அவளும் வந்து சொல்ல இவளுக்குச் சங்கடமாயிற்று. மாமா, மாமி, ரஜீவன் எல்லோரையும் வைத்துக்கொண்டு இப்படிக் கூப்பிட்டு விடுவது என்ன பழக்கம்?
என்ன செய்வது என்று தெரியாது அவள் நிற்க, “தம்பி கூப்பிட்டவன் எல்லாம்மா. போ, போய் என்ன எண்டு கேள்!” என்றார் செல்வராணி.
அவருக்கு யாழினியை மருமகள் பார்த்துக்கொள்வாள் என்று தெரியும். அதில், அவர்களின் வாழ்க்கைச் சிக்கல் தீர்ந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்புத்தான் மிகுந்திருந்தது.
அதற்குமேல் தயங்கினால் இன்னுமே காட்சிப் பொருளாக வேண்டும் என்று எண்ணி அவனிடம் நடந்தாள் அவள்.
அந்த அறைக்குள் கால் வைத்த கணம் எத்தனை திடமாகக் காட்டிக்கொள்ள முயன்றபோதும் மனம் தடுமாறிற்று. ஆரம்ப நாட்கள் கடினமாகக் கழிந்திருந்தாலும், அவளின் மனத்திலும் மாற்றங்களை அந்த அறை உருவாக்கி இருக்கிறது. சிலபல மாயங்களை நிகழ்த்தி இருக்கிறது. மெல்ல அவனை நோக்கினாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் உள்ளே வந்ததும், “கதவச் சாத்து!” என்றான்.
வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள். சங்கடத்துடன் சாற்றினாள்.
“இஞ்ச அவனைக் கூட்டிக்கொண்டு வரமுதல் என்னட்டக் கதைக்கோணும் எண்டு நினைக்கவே இல்லையா நீ?” என்று வினவினான் அவன்.
இவனிடம் சொன்னால் மறுத்துவிடுவான், உசாராகிவிடுவான் என்றுதானே சொல்லாமல் கொள்ளாமல் ஞாயிறில் வந்தாள். இதை எப்படி அவனிடம் சொல்வது?
“கச்சிதமா திட்டம் போட்டுக் காரியம் சாதிக்கிறீங்களோ?”
தன் களவு பிடிபட்டதில் முகம் சூடாக நிமிர்ந்தவள் மிகுந்த நெருக்கத்தில் நின்றவனைக் கண்டு தடுமாறி விலகப் பார்த்தாள். விடாமல் அவளைப் பற்றிப் பிடித்தான் அவன்.
நெருக்கத்தில் தெரிந்த முகம் நெஞ்சுக்குள் புகுந்து என்னவோ செய்தது. சீற்றத்தைச் சுமந்து நின்ற அவனுடைய கூரிய விழிகளில் நேசத்தைக் கண்ட பொழுதுகள் நெஞ்சுக்குள் மின்னலாய் ஓடி, அவளைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தன.
“என்னை விட்டுடுங்கோ எண்டு சொன்னவள் இப்ப என்னத்துக்கு இஞ்ச வந்திருக்கிறாய்?”
எப்படிக் கேட்கிறான்? அவளுக்கு ரோசம் பிறந்தது.
“நான் ஒண்டும் உங்களைத் தேடி வரேல்ல! ரஜீவனுக்காகக் கதைக்கத்தான் வந்தனான்! யாழிக்காக வந்தனான்.”
“என்ர தங்கச்சிக்குக் கல்யாணம் பேச நீ ஆரு?”
அந்தக் கேள்வி அவளுக்குச் சுருக்கென்று தைத்தது. “நல்லத ஆரும் ஆருக்கும் செய்யலாம்!” என்றாள் அவளும் திருப்பி.
“நாங்க மட்டும் என்ன கெட்டதாவே தேடிப்பிடிச்சுச் செய்துகொண்டு இருக்கிறமா?”
அவன் சண்டையை வளர்க்கிறான் என்று புரிந்துவிட, “இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்று கேட்டாள் அவள்.
“நீ ஆரு என்ர தங்கச்சிக்குக் கலியாணம் பேச? அவளுக்கு நாங்க இருக்கிறம். எங்கட வசதிக்கும் தகுதிக்கும் ஏற்ற மாதிரி ஒரு மாப்பிள்ளையப் பாக்க எங்களுக்குத் தெரியாது எண்டு நீ பாத்தியா?”
