அவன் தினம் தினம் கொஞ்சி விளையாடிய மணிவயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் கிடந்தது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்ட பிரமிளாவை, அப்படியே இழுத்து தன் மடிக்குக் கொண்டுவந்தான்.
“ரமி! ரமி இங்கப்பார். என்னைப் பாரடி! உனக்கு ஒண்டுமில்ல… ரமி ரமி.” அவனுடைய கதறலும் பரிதவிப்பும் அவளின் செவிகளை எட்டவே இல்லை.
வலி தாங்க முடியாமல் புழுவைப் போல் துடித்தாள். அவளின் கால்கள் நனையத் தொடங்கிற்று. அப்படியே அது நிலமகளையும் ஈரமாக்க ஆரம்பித்தபோது, ஒரு நொடி அசைவற்றுப் போனான் கௌசிகன். அவன் இதயம் துடிப்பதை நிறுத்தி இருந்தது.
“ரமி…!” அவன் பார்வை அவளின் வயிற்றுக்கு ஓடிற்று. எதுவுமே புலப்படாமல் கண்ணீர் மறைத்தது. பிஞ்சுப் பாதம் கொண்டு கால்தடம் பதித்திருக்கவேண்டிய அவளின் வயிற்றுச் சிசு, இரத்தமாய் வீதியில் கரைந்துகொண்டிருந்தது.
மோகனனுக்குப் பதட்டத்தில் வியர்த்துக் கொட்டியது. பயத்தில் கைகால் எல்லாம் நடுங்கின. சத்தமே இல்லாமல் தன் கோபத்தைத் தீர்த்துவிட்டுப் புகையிரதம் ஏற நினைத்தவன் இதை எதிர்பார்க்கவில்லை.
வேகமாக அம்புலன்சுக்கு அழைத்தான். தன் பெயர் வெளியே தெரியாமல் மறைந்திருந்து தாக்கும் திட்டத்தை வகுத்தவன் அதை மறந்து தமையனிடம் ஓடி வந்தான்.
கௌசிகன் சுற்றுப்புறத்தை உணரும் நிலையில் இல்லை. உயிர் போவதுபோல் துடிப்பவளின் வலியை வாங்கிக்கொள்ள இயலாமல் அவளோடு சேர்ந்து தானும் துடித்தான்.
தன் வரவைச் சொல்லி இரைந்தபடி வந்த அம்புலன்ஸின் ஸ்ட்ரெச்சரில் தன் உயிரை அப்படியே வாரி எடுத்துக் கிடத்தினான். அவளைத் தூக்கியபோது கண்கள் சொருக, தலை தரை நோக்கித் தொங்கியதைக் கண்டவன், “ரமீ…!” என்று கதறினான்.
ஆம்புலன்ஸ் மீண்டும் இரைந்துகொண்டு பறந்தது. ஆலமரம் ஒன்று விழுந்தாற்போல் சரிந்து விழுந்தான் கௌசிகன். ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போயிற்று. அடுத்து என்ன செய்ய வேண்டும்? எதுவும் புலப்பட மறுத்தது. அதே அம்புலன்சில் தீபனையும் ஏற்றி அனுப்பியதைக்கூட உணரமாட்டாமல் நின்றான்.
கண் முன்னே பரவிக்கிடந்த அவனுடைய மொத்த உயிரையும் தவிர வேறு ஒன்றும் புலப்படவேயில்லை. உள்ளம் மட்டும் ஐயோ ஐயோ என்று பதறியது. நெஞ்சு நடுங்கியது. கண் பார்வைக்கு எதுவுமே புலப்படவில்லை.
அதுநாள் வரை எது எல்லாம் முக்கியம் என்று தூக்கிச் சுமந்தானோ அந்தப் பணம், பலம், செல்வாக்கு, கௌரவம் எல்லாமே அவனுடைய உயிர்களைக் காத்துத் தரும் வல்லமையற்றுப்போய்க் கைகட்டி அவனை வேடிக்கை பார்த்தன.
அன்றைக்கு அவள் சொன்னது காதில் அறைந்தது. ‘நீங்களும் தோப்பீங்க. தோல்வி உங்களுக்கும் வரும். உங்கட பலம், பணம், செல்வாக்கு என்ன இருந்தும் எதுவும் செய்ய முடியாம கண்ணக் கட்டிக் காட்டுல விட்டமாதிரி நிப்பீங்க’ என்று சொன்னாளே. இதோ, பைத்தியக்காரனைப் போல் தெருவில் நிற்கிறான். எது வந்து அவனுக்கு அவளைக் காப்பாற்றித் தரும்? அவனுடைய மகவை மீட்டுத் தரும்? எதுவுமே இல்லை.
