அத்தியாயம் 52
அடுத்த நாள் காலையிலேயே, “அக்கா, அத்தான் உங்களைப் பள்ளிக்கூடம் வர வேண்டாமாம். அவர் லீவுக்குச் சொல்லிட்டாராம்.” என்று, வந்து சொல்லிவிட்டுப் போனாள் தீபா.
தலையில் இடியே விழுந்தாலும் கல்லூரிக்கு வந்து நிற்பாள் என்று கணித்து, அவள் தயாராவதற்கு முதலே சொல்லிவிட்டிருக்கிறான். உதட்டோரம் அரும்பிய மெல்லிய முறுவலுடன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தாள் பிரமிளா.
உயர்தரத்து மாணவியருக்கு மட்டும் செய்ய வேண்டிய பயிற்சிப் பேப்பர்களை pdf வடிவில் புலனத்தில் அனுப்பிவிட்டாள். கூடவே, அது பற்றிய விளக்கத்தை, அவர்கள் கவனிக்க வேண்டிய பாடத்தைப் பற்றிய விளக்கக் குறிப்பை வொயிஸ் மெசேஜில் அனுப்பி, சந்தேகம் இருந்தால் கேட்கும்படியும் தெரிவித்துவிட்டாள்.
தனபாலசிங்கத்தைப் போய்ப் பார்த்துக்கொண்டு அப்படியே இங்கு வந்து பிரமிளாவையும் பார்த்துக்கொண்டு போனார் செல்வராணி.
தீபாவும் அவருக்கான பத்திய உணவைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்து, “அத்தான் அங்க நிக்கிறார் அக்கா. ‘ரஜீவன் வருவான், நீ நிக்கத் தேவையில்லை. உன்ர அக்காவோட போயிரு!’ எண்டு துரத்தி விட்டுட்டார்.” என்றாள், முகத்தைச் சுருக்கிக்கொண்டு.
தங்கையின் செயலில் சின்ன முறுவல் ஒன்று அரும்பினாலும், இப்போது அவன் தங்களுக்கும் சேர்த்து ஓடுகிறான் என்று கவலையாயிற்று அவளுக்கு.
“நான் ஒருக்கா அப்பாவைப் போய்ப் பாத்துக்கொண்டு வரட்டாம்மா? நீ தீபாவோட இருப்பியா?” என்று, அவளருகில் வந்து அமர்ந்துகொண்டு கேட்டார் சரிதா.
செல்வராணி, தீபா, ரஜீவன் என்று எல்லோருமே கணவர் நன்றாக இருப்பதாகத்தான் சொன்னார்கள். யார் வந்து சொன்னாலும் அவரே போய்ப் பார்த்து வருவதுபோல் ஆகாதே.
அவளுக்கே அப்பாவைப் பார்க்காமல் இருப்பது ஒரு மாதிரி இருக்க அவருக்கு? “தீபா என்னத்துக்கு? நான் இருப்பன். நீங்க அவளோட போயிட்டு வாங்கோம்மா.” என்றாள் கனிவுடன்.
“அப்பிடி உன்ன இனியும் தனிய விட்டுட்டுப் போகேலாதம்மா. அவள் நிக்கட்டும். ரஜீவனிட்ட சொன்னா ஒரு ஆட்டோ அனுப்பிவிடுவான். நான் அதிலயே போயிட்டுத் திரும்பியும் வந்திடுவன்.” என்றார் அவர்.
நொடியில் யோசித்து, கணவனை இங்கே வரவைக்க இதுதான் தக்க தருணம் என்று கணித்து, “பொறுங்கோம்மா. இவரோட கதைச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்று அறைக்கு வந்து அவனுக்கு அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே எடுத்தான் அவன். நிறைமாதத்தை நெருங்கும் மனைவியின் மீதான அவனின் அக்கறை அதிலேயே தெரிந்தாலும், “மனுசி எப்பிடி இருக்கிறாள், என்ன செய்றாள் எண்டு வந்து பாக்க மாட்டீங்களா?” என்றாள் வேண்டுமென்றே.
“மாமியும் தீபாவும் நிக்கினம்(நிற்கிறார்கள்) தானே?” என்றான் அவன்.
இன்னுமே அந்த விலகல் பேச்சில் மாற்றமில்லை. அது அவளை வருத்தியது. எது எப்படியானாலும் அவனைச் சமாதானம் செய்துவிட விரும்பினாள்.
“நீங்க வாங்கோ.”
“எனக்கு வேலை இருக்கு.”
