ஒரு வழியாகத் தனபாலசிங்கம் வீடு வந்து சேர்ந்திருந்தார். அப்படியே, தீபாவையும் திருகோணமலைக்கு அனுப்பிவைத்தான் கௌசிகன்.
இப்படி, இந்தப் பக்கம் மனைவி வீட்டுக்கான வேலைகளைக் கவனித்துக்கொண்டாலும் அந்தப் பக்கம் மோகனனை சவுதிக்கு அனுப்பிவைக்கும் அலுவலையும் அவன் விட்டுவிடவில்லை.
அந்தச் சில நாட்களாக அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான் மோகனன். அவன் என்ன நினைக்கிறான், என்ன மனநிலையில் இருக்கிறான் என்று கவனிக்க யாருமே விரும்பவில்லை.
செல்வராணிதான் மனம் கேளாமல் உணவை மட்டும் கவனித்துக்கொண்டார். மகன், குணம் கெட்டவன் என்று மனத்தில் பதிந்துவிட்ட எண்ணம் அதைத் தாண்டி அவனோடு பேசவோ, அவனைத் தேற்றவோ விடவில்லை. அவன் மீது பற்றற்றுப்போன உணர்வு.
இன்னும் மூன்று நாட்களில் அவன் கொழும்புக்குப் புறப்பட வேண்டுமாம் என்று அன்னை மூலம் அறிந்துகொண்ட மோகனன், அன்று இரவு வீட்டுக்கு வந்த கௌசிகனைத் தானே சென்று சந்தித்தான்.
“உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா அண்ணா?”
எந்த வெளிப்பூச்சும் இல்லாமல் நேரடியாகக் கேட்டவனை நிதானமாக அளவிட்டான் கௌசிகன். இந்தக் கொஞ்ச நாட்களாக வழித்து விடாத தாடி, கலைந்த தலை, சிவந்த கண்கள், கசங்கிய ஆடை என்று என்னவோ போலிருந்தான். அவன் இப்படியானதற்கு நீயும் உன் குணமும்தான் காரணம் என்று பிரமிளா சொன்னது நினைவில் மின்னி மறைந்தது.
“அண்ணிய உங்களுக்கு எப்பிடிப் பிடிச்சதோ அப்பிடித்தான் அண்ணா எனக்கும் தீபாவைப் பிடிச்சது. பிறகும் ஏன் என்னை மட்டும் குற்றவாளி ஆக்கி இருக்கிறீங்க? போட்டோ எடிட் செய்தது பிழைதான். பப்லிக்ல போடுவன் எண்டு வெருட்டினதும் பிழைதான். ஆனா செய்து இருக்க மாட்டன். திருகோணமலையில பாத்த முதல் நாளே என்னை அவள் விரும்பவே மாட்டாள் எண்டு தெரிஞ்சிட்டுது. அவள் எனக்குக் கிடைக்க மாட்டாளோ எண்டுற பயத்திலதான் வேற வழில அவளை என்னட்ட கொண்டுவர நினைச்சன். அதுக்கு அவள எனக்குக் கிடைக்கவே வழி இல்லாம செய்வீங்களா?”
பேச்சில் தெறித்த கோபம் தீபாவை அவனுக்கு உண்மையிலேயே பிடித்துத்தான் இருக்கிறது என்று உணர்த்திற்று. ஆனால், இதற்கு எதிர்காலம் இல்லையே!
“இல்ல, என்னை விட இப்ப அந்தக் குடும்பம் உங்களுக்கு முக்கியமா போயிட்டுதா அண்ணா?” அவன் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியையும் கேட்டிருந்தான் அவன்.
கௌசிகன் நிதானமாக ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டான். எதிரில் இருந்த இருக்கையைக் காட்டி, “இரு!” என்றான்.
“இல்ல! எனக்கு நீங்க பதிலை மட்டும் சொல்லுங்க!”
“முதல் விசயம் இது எப்பிடி என்ர குடும்பமோ அதேமாதிரி அதுவும் என்ர குடும்பம்தான்!” என்றதுமே அவன் முகம் கறுத்துப் போயிற்று. நேற்று வந்த அவர்களும் கூடப்பிறந்த அவனும் ஒன்றா?
“ரெண்டாவது, அவளும் உன்ன விரும்பி இருந்தா கதையே வேற. பிரமி வேண்டாம் எண்டு சொல்லியிருந்தாலும், ஏன் அவளுக்கு நான் வாக்கே குடுத்திருந்தாலும் உனக்குக் கட்டி வச்சிருப்பன். ஆனா இஞ்ச தீபாக்கு வேற ஒருத்தனைப் பிடிச்சிருக்கு.” என்றதும் அவன் முகம் கசங்கிப் போயிற்று.