“அண்ணா…”
விலுக்கென்று திரும்பினான் கௌசிகன். “ஏன்டா ஏன் இப்பிடி? அவள் உனக்கு நல்லதுதானே செய்ய நினைச்சவள். அவளுக்குப் போய்… உன்ன நம்பினேனேடா. என்ர தம்பி எண்டு நினைச்சேனேடா. அதுக்கு என்ர வாழ்க்கையையே அந்தரத்தில் தொங்க விட்டுட்டியேடா. அப்பிடி உனக்கு நான் என்ன செய்தனான்?”
“அண்ணா…” மோகனனும் தாங்க முடியாமல் அழுதான். “சத்தியமா அண்ணிக்கு எதுவும் செய்ய நினைக்கேல்ல அண்ணா. இப்பிடி நடக்கும் எண்டு எதிர் பாக்கேல்லை அண்ணா. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்து இருக்கிறன். சரியோ பிழையோ என்ர அண்ணாக்காக எண்டு நிண்டு இருக்கிறன். அதே மாதிரி எனக்கு எண்டு வரேக்க நீங்க எனக்காக நிக்கேல்ல அண்ணா. அந்தக் கோபம் தீபனை பாத்ததும்…” சொல்லத் தெரியாமல் சொல்லிக்கொண்டிருந்தவனை ஒரு நொடி வெறித்தான் கௌசிகன்.
மனமெல்லாம் வெறுத்துப்போனது. இன்னுமே தனக்கான நியாயங்களை அடுக்கிக்கொண்டு இருந்தவனின் முகமே பார்க்கப் பிடிக்காமல் போயிற்று. கசப்புடன் அவனைத் தள்ளி விட்டுவிட்டு எழுந்து, தள்ளாடியபடியே தன் காருக்கு நடந்தான்.
அதுவரை நேரமும் இந்த மோகனனை வெட்டிக் கண்ட துண்டமாக வீசினால் என்ன என்று கொதித்துக்கொண்டு நின்ற ரஜீவன் ஓடிவந்து, “திறப்பை தாங்கோ” என்று வாங்கிக்கொண்டு, அவனையும் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குப் பறந்தான்.
அதன் பிறகான நிமிடங்கள் எல்லாமே போராட்டம் போராட்டம் போராட்டம் மட்டுமே! உள்ளே அவனுடைய உயிர்கள் துடிக்க, வெளியே அவன் துடித்துக்கொண்டிருந்தான்.
தீபனுக்கு காயங்கள் உண்டாகி இருந்தபோதிலும் ஆபத்தாக ஒன்றும் நடக்கவில்லை என்றதும் அவனை விட்டுவிட்டு இங்கே ஓடிவந்த ரஜீவனுக்கு அவனைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. தன்னால் தானோ, தான் அழைத்துப் பிரமிளாவுக்குச் சொன்னதால் தானோ என்று அவனும் தனக்குள் மருகினான்.
நிமிடங்கள் நரகமாகக் கழிந்தன. அங்கும் இங்குமாக விரைந்த தாதிகள் நெஞ்சை நடுங்க வைத்தனர். சுவரோடு சுவராக அமர்ந்துவிட்டவனின் விழிகள் மூடியே கிடந்தன.
‘ரமி ரமி ரமி’ அவளின் பெயரை இதயம் ஜெபித்துக்கொண்டே இருந்தது. இரண்டு குரல்களைக் கேட்டுவிடச் செவிகள் மிகுந்த கூர்மையுடன் காத்திருந்தன. சற்று நேரத்தில் வைத்தியர் மாத்திரமே வெளியே வந்தார்.
படக்கென்று விழிகளைத் திறந்து கண் இமைக்காமல் அவரையே பார்த்தான். நல்ல செய்தி சொல்லிவிடு என்று அவன் இதயம் இறைஞ்சியது.
அவன் பார்வையைச் சந்திக்க வைத்தியர் சிரமப்பட்டார். தன் பின்னால் திரும்பிப் பார்த்து, அங்கு நின்ற தாதியிடம் தலையசைப்பில் கொடு என்றார். அவன் விழிகள் வேகமாக அந்தப் பெண்ணிடம் தாவிற்று. அவள் வந்து ஒரு குவியலை அவனிடம் நீட்டினாள். அவசரமாக வாங்கினான் கௌசிகன். கண்கள் தானாகக் கலங்கிற்று. கையில் கிடந்த தாமரை தெளிவாகத் தெரியவே இல்லை. வேகமாகத் தன் தோள் பக்கச் சட்டையில் கண்களைத் துடைத்துக்கொண்டு விழிகளை நன்றாக விரித்துப் பார்த்தான்.