அவள் அவனை வெறித்தாள். கடும் வார்த்தைகளைக் கொண்டு அவளின் நெஞ்சைக் கீறும் இவன் மாறவே மாட்டானா?
ஒன்றும் சொல்லாமல் திரும்பினாள் அவள். வேகமாக அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் கௌசிகன். “உன்ர மனுசியடா நான். என்னை விட வேற ஆர் அவளுக்குக் கலியாணம் பேசுவினம் எண்டு இப்பவும் கேக்கமாட்டியா நீ?” என்றான் கோபத்தோடு.
“அப்பிடிச் சொல்லக்கூடப் பிடிக்காதவள் என்ன நினைப்பில இந்த அறைக்க என்னைத் தனியா சந்திக்க வந்தனி? இப்பிடித்தான் உன்ர கூடப் பிறக்காத தம்பிக்கு எந்த வீட்டுக்குப் பொம்பிளை கேட்டுப் போனாலும் அங்க ஒரு அண்ணன் இருந்து அறைக்கு வா எண்டு கூப்பிட்டா போவியா?” அவன் கேட்டு முடிக்க முதலே படார் என்று ஒன்று அவன் வாயிலேயே போட்டாள்.
“என்ன கதைக்கிறீங்க எண்டு யோசிச்சுக் கதைங்க!” என்று சீறியவளுக்குக் கைகால் எல்லாம் நடுங்கிற்று! அவளைப் பார்த்து என்ன வார்த்தை கேட்கிறான்?
அவன் பார்வை மாறிப் போயிற்று. அவளை உரசிக்கொண்டு நின்றான். “இப்ப விளங்குதா? நீ எனக்கு ஆரு, நான் உனக்கு ஆரு எண்டு? விட்டுடுங்க எண்டு சொன்ன? உன்ன விட்டுட்டு நான் என்ன செய்றது?” என்றான் ஏக்கத்தோடு. மனம் தாளாமல் அவளை ஆசையோடு அணைத்திருந்தான்.
பேசுவதை எல்லாம் பேசிவிட்டு இதை எதற்குச் செய்கிறானாம் என்று திமிறினாள் அவள்.
“அதென்னடி, அண்ணனும் தம்பியும் சொத்தைச் சுருட்டப் போறீங்களா எண்டு கேக்கிறாய்? என்னைப் பாத்தா உனக்கு அப்பிடியா இருக்கு?”
வேண்டும் என்றுதானே சொன்னாள். பதில் சொல்ல இயலாமல் அவள் தடுமாற அவன் பார்வை மாறிற்று! “நான் சுருட்டினா அதில உனக்கும் பங்கு இருக்கு. அது தெரியுமா உனக்கு?” என்று கேட்டுவிட்டு, அவள் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டான்.
மெல்லிய திகைப்புடன் அவள் பார்க்க, “என்ன பார்வை? பிடிக்கேல்லையா? ஓ… உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே! அதுதான் யாழிக்குப் பிடிச்சவனா அவளைச் சந்தோ…சமா வச்சிருக்கிற ஒருத்தனா பாக்கிறாய் போல! அப்பிடியா? நீ என்னோட சந்தோசமா இருக்கவே இல்லையா? சொல்லு ரமி? ஒரு நாள்? ஒரு பொழுது? ஒரு நிமிசம் கூட என்னோட நீ சந்தோசமா வாழவே இல்லையா?”
அவன் கேள்விகளில் அவளுக்கு முகம் சிவந்துவிடும் போலாயிற்று. அவனுக்குக் காட்டாமல் மறைக்க முயன்றாள்.
“இந்த முகச் சிவப்பு என்ன சொல்லுது எண்டு விளங்குதா உனக்கு?” என்று காதோரமாகக் கேட்டான் அவன். “உனக்கு என்னைப் பிடிக்காது? என்னோட நீ சந்தோசமா வாழவே இல்ல என்ன?” கேட்டு கேட்டு அவன் கொடுத்த தண்டனைகளில், “கௌசி பிளீஸ்!” என்று கெஞ்சியே ஓய்ந்துபோனாள் பிரமிளா.