“அதைவிடத் தங்கட காதலை நிரூபிக்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பாக்காம இத்தனை வருசமா பிரிஞ்சு இருக்கினம். இன்னும் ஆறு மாதத்தில நாங்க சேர்ந்திடுவோம் எண்டு நம்பிக்கொண்டு இருக்கிறதுகளை எப்பிடிப் பிரிக்கச் சொல்லுறாய்? இஞ்ச மாறவேண்டியவன் நீதான். சவூதி போயிட்டு மூண்டு வருசம் கழிச்சுத் திரும்ப வரேக்க நீயே மாறியிருப்பாய். அதால பயணத்துக்கு ரெடியாகு!” என்று முடித்தான் தமையன்.
“அண்ணிக்கும் இப்பிடி ஒரு காதல் இருந்திருந்தாலும் அவவையும் விட்டுக் குடுத்து இருப்பீங்களா அண்ணா?”
அந்தக் கேள்வியில் நரம்பெல்லாம் புடைத்துப்போனது அவனுக்கு. பளார் என்று போட்டுவிட ஆவேசம் எழுந்த வேளையில்தான் அக்கேள்வியில் இருந்த உண்மை உறைக்க வாயடைத்து நின்றான் அவன். முடியுமா?
“இல்லைதானே?” என்றான் ஒரு வறண்ட சிரிப்புடன். “என்னால அவளை மறக்க முடியேல்ல அண்ணா. நீங்க தலையிட்ட பிறகு உங்கள மீறி ஒண்டும் செய்யவும் முடியேல்ல. எனக்கு நீங்க நரகத்தைக் காட்டி இருக்கிறீங்க அண்ணா.” என்றுவிட்டுப் போனான் அவன்.
இருந்த இடத்தில் அப்படியே சமைந்துபோயிருந்தான் கௌசிகன். சில கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை. அப்படியான ஒரு கேள்விதான் மோகனன் சற்றுமுன் அவனிடம் கேட்டது!
அண்ணா எனக்காக நிற்பார் என்று முழுமையாக நம்பினான் மோகனன். அந்த நம்பிக்கைதான் எல்லைகள் தாண்டும் தைரியத்தைக் கொடுத்தது.
அவளுக்குத் தன்னைப் பிடிக்கிறதோ இல்லையோ, அவள் தனக்குத்தான் என்பதில் அசையாத நம்பிக்கை கொள்ள வைத்ததும் அதுதான். இன்றைக்கோ அவனின் நம்பிக்கை, ஆசை, கனவு எல்லாமே தரைமட்டமாயிற்று.
பிறந்ததிலிருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தன்னை, அரபு நாட்டுக்கு நாடு கடத்துகிறான் தமையன் என்கிற கொடுமை கூட அவனுக்குப் பொருட்டில்லாமல் போயிற்று. அவள் உனக்குத்தான் என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லட்டும் இன்னும் மூன்று வருடங்கள் கூடுதலாகவே இருந்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டுப் போவான்.
அவர்கள் மோதிரம் மாற்றிக்கொண்டதும், வெகு இயல்பாக அவன் அவளை ஒற்றைக்கையால் அணைத்ததும், விசரி ஏனடி அழுகிறாய் என்று உரிமையாகக் கேட்டதும், வழிந்த கண்ணீருடன் அவள் அவனைப் பார்த்து முறுவலித்ததும்தான் காட்சிகளாக ஓடிக்கொண்டே இருந்தன.
அவன் நேசித்த பெண். கனவுகளில் கொண்டாடி மகிழ்ந்தவள். நிஜத்தில் இன்னொருவனின் கைகளுக்குள் இருந்ததைப் பார்த்த மனது காட்டுத்தீயாக அடங்காமல் எரிந்துகொண்டிருந்தது.
அடுத்த நாளே அவனுக்குத் தேவையானவற்றைக் கொண்டுவந்து கொடுத்து, மாலையில் ட்ரெயினுக்குப் புறப்படும்படி உத்தரவிட்டுவிட்டுப் போனான் கௌசிகன்.
ஏமாற்றம், ஆத்திரம், வெறுப்பு என்று சொல்லவியலாத உணர்வுகள் தாக்க விறு விறு என்று தயாராகினான்.
மகன் போகப்போகிறான், இனி மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் பார்க்க முடியும் என்றதும் கண்ணீருடன் நின்ற அன்னையிடம் சொல்லாமல், அமைதியாகக் கண்கள் கலங்க நின்ற தங்கையிடமும் விடைபெறாமல், “கவனமா போயிட்டு வா. அப்பா அங்க நிக்கிறார். உன்ன அனுப்ப வருவார்.” என்று இறுக்கமான குரலில் உரைத்த தமையனுக்கு ஒரு தலையாட்டலைக் கூடக் கொடுக்க முடியாமல், இறுக்கமான முகத்துடன் புறப்பட்டான்.
எல்லாம் வெறுத்த நிலை. இனி எனக்கு யாரும் வேண்டாம் என்ற உணர்வு. இவர்கள் யார் முகத்திலும் முழிக்கவே கூடாது என்கிற முடிவுகளோடு வரவழைத்த ஆட்டோவில் ஏறினான்.
பிரதான வீதியில் ஏறிய ஆட்டோவில் நண்பர்கள் தொற்றிக்கொண்டபோதும் அவர்களோடு ஒரு வார்த்தை பேசினான் இல்லை. மனத்தில் ஒரு தீ. விழிகள் சிவந்திருக்க வீதியையே வெறித்திருந்தான்.