குட்டிக் குட்டிக் கைகளும் குஞ்சுக் குஞ்சுக் கால்களுமாகப் பெண் பூ ஒன்று அவன் கையினில் படுத்துக் கிடந்தது. கண்ணோரம் கண்ணீர் வழிய, உதடு சிரிக்க, அத்தனை நேரமும் அவன் துடித்த துடிப்புக்கு கிடைத்த ஆசுவாசமாக நெற்றியில் உதடுகளைப் பதித்து, விழி மூடியவன் அப்போதுதான் ஒன்றை உணர்ந்தான்.
அவன் உதடுகள் குளிர்ந்தன. அவன் நெஞ்சு ஒருமுறை குலுங்கிற்று! பதட்டத்தோடு வைத்தியரை நிமிர்ந்து பார்த்துவிட்டுக் கன்னத்தோடு கன்னம் வைத்துப் பார்த்தான். அப்போதும் அதே குளிர்தான். நம்ப மாட்டாமல் நிமிர்ந்து வைத்தியரை வெறித்தான். அவனுடைய தொண்டைக்குழி ஒருமுறை ஏறி இறங்கிற்று.
ஆம் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “சொறி!” என்றார் அவர்.
நம்ப மாட்டாமல் திகைத்தான் அவன். அப்போதுதான் குழந்தை ஆடாமல் அசையாமல் கிடப்பதே அவன் புத்தியில் பட்டது. அப்படியே தன் வாரிசை மார்போடு ஏந்தியவனின் தேகம் குலுங்கிற்று! ஏன் ஏன் ஏன் இப்படி?
“கௌசிகன் ப்ளீஸ்! ரிலாக்ஸ்! எங்களால ஒரு உயிரை மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சது! சொறி!” என்றார் அவர் மெய்யான வருத்தம் தோய்ந்த குரலில்
எதையும் உணரும் நிலையில் இல்லை அவன். அடக்கமாட்டாமல் குலுங்கினான். தாதிப் பெண்ணிடம் அவனைக் கவனித்துக்கொள்ளும்படி கண்ணால் காட்டிவிட்டு, பிரமிளாவைக் கவனிக்கப் போனார் அவர்.
“அண்ணா பிளீஸ். அழாதீங்கோ!” தாதிப்பெண்ணின் கனிவான எந்த வார்த்தைகளும் அவனைச் சேரவே இல்லை.
“அக்காக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அதை நினைச்சுச் சந்தோசப்படுங்கோ.” எதைச் சொல்லி அவனைத் தேற்றுவது என்று தெரியாமல் எதை எதையோ பேசினாள் அந்தப் பெண்.
“எப்…பிடி? வயித்துக்கயேவா?” அங்கு வைத்தே அவ்வளவு இரத்தம் வெளியேறி இருந்ததே.
வயிற்றினுள் இருக்கும்போதே குழந்தை உயிர்வாழும் போராட்டத்தை ஆரம்பித்து இருந்தது. எவ்வளவோ விரைந்து சிசேரியன் மூலம் வெளியே எடுக்க முனைந்தும் முடியாமல் போனதைத் தந்தையாகத் துடிக்கிறவனிடம் எப்படிச் சொல்லுவாள்?
புரிந்தும் புரியாமலும் கண்களில் நீர் கோர்க்க தன் பெண்ணையே பார்த்திருந்தான். மிருதுவான வெள்ளைத் துவாலையில் பனிக்கட்டியாகக் கிடந்தாள் அவள். பட்டுப் போன்ற முகம். பிஞ்சு விரல்களின் நகங்கள் கூடப் பூவிதழ்களின் மென்மையோடு இருந்தன.
‘மிருதுளா’ வண்ணத்துப் பூச்சியின் இறகைப் போல மென்மையோடு கிடந்த அவன் பெண்ணுக்கு அவனே பெயர் சூட்டினான்.
“அந்த அக்கா முழிச்சிட்டா.” இன்னொரு தாதிப்பெண் ஓடிவந்து அவசரமாகச் சொன்னாள்.
துடித்து நிமிர்ந்தான் கௌசிகன். அவளிடம் எப்படிச் சொல்லுவான்? நீ சுமந்த குழந்தை இங்கே குளிர்ந்துபோய்க் கிடக்கிறது என்றா, அல்லது அது வீதியிலேயே தன் உயிரை கரைத்துவிட இங்கே உடல் மட்டும் கிடக்கிறது என்றா? நெஞ்செல்லாம் நடுங்கியது. அவளை எதிர்கொள்ளப் பயந்து, கோழையாக அசையாமல் நின்றான்.
அதுவரை நேரமும் அவனருகிலேயே நின்று கண்ணீர் உகுத்துக்கொண்டு நின்ற ரஜீவன் வாயைப் பொத்திக்கொண்டான்.
