பிரமிளாவின் திடீர் வருகையை அந்த வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. செல்வராணிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “வாம்மா! வாவாவா!” என்று ஓடிவந்து வரவேற்று அமரவைத்து, அவளுக்கும் ரஜீவனுக்கும் பருகக் கொடுத்தார்.
ராஜநாயகம் அங்கேதான் அமர்ந்திருந்தார். அவரின் புருவங்கள் மெல்லிய சுளிப்புடன் ரஜீவனை நோக்கிக் குவிந்துவிட்டு நேராயிற்று. அதைக் கவனித்தவனுக்குள் பெரும் நடுக்கம். அவரை நேராகப் பார்ப்பதையே தவிர்த்தான்.
அவளின் கணவனை மட்டும் காணவில்லை. யாழினிக்கு இவர்கள் இருவரையும் கண்டதும் கையெல்லாம் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
சம்பிரதாய நலன் விசாரிப்புகள் அதுபாட்டுக்கு நடக்க, ‘எங்கே இவன்? இன்று வீட்டில்தானே இருப்பான்’ என்று ஓடிற்று அவளின் சிந்தனை. சற்று நேரத்திலேயே அவளின் சிந்தனையின் நாயகன் அறையை விட்டு வெளியே வந்தான்.
ஒருவிதப் பதட்டம் தொற்றிக்கொள்ளத் திரும்பி மாடியைப் பார்த்தாள் பிரமிளா. வீட்டில் இருந்தால் அணியும் ஸ்வெட் பாண்ட்ஸ்(sweatpants) டீஷர்ட் உடம்பில் அலட்சியமாகக் கிடக்க, படிகளில் லாவகமாகத் தாவி இறங்கிக்கொண்டிருந்தான் அவன்.
ஹோலில் அமர்ந்திருந்த இவளைக் கண்டதும் புருவங்கள் ஒருமுறை ஏறி இறங்கிற்று. அவ்வளவுதான். வேகநடையில் வந்து அவளுக்கு முன்னால் இருந்த இருக்கையில் தொப் என்று அமர்ந்துகொண்டான்.
ஒரு பக்கம் எடையைப் போடுகையில் தன்னிச்சையாக உயர்ந்துவிடுகிற தராசின் மறுபக்கம் போன்று, அவன் அமர்ந்ததும் படக்கென்று எழுந்துகொண்டான் ரஜீவன். கௌசிகனின் முன்னால் அமர்ந்திருக்க முடியாமல் தொடைகள் எல்லாம் நடுங்குவதை அவனே உணர்ந்தான்.
எல்லோரையும் எப்படிப் பயப்படுத்தி வைத்திருக்கிறான் இவன். பிரமிளா முறைத்தாள். அவனோ வசதியாக அமர்ந்திருந்து, கைகளைப் பிடரியில் கோர்த்தபடி அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். “என்ன விசயமாம்? வராதவே எல்லாம் வீடு தேடி வந்திருக்கினம்?” என்றான் அன்னையிடம்.
யாழினிக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்துவிட்டது. ரஜீவனைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பிரமிளா, ‘அமர்ந்துகொள்!’ என்று கண்ணால் அதட்டியதைக் கூடச் செய்யும் வலுவற்று அப்படியே நின்றான்.
இவனைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் வந்த காரியம் ஆகாது என்று புரிந்துவிட, “மாமி! நீங்களும் வந்து இருங்கோ. முக்கியமான விசயம் கதைக்கோணும்.” என்று அழைத்தாள் பிரமிளா.
செல்வராணி பயந்துபோனார். வேகமாகக் கணவரைப் பார்க்க, அவரும் இவரை ஒரு பார்வை பார்த்தார். உடனே, “என்னம்மா விசயம்? யோசிக்காம சொல்லு!” என்று, தன்னை அவள் அமரச் சொன்னதை அப்படியே தவிர்த்துவிட்டு ஊக்கினார் அவர்.
அதற்குமேல் அவரைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் பிரமிளாவும் இல்லை. நேர் முன்னுக்கு அமர்ந்திருந்து பார்வையால் துளைக்கும் கணவன் அவளைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதைக் கவனமெடுத்துத் தவிர்த்தபடி ராஜநாயகத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள்.
“மாமா, கோவப்படாம நான் சொல்லுறதைக் கொஞ்சம் நீங்க கேக்கோணும்.”
அவளின் அந்தத் தயவான பேச்சு அவருக்கு மிகவுமே பிடித்துப் போயிற்று. “உன்னட்ட நான் ஏனம்மா கோவப்படப் போறன். சொல்லு சொல்லு!” என்றார் உற்சாகமாக.
