அறையின் விளக்கைக் கூடப் போடாமல் கண்களை மூடியபடி மனைவியின் நினைவுகளுக்குள் அமிழ்ந்திருந்தான் கௌசிகன்.
நடந்த அனைத்துக்குமான சூத்திரதாரி அவன்தான்! தானாக வராதவர்களை அவனைத் தேடி ஓடி வரவைப்பது என்பது அவனுக்குக் கைவந்த கலை! அதைத்தான் இப்போதும் செய்தான். அவளை வரவும் வைத்தான்.
ஆயினும் முன்னர் போன்று அதில் வெற்றிவாகை சூட முடியவில்லை. அவளை வற்புறுத்த இயலவில்லை. தன்னை அவளிடம் ஒப்புக் கொடுக்க மாத்திரமே முடிந்தது.
கடைசியில் அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள்…
“தம்பி…” வாசலிலிருந்து அன்னையின் குரல் கேட்டது.
“சொல்லுங்க அம்மா.” என்றான் கண்களைத் திறக்காமலேயே.
“ஏன் அப்பு இருட்டுக்கையே இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டு வந்தவர் விளக்கைப் போட்டுவிட்டு அவன் முகம் பார்ப்பதுபோல் வந்து நின்றார்.
அப்போதும் அவன் விழிகளைத் திறந்தான் இல்லை.
“உன்னோட கொஞ்சம் கதைக்கோணும் அப்பு.” என்றார் கெஞ்சல் குரலில்.
அவனுடைய மௌனமே அதற்கான அனுமதியைத் தந்தது. சுற்றிவளைத்துப் பேசினால் சினம் கொண்டுவிடுவான் என்று நேரடியாக விசயத்துக்கு வந்தார்.
“எப்பவுமே நீ, அப்பா, தம்பி மூண்டு பேரும் எனக்கு ஒண்டும் தெரியாது எண்டுதான் சொல்லுவீங்க. அது உண்மையும்தான். இந்த வெளி உலகம், உங்கட நியாய அநியாயங்கள் எனக்கு விளங்குறது இல்லத்தான். ஆனா வீட்டுக்கையே இருக்கிற எனக்குக் குடும்பப் பிரச்சனை கொஞ்சம் கூடுதலா விளங்கும் தம்பி.” என்றார் மெல்ல.
கண்களைத் திறந்து தாயைப் பார்த்தான் கௌசிகன். அவருக்கு ஒன்றும் தெரியாது என்று பலமுறை நினைத்திருக்கிறான்தான். ‘பேசாம போங்கம்மா’ என்றோ, ‘வாய மூடிக்கொண்டு இருங்கம்மா’ என்றோ அதட்டியிருக்கிறான்.
எதையாவது சொல்ல வரும்போது எரிச்சலில் முகம் சுளித்திருக்கிறான். கேட்காமல் எழுந்து போயிருக்கிறான். ஆனால் இன்று, அவரே எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னபோது சுட்டது. ‘வீட்டுப் பெண்களை மதிக்கப் பழகு!’ என்று மனைவி கடுமையாகச் சாடியதும் நினைவில் வந்து நின்றது.
இறங்கிப்போய் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. பதிலாக, “சொல்லுங்கம்மா. என்ன சொல்ல நினைக்கிறீங்க?” என்று விசாரிக்க முடிந்தது.
அதுவே அவன் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டதற்குச் சமனாக அவர் முகம் மலர்ந்து போயிற்று. “அவள் அருமையான பிள்ளை அப்பு. பொறுப்பான பாசமான மருமகள்.” என்றவர் அவன் நிமிர்ந்து பார்க்க, “உன்னையும் குறை சொல்லேல்ல தம்பி. நீயும் உன்ர பொறுப்பைத் தவற விடுறவன் இல்ல. ஆனா குடும்பம் வாழப் பொறுப்பு மட்டும் காணாது.” என்றார் அவசரமாக.
