இவளோடு நல்லமுறையில் அறிமுகமாகி, நட்பாகி, காதலித்து மணம் முடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவள் காதலித்து இருப்பாளா? அவள் எல்லாம் சிந்தையை அப்படிச் செலவளிக்கிறவள் அல்ல.
ஆனால், அப்படியானவளின் காதலைப் பெற்றால்? அவளைப் போன்றவர்களின் தரத்தையே அந்தக் காதல் குறைத்துவிடாதா என்ன?
ஃபோனில் அவனை என்ன பெயரில் பதிந்து இருப்பாள்?
தன் இலக்கங்களை வேகமாக அழுத்தினான்.
‘Hubby ‘ என்று போட்டு அருகே சிவப்பு இதயம் ஒன்றும் மின்னிக்கொண்டிருந்ததைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான். அவனின் அருகே அவளின் இதயம். இப்படித்தான் அவனால் அதனைப் பொருள் கொள்ள முடிந்தது.
ஒரு வழியாகத் தீபா, தீபனின் பல்கலைக்கழக வாழ்க்கை முற்றுப்பெற்றது. தீபாவுக்குத் திருகோணமலையிலேயே ஒரு பள்ளிக்கூடத்தில் வேலையும் கிடைத்தது. அதற்கேற்றாற்போல் தீபனும் அங்கேயே தனக்கொரு வேலையையும் தேடிக்கொள்ள, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தான் கௌசிகன்.
மூத்தவள் இப்படி இருக்கையில் இது தேவையா என்று தயங்கிய தனபாலசிங்கத்தையும், இப்போது வேண்டாம் என்று மறுத்த தீபாவையும் சமாளித்து, பிரமிளா விரும்பியது போலவே ராஜநாயகத்தின் தலைமையில் தீபாவின் திருமணத்தை நடாத்தி முடித்தான்.
தன் மருமகளுக்குத் தன்னாலான சமாதான முயற்சி என்று தடல்புடலாக அவர்களின் திருமணத்தை நடத்தினார் ராஜநாயகம்.
தனபாலசிங்கம் சரிதா தம்பதியினருக்கு மனத்திலிருக்கும் வேதனை எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு, கண் நிறைந்த கணவர்களோடு தம் இரு பெண்களும் நின்றிருந்த கோலம், ஆனந்தக் கண்ணீரை வெகுவாகவே வரவழைத்திருந்தது.
கலங்கிய விழிகளோடு தமக்கையைப் பார்த்த தீபாவின் கையில் தட்டிக்கொடுத்துவிட்டுப் புன்னகைத்தாள் பிரமிளா. “நன்றி அண்ணா!” என்று மனத்திலிருந்து சொன்னான் தீபன்.
“எனக்கு ஏன் சொல்லுறாய். இதுக்கெல்லாம் காரணம் இவள்தான்.” என்று அருகில் நின்ற மனைவியைக் காட்டினான் அவன்.
கள்ளுண்ட வண்டாக அன்று முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தான் கௌசிகன். நாள் முழுக்கத் தோள் உரச அருகிலேயே நின்ற மனைவி, அக்கா, அத்தான் என்ற முறையில் சேர்ந்து நின்று அவர்கள் செய்த சடங்குகள், சில நேரங்களில் எதிர்பாராமல் மோதிக்கொண்ட பார்வைகள், மெருகேறி இருந்த அவளின் தோற்றம், பட்டுச் சேலையில் மின்னிய மனைவியின் அங்கலாவண்யங்கள், திருமணத்துக்கென்று பிரத்தியேகமான அலங்கரிப்பு என்று கண்களை அவனால் அவளிடமிருந்து அகற்றவே முடியவில்லை. ஆறு மாதத்துப் பிரிவு வேறு அவளைத் தேடியது.
அவளைத் தனியாகப் பிடிப்பதற்கு நெடுநேரமாக முயன்றுகொண்டே இருந்தான். மத்தியான விருந்து முடிந்து சொந்த பந்தங்கள் மாத்திரமாகச் சுருங்கி, அவர்கள் அயர்ந்திருந்த நேரத்தில் மணப்பெண்ணின் அறைக்குள் நுழைந்த மனைவியின் பின்னோடு புகுந்து கதவை அடைத்தான்.
திகைத்துத் திரும்பியவள் அவனைக் கண்டதும் மீண்டும் திகைத்தாள். அவன் பார்வையே சரியில்லை. வேகமாகக் கையில் கொண்டுவந்திருந்த தங்கையின் மேலதிக நகைகளை அதன் பெட்டியில் போட்டு எடுத்து வைத்துவிட்டு, வெளியேற நினைக்கையிலேயே பின்னிருந்து அணைத்தான் அவன்.
படபடத்துப்போனாள் பிரமிளா. காலையில் இருந்தே கணவனின் பார்வையைக் கவனிக்காமல் இருக்க அவள் என்ன சிறுமியா?
அவனிடம் மாட்டிவிடாமல் கவனமாக இருந்தும் மடக்கிவிட்டானே! இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. தோள்களை வருடிய கரங்கள் அப்படியே இறங்கி கைகளோடு கைகளைக் கோர்த்து வயிற்றோடு கட்டிக்கொண்டபோது மூச்செடுக்கவே சிரமப்பட்டுப்போனாள் பிரமிளா.
