காலையிலேயே தனபாலசிங்கத்துக்கு முடியவில்லை. அந்தளவுக்கு நேற்றைய நாள் அவரை உலுக்கிப்போட்டிருந்தது. அதன் சாட்சியாகக் கண்ணெல்லாம் வீங்கி, முகமெல்லாம் அதைத்து இருந்தவரைப் பார்க்கவே முடியவில்லை. பயந்துபோனாள் பிரமிளா.
“என்னப்பா? ஏன் இப்படி இருக்கிறீங்க? உடம்புக்கு என்ன செய்யிது?” அவரின் அருகமர்ந்து கவலையோடு நெற்றியில் தொட்டுப் பார்த்தபடி வினவினாள்.
“இரவு பிரஷர் குளுசை(மாத்திரை) போட்டனீங்கதானே? பிறகு என்ன? ஒண்டுக்கும் யோசிக்காம இருங்கோ அப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும்.” என்றுவிட்டு, அன்னை சரிதாவுக்கு அழைத்து, ரஜீவனிடம் பிரஷர் பார்க்கும் கருவியைக் கொடுத்துவிடச் சொன்னாள்.
ரஜீவன் கொண்டுவந்ததும் பரிசோதித்துப் பார்க்க, அதுவோ எக்கச்சக்கமாக ஏறி இருப்பதாகச் சொல்லிற்று.
“அந்தளவுக்கு உங்களுக்கு என்ன யோசனை? இவ்வளவு காலத்துக்க எவ்வளவு பார்த்த ஆள் நீங்க. இந்தச் சின்ன விசயத்துக்கு இப்பிடிக் கலங்குவீங்களா அப்பா?” கனிவும் கண்டிப்புமாய் அவரிடம் ஆறுதலாகப் பேசினாள் அவள்.
அதற்கு எந்தப் பதிலும் சொல்லும் தெம்பற்று அமர்ந்திருந்தார் அவர். மனத்தில் தெம்பிருந்தால்தான் உடல் இயங்கும். அவரோ மனத்தளவில் முற்றிலுமாக உடைந்துபோயிருந்தார். மாணவிகளின் கண்ணீரும் கதறலும் காயங்களும் அவரைப்போட்டுப் பாடாய்ப் படுத்தின.
“இண்டைக்கு நீங்க வெளில வர வேண்டாம். இங்கேயே இருங்கோ. அல்லது வீட்டுக்குப் போயிட்டு பின்னேரமா வாறீங்களா?”
அவள் கேட்ட இரண்டுக்குமே அவர் மறுத்தார்.
“எனக்கு ஒண்டும் இல்லை அம்மாச்சி. நான் நல்லாத்தான் இருக்கிறன். சும்மா ஒரு சோர்வு. அவ்வளவுதான். ” என்றபடி எழுந்துகொள்ள முயன்றவரின் தோள்கள் இரண்டையும் பற்றி அமரவைத்தாள் பிரமிளா.
“நீங்க எங்கயும் வர வேண்டாம். இங்கேயே இருங்கோ அப்பா! கொஞ்சம் ஓய்வு எடுங்கோ.”
“எனக்காகப் போராடுற பிள்ளைகளோட நானும் நிண்டாத்தானேம்மா எனக்கும் நிம்மதியா இருக்கும்!” கெஞ்சலாகச் சொன்னார் அவர்.
“கமெரா இருக்குத்தானே? அதுல பாருங்கோ. வெளில வர வேண்டாம்.” முடிவாகச் சொல்லி அவரை அவரின் அதிபருக்கான அறையிலேயே அமரவைத்துவிட்டு காற்றாடியையும் போட்டுவிட்டு வெளியே வந்தாள்.
‘வீட்டுக்குப் போய்க் குளிச்சு உடுப்பு மாத்திக்கொண்டு வந்தா நல்லா இருக்கும்…’ என்று உள்ளே சிந்தனை ஓடியது.
எந்தத் தொலைக்காட்சிகளிலும் இதுபற்றிய செய்திகள் வரவே இல்லை. அவளும் அடிக்கடி ஃபோனில் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறாள். ஒன்லைனில் படிக்க முடிந்த பத்திரிகைகளைக் கூடப் புரட்டிப் பார்த்துவிட்டாள். எதிலுமே வரவில்லை.
நேற்று பள்ளிக்கூட வாயிலையும் மதில் சுவரையும் நிறைத்திருந்த ரிப்போட்டர்களில் ஒருவர் கூடவா செய்தியை வெளியிடவில்லை. அப்படி வெளியிடாமல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், இது பள்ளிக்கூட நிர்வாகம் மட்டுமே நடத்தும் காரியம் அல்ல என்று மீண்டும் தோன்றிற்று.
அந்த மோகனன் நினைவில் வந்துபோனான். அவனுக்கு அவ்வளவு வல்லமை இருப்பதாய்த் தோன்றவில்லை. வேண்டுமானால் அவனும் அம்பாக இருக்கலாம். அப்போ எய்தவன் யார்? அவனுடைய அப்பாவா?
நினைத்தபோதே அவளின் இதழோரம் ஏளனமாக வளைந்தது. ‘நேரில் வந்து எதையும் எதிர்கொள்ளத் துணிவற்ற ஒரு மனிதன், பின்னால் நின்று முதுகில் குத்துகிறாரா? பார்ப்போமே எந்தளவு தூரத்துக்குக் குத்த முடிகிறது என்று.’
அங்கே வெளியில், இரவு வீட்டுக்குப் போன மாணவியர் வந்துகொண்டிருந்தனர். பள்ளிக்கூடத்தில் தங்கியவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். ஆசிரியர்களும் அப்படியே மாறிக்கொண்டனர்.
காலை உணவுக்கும் ஒழுங்கு செய்துவிட்டு, மெயில் செக் செய்தபோது வெளிநாடுகளில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்களிடமிருந்து, ‘எந்த உதவி என்றாலும் தாங்கள் செய்யத் தயாராக இருப்பதாகவும், என்ன வேண்டுமென்பதைத் தெரிவித்தால் இங்கே ஊரில் இருக்கும் தங்கள் உறவினர்கள் உடனேயே விரைந்து வருவார்கள்.’ என்றும் தெரிவித்திருந்தார்கள்.
அமெரிக்க மிஷனிடமிருந்து இன்னும் எதுவும் வந்திருக்கவில்லை. இரவு அனுப்ப மறந்துவிட்ட இலங்கையின் ஆசிரியர் சங்கத்துக்கும் மெயில் அனுப்பிவைத்தாள்.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வந்தபோது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நின்றிருந்த பிரதீபன் அவளை நோக்கிக் கையசைத்தான். கேள்வியுடன் பார்க்க, அவளிடம் ஓடிவந்து, “ஏதாவது ஹெல்ப் வேணுமா எண்டு கேக்க வந்தன் அக்… மிஸ்…” என்றான் தயக்கத்துடன்.
“அக்கா எண்டே சொல்லும்.” அப்படிச் சொன்னாலும் தள்ளியே நிறுத்துகிறாள் என்பது முகத்தில் தெரிந்த இறுக்கத்திலும் அவள் பேசிய தொனியிலும் தெரிந்தது.
முகம் வாடிப்போயிற்று அவனுக்கு. அவன் என்றால் பிரமிளாவுக்கு ஒரு காலத்தில் மிகவுமே பிடிக்கும். ஆனால் இன்று… என்று ஓடிய சிந்தனையை இடையிலேயே நிறுத்தி, “சொல்லுங்கோ அக்கா, ஏதாவது ஹெல்ப் வேணுமா?” என்று வினவினான்.
“எனக்கு இண்டைக்கு வந்த முக்கிய நியூஸ்பேப்பர் எல்லாம் வேணும். வாங்கிக்கொண்டு வாறீரா?” என்றவள் கைப்பையிலிருந்து பணம் எடுக்கப்போக, “வாங்கிக்கொண்டு ஓடிவாறன்.” என்றுவிட்டு அந்தக்கணமே பறந்திருந்தான் அவன்.
அவனுடைய செய்கையில் உதட்டினில் மலரத் துடித்த முறுவலை உதட்டுக்குள்ளேயே அடக்கினாள் பிரமிளா.
அவன் செய்தித் தாள்களைக் கொண்டுவந்து கொடுத்தபோது, “இண்டைக்குக் கம்பஸ் இல்லையா?” என்று, பேப்பரில் பார்வையை ஓட்டியபடி வினவினாள்.
“இருக்கு. ஆனா இப்ப ஃபிரீதான்.”
“சரி நடவும்!”
அப்போதும், “வேறேதும் ஹெல்ப் வேணுமா அக்கா?” என்றான் அவன் அங்கிருந்து நகராமல்.
“தேவை எண்டால் ஃபோன் செய்வன். மற்றும்படி நீர் இங்க வரத் தேவையில்லை. ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரும்!” அவன் முகம் பார்க்காமலேயே அதட்டலாக மொழிந்துவிட்டுத் திரும்பிப் பள்ளிக்கூடத்துக்குள் நடந்தாள் அவள்.
பத்து நிமிடத்திலேயே மீண்டும் வந்து நின்றான் பிரதீபன். முறைத்தவளிடம், “கொஞ்சம் ரோல்ஸ், கறிபணிஸ், பற்றிஸ் எல்லாம் வாங்கினனான் அக்கா. பிள்ளைகளுக்குக் குடுத்துச் சாப்பிடுங்கோ.” என்று, மெல்லிய தயக்கத்துடன் சொல்லியபடி பெரிய பை ஒன்றை நீட்டினான்.
எந்தச் செய்தித்தாள்களிலும் அவர்களின் பள்ளிக்கூடப் பிரச்சனை முக்கிய விசயமாக முன்பகுதியில் வரவே இல்லை. இரண்டு வரிகளில் சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு, ‘அந்தப் பள்ளிக்கூடத்தில் அதிபர் மாற்றத்தில் என்னவோ பிரச்சனையாம்’ என்கிற அளவில் சாதாரணமாக மட்டுமே கவனத்தில் பதியும்.
அப்படித்தான் வரவைத்திருந்தான் கௌசிகன்! அவனது ஆணையின் பெயரில் அவன் இல்லாமலேயே அனைத்தும் கச்சிதமாய் நடந்தேறியிருந்தன.
அத்தனை ரிப்போட்டர்ஸும் வளைக்கப்பட்டு, அவர்களிடமிருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எந்த விடயமும் முக்கிய விடயமாக வெளியே வரமுடியாதபடிக்குப் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களோடு கதைத்து, அவர்களின் கையையும் வாயையும் கட்டிப்போட்டிருந்தான். அவர்களே கட்டப்பட்ட பிறகு அவர்களின் கீழிருக்கும் ரிப்போர்ட்டர்கள் எம்மாத்திரம்?
அது மாணவியரைப் பெரிதும் பாதித்திருந்தது.
இதுவரை காலமும் மாணவர்களின் சக்தி பெரும் சக்தி என்றும் அவர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை என்றும் எண்ணியவர்கள் இரண்டாம் நாளாகத் தங்களின் போராட்டம் தொடர்வதையே பெரும் தோல்வியாக எண்ணி மனம் சோர்ந்தனர்.
என்ன இருந்தாலும் பக்குவப்படாத குழந்தைகள். எதனதும் முடிவும் உடனேயே கிடைத்துவிட வேண்டுமென நினைத்தார்கள்.
இப்படியே தீர்வு கிட்டாமல் நாட்கள் நீண்டால் அவர்கள் தாக்குப்பிடிப்பார்களா? தாக்குப் பிடித்தாலும் இந்த வேதனைகளைத் தாங்கிக்கொள்வார்களா? இது பிரயோசனம் அற்ற போராட்டமாகவே போய்விடுமோ என்றெல்லாம் எண்ணிக் கவலைகொண்டாள் பிரமிளா.
நிர்வாகத்தின் திட்டமே அதுவாகத்தான் இருக்கும். அமைதியாக இருந்தால் மாணவிகளின் கல்வியை முக்கியமாகக் கருதும் இவர்கள் இறங்கி வருவார்கள் என்று எண்ணியிருப்பார்கள். போகிற போக்கில் தானே அதைத்தான் செய்து விடுவோமோ என்று பயந்தாள் பிரமிளா. எதையாவது விரைந்து செயலாற்ற வேண்டும்.
மாணவிகளோ பிரதீபன் வாங்கிக் கொடுத்திருந்த உணவை மறுத்தனர். அவள் ஒழுங்கு செய்திருந்த காலை உணவையும் மறுத்தனர். அக்கணத்தில் இருந்தே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். தமது உள்ளிருப்புப் போராட்டத்தைக் கவனயீர்ப்புப் போராட்டமாக மாற்றியிருந்தனர். செய்திகளில் வெளியாகவில்லை என்றதும் பள்ளிக்கூடத்துக்கு வெளியே வரிசையாக வந்து நின்றபடி தங்களின் தேவைகளைப் பதாகைகளாகச் சுமந்தபடி கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
“நீதி வேண்டும் நீதி வேண்டும்! எங்களுக்கு நீதி வேண்டும்!”
“வீ வோண்ட் மிஸ்டர் தனபாலசிங்கம்!”
“எங்கள் அதிபர் எங்களுக்கே வேண்டும்!”
“உங்கள் லாபத்துக்கு எங்கள் கல்வியைப் பலி கொடுக்காதீர்கள்!”
“எதிர்காலத் தூண்களை எட்டி மிதிக்காதே!” என்று சோர்ந்துவிடாமல் உரிமைக்குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர்.
நிர்வாகம் நேற்றைய காட்டுமிராண்டித்தனத்துக்குப் பிறகு எந்தச் சத்தமும் இல்லாமல் அமைதி காத்தது. அமெரிக்க மிஷனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இன்றைய நாளில் அவர்களைத் தேடி, விசாரிக்க ஒருவரும் வரவில்லை என்றதும் பிள்ளைகளின் முகத்திலும் ஒரு ஏமாற்றம், கவலை. ஆனாலும் தண்ணீர் கூட அருந்தமாட்டோம் என்று அவர்கள் காட்டிய உறுதியில் நிலைகுலைந்துபோய் நின்றார் தனபாலசிங்கம்.
உச்சி வெயில் வேறு மண்டையைப் பிளந்தது. பலகீனமான மாணவி ஒருத்தி மயங்கி விழவும் அந்த இடம் மீண்டும் பதட்டத்துக்கு உள்ளானது.
ஆசிரியர்கள் விரைந்து செயலாற்றி, அம்மாணவியை வகுப்பறை ஒன்றுக்குத் தூக்கிச் சென்று, முகத்துக்குத் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவித்து அருந்தத் தண்ணீரும் கொடுத்தனர்.
அவள் மறுக்க அதட்டிப் பருகவைத்தனர்.
“இது ஆபத்து பிரமிளா மிஸ். நீதி கேட்டுப் போராட்டம் நடத்திறது ஓகே. ஆனா உண்ணாவிரதம் தேவையா? நாளைக்குப் பிள்ளைகளுக்கு ஒண்டு நடந்தா பெற்றோருக்கு நாங்கதான் பதில் சொல்லவேணும்.” என்று கவலையோடு தெரிவித்தார் அங்கிருந்த சக ஆசிரியை ஒருவர்.
அதைக் கைவிடும்படி பிரமிளாவும் கேட்க மாணவிகள் யாருமே எதற்கும் தயாரில்லை. பாய்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அதிலே படுக்க வைக்கப்பட்டார்கள். தலையை நிலத்தில் வைத்துத் தம் பதாகைகளைத் தலையின் மேலே பிடித்தனர்.
பார்த்திருந்த ஆசிரியர்களுக்கு மனம் தாங்கவில்லை.
“ராஜநாயகத்திட்ட இல்லாத காசா பணமா? அவ்வளவு சொத்து இருந்தும் பேராசை விடேல்ல. இந்தப் பள்ளிக்கூடத்தாலையும் காசு பாக்க அலையுதுகள். பரதேசிக் கூட்டங்கள்!” மனம் தாங்காமல் வெடித்தார் ஆசிரியை ஒருத்தி.
“ஆர் அது ராஜநாயகம்? எனக்குத் தெரியாதே?” அவளும் இதே ஊரில்தான் பிறந்து வளர்ந்தாள். பெரும்பான்மையான பெரிய மனிதர்களை, செல்வாக்கானவர்களை, படித்து நல்ல பதவியில் இருப்பவர்களைத் தெரியும். அப்படி இருந்தும் இந்த இரண்டு நாட்களாகக் கேள்விப்படும் எந்தப் பெயரையும் பிரமிளாவுக்கு முன்பின் தெரியவில்லை.