மக்களையும் மாணவர்களையும் போலீஸ் காவல் காக்குமோ?”
அவளின் ஆவேசத்துக்கு நிதானமாகப் பதிலளித்தார் போலீஸ் மா அதிபர்.
“நடந்தது தவறுதான் மிஸ். கட்டாயம் அதுக்கு முறையான விளக்கம் பெறப்பட்டு, தவறு இருக்கும் பட்சத்தில தண்டனை வழங்கப்படும்! நடந்ததுக்கு நாங்களும் வருந்துறோம்.”
இப்படி மேல் பூச்சு பூசுகிற மனிதர் மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்தாள். வேறு வழியும் இல்லையே!
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. இது நிர்வாகசபை மட்டுமே முன்னெடுக்கும் விடயமன்று! ஏதோ ஒரு சக்தி பின்னிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறது! அந்தச் சக்திக்குக் காவல்துறையைக் கட்டுப்படுத்தும் வல்லமை கூட இருக்கிறது.
அந்தச் சக்தியும் சிங்கப்பூரிலிருந்து அனைத்தையும் செவிவழி கேட்டுக்கொண்டுதான் இருந்தான். செல்லமுத்து நகைமாடத்துக்கு மட்டுமே உரிமம் பெற்ற நகைகளின் புது வகையான டிசைன்களை சாம்பிளாக உருவாக்கி, அதில் எதையெல்லாம் விற்பனைக்குக் கொண்டுவருவது என்கிற முக்கிய வேலையில் சிக்கியிருந்தான்.
மாணவிகளிடமும் போராட்டத்தைக் கைவிடும்படியும் கோரிக்கை வைத்தார் சிரேஷ்ட பொலிஸ்மா அத்தியட்சகர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள் மாணவிகள். “நாங்க எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கேல்ல சேர். போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. எங்கட அதிபர் திரும்ப எங்களுக்கு அதிபராகிறவரைக்கும் இந்தப் போராட்டம் தொடரும். முறையில்லாம அவரை வெளியேற்ற நாங்க அனுமதிக்க மாட்டோம்.” என்று உறுதியாக எடுத்துரைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ‘உங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அமைதியான முறையில் உங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’ என்பதை அவர்களுக்கு வலியுறுத்தினார்.
அதேபோல இந்தக் கல்லூரியின் ஆசிரியர்களை வரக் கூடாது என்று தடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.
இனி எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது என்கிற உறுதியைக் கொடுத்து, பெற்றோர்களையும் கல்லூரிக்குள் இருந்து வெளியேற்றினார்.
அங்கே வெளியே உடனுக்குடன் செய்திகளைச் சேகரித்து ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருந்த அத்தனை செய்தியாளர்களும் வெளியேற்றப்பட்டு, கல்லூரிக்கு வெளியே சுற்றியிருந்த பொதுமக்களும் பொலிஸாரால் அகற்றப்பட்டு, கல்லூரி பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் முழுமையாகக் கொண்டுவரப்பட்டது.
நடக்கும் போராட்டத்தை வெளியே கொண்டுபோகாமல் கல்லூரிக்குள்ளேயே முடக்குகிறார்கள் என்று புரிந்து போயிற்று! மாணவிகளைப் பார்த்தாள். அன்று முழுக்க ஒழுங்கான உணவின்றி, கத்தியதில் தொண்டை வலியெடுத்து, களைத்துப்போய் நடந்த கலவரத்தில் உடலெங்கும் வலிகளைச் சுமந்தபடி ஆங்காங்கே தரையில் அமர்ந்தும் சரிந்தும் என்றும் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்.
மாலை கடந்துகொண்டிருந்தது. இரவினில் இவர்களை இங்கே வைத்திருப்பது ஆபத்தாயிற்றே என்று அவள் நினைக்க, பாய் தலையணைகளுடன் வந்து இறங்கினார்கள் பெற்றவர்கள். “அரைவாசிப் பிள்ளைகள் வீட்டை போகட்டும். பாதிப்பேர் இஞ்ச இருக்கட்டும். நாங்களும் இருக்கிறோம்! ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம்.” என்றவர்கள் உணவுடனேயே வந்திருந்தனர்.
அன்றைய நாளின் அத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் முதன் முறையாக மனத்தினில் வெகு இதமாக உணர்ந்தாள் பிரமிளா. இது கல்வி கற்ற, படித்த, சிந்தித்துச் செயலாற்றும் சமூகம். ஒரு கல்லூரியின், அதன் நியாயமான போராட்டத்தின் ஆழத்தை, முக்கியத்தை உணர்ந்த சமூகம். இப்படித்தானே கைகொடுக்கும்!
மனம் நிறையச் சற்றே அதிகமாகக் களைத்துப்போன மாணவியரைப் பெற்றவர்களின் துணையுடன் அவரவரின் வீடுகளுக்கு அனுப்பிவைத்தாள். ஆசிரியர்களும் அரைவாசிப்பேர் வீட்டுக்கும் மிகுதிப்பேர் பள்ளிக்கூடத்திலும் தங்குவதாக முடிவாயிற்று.
தனபாலசிங்கத்தை வீட்டுக்குப் போகச் சொன்னாள்.
“பிள்ளைகளோடதான் நானும் இருப்பன். என்னை வேற எதுக்கும் கட்டாயப் படுத்தாத அம்மாச்சி!” என்று பிடிவாதமாக மறுத்தார் அவர்.
உணவு முடிந்து எல்லோரையும் உறங்கவிட்ட பிறகு தன் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு அமர்ந்தவள், வட மாகாண கல்வி அமைச்சருக்கும், அமெரிக்க மிஷனுக்கும் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒரு மெயிலாக்கி, கூடவே வெளியே நின்று புகைப்படம் வீடியோ எடுத்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட, ரவுடிக் கும்பல் மூடத்தனமாக மாணவிகளைத் தாக்கும் புகைப்படங்கள் வீடியோக்களையும் அதில் அடக்கி அவர்களுக்கு அனுப்பிவைத்தாள்.
அப்படியே, இங்குக் கற்று நல்ல பதவியில், முக்கியமாக அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், வெளிநாடுகளில் இயங்கும் அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் சங்களுக்கும் அனுப்பிவிட்டாள்.
விரைவான முடிவை எடுத்தே ஆக வேண்டும்!
அதே எண்ணத்துடன் சிங்கப்பூரிலிருந்து கௌசிகனும் அடுத்தநாள் இலங்கை வருவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான்.


