பிரமிளா போய் ஒரு வாரமாயிற்று. இன்னும் மூ…ன்று வாரங்கள் அங்கேதான் நிற்பாள். ‘நிண்டது போதும் வா!’ என்று இழுத்துக்கொண்டு வந்துவிடுவோமா என்று நினைத்தாலும் அடக்கிக்கொண்டான்.
இந்தப் பிரிவு அவளைத் தெளிவாகச் சிந்திக்க வைக்கும், அவர்களுக்கான நல்ல பாதையைக் காட்டும் என்கிற நம்பிக்கையோடு, தனபாலசிங்கம் ஆரம்பித்து வைத்த பிரமிளாவின் காணியில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த விளையாட்டு மைதானத்தின் மீது கவனத்தைச் செலுத்தினான் கௌசிகன்.
அப்போதுதான், தினமும் மாலையில் தனபாலசிங்கம் அந்த வழியால் நடந்து செல்வதும், கல்லூரியையும் மைதானத்தையும் நின்று பார்த்துவிட்டுப் போவதையும் கவனித்தான்.
அவனுடைய கார் இல்லாவிட்டால் மைதானத்தில் இருந்த வாங்கிலில் அவர் சற்றே இளைப்பாறிவிட்டுச் செல்வதைப் பார்த்தவனுக்கு என்னவோ போலாயிற்று.
அன்று, வேண்டுமென்றே தன் காரை சற்றே தள்ளி மறைவாக நிறுத்திவிட்டு வந்து காத்திருந்தான். அவரும் வந்து, பார்வையால் அவன் காரை தேடினார். இல்லை என்றதும் மைதானத்துக்குள்ளேயே ஒரு நடை நடந்துவிட்டு வாங்கிலில் அமர்ந்துகொண்டார்.
அப்போது அவரை நோக்கி வந்தான் கௌசிகன். அவரின் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவுவதைக் கவனிக்க முடிந்தது.
குழந்தையின் மறைவுக்குப் பிறகு இன்றுதான் இருவருமே தனிமையில் சந்திக்கின்றனர். அவன் அருகில் வந்து அமர்ந்தும், ஒன்றும் பேசாமல் மைதானத்திலேயே பார்வையைப் பதித்திருந்தார் தனபாலசிங்கம்.
வார்த்தைகளை விட்டுப் பழக்கமில்லை. மனத்தின் கொந்தளிப்பை அடக்கவும் இயலவில்லை. எனவே அமைதி காத்தார்.
அவனுக்கும் புரிந்தது.
இது இருவரும் கடந்தே ஆகவேண்டிய கனம் மிகுந்த தருணம்.
சமாளித்துக்கொள்வதற்கான அவகாசத்தை அவருக்குக் கொடுத்துவிட்டு, “இந்தப் பள்ளிக்கூடத்தில ஏன் இவ்வளவு பற்று மாமா?” என்று வினவினான் அவன்.
உடனே எதையும் சொல்லிவிடவில்லை அவர். ஒரு ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டுவிட்டு, தான் கடந்தே ஆகவேண்டிய அந்தக் கனமான பொழுதினைக் கடந்து, “எனக்கும் அதுதான் தெரியேல்ல தம்பி. இங்கதான் எனக்கு எல்லாம் கிடைச்சது. அதாலயா இருக்கலாம். கண்ணுக்கு முன்னால இந்தப் பள்ளிக்கூடம் வளந்ததைப் பாத்தனான். அதால ஒரு பிள்ளைப் பாசம். இங்க படிக்கிற ஒவ்வொரு பிள்ளைகளும் சேர் சேர் எண்டு என்ர காலையே சுத்தி வாறதாலயும் இருக்கலாம்.” என்றார் அவர்.
“உங்களை மாதிரி ஒருத்தர் அதிபரா கிடைச்சதுக்கு இந்தப் பள்ளிக்கூடமும் பிள்ளைகளும் குடுத்து வச்சவே மாமா.” என்றான் மனத்திலிருந்து.
தன்னலம் சிறிதுமற்று ஒரு மனிதனால் இப்படிப் பொதுநலமாக இயங்குவது என்பது எல்லோராலும் இயலாத காரியமாயிற்றே!
“நானும்தான் தம்பி!” என்றார் அவர் பெரிய விளக்கங்கள் அற்று.
“இன்னும், வேற என்ன பிளான் வச்சு இருக்கிறீங்க மாமா?” அவரின் விருப்பங்களை அறிந்துகொள்ள முயன்றான் அவன்.
