இருவருமே நிறையப் பேசினர் என்பதை விட அவரைப் பேசவைத்துக் கேட்டுக்கொண்டிருந்தான் அவன். அதுவரை, கல்லூரியில் எதிரெதிர் துருவங்களாகச் சந்தித்து இருக்கிறார்கள். பின் மாமா மருமகனாக இடைவெளி விட்டு நின்று இருக்கிறார்கள். இன்று, இரண்டு மனிதர்களாக மாத்திரம் ஒரே அலைவரிசையில் தம்மை அறியாமலேயே இணைந்து பயணிக்க ஆரம்பித்து இருந்தனர்.
அன்று மட்டுமல்ல அதன்பிறகும் தினமும் அங்கே சந்தித்துக்கொண்டனர். நிறையப் பேசினர். இன்னும் நிறையப் பகிர்ந்துகொண்டனர். ஒருவரைப் பற்றிய மற்றவரின் பார்வை இன்னுமின்னும் ஆழமாக இறங்கிற்று!
மாமா மருமகன் என்பதைத் தாண்டி ஏதோ ஒரு உறவு அவர்களுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது. அவனோடான அந்தப் பொழுதுக்கு அவரும் ஆர்வம் காட்டுவது புரிந்து மகிழ்ந்தான்.
அன்றும், எதையெதையோ பேசியவர்களுக்குள் சற்று நேரம் அமைதி. பார்வை நடந்துகொண்டிருந்த வேலைகளில் நிலைத்தது. பார்வையாளர் அரங்கு கிட்டத்தட்ட முடிவுறும் நிலைக்கு வந்திருந்தது.
அவ்வளவு நேரமாக அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியதை மெல்லச் சொல்ல ஆரம்பித்தான் கௌசிகன்.
“அந்த நேரம் எனக்கு முழுக்க முழுக்க வியாபாரப் புத்திதான் மாமா. நான் ஒரு விசயத்தில கை வச்சா அது எனக்கு லாபகரமானதா இருக்கோணும். இருக்கும்! அப்பிடித்தான் இந்தப் பள்ளிக்கூடமும் கண்ணில பட்டது. இதையும் ஒரு தொழிலாத்தான் பாத்தனான். அப்பாக்குப் பதவி எனக்கு வருமானம் எண்டு லாபக்கணக்குப் போட்டுத்தான் இறங்கினான்.” என்றவனுக்கு மேலே பேசச் சிரமமாயிற்று.
அவரைப் போன்ற ஒருவரிடம், ஒரு கல்விக்கூடத்தைப் பணம் காய்க்கும் மரமாகப் பார்த்தேன் என்பதை நிமிர்ந்து சொல்ல இயலாமல் போயிற்று. அவருக்கும் புரிந்தது. மிகுந்த வருத்தமாக உணர்ந்தார். ஆனாலும் அவன் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
“காசு இருந்தா எல்லாம் எனக்குக் கீழ எண்டுற ஒரு எண்ணம். இப்ப அந்த எண்ணம் எல்லாம் இல்லை எண்டு பொய் சொல்ல மாட்டன் மாமா. காரணம், பணமும் செல்வாக்கும் என்ன எல்லாம் செய்யும் எண்டுறதப் பாத்துப் பாத்தே வளந்தவன் நான். உங்கட மகள் என்ர வாழ்க்கையில வந்த பிறகு நிறைய மாற்றங்கள். அப்பிடியெலலாம் இல்லையடா, நியாய தர்மம் பாக்கோணும், ஏழையைப் பற்றி யோசிக்கோணும், மனச்சாட்சிக்குப் பயந்து நடக்கோணும் எண்டு சொன்னது அவள்தான். அந்த நேரம் அவளில எனக்கு நிறையக் கோவம். ஆனா, என்னதான் அவளை நான் விழத் தட்டினாலும் விழாம, உடைஞ்சு போகாம, பயப்படாம அவள் நிமிர்ந்து நிண்டு எனக்குத் திருப்பி அடிச்சுக்கொண்டே இருந்ததுதான் என்னை நிதானிக்க வச்சது.” என்றவன் மீண்டும் பேச்சை நிறுத்தியிருந்தான்.
அவரின் பெண் தன் நிமிர்வினாலும், நேர்கொண்ட பார்வையினாலும் தன்னைக் கவர்ந்திழுத்த கதையை அவரிடமே எப்படிச் சொல்லுவான்?
“கலியாணத்துக்குப் பிறகு என்னதான் அவள் சொன்னது எல்லாம் விளங்கினாலும், தட்டினதும் எரியிற விளக்கு மாதிரி எதையும் உடனே மாத்த முடியேல்ல மாமா.” என்றவனுக்கு மீண்டும் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று.
அந்த மாற்றம் நிகழ்வதற்குள் அவர்கள் இழந்தது விலைமதிப்பற்ற பொக்கிசம் அல்லவா.
“எனக்குள்ள இப்ப இப்ப நிறைய மாற்றங்கள் வந்துதான் இருக்கு. ஆனா, நான் எட்ட நினைக்கிற உயரத்துக்கு இன்னும் நிறையத் தூரம் ஓடவேண்டி இருக்கு. அதுக்குக் கொஞ்சம் நெளிவு சுளிவும் தேவையாத்தான் இருக்கு. சிலது என்ர கையையும் மீறினது.” என்று முடித்தான் அவன்.
தனபாலசிங்கத்துப் புரிந்தது. அவன் பேசிய வார்த்தைகளை விடப் பேச முடியாமல் திணறித் தனக்குள் அடக்கிக்கொண்ட வார்த்தைகளுக்குள் நிறையப் பொருள் பொதிந்திருப்பதை அறிந்துகொண்டார்.
தற்போது அவனுக்குத் தேவையானது தன்னுடைய தட்டிக்கொடுப்புத்தான் என்பதும் விளங்கிற்று. எனவே அவனின் முகம் பார்த்துப் பேசினார்.
“நீங்க நினைக்கிற மாதிரி நான் பெரிய நியாயவானோ அப்பழுக்கில்லாத மனுசனோ இல்ல தம்பி. நானும் தெரிஞ்சோ தெரியாமலோ நிறையப் பிழை செய்திருப்பன். அப்பிடியிருக்க நீங்க ஒரு வியாபாரி. வியாபாரம் எண்டு வந்திட்டாலே அதில நெளிவும் சுளிவும் சேர்ந்திடும். சிலபல ‘முன்னபின்ன’க்கள் இருக்கும்தான். ஆனாலும், தவிர்க்கக் கூடிய தவறுகளத் தவிர்க்கப் பாருங்கோ. அவ்வளவுதான். ஒரு காலம், நான் செய்றது எல்லாம் சரிதான் எண்டு இருந்த நீங்க, நான் தவறுகளும் விட்டிருக்கிறன் எண்டு இப்ப சொல்லுறீங்க பாத்தீங்களா. அதுவே நல்ல மனத்துக்கான அடையாளம்தான். மற்றும்படி நீங்க கடுமையான உழைப்பாளி. பள்ளிக்கூடத்துக்கு உங்கட சொந்தக் காசுல நிறையச் செய்றீங்களாம் எண்டு அறிஞ்சனான். அந்த மனமே உங்களை நல்வழிப்படுத்தும் தம்பி. நிச்சயம் நீங்க நினைக்கிற உயரத்தத் தொடுவீங்க. எனக்கு என்ர மருமகன்ல நம்பிக்கை இருக்கு.” என்று புன்னகைத்தார் அவர்.
அவன் மனம் அப்படியே அமைதியாயிற்று. அவனுக்கான மிகப் பெரிய விடுதலை ஒன்றைக் கொடுத்திருந்தார் அவர். என்னவோ அத்தனை நாட்களாக அவனைப் பூட்டியிருந்த ஒரு விலங்கு அதன் சக்தியை இழந்து கழன்று விழுந்து விட்டதாக உணர்ந்தான் கௌசிகன்.
“நிச்சயமா மாமா! நீங்க சொன்னதை நினைவில வச்சு நடக்கிறன்!” என்று புன்னகைத்துவிட்டு, “இன்னொரு விசயம் மாமா.” என்றான்.
அவர் கேள்வியாகப் பார்க்க, “எனக்கு உங்கட உதவி கொஞ்சம் வேணுமே.” என்றான்.
“சொல்லுங்கோ. என்னால முடிஞ்சதக் கட்டாயம் செய்வன்.”
“மோகனனும் இப்ப இல்ல. அப்பா கொழும்பிலையே நிக்கிறார். எனக்குக் கடை, ஹோட்டல், பள்ளிக்கூடம் எண்டு எல்லாமே சரியா இருக்கு. இந்த விளையாட்டு அரங்கு கட்டுற வேலையக் கொஞ்சம் நீங்க மேற்பார்வை பாக்க மாட்டீங்களா? நீங்க இதப் பாத்தா நான் கொஞ்சம் மற்ற வேலைகளைக் கவனிப்பன். ஏலுமா மாமா?”
அவர் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. விழிகள் நேசத்துடன் அந்தக் கல்லூரியையும் மைதானத்தையும் சுற்றி வந்தன.
“ஏலுமாவா? கட்டாயம் செய்றன் தம்பி! எனக்கும் வேற என்ன வேல.” என்றார்.
இதற்காகத்தானே அவன் கேட்டதே. நாட்கள் நகர்ந்தன. தினமும் அவர் அங்குக் காலையிலேயே வருவதும், உற்சாகத்துடன் கல்லூரி, மைதானம் என்று வளைய வருவதையும் பார்க்கையில், மனதுக்கு நிறைவாக உணர்ந்தான். மனைவி இதைப் பார்த்தால் நிச்சயம் மகிழ்வாள் என்று நம்பினான்.