“ப்ச் அம்மா! எப்பிடிச் சொல்ல… நீங்க சொன்னாலும் அவளைப் பிடிச்சதாலதான் கட்டினான். பிறகு பிறகும்… ஆனா அவளுக்கு… என்னை, என்ர மனசைத் தெரியவே இல்ல.” அவள் இல்லாமல் வாழமுடியாமல் தவிப்பதையும், அவளைத் தன் மனம் மிகவுமே தேடுவதையயும் அன்னையிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாது நிறுத்திக்கொண்டான்.
இந்தளவில் அவரிடம் அவன் மனம் திறந்து பேசியதே இமாலய மாற்றம் என்று உணர்ந்த செல்வராணி, “அப்பிடி இல்ல தம்பி.” என்று உடனேயே மறுத்துவிட்டு,
“உன்ன அவள் அணுவணுவா விளங்கி வச்சிருக்கிறாள். எதுக்கு நீ என்ன செய்வாய், எப்பிடி நடப்பாய் எண்டு தெரிஞ்சு வச்சிருக்கிறாள். அவளுக்கு அவளின்ர மனுசன்ர பலம் என்ன, பலகீனம் என்ன எண்டு நல்லா தெரியும்.” என்றார் அவர்.
அவன் வியப்புடன் பார்த்தான்.
“யோசிச்சுப் பார், பள்ளிக்கூட விசயம் உனக்குப் பயந்து அவள் வாபஸ் வாங்கேல்ல. குடும்ப கௌரவம் உனக்கு முக்கியம் எண்டு தெரிஞ்சு, எப்பிடியும் உண்மை வெளில வர நீ விடமாட்டாய் எண்டு கணிச்சு, கேஸை நடத்திறதே வீண் எண்டுதான் வாபஸ் வாங்கினவள். பிறகும், வாக்குக் குடுத்தா மாறமாட்டாய் எண்டுதான் பள்ளிக்கூட விசயத்த அதே பள்ளிக்கூடத்து மேடையில உன்னையே சொல்ல வச்சவள். உன்ர குணம் தெரிஞ்சுதான் உனக்கே தெரியாம தீபாக்குக் கல்யாண ஏற்பாடு செய்து, அதுக்கு உன்னையும் அப்பாவையும் பொறுப்பா சொந்த பந்தத்துக்கு முன்னால நிப்பாட்டினவள்.”
அவர் சொல்லச் சொல்ல வியப்புடன் கேட்டான் அவன்.
“யாழி விசயத்தையும் யோசிச்சுப் பார். நீ அவனுக்கு வேலை வாங்கிக் குடுத்ததையே அவனை நல்ல வேலைக்காரன் எண்டு நிரூபிக்கிறதுக்குப் பயன்படுத்தி இருக்கிறாள். அப்பாட்ட எவ்வளவு தைரியமா கதைச்சாள் சொல்லு? அது நீ இருக்கிறாய் எண்டுற தைரியம். என்ன கோவம் வந்தாலும் உனக்கு முன்னால அப்பா ஒண்டும் கதைக்கமாட்டார், அதுக்கு நீ விடமாட்டாய் எண்டு தெரிஞ்சுதான் கதைச்சவள். அவரிட்ட மட்டுமே கதைக்க வந்திருந்தா நீ அறைய விட்டு வெளில வர முதலே கதைச்சிருப்பாள். இல்ல, கடைக்குப் போய்ச் சந்திச்சு இருப்பாள். போக முதலும், நல்ல பிள்ளையா படிச்சு முடிக்கோணும், அண்ணா உனக்கு நல்லதுதான் செய்வார் எண்டு யாழிட்ட சொல்லிப்போட்டுத்தான் போனவள். அவளைப் போய் உன்ன விளங்கிக்கொள்ள இல்லை எண்டு சொல்லுறியே?” என்றவரின் கேள்வியில், மனைவியை எண்ணி அவனுக்குச் சிரிப்பு வந்தது. மனத்தில் ஒரு உல்லாசம்.
