ஏனோ மனம் தள்ளாடுதே 59 – 3

எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு அவள் கல்லூரியை விட்டு வெளியே வந்த நொடி, அவளின் முன்னால் வந்து நின்றான் கௌசிகன்.

“என்னோட வா. கார்ல கூட்டிக்கொண்டு போய் விடுறன்.” என்றான். சற்று முன்னர் அவள் வெளிப்படுத்திய குறும்புத்தனத்தில் அவளோடான பொழுது ஒன்று அவனுக்கு வேண்டுமே வேண்டும் என்றாயிற்று.

“எனக்கு ஸ்கூட்டி நிக்குது.” விடமாட்டான் என்று தெரியும். இருந்தும் சொன்னாள்.

“அத…” என்று பார்வையைச் சுழற்றியவனின் கண்களில் செக்கூரிட்டி பட, “அவன் கொண்டுவந்து விடுவான். நீ வா.” என்றான் குமரனைக் காட்டி.

இவன்தானே அன்று பள்ளிக்கூடத்தைத் திறக்கமாட்டேன் என்று அப்பாவைத் தடுத்து நிறுத்தியவன். அவனிடம் அவள் ஒரு உதவியைப் பெறுவதா? “நீங்க கொண்டுவந்து விடுறதா இருந்தா விடுங்க. இல்லையா நான் ரஜீவனைக் கொண்டு எடுப்பிப்பன். சும்மா கண்டவனையும் கூப்பிடாதீங்க!” என்று சினத்துடன் மொழிந்துவிட்டுக் காரில் சென்று அமர்ந்துகொண்டாள் அவள்.

ஒரு சின்ன விசயம். இதற்கேன் இவ்வளவு கோபப்படுகிறாள்? ஆனாலும் ஏன் இப்படி என்று கேட்கவில்லை. விடுமுறை ஆரம்பிக்கிறது. இனித் தினமும் பார்ப்பது சிரமம். அதனால்தான் கவனித்துக்கொண்டே இருந்து அவள் வெளியே வந்ததும் படக்கென்று பிடித்தான். அப்படி அருமையாகக் கிடைத்த இந்தப் பொழுதை யாரோ ஒருவனைப் பற்றிப் பேசி வீணாக்க அவன் தயாராக இல்லை.

அவளின் அருகண்மையை அனுபவித்தபடி சற்று நேரம் காரைச் செலுத்திவிட்டுத் திரும்பியவன் பார்த்தது உறங்கிவிட்ட மனைவியையே. மெதுவாகக் கொண்டுபோய் ஒரு மரத்தின் கீழே காரை நிறுத்தினான். ஏசியைப் போட்டுவிட்டான்.

கணவனின் அண்மையில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தாள் பிரமிளா. அவளையே பார்த்திருந்தான்.

ஒரு சிறு பிழை செய்தால் கூட எவ்வளவு கோபம் வருகிறது இவளுக்கு? பொல்லாதவள். அவனையே தலையால் தண்ணீர் குடிக்க வைக்கிறாளே. அடர்ந்த மீசையின் கீழே உதடுகள் விரிய, தன்னை மறந்து அவளின் தலையைப் பாசத்தோடு வருடிக்கொடுத்தான்.

திடுக்கிட்டு விழித்தாள் அவள். அவனும் அசையாது என்ன சொல்வாளோ என்று அவளையே பார்த்தான். உறக்கம் கலையாத விழிகளோடு, “நீங்களா?” என்று கேட்டுவிட்டு மறுபுறம் திரும்பிக் கண்களை மூடிக்கொண்டாள்.

அப்படியே சமைந்தான் அவன்.

ஒருமுறை உறக்கம் கலைந்ததாலோ என்னவோ பிறகு அவள் உறங்கவில்லை. மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

“ஒரு தேத்தண்ணி குடிப்பமா?” அவளோடான பொழுதை நீட்டிக்க விரும்பினான் அவன்.

தேநீர்க் கடையின் முன்னே, ஒரு மரத்து நிழலில் காரை நிறுத்திவிட்டு, “நீ இரு” என்று சொல்லி இறங்கிச் சென்றான். வரும்போது அவனுடன் கூடவே கடைப் பெடியனும் வந்தான். இரண்டு தேநீர் கப்புகள், கூடவே வடையும் சம்பலும் இரண்டு தட்டுக்களில் இருந்தன.

கொஞ்ச நேரம் என்றாலும் தன்னை மறந்து அயர்ந்து எழுந்ததில் அவளுக்கும் பசித்தது. வடையை உண்டுவிட்டு இஞ்சித் தேநீரைப் பருகினர்.

“இந்த லீவுக்கு என்ன செய்யப் போறாய்?”

“தங்கச்சிட்ட போகப்போறன்.”

அவனுக்குள் மெல்லிய அதிர்ச்சி. இங்கிருந்தாலாவது எப்போதாவது பார்க்கலாம். அங்குப் போனால்?

“திருகோணமலைக்கா?”

“அவள் அங்கதான் இருக்கிறாள்.”

இப்போது அவன் முகத்தில் முறுவல் விரிந்தது.

“எப்ப போறாய்?”

“நாளைக்கு.”

“டிக்கெட் புக் செய்தாச்சா?”

“இல்ல.”

பேச மறுத்தவளின் வாயை விடாமல் பிடுங்கிக்கொண்டு காரைச் செலுத்தினான். வேகமாக அவளின் வீடு வந்து சேர்ந்திருந்தது. ஒன்றும் சொல்லாமல் தன் ஹாண்ட் பாக்குடன் இறங்கிக்கொண்டாள் பிரமிளா.