“எத்தின நாளாச்சு…” என்றவன், அவளைத் தன் புறமாகத் திருப்பி, ஆசையோடு முத்தமிடத் தொடங்கினான்.
அவனுடைய வேகம் ஆறுமாதப் பிரிவாற்றாமையைச் சொல்ல, பட்டு வேட்டி சட்டையில் இன்னுமொரு மாப்பிள்ளையாக மனதை நிறைத்தவனிடமிருந்து விலக முடியாமல் நின்றாள் அவள்.
“கதைக்க மாட்டியா?” அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கொஞ்சினான் அவன்.
அவளை விடவே மனமில்லை. எத்தனை நாட்களுக்குப் பிறகு இப்படிக் கைகளுக்குள் அகப்பட்டிருக்கிறாள். விடுபட அவள் செய்த முயற்சிகள் கூட அவனுக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தன.
“எங்கயடி ஓடப் பாக்கிறாய்?” என்றபடி தன் மீசையைக் கொண்டுபோய் அவள் கழுத்தினில் உரசினான்.
“கௌசி பிளீஸ்…” கெஞ்சிய இதழ்களுக்குத் தண்டனை கொடுத்தான்.
“வீட்டுக்கு வா ரமி. இப்பிடியே இருந்தா என்ன அர்த்தம்?” என்றான் கரகரத்த குரலில்.
அந்தக் கேள்வியில் அவளின் மூளை படக்கென்று விழித்துக்கொண்டது. நடந்தவைகள் எல்லாம் நினைவில் வந்தன.
வயிற்றில் விழுந்த அடியும், வீதியில் சிந்திய இரத்தமும், தான் சுமந்த மகவை இவர்களின் பாவக்கணக்குக்குப் பலி கொடுத்ததும் என்று துக்கம் பெருகிற்று. பிடிவாதமாக அவன் கைகளுக்குள் இருந்து விடுபட்டுக்கொண்டு, “என்ர முடிவ நான் எப்பவோ சொல்லிட்டன்.” என்றாள் உணர்வுகளற்ற குரலில்.
இன்னும் அதே வறட்டுப் பிடிவாதமா? சுர் என்று ஏறியது அவனுக்கு. “எது? விட்டுடுங்க எண்டு சொன்னியே அதா? முதல் நீ அதுக்கு என்ன பொருள் எண்டு சொல்லு!” இன்றைக்கு ஒரு முடிவு காணாமல் விடுவதில்லை என்கிற முடிவுக்கே வந்திருந்தான் அவன்.
உள்ளுக்குள் ஒருவிதமான கிலி பிறந்தது அவளுக்கு.
“சொல்லு! கொஞ்ச நாளைக்கு விலகி இரு எண்டுறதா இல்ல நிரந்தரமாவா?” என்றான் பார்வையில் கூர்மையுடன்.
“என்னை நிரந்தரமா விட்டுடுங்கோ.”
“அப்ப நான்? எனக்கு ஒரு பதிலைச் சொல்லு! நீ உன்ன மட்டுமே யோசிச்சு இந்த முடிவை எடுக்கேலாது.”
“அண்டைக்கு என்னையும் யோசிச்சுத்தான் கல்யாணம் எண்டுற முடிவை நீங்க எடுத்தீங்களோ?” அந்தக் கேள்வியே நிறைய நாட்களுக்குப் பிறகு பழைய பிரமிளாவைப் பார்ப்பதுபோல் இருந்தது அவனுக்கு.
இன்னும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குகிறவள் மீது கண்மண் தெரியாத கோபம் வந்தாலும் அடக்கினான்.
“அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?”
“என்னை விட்டுடுங்க!” என்றாள் மீண்டும்.
“ஏன்?”
திருப்பித் திருப்பி ஏன், எதற்கு என்று கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்தவனின் மீது சினம் உண்டாயிற்று அவளுக்கு. “என்ன ஏன்? இனியும் என்னால ஏலாது. உங்கட வீட்டுக்கு வரவோ உங்களோட வாழவோ எனக்கு விருப்பம் இல்ல. அங்க வந்தாலே என்னைப் பாக்காமையே போன என்ர குழந்தைதான் நினைவுக்கு வரும்.”
தன் தாய் வீட்டில் இருந்தால் மாத்திரம் மறந்துவிடுவாளாமா?
பொறு பொறு என்று தன்னையே அடக்கப் பார்த்து முடியாமல், “ஒண்டு செய். நீயே எனக்கு ஏற்ற மாதிரி ஒருத்தியப் பார். பாத்து ரெண்டாம் தாரமா கட்டிவை. அதுக்குப் பிறகு உன்ன நான் விடுறன். இந்தளவும் நடக்கோணும். நடக்க முதல் உன்ர வாயில இருந்து இனி என்னை விட்டுடுங்கோ எண்டுற வார்த்த வரக் கூடாது. வந்துது… பழைய கௌசிகனைப் பாப்பாய்!” என்றுவிட்டு அங்கிருந்து சினத்துடன் வெளியேறினான் அவன்.