அத்தியாயம் 61
மூன்றாவது வாரமும் கடந்திருக்க இனி முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தான் கௌசிகன். யோசிக்கட்டும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவன் அழைக்காமல் விட்டதும் சேர்ந்து வாட்டியது. அவளைப் பாராமல், அவளின் குரலைக் கேளாமல், அவள் இல்லாமல் அவனுக்குள் வெறுமை மாத்திரமே!
செல்லமுத்து நகைமாடத்தின் திருகோணமலைக் கிளையை ராஜநாயகத்தின் தம்பி மகனிடம் ஒப்படைத்திருந்தனர். இவர்களுக்கான பங்கு இலாபம் மட்டும் வரும். மற்றும்படி அதன் இலாபநட்டத்தில் இவர்கள் தலையிடுவதில்லை. அதை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று இருந்த நீண்ட நாள் யோசனையைச் சாட்டாக வைத்துக்கொண்டு புறப்பட்டான் அவன்.
பிரமிளாவுக்கும் இந்தப் பிரிவு மிகப்பெரிய மாற்றத்தைத்தான் உண்டாக்கிற்று. பாசமாகக் கவனித்துக்கொண்ட தீபா, பிரியமாகவே பார்த்துக்கொண்ட தீபன், தினமும் அழைத்து அவளோடு அளவளாவிய அன்னை தந்தை என்று அன்பானவர்கள் அவளைச் சுற்றி இருந்தாலும் மனம் கணவனிடம்தான் சிக்கிக்கொண்டு நின்றது.
தன் வாழ்க்கையில் அவனுக்கான இடம் என்ன என்பதை, அவனைப் பாராத, அவனுடைய குரலைக் கேட்காத இந்த நாட்கள்தான் உணர்த்திற்று.
கோபத்தோடு கடந்துவந்த அவனுடைய கெஞ்சல்கள், மன்றாடல்கள், எதிர்பார்ப்புகளை நிறுத்தி நிதானமாக மீட்டுப் பார்த்தாள். அதன்பின்னே மறைந்துகிடந்த அவள் மீதான அவனுடைய ஆழமான அன்பையும் தெரிந்துகொண்டாள்.
அவள் என்னதான் சுடு சொற்களை வீசினாலும், முகம் திருப்பிக்கொண்டாலும், முகத்தில் அடித்தாற்போல் பேசினாலும் திரும்பத் திரும்ப அவளிடமே வந்து நிற்கிறவனை எப்படி வெறுப்பது?
அவனுடைய இரண்டாம் தாரம் பேச்சு மிகப்பெரிய கண் திறப்பு. அதுவும் யாரிடமும் தளைந்து போகாத அவனின் குணத்துக்கு, அவளிடம் அவன் காட்டுகிற இந்த எல்லையற்ற நேசம் மலைப்பைத்தான் உண்டாக்கிற்று. சொல்லத் தெரியாத மனத்தடைகள் எல்லாம் இப்போது வெள்ளம் அடித்துச் சென்ற மனைகளாகக் கரைந்து போயிற்று.
காலைச் சுற்றும் நாய்க்குட்டியாகத் தன்னையே சுற்றும் கணவனின் அந்த விடாப்பிடியான அன்புக்கு முன்னே அவள் தோற்றுத்தான் போனாள்.
அன்று திட்டமிட்டு அவளை வரவழைத்துவிட்டு, அதற்குமேல் அவளை நோகடிக்க முடியாமல் தோற்று, உண்மையை ஒத்துக்கொண்டு நில் என்று கெஞ்சியவனின் நினைவில் அவள் உதட்டினில் அழகான முறுவல் ஒன்று மலர்ந்து போயிற்று.
அவள் தனிமையில் அகப்பட்டால் போதும், நொடி நேரத்திலேயே கோபத்தையும் காதலையும் சரிசமமாகக் காட்டிவிடுவான். ஒரு கண்ணில் கோபத்தையும் இன்னொரு கண்ணில் காதலையும் கொண்டே திரிவான் போலும்! என்றுமில்லாமல் இன்று ஏனோ மனம் கணவனை அதிகமாகவே நாடிற்று. இந்த நொடியே பார்க்க முடிந்தால்?
அவள் நினைத்து முடிக்க முதலே பரபரப்புடன் ஓடிவந்தாள் தீபா.
“அக்கா, அத்தான் வந்திருக்கிறார்.”
“அத்தானா? அவர் எப்பிடி இஞ்ச?” அவளுக்குத் திகைப்பாயிற்று. நினைத்து முடிக்க முதல் வந்து நிற்கிறானே!
“மத்தியானம் எடுத்து, திருகோணமலைக்கு வந்திருக்கிறன், வீட்டை நிக்கிறீங்களா, பாக்க வரலாமா எண்டு கேட்டவர். ஒரு சப்ரைஸா இருக்கட்டும் எண்டு நான்தான் உங்களிட்ட சொல்ல இல்ல.” என்றவளின் பேச்சை முழுமையாக நின்று கேட்காமல் ஹோலுக்கு விரைந்தது அவளின் கால்கள்.
அங்கே, தீபனுடன் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தான் அவன். இவளைக் கண்டதும் பேச்சு நிற்க அவளைப் பார்த்தான். அவளுக்கு ஏனோ கண்ணைக் கரித்தது. களைத்து இளைத்துத் தெரிந்தான்.
நொடியில் தன்னை அளவெடுத்த மனைவியின் பார்வையில் தனக்குள் சிரித்துக்கொண்டான் கௌசிகன்.
“பிறகு… லீவு எல்லாம் எப்பிடி போச்சு?” அவளை நோக்கி வினவினான்.