அப்போதுதான் அவர்கள் பட்டனர். அதுவரை திசையறியாமல் நெஞ்சுக்குள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ, தன் பசிதீர்க்க இரை தேடிற்று!
ரஜீவனுக்கு ஒரு வயது கூடுதலாக இருந்தாலும் ரஜீவனும் தீபனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். ரஜீவன் வேலைக்கு என்றும் தீபன் கம்பஸ் என்றும் போனபிறகு சந்தித்துக்கொள்ளச் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. திடீரென்று நடந்த நிச்சயம், இன்று எதிர்பாராமல் கண்ட தீபனைச் சீண்டி விளையாட வைத்தது.
“என்னடாப்பா சொல்லாம கொள்ளாம குடும்பஸ்தன் ஆகிட்டாய். சரி சொல்லு சொல்லு அடுத்த கட்ட பிளான் என்ன?” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான் ரஜீவன். கூடவே தன் காதலுக்குத் தேவையானது ஏதாவது கிடைக்குமா என்கிற ரகசிய எதிர்பார்ப்பும்.
“அண்ணா! பகிடி செய்யாதீங்க.” என்று சிரித்துவிட்டு, “உண்மையா இப்பதான் பயமா இருக்கு. அக்கா என்னை நம்பி எல்லாருக்கு முன்னுக்கும் சேர்த்து வச்சிருக்கிறா. அந்த நம்பிக்கைய நான் காப்பாத்தோணும். தீபாக்கு திருகோணமலையிலேயே டீச்சிங் கிடைக்கும் எண்டு சொன்னவள். நானும் அங்கேயே வேலை தேடிப்பாக்கப் போறன். ஒரு வருசம் அவே தாற பள்ளிக்கூடத்தில வேலை செய்தா, பிறகு நாங்க கேக்கிற இடத்துக்கு டிரான்ஸபர் தருவினம்.” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையில், படார் என்று அவன் தலையிலேயே ஒன்று விழுந்தது.
மூளையே கலங்கிவிட்ட உணர்வு தீபனுக்கு. இருவருமே திகைத்துப் போயினர். யார், என்ன நடக்கிறது என்று உணரும் முன்னரே நான்கைந்து பேர் தீபனைச் சுற்றி வளைத்திருந்தனர்.
செய்வதறியாது திகைத்துவிட்டு, அவசரமாக ஃபோனை எடுத்துப் பிரமிளாவுக்கு அழைத்து, “அக்கா, இஞ்ச தீபனுக்கு ஆர் எண்டு தெரியேல்ல. நாலஞ்சு பெடியள் சேர்ந்து அடிக்கிறாங்கள். ஓடி வாங்கோ!” என்று இடத்தையும் சொல்லிவிட்டு அவனைக் காப்பாற்ற அந்தக் கும்பலுக்குள் புகுந்தான் ரஜீவன்.
கையில் கட்டைகளோடு இருந்த ஐவரை எந்தவிதத் தயார்படுத்தலும் இல்லாது இருந்த இருவராலும் சமாளிக்க முடியவில்லை. தீபனைக் கூட்டிக்கொண்டு ஓடுவோம் என்று முயன்றால் முடியவே மாட்டேன் என்றது.
பிரமிளாவுக்கு முதலில் ஒன்றும் விளங்கவேயில்லை. விளங்கிய நொடி மனம் பதறக் கணவனுக்குத்தான் அழைத்தாள். “தீபனுக்கு ஆரோ அடிக்கினமாம். கெதியா ஓடி வாங்க!” என்றுவிட்டு, இருந்த உடையோடே புறப்பட்டு ஓடினாள்.
கருப்பைச் சிசுவாகத் தீபன் உடலைக் குறுக்கிக்கொண்டு தரையில் கிடக்க, அவனைக் காப்பாற்ற முடியாமல் ரஜீவன் போராட, பார்த்த பிரமிளா பதறிப்போனாள். ஆட்டோவை அந்த இடத்திலேயே நிறுத்தி இறங்கி, “அவனை அடிக்காதீங்கடா!” என்று வேகமாக இடையில் புகுந்தாள்.
அவளும் ரஜீவனுமாகச் சேர்ந்து தீபனை இழுக்க, அவன் மீது வீசப்பட்ட கட்டை எந்த நொடியில் எப்படிப் பட்டது என்று தெரியாமலேயே, அவளின் வயிற்றில் பட்டது.
“என்ர அம்மா!” வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்துத் தரையில் விழுந்தாள் பிரமிளா.
“அக்கா…”
“ஐயோ…” என்ற கூக்குரல்கள் ஓங்கி ஒலித்தன. சரியாக அந்த நேரம் சீறிக்கொண்டு வந்த கார், கிறீச்சிட்டபடி சுழன்று வீதியில் குறுக்காக நிற்க, நெஞ்செல்லாம் நடுங்க பாய்ந்து வந்தான் கௌசிகன்.