அது புரிந்தாற்போல், “நெட்போல் கோர்ட், கிளித்தட்டு விளையாட்டு இப்ப அழிஞ்சு வருது தம்பி. அதை விடக் கூடாது. எங்கட பள்ளிக்கூட மட்டத்திலையாவது நடத்தோணும்.” என்றவர் சிறிது இடைவெளிவிட்டு,
“ஸ்விம் பூல் கட்ட நினைச்சன். இஞ்ச இன்னுமே பொம்பிளைப் பிள்ளைகளுக்கு அதெல்லாம் குதிரைக் கொம்புதானே தம்பி. பொம்பிளைப் பிள்ளைகள்தான் ஒவ்வொரு வீட்டுக்கும் முதுகெலும்பு. நாட்டுக்கும் சொத்து. வரப்புயர நீருயரும், நீருயர நெல் உயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும், கோலுயரக் கோனுயர்வான் எண்டு அந்தக் காலத்தில சொன்ன மாதிரி, பெண் பிள்ளைகள நாங்க உயர்த்திவிட்டா அவே தங்கட குடும்பத்தை உயர்த்துவினம். குடும்பம் உயர்ந்தா ஊர் உயரும். தானாவே நாடும் உயரும் தம்பி.” என்றவரின் பேச்சைப் பிரமித்துப்போய்க் கேட்டிருந்தான் அவன்.
வாழ்க்கையை, ஒரு பெண் பிள்ளை வளர்ப்பை இந்தளவுக்குச் சீரிய சிந்தனைகளோடு அவன் நோக்கியதில்லை. தன் வீட்டுப் பெண்களை இருக்கிற இடம் தெரியாமல் அவன் வைத்திருக்க அவரோ இந்த நாட்டின் கண்களே அவர்கள்தான் என்கிறார்.
அவன் குழந்தை இவரைப் போன்ற பெரிய மனிதரின் வழிகாட்டலில் வளரக் கொடுத்துவைக்காமல் போய்விட்டாளே. இழப்பின் அளவையும் வலியையும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்ந்துகொண்டிருந்தான் அவன்.
அவர் தன் பெண்களையும் இப்படித்தான் வளர்த்திருக்கிறார். அதனால்தான், நேர்மறையான குணங்கள் கொண்ட அவளுக்கு அவனோடான வாழ்க்கை மிகுந்த சிரமமாக இருந்திருக்கிறது.
இப்போதும் அவர்களின் பிரிவை அவள் நீட்டி வைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். தீபாவும் விளையாட்டுப் பெண்தான். ஆனால், எல்லாவற்றையும் அவள் விளையாட்டாகக் கையாள்வதில்லையே.
அவளின் காதல், கல்வி, தாய் தந்தையர் மீதான பாசம், மற்றவர்களைக் கையாளும் விதம் எல்லாவற்றிலும் இயல்பாகவே அவளிடம் ஒரு முதிர்ச்சி இருக்கும்.
“பெண் பிள்ளைகள் நெருப்புத் தம்பி. வீட்டு விளக்கையும் ஏத்துவீனம், குப்பை கூலங்களை எரிச்சும் போடுவினம். இருள் பரவாம இந்த உலகத்தையும் காத்துத் தருவினம். நாங்க செய்ய வேண்டியது எல்லாம் அந்த நெருப்பு அணைஞ்சு போக விடாம, அவேக்கு நல்ல துணையா இருக்கிறது மட்டும்தான். இந்த உலகத்தையே மாத்த என்னால ஏலாது. ஆனா, என்ர கைக்க வளர்ற பிள்ளைகளுக்கு என்னால முடிஞ்ச நல்லதைக் குடுக்கலாம். அதைத்தான் செய்ய விருப்பப்பட்டனான்.படிப்பு, கலை, கலாசாரம், விளையாட்டு எண்டு எல்லாத்திலையும் அவேக்கான வசதிகளைச் செய்து குடுக்கோணும் தம்பி.”
பேசச் சந்தர்ப்பம் கிடைத்ததில் தன் உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்தாரா, அல்லது தான் ஏன் இன்னும் கொஞ்சக்காலம் அதிபராக இருக்க நினைத்தோம் என்பதற்கான காரணத்தை அவனுக்கு விளக்க முயன்றாரா தெரியவில்லை. மனத்திலிருந்து தன் விருப்பங்களைப் பகிர்ந்தார்.
அதையெல்லாம் அவர் என்னவோ சாதாரணமாகத்தான் சொன்னார். கேட்டுக்கொண்டிருந்தவன் அதற்கான ஆவணம் செய்யப்போவதை அறிந்திருக்கவில்லை. கூடவே, அந்தப் பள்ளிக்கூடத்தோடு பிணைத்தால் மாத்திரமே உயிர் வாழ்கிற அவரை உயிர்ப்புடன் வாழவைக்க முடியும் என்றும் அவனுக்குப் புரிந்து போயிற்று.