“அவளை அவனுக்கே கலியாணம் செய்து குடுக்கிறன். ஆனா நீ என்னட்ட வரோணும்! டீல் ஓகேயா?” என்றான் அவன் காதோரமாக.
அவளுக்குத் திகைப்பு. “உங்களுக்கு இன்னும் இந்தப் பேரம் பேசுற குணம் போகேல்ல என்ன?” என்றாள் கோபத்துடன்.
அவன் சிரித்தான். “வேற வழி? உன்ன இஞ்ச வரவைக்கத்தான் அவளுக்குக் கல்யாணம் பேசுற மாதிரிக் கதையை அடிச்சு விட்டனான்!” என்றான் கண்ணைச் சிமிட்டியபடி.
அவளின் விழிகள் அப்படியே விரிந்துபோயிற்று. அவளுக்கும் என்னவோ இடித்ததே! உண்மையிலேயே இவன் மகா பொல்லாதவன்தான்! மீண்டும் ஒருமுறை அவளுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறான்.
“நீங்க மாறவே மாட்டீங்களா?”
“இதுதான் நான். மாறினா அது பொய் இல்லையா ரமி? என்னை நடிக்கச் சொல்லுறியா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
பதில் சொல்ல வராமல் அவள் நிற்க, “ஆனா ஒண்டு, என்ர வேல, நான் நினைச்சது நடக்கோணும், அதுக்கு என்னவும் செய்வன் எண்டு இருந்த நான் இப்ப மற்றவையப் பற்றியும் யோசிக்க ஆரம்பிச்சு இருக்கிறன். அப்பிடிப் பாக்கேக்க நான் மாறித்தான் இருக்கிறன் ரமி. என்ன மாத்தினது நீதான். இல்லாம ரஜீவன் எல்லாம் எனக்கு முன்னால வந்திருந்து என்ர தங்கச்சியையே கேப்பானா? கேக்க விட்டிருப்பனா? அவனும் அவளும் விரும்புறது எனக்கு எப்பவோ தெரியும். அதாலதான் வேலையும் வாங்கிக் குடுத்தனான்.” என்றவனை வாயடைத்துப்போய்ப் பார்த்திருந்தாள் பிரமிளா.
இந்தக் கௌசிகன் உண்மையிலேயே புதியவன்தான்.
“இங்கேயே நில்லன் ரமி!” அறை வரைக்கும் வந்துவிட்டவளை திருப்பி அனுப்ப மனமே இல்லை அவனுக்கு. பார்வை அவள் முகத்திலேயே இருக்க, ஆசையோடு கன்னத்தை வருடியது அவன் விரல்கள்.
வேகமாக விலகினாள் அவள். “நேரமாச்சு. நான் போகோணும்.” அவன் முகம் பாராமல் முணுமுணுத்தாள்.
இதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியவில்லை அவனுக்கு. “ஏன் பிரமி இப்பிடி? இன்னும் எவ்வளவு காலத்துக்கு விலகியே நிக்கப் போறாய்?” கோபமா, ஏமாற்றமா, ஆற்றாமையா என்று இனம் பிரிக்க முடியாத கனத்த குரலில் வினவினான் அவன்.
அவளுக்கும் புரியவில்லை. ஒரு குழப்பம். மனம் ஒப்பி அவனிடம் போக முடியவில்லை. உடல் குழைகிறதுதான். உள்ளம் அவனருகில் தடுமாறுகிறதுதான். ஆனாலும் ஒரு தெளிவு வேண்டுமாய் இருந்தது. ஒரு நெடிய மூச்சினை இழுத்து விட்டுவிட்டு அவனை நோக்கினாள்.
“வேணும் எண்டே வீம்பு பிடிச்சு விலகி நிக்கேல்ல நான். இனியாவது இஞ்ச வந்தா சாகிற வரைக்கும் உங்களோட வாழ்ந்து இந்த வீட்டை விட்டு நான் போறதுதான் கடைசிப் பயணமா இருக்கோணும் எண்டு நினைக்கிறன். அதுக்கு எனக்கு ஒரு தெளிவு வேணும். அதுவரைக்கும் பிளீஸ்… என்ன என்ர பாட்டுக்கு விடுங்கோ!” என்றவள், “போய்ட்டு வாறன்!” என்கிற முணுமுணுப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.