“இவன் ரஜீவன். உங்களுக்கும் தெரியும்தானே. அப்பா இல்ல. அம்மாவும் ஒரு தங்கச்சியும்தான். ஒரு கெட்ட பழக்கம் இல்ல. நல்ல குடும்பம். வேலையிலயும் நல்ல கெட்டிக்காரன் எண்டு உங்கட மகன் இவனுக்கு நல்ல இடத்தில வேலை செய்றதுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இப்ப நல்ல சம்பளமும் வருது. இன்னும் கொஞ்சக் காலத்தில நல்ல நிலைக்கு வந்திடுவான்.” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் சற்றுத் தயங்கிவிட்டு, “அவனும் எங்கட யாழியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினமாம்.” என்றதும், சினத்தில் அவர் முகம் அப்படியே சிவந்து போயிற்று.
யாருக்கு யார் வீட்டுப் பெண் கேட்கிறதாம் என்று நொடியில் கொதித்துப்போனார். இதுவே பழைய ராஜநாயகமாக இருந்திருக்க, சுள் என்று வார்த்தைகளை விட்டிருப்பார். அவனை விரட்டி அடித்திருப்பார். இன்னும் பலதையும் செய்திருப்பார்.
இந்த மனிதர் தன்னை மாற்ற முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்து இருந்ததில் கோபத்தை வேகமாக அடக்கி, மகனைத் திரும்பிப் பார்த்தார். அவள் பார்வையும் அவனிடம்தான் அவளை மீறியே ஓடிற்று.
என்ன நினைக்கிறான், அவனுக்குள் என்ன ஓடுகிறது என்று கணிக்க முடியாத ஒரு முகபாவம். பிரமிளாவை இன்னுமே பதற்றம் தொற்றிக்கொண்டது. அவன் மறுப்பதற்குள் அவள் பேசி முடித்துவிட வேண்டும். ஒன்றைச் சொல்லிவிட்டால் அதைச் செய்தே தீருவேன் என்று நிற்கிறவன் ஆயிற்றே அவன்.
“இப்ப அவசரமா கட்டி வைங்கோ எண்டு கேக்கேல்ல மாமா. அவன் உழைச்சு முன்னுக்கு வாறவரைக்கும் பொறுத்துக்கொள்ளுங்கோ எண்டுதான் சொல்லுறன். காசு பணத்தை விடக் குணம்தானே முக்கியம். அப்பிடிப் பாக்கேக்க அவன் அருமையான பிள்ளை!”
கால்களை அவள் புறமாக இன்னும் வசதியாக நீட்டிக்கொண்டான் அவன். இவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“ஏதாவது நடத்தை பிழை, படிப்பில்லை, ஒழுக்கம் இல்ல, குடும்பம் சரியில்ல எண்டு ஏதாவது ஒரு காரணம் இருந்தா நான் கேட்டுக்கொண்டு வரமாட்டன் மாமா. எனக்கு அவனைச் சின்ன வயசில இருந்து தெரியும். யாழியைச் சந்தோசமா, கண்கலங்காம வச்சுப் பாப்பான்!”
அவருக்குச் சொல்கிறேன் என்கிற பெயரில் அருகில் இருக்கிறவனுக்குப் புரிய வைத்துவிட முயன்றுகொண்டிருந்தாள் பிரமிளா.
அவனுக்கு அது புரியாமல் இருக்குமா? தான் பாசம் வைத்தவர்களுக்காக எந்தக் காரியத்திலும் துணிந்து இறங்கும் அவள் மனது அவனை ஈர்த்தது.
இந்த ரஜீவன் அவளோடு கூடப் பிறந்தவனும் கிடையாது. அவனுக்காக எவ்வளவு செய்கிறாள். அசந்துபோய் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். போகிற போக்கில் அவனுக்கும் சிலபல குட்டுகளை வைக்கவும் தவறவில்லை. நன்றாக வியர்த்துப்போயிருந்தாள். பெரிய தைரியசாலி மாதிரி வீரம் காட்டிப் பேசினாலும் தன்னைக் குறித்து உள்ளுக்குள் நடுங்குகிறாள் என்று புரிந்துபோயிற்று.
அவளில் படிந்த பார்வையை அவன் உயர்த்த யாரும் அறியாமல் அவள் அவனை முறைத்தாள். அவன் உதட்டோரம் உல்லாச முறுவல் அரும்பிற்று!
