எதிர்பாராமல் அவனைத் தாக்கிய முத்தத்தில் கிறுகிறுத்துப் போனான் ரஜீவன். “என்னடி இதெல்லாம்? கம்பசில போய் இதத்தான் படிக்கிறியா?” என்றவனின் குரல் கோபத்துக்குப் பதிலாகக் குழைந்து போயிற்று.
“என்ன எண்டு தெரியாதா? அண்ணாட்ட முதன் முதலா நம்பிக்கைய வாங்கினதுக்குச் சின்ன பரிசு. நேர்ல வந்தா நேர்லயும் கிடைக்கும்!” என்றாள் சிரிப்போடு.
“வரமாட்டன் எண்டுற தைரியம்! எப்பயாவது மாட்டுவாய்தானே. அப்ப இருக்கு!”
“ஐம் வெயிட்டிங்!” என்றவள் கலகலவென்று அடக்கமாட்டாமல் நகைத்தாள்.
எதிர்பாராமல் கண்டால் கூட நிமிர்ந்தும் பாராமல் நகர்ந்துவிடுகிறவன்தான் அவளின் முன்னே வந்து நிற்கப்போகிறானா?
“போடி!” அவளின் சிரிப்பில் மனம் மயங்கக் கொஞ்சலாகத் திட்டினான் அவன்.
அவர்களின் அன்புக்கான ஏதோ ஒரு நம்பிக்கைக் கீற்று கிழக்குவானில் தோன்றுவதுபோல் தென்பட்டதில் அவன் மனத்திலும் மகிழ்ச்சிதான்!
இப்போதெல்லாம் பிரமிளாவின் நாட்கள் ஒரே மாதிரி நகர்ந்துகொண்டிருந்தன. காலையில் எழுகிறாள். கல்லூரி போகிறாள். வருகிறாள். சாப்பிடுகிறாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கிறாள். இரவாகிறது. மீண்டும் காலையில் எழுகிறாள். அதே கல்லூரி! அதே வகுப்பறை!
இதே வாழ்க்கையைத்தான் ஒரு காலத்தில் ரசித்து ருசித்து வாழ்ந்தோம் என்பதை மறந்தவளாக உப்புச் சப்பற்று நகர்ந்த நாட்களையே சபித்தாள். எதற்காக வாழ்கிறாள் என்று தெரியாத உணர்வு.
புலர்கிற காலையினாலும் எதையும் மாற்ற முடியவில்லை. கவிகிற இருளினுள் எதையும் மறக்கவும் முடியவில்லை. வாழ்க்கையை எந்தத் திசையில் நகர்த்துவது என்று தெரியாத தடுமாற்றம்.
அன்றைக்குக் கல்லூரி முடிந்து வந்து, அலுப்புடன் எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவள் கைப்பேசி சத்தமிடவும் கவனமற்று ஏற்று, “ஹலோ!” என்றாள்.
“அண்ணி… நான்… நான் மோகனன்.”
அவன் என்றதுமே அவளின் தேகம் விறைத்து நிமிர்ந்தது. அவளை உணர்ந்தவனாக அவசரமாகப் பேசினான் அவன்.
“அண்ணி பிளீஸ்! ஒரே ஒரு நிமிசம். வச்சுப் போடாதீங்கோ. ஆரம்பம் எனக்கு உங்களைப் பிடிக்காதுதான். நீங்க அண்ணியா வந்ததும் விருப்பம் இல்ல. அப்ப எல்லாம் வேணும் எண்டுதான் செய்தனான். ஆனா தீபனை அடிக்கப் போனது உங்கட தங்கச்… அது… ஆசைப்பட்டது எல்லாம் கிடைச்சுத்தான் பழக்கம். முதல் தோல்வி. தாங்க முடியேல்ல. ஏற்கவும் முடியேல்ல. அதை எப்பிடி ஹாண்டில் பண்ணுறது எண்டு தெரியாம… ஆனா அண்ணி, நீங்க அங்க வருவீங்க எண்டோ, அப்பிடி நடக்கும் எண்டோ நான் நினைக்கவே இல்ல. சொறி அண்ணி. வீட்டுக்கு வாங்கோ. அண்ணா பாவம். நான் அங்க திரும்பி வரமாட்டன்!”
அவள் வைத்துவிட முதல் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று வேகமாகச் சொல்லிக்கொண்டு வந்தவனை மேலே பேச விடாமல், “போதும்! நிப்பாட்டு!” என்று இரைந்தாள் அவள்.
“உன்ர எந்த விளக்கமும் மன்னிப்பும் எனக்கு என்ர பிள்ளையைத் திருப்பித் தரப்போறேல்ல. நீ ஒண்டும் கடையில வாங்கின பொருளைத் தட்டி விழுத்தேல்ல. ஒரு உயிரை இந்த உலகத்தில வாழவிடாமச் செய்திருக்கிறாய். பிறகும் என்ன தைரியத்தில் எனக்கு எடுத்து மன்னிப்புக் கேக்கிறாய்?”
“அண்ணி…” அவன் குரலே நடுங்கிற்று. நெஞ்செல்லாம் என்னவோ செய்தது. ஒரு உயிரை இந்த உலகத்தில் வாழவிடாமல் செய்திருக்கிறாய் என்பதன் பொருள்? அவன் விழிகளிலிருந்து இரு துளிக் கண்ணீர் உருண்டோடிற்று!
ஏற்கனவே, அடி விழுந்த நொடியில் விழிகள் இரண்டும் வெளியே தெறித்துவிடுமோ என்கிற அளவில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அவள் விழுந்ததும், தரையில் வழிந்த இரத்தமும் அவனைக் கண்மூட விடாமல் துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன.
கூடவே, அவளைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு பைத்தியக்காரனைப் போல் அரற்றிய தமையனும் நினைவிலேயே நின்று வதைத்துக்கொண்டே இருக்கிறான்.
நெஞ்சே வெடித்துவிடும்போல் பலநாள் இரவுகளில் உறங்கமுடியாமல் எழுந்து அமர்ந்துகொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்திருக்கிறான்.
இதற்குமேல் முடியாது என்கிற நிலையில்தான் அவளுக்குத் தயங்கி தயங்கி அழைத்தான். அண்ணி மன்னித்துவிடமாட்டாளா என்கிற நப்பாசை. அவளோ, என் குழந்தையின் உயிரைப் பறித்தவன் நீ என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டாள்!
நொருங்கிப்போனான் மோகனன். காலத்துக்கும் அவனுக்கு விமோட்சனம் இல்லை போலும்!
அவளுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. இன்றைக்கு அவள் அனுபவிக்கிற அத்தனை வலிகளுக்கும் இவனும் ஒரு பெரும் காரணம் அல்லவா!
“எனக்கு ஏதாவது நீ நல்லது செய்ய நினைச்சா… எனக்குத் தெரியேல்ல உனக்கு அந்த எண்ணம் இருக்கா எண்டு. இருந்தா தயவுசெய்து இனிமேல் எந்தக் காலத்திலையும் இதைப் பற்றி என்னட்டக் கதைக்காத. என்ர முகத்தில முழிக்காத! நான் எல்லாத்தையும்… எல்ல்லாத்தையும் மறக்க நினைக்கிறன். எந்தக் காலத்திலையும் உன்னை மன்னிக்க எனக்கு விருப்பம் இல்ல!” என்றவள் பட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கிற்று. நெஞ்சு, தணியாத கோபத்தில் கொதித்தது.
சாம்பல் படறத் தொடங்கிய தீயை மீண்டும் கிளறிவிட்டது போலாயிற்று அவனின் அழைப்பு.
அவன் திட்டமிட்டு அதை நிகழ்த்தவில்லை என்று அவளுக்கும் தெரியும். அது தெரிந்து எதையாவது காப்பாற்ற முடிந்ததா? இல்லை இவனால் தீபன் அனுபவித்த வேதனைகளையும் காயங்களையும் இல்லாமல் ஆக்க முடிந்ததா? வந்துவிட்டான் பேசிக்கொண்டு! அண்ணன்காரன் எடுத்து அழுதான் போலும். அதுதான் சமாதானத்துக்கு இவன் வந்திருக்கிறான்!
இறங்கலாமா வேண்டாமா என்று இருந்த அவளின் கோபம் மீண்டும் உச்சியில் போய் நின்றுகொண்டதில் கௌசிகனைத் திரும்பியும் பார்க்க மறுத்தாள் பிரமிளா.
இப்படி இருக்கையில்தான், “அண்ணி!” என்று ஒருநாள் கண்ணீருடன் ஓடிவந்தாள் யாழினி. கூடவே ரஜீவனும் வெளியே பதட்டத்துடன் நிற்பதைக் கண்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன என்று விசாரிக்க, “எனக்கு அண்ணா கலியாணம் பேசுறார் அண்ணி.” என்று அழுதாள் யாழினி.