கௌசிகன் கையில் இருந்த குழந்தையை யாரோ வாங்கினார்கள். அவர்கள் நடக்க அவனும் போனான்.
மயக்கம் தெளிய நேரம் இருந்தாலும் அதற்கு முதலே விழிப்பு வந்திருந்தது பிரமிளாவுக்கு. நினைவுகள் மீளத் தொடங்கியதுமே, நெஞ்சில் பயமும் நடுக்கமும் பிடித்தன. “குழந்தை… குழந்தை எங்க?” இதுதான் அவளின் உதடுகள் உதிர்த்த வார்த்தைகள்.
அறைக்குள் தாதி குழந்தையோடு வரவும் அவளின் விழிகள் அங்கே பாய்ந்தன. “தாங்க… என்னட்டத் தாங்க!” பயமும் நடுக்கமும் இருந்தாலும் பரபரப்புடன் எழுந்துகொள்ள முனைந்தவளின் தோளைத் தட்டிக்கொடுத்தார் வைத்தியர்.
“மிஸஸ் கௌசிகன். இது நீங்க தைரியமா இருக்க வேண்டிய நேரம். பிளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருங்கோ. இப்பிடி நீங்க அசையிறது கூடாது. தையல் பிரிஞ்சிடும்.”
“சரி டொக்டர். ஆனா குழந்தையைத் தாங்கோவன். எனக்குப் பாக்கோணும். என்ன குழந்தை?” தாதி அருகில் வராமல் தள்ளியே நிற்கப் பரிதவித்துப்போனாள் அவள்.
“பெண் குழந்தை. ஆனாம்மா…”
“என்ன ஆனா?” நெஞ்சு நடுங்க அவரைப் பார்த்தாள்.
“சொல்லுங்க! என்ன ஆனா…” அவளுக்குள் ஒருவித ஆவேசம் பொங்கிற்று. சோர்ந்துகிடந்த மூளை துடித்துப் பதறிப் பயங்கரமான கணக்குகளைப் போட்டு அவளை நடுங்க வைத்தது.
கௌசிகன் அவளிடம் விரைந்தான்.
“என்ன சொல்லுறார் இவர்? என்ர பிள்ளையை என்னட்ட தரச் சொல்லுங்கோ!” அவனையும் அதட்டினாள் அவள்.
தொண்டையைச் செருமிவிட்டு, “குழந்தை பிறக்கேக்கையே உயிர் இல்லையம்மா.” என்றார் அவர்.
“என்ன?” ஒரு நொடி அவளிடம் அசைவில்லை. வேகமாகக் கணவனிடம் திரும்பினாள்.
“பொய் தானே? அவர் சொல்லுறது பொய் தானே? கௌசி பிளீஸ், உண்மையச் சொல்லுங்க. என்ர வயித்துக்க ஒரு நிமிசமும் சும்மா இருக்காம அசைந்த பிள்ளைக்கு எப்பிடி உயிர் இல்லாம போகும்? உங்களுக்கும் தெரியும் எல்லா, நீங்க தடவினா மட்டும் அமைதியா இருக்குமே. இவர் பொய் சொல்லுறார். நான் நம்ப மாட்டேன். நம்ப மாட்டன்… நம்பவே மாட்டேன்.” என்றவள் அதற்குமேல் முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
அடி விழுந்ததே! அவளின் அடி வயிற்றிலேயே சரியாகப் பட்டதே! இரத்தம் வழிந்தோடியதே! கடவுளே… அவன் விழிகளிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிற்று. யார் யாரைத் தேற்றுவது?
வெடித்துக் கதறியவளை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் வைத்தியருக்கும் தாதிக்கும் போதும் போதும் என்றாயிற்று.
“பாக்கிறது எண்டா ஒருக்கா பாத்திட்டு விடுங்கோ.” எத்தனையோ வருடத்து அனுபவம் இருந்தாலும் இப்படியான துயர் மிகுந்த பொழுதுகளைக் கையாள்வதற்குள் அந்த வைத்தியரும் மிகவும் சிரமப்பட்டுப்போனார்.
“இல்ல… இல்ல… நான் பாக்க மாட்டன். என்னால பாக்கேலாது. என்ர குழந்தையை எனக்குத் தெரியும். அது உயிரோட என்ர வயித்துக்கையே இருக்கட்டும். நான் பாக்க மாட்டன்.” கண்ணை மூடிக்கொண்டு கதறியவளைக் கௌசிகனின் அணைப்போ, ஆறுதல் வார்த்தைகளோ தேற்ற முடியாமல் தோற்றுப் போயின.