வா என்று அழைக்கவுமில்லை. போய் வருகிறேன் என்று சொல்லவுமில்லை. கேட் அருகில் நெருங்கியவளை, “பிரமி!” என்று அழைத்தான்.

அவள் திரும்பிப் பார்க்க, “இங்க வா” என்றான்.

அவளும் திரும்பி வர, ஜன்னலால் கையை வெளியே கொண்டுவந்து அவளின் கரத்தைப் பற்றினான்.

அவன் விழிகளில் வார்த்தைகளில் சொல்லத் தெரியாத தவிப்பு. “கவனமா போ. எதையும் யோசிக்காத. எனக்கும் உனக்கும் இடையில மனதுக்கு வேதனையான விசயம் நிறைய நடந்து போச்சுத்தான். அதுல நிறையப் பாதிச்சது நீதான். எனக்கும்… நானும்… அத விடு. நீ சந்தோசமா இரு. என்ன தேவை எண்டாலும் ஒரு ஃபோன்கோல் போதும். உடன வருவன்.” என்றான், அவனுக்கே உரித்தான ஆழ்ந்த குரலில்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. திரும்பி நடந்தாள். நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக்கொள்ளும் உணர்வு. அவனோ அவளின் விரல்களை விட மறுத்தான். அவள் திரும்பிப் பார்க்க, “போயிற்று வாறன் எண்டு சொல்லமாட்டியா?” என்று கேட்டான்.

“கைய விடுங்கோ!”என்று அவள் முணுமுணுக்க, “கவனம்!” என்று அழுத்திவிட்டு அந்த மென் விரல்களை மெல்ல விட்டான். என்னவோ, தன் உயிரே தன்னை விட்டுத் தள்ளிப்போவதைப் போல் ஒரு உணர்வு அவனுக்குள்.

காரை எடுத்துக்கொண்டு போய் அவர்களின் வீட்டிலிருந்து தள்ளி நிறுத்தினான். அவ்வளவு நேரமாக அவள் அமர்ந்திருந்த இருக்கை வெறுமையாக, அவனுடைய உள்ளத்தைப் போலவே காட்சி தந்தது.

காரின் இயக்கத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று அவள் இருந்த பக்கம் அமர்ந்துகொண்டான்.

கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தவனுக்கு நீங்களா என்று கேட்டுவிட்டு நிம்மதியாகக் கண்மூடியவள்தான் கண்ணுக்குள் நின்றாள். அந்த அமைதியை அவனால் ஏன் அவளுக்கு நிரந்தரமாக வழங்க முடியாமல் போயிற்று?

அலைபேசி அழைத்தது. எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “வாறன்!” என்றுவிட்டு வைத்தவனின் மனம் முழுவதும் ஒரு சலிப்பு. இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டே இருக்கிறான்! ஒரு பெருமூச்சுடன் திரும்பவும் மாறி அமர்ந்து காரை எடுத்தான்.

அலுவலகம் சென்றதுமே, ஏசி பஸ்ஸில் யன்னலோர இருக்கை ஒன்றை புக் செய்து அவளின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பிவிட்டான். நீண்ட நேரமாக அவள் பார்க்கவே இல்லை. என்ன செய்கிறாள்? என்ன வேலை செய்தாலும் நினைவுகள் அவளையே சுற்றின.

மாலைப்பொழுதில்தான் ப்ளூ டிக் விழுந்தது. அதிலிருந்தே அவன் பரபரப்பாகிப்போனான். என்ன பதில் அனுப்புவாள்? நன்றி சொல்வாளா? இல்லை அழைத்து எனக்கு டிக்கட் போடத் தெரியாதா என்று கோவிப்பாளா? எதுவாயினும் அவளிடமிருந்து ஏதோ ஒன்றை அவன் பெரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்க, அப்படி எந்த வினையும் அவள் ஆற்றவே இல்லை.

மனம் கேட்காமல் அழைத்தான்.

“டிக்கட் அனுப்பிவிட்டனான் பாத்தியா?”

“நான் பாத்திருந்தா உங்களுக்கு ப்ளூ டிக் விழுந்திருக்கும்தானே.” என்றாள் அவள்.

பிடி கொடுக்கிறாளே இல்லையே! உதட்டினில் முறுவல் விரிந்தது. “நீ ஒரு டீச்சர், பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் குடுக்கிறவள். ஒருத்தர் ஒரு நல்ல விசயம் செய்தா நன்றி சொல்லோணும் எண்டு உனக்குத் தெரியாதா?” எப்போதும் அவள் பயன்படுத்தும் வார்த்தைகளை இன்று அவன் சொன்னான்.

அவளிடம் பதில் இல்லை.

“என்ன டீச்சரம்மா, பதில் இல்லையா?”

“இப்ப என்ன, உங்களுக்கு நான் நன்றி சொல்லோணுமா?”

இவளை… “நீ ஒண்டுமே சொல்ல வேண்டாம். வையடி ஃபோனை!” என்றுவிட்டு வைத்தவனின் முகம் முழுக்கச் சிரிப்பில் மலர்ந்துபோயிருந்தது. ‘திமிர் எடுத்து ஆடினதுக்கு நல்லா வச்சுச் செய்றாள். அனுபவிடா!’ என்று எண்ணிக்கொண்டான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock