“என்ன மிஸ் இப்பிடிக் கேக்கிறீங்க? செல்லமுத்து நகைமாடம் உங்களுக்குத் தெரியாதா? இலங்கை முழுக்கப் பிரான்ஞ்ச் இருக்கு. அவேன்ர டிசைன் அவேட்ட மட்டும்தான் இருக்கும். சிங்கப்பூர்ல நகைத்தொழிற்சாலையே வச்சிருக்கினம். அதின்ர(அதனுடைய) ஒனர்தான் இந்த ராஜநாயகம்.” என்று எடுத்துச் சொன்னார் இன்னொரு ஆசிரியரும் அவளின் நண்பருமான சசிகரன்.
“ஓ!” என்று கேட்டுக்கொண்டவளுக்கு உண்மையிலேயே அந்த நகைமாடத்தைத் தெரியாது. எப்போதுமே அவளுக்கும் தங்கைக்குமான நகைகளைச் சரிதாதான் வாங்குவார். இங்கிருந்த நாட்களில் தீபாவும் கூடச் செல்வாள். அவர்கள் வாங்கி வருவதில் எளிமையானவற்றை இவள் எப்போதாவது அணிவாள். அவ்வளவுதான்.
ஆனால், சிங்கப்பூரில் சொந்தமாய் நகைகள் செய்யும் அளவுக்கு வசதியானவர்களுக்கு இந்தப் பள்ளிக்கூடத்தின் மீது எதற்கு இவ்வளவு ஆசை? தின்னத் தின்னத்தான் பசி எடுக்குமாம். அப்படியோ?
‘ப்ச்! எனக்கு எதுக்குத் தேவையில்லாத யோசனை எல்லாம்?’ தன்னைத் தானே கடித்துக்கொண்டு, ‘யாழ் மண்’ என்கிற தொலைக்காட்சியில் பணிபுரியும் தன் நண்பனுக்கு அழைத்தாள்.
அவன் எடுத்ததும், “என்ன மனுசரடா நீங்கள் எல்லாம்? இங்க ஒரு பள்ளிக்கூடம் ரோட்டுல நிண்டு போராடுது. நீங்கள் என்ன எண்டால் எவளோ ஒரு நடிகை நான்காவது கல்யாணம் கட்டியிருக்கிறாள் எண்டு தலைப்புச் செய்தி போடுறீங்கள். காசு பாத்தா காணும், மற்றும்படி எவன் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன எண்டுறதுதான் உங்கட கொள்கை போல!” என்று ஒரு வாங்கு வாங்கினாள்.
“அடியேய் டீச்சரம்மா. ஏன் இவ்வளவு கோவம் உனக்கு? அங்க என்னவோ சின்னப் பிரச்சனையாம் எண்டு கேள்விப்பட்டனான்தான். ஆனா சிங்கப்பெண் நீயிருக்கிறாய். அங்கிள் இருக்கிறார். உங்களைத் தாண்டி எதுவும் நடக்காது எண்டுதான் அதைப் பெருசா எடுக்கேல்ல.” என்றான் அமரன்.
“சின்னப் பிரச்சனையோ? என்னட்ட இருக்கிற வீடியோ போட்டோக்களை அனுப்புறன். பிரச்சனை சின்னனா பெருசா எண்டு பாத்திட்டு நியூஸ்ல போடுறதா இல்லையா எண்டு நீயே முடிவு செய்!” கோபத்துடன் படபடத்துவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டு எல்லாவற்றையும் வாட்ஸ் அப்பில் அவனுக்கு அனுப்பிவிட்டாள்
பார்வையிட்ட அடுத்த கணமே பதறிக்கொண்டு அழைத்தான் அமரன். “உண்மையா சொறி பிரமி! இவ்வளவு நடந்திருக்கு. ஆனா எனக்கு ஒண்டும் தெரியாதடி. எனக்கு மட்டுமில்லை. இங்க வேற சேனல் ஆருக்குமே தெரியேல்ல போல. இல்லாட்டி போடாம விடமாட்டாங்கள்.” என்றவனை இடைமறித்தாள் அவள்.
“எல்லாருக்கும் எல்லாம் தெரியும். நேற்று வந்து எங்களை விட இன்னும் நல்லா வீடியோ போட்டோ எடுத்தது ரிப்போட்டர்ஸ்தான். ஆனா ஒண்டும் வெளில வரேல்ல. ஆரோ ராஜநாயகமாம். அந்தாளின்ர வேலை போல.” என்று வெடித்தாள் அவள்.
“ராஜநாயகமா? கௌசிகன்ர அப்பாவையா சொல்லுறாய்?”
“அது ஆரடா புதுசா கௌசிகன்?”
“ஏன், உனக்குத் தெரியாதா? ராஜநாயகத்தின்ர மூத்த மகன்.”
“எனக்கு எவனையும் தெரியாது. தெரியவும் வேணாம். ஆனா அந்த ஆள்தான் இப்ப புது நிர்வாகியாம்.” அக்கறையற்றுச் சொன்னாள் பிரமிளா.
“சரி விடு! ஆனா, கட்டாயம் இன்னும் அரை மணித்தியாலத்தில பிரேக்கிங் நியூஸ் வரும். பார், நாங்க போடுறதைப் பாத்திட்டு ஆளாளுக்கு முந்தியடிச்சுக்கொண்டு போடுவாங்கள். எங்கட சேனல் மூலமா இந்தப் பிரச்னையை முடிஞ்சவரை வெளில கொண்டுவாறது என்ர பொறுப்பு. நீ யோசிக்காத. யாழ் மண் பேப்பர்ல நாளைக்கு இதுதான் தலைப்புச் செய்தி.” என்றவன், பேச்சில் அல்லாமல் அடுத்த அரைமணி நேரத்தில் செயலிலும் காட்டியிருந்தான்.
யாழ் மண்ணின் பரபரப்புச் செய்தியைப் பார்த்த மோகனன் கொதித்துப்போனான். கௌசிகன் சொன்ன மாதிரி, அனைத்து பேப்பர் டிவி ரிப்போட்டர்களையும் மடக்கி, அவர்களிடமிருந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் பறித்து, மசிய மறுத்தவர்களுக்குப் பணமாகவோ குடியாகவோ லஞ்சம் கொடுத்து, சிலபல அடிகளைக்கூட இலவசமாக வழங்கி என்று அவன் பின்னணியில் நின்று பெரும் செயலை ஆற்ற, அவளோ நிமிடத்தில் காரியம் சாதித்துவிட்டாளே.
‘அண்ணா வேற வந்துகொண்டிருக்கிறார். இது தெரிஞ்சா கிழிச்சுத் தொங்கவிடுவாரே. என்ன செய்யலாம்’ என்று தடுமாறிக்கொண்டிருந்தான்.
தொலைக்காட்சியில் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக, ‘பெண்கள் பாடசாலைக்குள் புகுந்த காடையரின் வெறிச்செயல். இதன் பின்னணியில் இருப்பது யார்?’ என்று தலைப்பிட்டு, மாணவியரை அவர்கள் தாக்கும் காட்சிகள் ஓடியதைக் கண்டுவிட்ட ராஜநாயகம் கொதித்துப்போனார்.
“தந்த எந்தக் காரியத்தையும் ஒழுங்கா செய்து முடிக்க மாட்டியா நீ? எப்பிடியடா நீயெல்லாம் எனக்குப் பிள்ளையா வந்து பிறந்தனி?” என்ற அவரின் அந்தக் கேள்வியில் வெகுண்டுபோய், “அப்பா!” என்று நெஞ்சு கொதிக்க அதட்டினான் மோகனன்.
“என்னடா அப்பா? இனி அப்பிடி என்னைக் கூப்பிடாத! என்ர கண்ணுக்கு முன்னால கூட வந்திடாத!” நெருப்பெனக் கோபத்தையும் வெறுப்பையும் அவன் முகத்திலேயே உமிழ்ந்துவிட்டு, புயலென அங்கிருந்து வெளியேறினார் அவர்.
இதற்கெல்லாம் காரணம் அவள்! அந்தப் பிரமிளா! அடங்காத ஆவேசமும் வெறுப்பும் அவனுக்குள் மண்டியன!
பிரமிளாவோ அத்துடன் விடவில்லை. யாழ் மண் ஒளிபரப்பியபோதும் மற்றைய தொலைக்காட்சிகள் முன்வர மறுக்க, அதைப் பற்றி அவள் கவலையே கொள்ளவில்லை.
யூ டியூபில் பள்ளிக்கூடத்தின் பெயரில் சேனல் ஒன்றை ஆரம்பித்து, ஒவ்வொரு மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் பழைய மாணவர்களினதும் வேண்டுகோள்களை, நியாயமான எதிர்பார்ப்புகளை ஃபோனில் வீடியோ எடுத்து, அவற்றை ஏற்றிவிட்டாள். அதை முகப்புத்தகத்தில் பகிர்ந்துவிட்டாள்.
மாணவிகளும் தங்கள் தங்கள் முகப்புத்தகச் சுவர்களில் அவற்றைப் பகிர்ந்துவிடச் செய்தி பரவத் தொடங்கிற்று! பார்த்துக்கொண்டிருக்கவே வியூஸ் ஏறிக்கொண்டு போயிற்று. ஃபேஸ்புக்கில் லைவில் வந்து பிரச்னையை எடுத்துரைத்தாள்.
யாழ் மண்ணுக்கும் அனைத்தையும் அனுப்பிவைத்தாள். அது பெரிய தொலைகாட்சி அல்லதான். ஆனால், வடமாகாணத்துக்குள் புகழ்பெற்ற தொலைகாட்சி.
அவர்களுக்குச் செய்தியைக் கொண்டுபோனாலே அவளுக்குப் போதும். பள்ளிக்கூடப் பிரச்சனையை மீண்டும் மீண்டும் பிரேக்கிங் நியூஸாக ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது யாழ் மண்.
ஆனாலும் பிரமிளாவுக்கு இது காணாது! விரைவில் முடிவு வந்தே ஆக வேண்டும். நாட்களை இப்படிக் கடத்துவதில் அர்த்தமில்லை. கூடவே உண்ணாவிரதத்தால் மாணவியர் ஒருசிலர் மயங்கிவிழவும் ஆரம்பித்திருந்தனர்.
வெளியே யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லையே தவிர, தனபாலசிங்கம் மூச்சு எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார்.
மாணவிகள் உண்ணாததில் அவரும் உண்ணவில்லை. யார் எப்படிக் கேட்டும் இசைந்து கொடுக்கவே இல்லை. என்ன ஆனாலும் ஆகட்டும், பிள்ளைகள் சாப்பிட்டால் மட்டும்தான் சாப்பிடுவேன் என்றுவிட்டார்.
கணவரை எண்ணிச் சரிதா கவலை கொண்டார். வந்து பார்த்துவிட்டுப் போனார். பிரதீபா ஃபேஸ்டைமில் வந்து சமாதானம் பேசியும் மசியவில்லை. அவரின் பிடிவாதம்தான் வென்றது.
இதற்குமேலும் காத்திருக்க முடியாது என்று உணர்ந்த பிரமிளா, ‘மாணவியர் தம் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றிக்கொண்டனர். கூடவே மாணவர் சக்தியைப் பெரிதாக நம்பி இருந்தவர்கள் எந்தத் தீர்வையும் தராத அரசாங்கத்தின் மீது, கல்வி அமைச்சின் மீது, இச்சமூகத்தின் மீது அவநம்பிக்கை கொள்வது எதிர்காலச் சந்ததியான அவர்களுக்கு நல்லதல்ல. மனதளவில் அவர்களை இப்போராட்டம் பெரிதும் பாதிக்கிறது. அதனால் விரைந்து செயலாற்றி ஒரு தீர்வை எங்களுக்குப் பெற்றுத்தர வேண்டும்.’ என்று மீண்டும் ஒரு மெயிலினை வட மாகாண கல்வி அமைச்சருக்கு அனுப்பிவைத்தாள்.
கூடவே அமெரிக்க மிஷனுக்கும் அனுப்பிவைத்தாள்.
அதற்குப் பலன் இருந்தது. கல்வித் திணைக்கள அதிகாரியுடன் வந்த வடமாகாணக் கல்வி அமைச்சர், மாணவியருக்கு விரைவிலேயே இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக அறிவித்தார்.
அவர் வந்தது, பேசியது, சென்றது அனைத்தையும் ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பியது யாழ் மண்.
கொழும்பு வந்திறங்கிய கௌசிகன், ‘யாழ் மண்’ணின் பிரேக்கிங் நியூஸைப் பார்த்ததும் கண்கள் சிவக்க உடனேயே மோகனனுக்கு அழைத்தான். “உனக்கு என்ன சொன்னனான், நீ என்ன செய்து வச்சிருக்கிறாய்?”
“அண்ணா, ஒருத்தனை விடாம எல்லாரையும் பிடிச்சு வீடியோ போட்டோ எல்லாம் பறிச்சுப்போட்டுத்தான் விட்டனான். ஆனா இது ரிப்போட்டர்ஸ் எடுத்த வீடியோ இல்ல. அந்தப் பொம்பிளை, அங்க நிண்ட ஆக்கள் எடுத்த வீடியோவ வாங்கிக் குடுத்திருக்கிறாள். அதைவிட ஒரே ஒரு சேனல்தான் போட்டுக்கொண்டு இருக்கு. ஆனா…” என்றவனின் பேச்சை இடைமறித்து, ”எவள் அவள்?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“மெரூன் கலர் சாறியோட நிக்கிறாளே. அவளா?” தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தவளின் மீது விழிகள் இருக்க நிதானமாக வினவினான் கௌசிகன்.
“அந்தப் பொம்பிளைதான். சரியான திமிர் பிடிச்சது. அதுதான் எனக்கு அறைஞ்சதும்! அவளுக்கு…” அதற்குள் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.
அவள் சொல்வதைக் கவனித்தான் கௌசிகன்.
“இதுநாள் வரை எந்தக் குறைகளும் அற்று மிகச் சிறப்பாக நடந்த பாடசாலை இன்றைக்கு, நிர்வாகசபை உறுப்பினர்களின் மாற்றம் என்கிற பெயரில் மிகப்பெரிய இன்னலுக்கு முகம் கொடுத்திருக்கிறது. காடையர்களின் அத்துமீறிய பிரவேசம், அடிதடி, பெண்பிள்ளைகள் என்றும் பாராமல் நடந்த அசம்பாவிதங்களைக் கண்டு யாழ் சமூகமே வெட்க வேண்டும். சுயநலவாதிகளின் பேராசைக்கு அகப்பட்டுப் பாடசாலையையும் மாணவியரையும் அவர்களின் எதிர்காலத்தையும் அடகு வைப்பதை எண்ணி வெட்குகிறோம். ஆனால், நாங்கள் விடமாட்டோம். பழைய அதிபரையே மீண்டும் நியமித்து, பழையபடி எந்த அரசியலும் உள்நுழையாமல் மாணவியருக்காக மட்டுமே இயங்கும் பாடசாலையாக மாற்றாமல் ஓயமாட்டோம்.” என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்.
அவனின் கீழுதடு வளைந்தது.
அங்கே அவளின் பேட்டி இன்னும் முடிந்திருக்கவில்லை. “மாணவிகள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். அந்தச் சிந்தனையின் பயனாக எழும் கேள்விகளுக்குத் தகுந்த பதிலைச் சொல்வதுதானே பொறுப்பான பதவியில் இருப்பவர்களின் கடமை. அப்படியிருக்க அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு முறையான பதிலைக் கொடுக்காமல் நிர்வாகம் மாறிவிட்டது, அதிபர் மாற்றப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பது என்னவிதமான செய்கை? அப்படி மூடி மறைத்து ஒரு அதிபரைப் புதிதாக இரவோடு இரவாகக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன? நிர்வாகசபையில் ஒருவராக இருக்கும் ராஜநாயகத்தின் மகனுக்கு இங்கே என்ன அலுவல்? காடையர்கள் இந்தக் கல்லூரிக்குள் எப்படி நுழைந்தார்கள்? யார் அனுப்பிவைத்தார்கள்? நேற்று நடந்த அனைத்தையும் அத்தனை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பதிவு செய்தபோதிலும் எதுவுமே வெளிவரவில்லை என்றால், நடக்கும் இந்த நிகழ்வுகளை எல்லாம் பின்னிருந்து இயக்குபவர் யார்? இக்கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்தே ஆக வேண்டும். இது கற்ற சமுகம். நியாயமான கேள்விகளைக் கேக்கும். நியாயங்களைப் பேசும். உரிமைக்காகப் போராடும். கற்பதே அதற்குத்தான். அவர்களையே வாய் மூடி நிற்கச் சொன்னால் கற்காதவர்களின் நிலை என்ன?” நிதானமாகவும் தெளிவாகவும் ஆவேசமாகவும் தன் கேள்விகளை முன்வைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அதற்குமேல் அதைக் கேட்கவில்லை அவன். உடனேயே தந்தைக்கு அழைத்தான். “அப்பா! உடனேயே ஒரு பிரஸ் மீட் வைங்கோ. நான் ஒரு மெயில் அனுப்புறன். அதை அப்படியே அங்க சொல்லுங்கோ. நீங்க சொல்லுறதை மட்டும்தான் அவே கேக்கோணும். எந்தத் தேவையில்லாத கேள்வியும் அவேட்ட இருந்து வரக் கூடாது! அதுக்கு ஏற்ற மாதிரி மீட்டிங்க ஏற்பாடு செய்ங்க!” என்று உத்தரவிட்டவன் மெயிலையும் அனுப்பிவைத்தான்.
“கொஞ்சம் வேகமா போ முத்து! இண்டைக்குப் பின்னேரத்துக்குள்ள நான் அங்க நிக்கோணும்!” கரோட்டியிடம் உத்தரவை இட்டுவிட்டுக் கண்ணை மூடிக் காரில் சாய்ந்துகொண்டவனின் பயணம் யாழ்ப்பாணம் நோக்கி அல்ல பிரமிளாவை நோக்கி மிக வேகமாய் விரைந்தது.