அதிர்ந்துபோனாள் பிரமிளா. படிப்பை முடிக்கவில்லை. இன்னும் முதிர்ச்சி போதாது. அப்படியானவளுக்கு இப்போது திருமணத்துக்கு என்ன அவசரம்? இவனுக்குப் புத்தி ஏதும் பேதலித்துப் போயிற்றா என்ன? முதல் ரஜீவன் ஏன் இங்கே வந்து நிற்கிறான்? சந்தேகத்துடன் அவள் யாழினியை பார்க்க, அவளின் தலை தானாகவே தரையைப் பார்த்தது.
ரஜீவனுக்கும் வியர்த்துக்கொட்டத் தொடங்கிற்று. ஆனாலும் முன்னுக்கு வந்து, “அது… அக்கா எனக்கும் யாழிக்கும் ஒருத்தருக்கு ஒருத்தரப் பிடிச்சிருக்கு…” என்று சொன்னவன் அவள் விழிகளில் அதிர்வைக் காணவும், “சொறி அக்கா. அது எதிர்பாராம… ஆனா கலியாணம் இப்ப இல்ல. நான் உழைக்க வேணும். முன்னுக்கு வரவேணும். அதுவரைக்கும் அவள் படிச்சு வேலைக்குப் போகட்டும். நல்ல நிலைக்கு வந்த பிறகு அத்தானிட்ட நானே கேக்கிறன் எண்டுதான் சொல்லி இருந்தனான். ஆனா திடீர் எண்டு அவர் இப்பிடிச் செய்வார் எண்டு நினைக்கேல்ல.” என்றவன், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான் என்று புரிந்து போயிற்று.
பிரமிளாவுக்குத் தலை வலிப்பது போலிருந்தது. என்னவோ முன்னர் போன்று வேகமாகச் சிந்தித்து விவேகமாக நடக்க முடியாத அளவில் மனமும் உடலும் பலகீனப்பட்டுப் போய்விட்ட உணர்வு.
கண்டிக்கிற அளவுக்கோ இது சரியாக வராது என்று சொல்வதற்கோ அவர்கள் இருவரில் யாரும் பிழையானவர்கள் அல்ல. பிற்காலத்தில் அவர்கள் இணைவதில் அவளுக்குச் சந்தோசமே. ஆனால், அவளின் கணவன்?
அவனுக்கு ஏதும் தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தால் கல்யாணமா பேசிக்கொண்டு இருப்பான்? ரஜீவனைக் கூண்டோடு தூக்கியிருக்க மாட்டானா? ஏதோ இடித்தது. என்ன என்று யோசிக்க முடியாமல் அதை அப்படியே விட்டுவிட்டு, “இப்ப என்ன செய்ய நினைக்கிறீங்க?” என்று அவர்களிடமே கேட்டாள்.
ரஜீவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “அது அண்ணி… வீட்டில இதைப் பற்றிக் கதைக்கோணும். அண்ணா பேசுற கலியாணத்தை நிப்பாட்டோணும். ஆரோ(யாரோ) டொக்டராம். கொழும்பில இருக்கிறாராம். அம்மாட்ட அண்ணா குறிப்பு வாங்கி இருக்கிறார். அதுக்கு நீங்கதான் அண்ணி ஹெல்ப் பண்ண வேணும். உங்கள நம்பித்தான் நான் இருக்கிறன்.” என்றவளுக்குக் கண்ணீர் அதுபாட்டுக்கு ஓடியது.
“சும்மா இருந்தவரை நான்தான் துரத்தி துரத்தி லவ் பண்ணினான் அண்ணி. அப்பவே சொன்னவர் முன்னுக்கு வராம உன்னக் கட்டமாட்டன் எண்டு. எனக்கும் இது கல்யாணம் செய்ற வயசா அண்ணி. நான் படிக்கோணும்.” என்று விசும்பியவளைத் தேற்றி, “என்ன எண்டு பாக்கலாம். நீ ஒண்டுக்கும் யோசிக்காம வீட்டுக்குப் போ!” என்று அனுப்பிவைத்தாள்.
யாழினிக்கு அப்படி அவள் சொன்னதே போதுமாயிற்று. இனி அண்ணி தங்களைச் சேர்த்து வைப்பாள் என்கிற நம்பிக்கையோடு, “தாங்க்ஸ் அண்ணி!” என்று அவளை இறுக்கி அணைத்துக் கன்னத்தில் முத்தம் இட்டுவிட்டுத் துள்ளிக்கொண்டு ஓடிப்போனாள்.