“அப்ப வரமாட்டீங்களா? இந்தளவுதான் உங்களுக்கு என்னில இருக்கிற அக்கறை என்ன?”
அவனிடத்தில் சற்று நேரத்துக்குப் பதில் இல்லை. அவளும் கோபத்தைக் காட்டுகிறவளாகச் சத்தமே இல்லாமல் இருந்தாள். அதில், “நேற்று வராத எண்டு சொன்ன.” என்றான்.
“என்னைக் கட்ட வேண்டாம், உங்கள எனக்குப் பிடிக்கேல்ல எண்டும்தான் சொன்னனான்.” பட்டென்று சொன்ன பிறகுதான் சொல்லியிருக்க வேண்டாமோ என்று நினைத்தாள். விட்டால் உலகத்திலேயே இல்லாத நல்லவன் போன்று கதைத்தால் அவளும்தான் என்ன செய்வாள்?
“நீங்க வந்தா உங்களோட என்னை விட்டுட்டு, அம்மா தீபாவோட போய் அப்பாவைப் பாத்துக்கொண்டு வருவா.” என்றாள் மீண்டும்.
அப்போதும் அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் அவளுக்கு ஒரு மாதிரி ஆகிற்று.
எப்படிச் சொல்வது என்று தெரியாமல் சற்றுத் தடுமாறிவிட்டு, “எனக்கு உங்களப் பாக்கவேணும் மாதிரி இருக்கு. வரமாட்டீங்களா?” என்றாள் கெஞ்சும் குரலில்.
சற்று நேரம் அந்தப் பக்கம் சத்தமே இல்லை. பிறகு பேசியவனின் குரல் கரகரப்புடன் ஒலித்தது. “வை வாறன்!” என்றுவிட்டு வந்தவனின் முகம் இன்னும் நேற்றுப்போலவே இருக்கப் பரிதவித்துப்போனாள் பிரமிளா.
குறையாமல் கொட்டிக்கிடக்கும் செருக்கும் திமிரும்தான் அவனைத் தனித்துக் காட்டுவதே. அது இல்லாமல் அவன் அவனாகவே இல்லை.
இந்தளவுக்கு, ஒரு சொல்லுக்கு உடைந்துபோகிற ஆள் அல்லவே அவன். அவளின் வார்த்தைகள் மிக ஆழமாகக் காயப்படுத்திற்றோ?
ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு, ஒரு காலை மற்ற காலின் மேலே மடித்துப் போட்டபடி, கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னே கோர்த்துக் கண்களை மூடிக்கொண்டான் அவன். இறுகிய தாடையும் புருவச் சுழிப்பும் அமைதியில்லாமல் அலைபாய்கிறான் என்று சொல்லிற்று!
அவளுக்குள் கலக்கம் உண்டாயிற்று. எப்படி இவனை வழிக்குக் கொண்டுவருவது என்று தெரியாமல், “சாப்பிட்டிங்களா?” என்று கேட்டாள்.
“ம்ம்.” இருந்த நிலை மாறாது சொன்னான் அவன்.
“எங்க?”
“கடையில.” என்றவனை முறைத்தாள் அவள். அது அவனைச் சேரவே இல்லை.
“மாமி சமைச்சிருப்பாதானே. பிறகு என்னத்துக்குக் கடையில சாப்பிட்டீங்க.” எதற்கோ பொங்கிய கோபத்தை எதிலோ காட்டினாள்.
இப்போதும் இருந்த நிலையை அவன் மாற்றவில்லை. ஆனால், கண்களை மட்டும் திறந்து அவளைப் பார்த்தான்.
பிரமிளா திகைத்தாள். அந்தக் கண்கள் அவளை என்னவோ செய்தன.
தீபாவை அழைத்து அவனுக்கு உணவு கொண்டு வரச் சொன்னாள். வேண்டாம் என்று மறுத்தவனை ஒற்றைப் பார்வையில் அடக்கினாள்.
தீபாவுக்குத் தன்னைக் கண்டும் சீண்டாத அத்தான் புதிதாகத் தெரிந்தான். குழப்பத்துடன் தமக்கையைப் பார்த்தாள். அவளுக்குப் பதில் சொல்லும் மனநிலையில் பிரமிளா இல்லை.
தீபாவும் சரிதாவும் சொல்லிக்கொண்டு வைத்தியசாலைக்குப் புறப்பட்டனர். அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு வந்து அதே நாற்காலியில் மீண்டும் அமர்ந்தான்.
பார்க்கத்தானே கூப்பிட்டாய் நன்றாகப் பார்த்துக்கொள் என்பதுபோல் இருந்த அவனின் செய்கையில் பிரமிளாவுக்குக் கோபம்தான் வந்தது.
என்றாலும் அடக்கி, “எனக்குப் பக்கத்தில வந்து இருங்க.” என்றாள் கட்டிலைக் காட்டி.
அவன் அசையாமல் இருக்க, “வாங்கோவன்!” என்றாள் கெஞ்சலாக.
ஒரு பெருமூச்சுடன் எழுந்து அவளருகில் வரப்போனான் அவன். இருந்த இடத்திலிருந்து அவனை ஆட்டிப்படைக்கிறோம் என்று புரிந்தது அவளுக்கு. வேறு வழியில்லை. இந்த இவனையெல்லாம் அவளால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது!
“ஷர்ட்ட கழட்டிப்போட்டு வாங்க. பிறகு, சட்டை கசங்கி இருந்தா தீபா நினைப்பாள் நான் என்னவோ உங்களைச் செய்யக் கூடாததெல்லாம் செய்திட்டன் எண்டு.” என்றாள் சிரிப்பைக் கண்களுக்குள் மட்டுமே அடக்கியபடி.
மெல்லிய திகைப்புடன் அவளைப் பார்த்தான் அவன். மனைவியின் சிரிக்கும் விழிகளைச் சற்றுக்குக் கவ்வி நின்றது அவன் பார்வை. ஆனாலும் வாயைத் திறக்கவில்லை.
அவள் சொன்னது போலவே சட்டையைக் கழற்றிவிட்டு வந்து அவளின் அருகில் காலை நீட்டி அமர்ந்துகொண்டான். அவளும் அவனை நெருங்கி அமர்ந்தாள். அவனுடைய கையை எடுத்துத் தானே தன் தோளைச் சுற்றிப் போட்டுக்கொண்டாள். அவனுடைய மற்றக் கையை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள்.
அவள் செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தானே தவிரப் பேசவில்லை.
“என்னோட கோவமா?”
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தான் அவன்.
“பொய்! இல்லை எண்டு என்ர கண்ணைப் பாத்துச் சொல்லுங்க பாப்பம்!” என்று சவால் விட்டாள் அவள்.
அவன் அதைச் செய்ய மறுத்தான்.
“ஏன் இப்பிடி இருக்கிறீங்க? என்ன எண்டு சொன்னாத்தானே எனக்குத் தெரியும்?”
அவன் அசையவே இல்லை. அவளும் விடவில்லை. திரும்ப திரும்பக் கேட்டாள். கடைசியில் வாயே திறக்கிறான் இல்லையே என்றதும், “இப்ப என்ன உங்களுக்கு என்னை அழ வைக்கோணுமா?” என்று அவள் கலங்கியபோதுதான் அவன் வாயைத் திறந்தான்.
“என்னை நீ ஆணவக்காரன் எண்டு சொல்லு, அகங்காரம் பிடிச்சவன் எண்டு சொல்லு, திமிர் பிடிச்சவன், செருக்கன் இப்பிடி என்ன எண்டாலும் சொல்லு. ஓம் எண்டு கேக்கிறன். ஆனா பொம்பிளைப் பொ…” கனத்திருந்த குரலில் அவளின் முகம் பாராமல் சொல்லிக்கொண்டிருந்தவனின் உதட்டில் வேகமாக விரல் வைத்துத் தடுத்தாள் அவள்.
அவன் கண்களையே பார்த்து, “சத்தியமா நான் அப்பிடி நினைக்கேல்ல. நீங்க அப்பிடியான ஆள் இல்ல. எனக்குத் தெரியும். நீங்க வாட்ட சாட்டமா இருக்கிறதைப் பாத்து, எவளாவது மயங்கிக் காதலை சொல்லி இருந்தா கூட, அவளையும் தூக்கிக்கொண்டு போய் நாலு சாத்துச் சாத்தி அனுப்பி இருப்பீங்களே தவிர, வேற வேலை செய்து இருக்க மாட்டீங்க.” என்றவளை நன்றாகவே முறைத்தான் அவன்.
அவளுக்குத் தான் சொன்னதை எண்ணிச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. அவனுக்குப் பயந்து அடக்கிக்கொண்டாள்.
“மோகனனையும் அப்பிடிச் சொல்ல இல்ல. ஆனா, யோசிச்சுப் பாருங்கோ, ஒரு பொம்பிளையின்ர சேலை விலகின ஃபோட்டோ போடுறது கூடாதுதானே? அதைச் செய்யிற அளவுக்குப் போறதுக்கு அந்த மனம் எவ்வளவு அழுக்கா இருக்கோணும். அந்தளவுக்கு நீங்க அவனைக் கவனிக்காம விட்டுட்டீங்க. அப்பிடி நீங்க விட்டா அவன் இன்னும் மோசமாத்தானே போவான். அதைத்தான் சொன்னனான்.” என்று, தன்மையாகவே எடுத்துச் சொன்னாள் அவள்.
அது உண்மை என்பதில் அவன் பேசாமலே இருந்தான்.
“முதல் இது என்ன பழக்கம், இந்தக் காலத்திலயும் கை நீட்டுறது. வாயால சொல்லுங்கோ, கேக்காட்டி அதுக்குத் தண்டனையா வேற செய்யுங்கோ. உங்கட கை நீண்டது இதுதான் கடைசியா இருக்கோணும்!” என்றாள் அழுத்தமான குரலில்.
அவன் திரும்பி அவளைப் பார்த்தான். கன்னத்தில் பதிந்த பார்வை வருத்தத்தோடு நெற்றிக் காயத்தில் சென்று நின்றது. இன்று அவள் பிளாஸ்ட்டர் ஒட்டத் தேவை இருக்கவில்லை. ஆனால், நீலம் பாய்ந்திருந்த இடம் மெல்லிய கருமை வர்ணம் பூசியிருந்தது.
தன் விரல்களால் அந்த இடத்தை வருடிவிட்டான். வருத்தத்தோடு அவளை ஒருமுறை பார்த்தவன் அதன் மீது தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். திரும்பத் திரும்ப.
அவளின் விழிகள் மெலிதாகக் கலங்கிற்று. அவளாகத் தன்னைச் சுற்றிப் போட்டுக்கொண்ட அவனுடைய கைகள் இப்போது தாமாகவே அவளை அணைத்துக்கொண்டன. கன்னம் வருடினான். மனத்தில் இதம் பரவ அப்படியே இருந்துகொண்டாள் பிரமிளா.
“மாமாட்ட நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாதுதான். எடுத்து மன்னிப்புக் கேக்கட்டா?”
அவன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தான்.
“இப்பிடிப் பாத்தா என்ன அர்த்தம்? சொல்லுங்கோவன்.”
“இல்ல வேண்டாம் விடு. அவரிட்ட நான் கதைக்கிறன்.” குரலைச் செருமிக்கொண்டு சொன்னான் அவன்.
“இல்ல. பிழையா கதைச்சது நான். அப்ப மன்னிப்பும் நான்தான் கேக்கோணும். மற்றவைய மாதிரி என்ன செய்தாலும் மன்னிப்புக் கேக்க மாட்டன் எண்டு நிக்கிற ஆள் நான் இல்ல.” என்றாள் கடைக்கண்ணால் அவனை நோக்கியபடி.
அவன் உதட்டோரம் மெல்லிய நகைப்பொன்று வந்தும் வராமலும் நின்றது. அதைப் பார்த்தபோது அவள் மனம் துள்ளிற்று!
“இப்ப நீங்க ஏதாவது கோவமா சொல்லோணும்.” கண்களில் வெளிச்சம் மின்னச் சொன்னாள் அவள்.
அவன் விளங்காமல் புருவங்களைச் சுருக்க, “கேக்க மாட்டன்! உன்னால என்ன செய்ய ஏலுமோ செய் எண்டு நீங்க இப்ப சண்டைக்கு வரோணும். வந்தாத்தான் அது நீங்க. அப்பதான் நீங்க நோர்மலா இருக்கிறீங்க எண்டு அர்த்தம்.” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.
அதற்குமேல் பொறுக்க மாட்டாமல், “இப்ப என்னடி பிரச்சினை உனக்கு? மனுசன ஒரு நிலையில இருக்க விடவே மாட்டியா?” என்று சீறியவன், அதே வேகத்தோடு அவளின் இதழ்களைச் சிறை செய்தான். பிரமிளாவும் தடுக்கவில்லை.
இத்தனை வருடங்களாகத் தான் வகுத்த பாதையில் மட்டுமே பயணித்துவிட்டவன் இந்தளவு தூரத்துக்கு அவள் சொன்னதைக் காது கொடுத்துக் கேட்டதே மிகப்பெரிய மாற்றமாகத் தோன்றிற்று.
அவன் மாறுவான். இனி அவள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்பான் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறானே. கணவனின் தேவைக்குத் தானும் இணங்கினாள் பிரமிளா.