“பிறந்ததில இருந்தே வசதியா வளந்த பிள்ளை. அங்க போய் எப்பிடியம்மா? உழைச்சு முன்னேறினாலும் அப்பிடி என்ன பெரிய வசதி வாய்ப்பு வந்திடும் சொல்லு? இருக்க ஒரு சின்ன வீடு, போய்வர ஒரு மோட்டார் சைக்கிள் வருமா இருக்கும். அது இந்த வீட்டுப் பிள்ளைக்குக் காணாதேம்மா.” என்றுமில்லாத விதமாக இன்று நிதானமாக உரையாடிய தந்தையைக் கண்டு கண்ணீரே வந்திருந்தது யாழினிக்கு.
கலங்கிய மகளைத் தட்டிக் கொடுத்தார் செல்வராணி. இங்கே அவர் எதுவும் பேசிவிட முடியாது. ஆனால், மருமகள் ஒருவனைச் சொல்கிறாள் என்றால் நிச்சயம் அவனும் அவளைப் போன்ற குணவானாக இருப்பான் என்பதை மட்டும் அவரால் சொல்ல முடியும்.
“சரி மாமா, அப்பிடியே வசதி இல்லாட்டித்தான் என்ன? காசு பணத்தை விட நல்ல மாப்பிள்ளை, அவளைச் சந்தோசமா வச்சிருக்கிறவன், முக்கியமா அவளுக்குப் பிடிச்சவன் மனுசனா அமையிறதுதானே முக்கியம். வசதியும் வேணும் எண்டா அண்ணாக்கள் எண்டு ஒண்டுக்கு ரெண்டுபேர் என்னத்துக்கு இருக்கினம்? சீதனமா அவளுக்கான வசதியச் செய்து குடுக்கச் சொல்லுங்கோ. அவளுக்கும் இந்தச் சொத்துப் பத்தில பங்கு இருக்குதானே மாமா. இல்ல அண்ணாவும் தம்பியும் மொத்தமா தாங்க சுரு… அனுபவிக்க நிக்கினமா?” முழுமூச்சுடன் அவளின் தரப்புக்காக அவள் வாதாட, வேகமாகக் குனிந்து ஜீன்ஸ் காலின் சுருக்கத்தை நேராகிவிட்டான் கௌசிகன்.
இப்ப முக்கியம்! இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது! எளியவன் வாயைத் திறந்து ஏதாவது சொல்கிறானா பார்!
ராஜநாயகம் அப்போதும் முடிவாக எதையும் தெரிவிக்க மறுத்தார். “இதெல்லாம் அவசரத்தில் எடுக்கிற முடிவு இல்லையேம்மா.” என்றவருக்கு, எப்போதும் எல்லாவற்றையும் முதல் ஆளாகக் கையிலெடுத்துத் தீர்வு காணுகிற மகனின் இன்றைய அமைதி ஏன் என்று புரியவில்லை.
“அதத்தான் நானும் சொல்லுறன். இப்ப அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். அவள் படிக்கட்டும். அவனும் முன்னுக்கு வரட்டும். அதுக்குப் பிறகு யாழின்ர கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாமே. இப்பவே என்ன அவசரம்?”
அவருக்குப் புரியவில்லை. மகளுக்கு யார் இங்கே திருமணம் பேசியது என்று பார்த்தார்.
“உங்கட மகன்தான் பாக்கிறாராம். அவள் சின்ன பிள்ளை. படிக்க விடாம ஏன் இவ்வளவு அவசரம்?” இது அவருக்கே புதுச் செய்தி. அவனைக் கேள்வியாக நோக்கினார்.
“பொம்பிளைப் பிள்ளை வீட்டில இருந்தா நாலு சம்மந்தம் வாறதும் போறதும் வழமை தானேப்பா.” என்றுவிட்டு எழுந்து ஒன்றும் சொல்லாமல் தன் அறைக்குப் போனான் அவன்.
படியேறிக்கொண்டிருந்தவனின் முதுகை நன்றாகவே முறைத்தாள் பிரமிளா. தொண்டைத் தண்ணீர் வற்றப் பேசியது எல்லாம் வீணா? ராஜநாயகத்துக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை. செல்வராணியால் இதிலெல்லாம் தலையிட்டுவிட முடியாது.
அப்போது, யாழினியை அழைத்து, “அண்ணியை ஒருக்கா வந்திட்டுப் போகாட்டாம் எண்டு சொல்லிவிடு!” என்று சொல்லி அனுப்பிவைத்தான் அவன்.