“நீ அடிச்சுப்போட்டாய் எண்டு கோவிச்சுக்கொண்டு போனாலும் உன்ன விலகி நிக்க விடாம தன்னட்ட வர வச்சாளா இல்லையா?”
அதுதானே! வாயைப் பிளக்காத குறைதான் அவனுக்கு.
அவனை முட்டாளாக்கி இருக்கிறாள். தன் கைப்பொம்மையாக ஆட்டுவித்திருக்கிறாள். அவனுக்கோ என்னவோ கிடைக்காத வெற்றி கிடைத்த பூரிப்பு.
அதைவிட, வீட்டுக்குள்ளேயே இருக்கும் அம்மா எவ்வளவு விடயங்களை மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறார். அவன் விழிகள் அவரையே நோக்கிற்று.
மகனுக்குள் தன்னைக் குறித்தான அனுமானங்கள் மாறிக்கொண்டிருப்பதை அறியாமல் சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.
“அவளை மாதிரிப் படிச்ச பிள்ளைகளுக்கு இந்த வீடு, இந்தக் குடும்பம், இஞ்ச இருக்கிற வித்தியாசமான நியாய அநியாயங்கள் பொருந்தவே பொருந்தாது தம்பி. இருந்தும் அவள் இஞ்ச பொருந்திப்போகத்தான் பார்த்தவள். கொஞ்சம் கொஞ்சமா மாறினவள். எல்லாம் சரியாகிற நேரம், வெண்ணைத் திரண்டு வரேக்க தாழிய உடைச்ச கதையா குழந்தை விசயம் நடந்து போச்சு. அது அவளுக்குப் பெரும் காயமப்பு.” என்றவருக்கு ஒரு கணம் பேச்சு நின்றுபோயிற்று.
கௌசிகனும் தொண்டைக்குள் எதுவோ அடைக்கும் உணர்வில் பார்வையை அவரிடமிருந்து அகற்றினான்.
“உன்ர தம்பி எவ்வளவு பெரிய பிழை எல்லாம் செய்துபோட்டான் சொல்லு. ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைகளைக் கேவலப்படுத்தினவன் இனி எனக்கு மகனே இல்லை எண்டு நினைச்சிருக்கிறன். ஆனா இப்ப, என்ர பிள்ளை அங்க தனியா இருந்து என்ன செய்றானோ, என்ன பாடு படுறானோ எண்டு மனம் கிடந்து தவிக்குது. இதத்தான் அப்பு தாய்ப்பாசம் எண்டு சொல்லுறது. தூரத்தில இருக்கிற பிள்ளையை நினைச்சே நான் இந்தப்பாடு படுறன். அவள் தன்ர பிள்ளையை முழுசா பறி குடுத்திருக்கிறாள். பத்து மாதம் உயிரோட சுமந்து, வெளில வரேக்க உயிர் இல்லையாம் எண்டா அதை எப்பிடி ஒரு தாய் தாங்குவாள்?” என்றவரின் கேள்வியில் அவன் உயிரும் உள்ளமும் துடியாய்த் துடித்தன.
மிருதுளா. அவனுடைய பெண் பூ. இன்று இல்லை.
“அதுக்குக் காரணம் இந்தக் குடும்பம்தானே? அதையெல்லாம் ஜீரணிச்சு, ஒதுக்கி வச்சிட்டு உன்னட்ட வாறதுக்குக் கொஞ்சக் காலம் அவளுக்கு வேணும். அத நீ குடுக்கோணும். போன முறை மாதிரி அவளை வலுக்கட்டாயத்தில இஞ்ச கொண்டுவர நினைக்காத.” என்றார் கெஞ்சலாக.
இதைத்தானே அவளும் சொன்னாள்.
ஒன்றும் சொல்லாமல் அவன் கேட்டுக்கொண்டதே போதும் என்பதுபோல் எழுந்துகொண்டார் செல்வராணி.
“எதைப் பற்றியும் யோசிக்காம படுத்து எழும்பு தம்பி. எல்லாம் சரியா வரும்.”