நன்றாகப் போனது என்பதுபோல் அவள் தலையை அசைக்க, “நீங்க இல்லாம நிம்மதியா, சந்தோசமா போச்சு!” என்றாள் தீபா வெடுக்கென்று.
அவளுக்குப் பதில் சொல்லாமல், “போயும் போயும் உனக்கு இவள்தான் கிடைச்சவளா தீபன்? வேற நல்ல பிள்ளையா பாத்து நீ விரும்பி இருக்கலாம்.” என்றான் அவன் தீபனிடம்.
“ஏன், எனக்கு என்ன குறை? என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சீங்களா? அடிதடி உருட்டல் மிரட்டல் எண்டு இருக்க? எங்கட அக்கா எப்பிடி இருந்தவா தெரியுமா? அவாவ வாயில்லா பூச்சி மாதிரி ஆக்கி வச்சு இருக்கிறீங்க!” என்று திருப்பிக் கொடுத்தாள் அவள்.
பார்வை ஒருமுறை மனைவியிடம் சென்று வர, “ஆரு? உன்ர அக்கா வாயில்லா பூச்சி? இத அவளே ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் என்னைத் திட்டி நீ பாக்கேல்லை எண்டு சொல்லு. இப்ப எல்லாம் எனக்கு அவளைப் பாத்தாலே நடுங்குது.” என்றவனின் பேச்சில் தன்னை மீறி முறுவல் அரும்ப அவனை முறைத்தாள் பிரமிளா.
பெருசா அவளுக்குப் பயந்தவன்தான். கள்ளன்! நடிக்கிறான்!
அவர்கள் இருவருக்குமான சண்டை முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. அதற்கு நடுவில் இரவு உணவை முடித்துக்கொண்டு அவன் கிளம்பத் தயாரானான்.
“இப்பவே யாழ்ப்பாணம் வெளிக்கிடுறீங்களா அண்ணா?” என்றான் தீபன்.
“நாளைக்குத்தான் பயணம். இப்ப ஹோட்டலுக்குப் போய் நல்ல நித்திரை ஒண்டு கொண்டு எழும்பி விடிய வெளிக்கிடோணும்.” என்றான் அவன்.
பாத்திரங்களைத் தமக்கையோடு சேர்ந்து ஒதுக்கிக்கொண்டு இருந்த தீபா படக்கென்று திரும்பி முறைத்தாள். “அதுசரி! இவர் எல்லாம் ஆரு? பெரி…ய செல்லமுத்து நகைமாடத்தின்ர ஓனர். எங்கட வீட்டை எல்லாம் தங்குவாரா? போங்க போங்க போய் உங்கட ஹோட்டலிலேயே தங்குங்க!” என்றுவிட்டு வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
சிரிப்புடன் அவளின் தலையில் செல்லமாகக் கொட்டிவிட்டு, “ஏய் வாய்க்காரி! நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது எல்லா. அதுக்குத்தான் அப்பிடிச் சொன்னனான்.” என்றான் அவன் சமாதானமாக.
“நீங்க இடைஞ்சலா இல்லையா எண்டுறதை நாங்கதான் சொல்லோணும். நீங்க இல்ல! எங்கட வீட்டை தாராளமா இடம் இருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க நிக்கலாம்! விருப்பம் இல்லாதவைய நாங்க மறிக்க மாட்டோம்.”
அதற்குமேல் இயலாமல், “இவளை எப்பிடியடா தினம் தினம் சமாளிக்கிறாய்? இந்த ஒரு நாளுக்கே எனக்குக் கண்ணைக் கட்டுது.” என்று தீபனிடம் நகைத்துக்கொண்டு கேட்டான் கௌசிகன்.
கள்ளச் சிரிப்புடன் பார்வை மனைவியிடம் சென்று வர, “கஷ்டம்தான் அண்ணா. வேற வழி?” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அடுத்தச் சண்டையை அவள் அவனோடு ஆரம்பித்திருந்தான்.
அவர்களைச் சிரிப்புடன் நோக்கிவிட்டுப் போய்க் காரில் இருந்த தன் பாக்கினை கொண்டு வந்து பிரமிளாவிடம் கொடுத்தான் கௌசிகன்.
அவன் கண்கள் அவளிடம் தனியாகச் சிரித்தன.
பேசாமல் வாங்கிக்கொண்டு அறைக்குள் போனவள் பிறகு வெளியே வரவேயில்லை.
பின்னே, எத்தனை திருகுதாளங்களை நிகழ்த்தி அவளுடன் தங்குவதற்கு வழி சமைத்திருக்கிறான். உண்மையிலேயே இவன் மகா பொல்லாதவன்தான்!
இல்லாமல், புத்தி சாலியான தீபாவே இவன் விரித்த வலைக்குள் மாட்டுப்பட்டுப் போவாளா? சொந்தச் சித்தப்பா குடும்பம் அதே ஊரில் இருக்கையில் இவன் ஏன் ஹோட்டலில் தங்க வேண்டும்? எல்லாம் பொய்! பார்த்துவிட்டுப் போக வருகிறவன் கூடவே பாக்கையும் கொண்டு வருவானா?
படபடப்புடன் அவள் காத்திருக்க அவனும் அறைக்குள் வந்தான். கதவைச் சாற்றினான். சற்றுநேரம் தனக்கு முதுகு காட்டியபடி யன்னலோரம் நின்ற மனைவியிலேயே அவன் பார்வை தங்கியது.
மின்விளக்கு ஏற்றியிருக்கவில்லை. நிலவின் ஒளியில் சிலையென நின்றிருந்தவளைப் பின்னால் சென்று அணைத்துக்கொண்டான்.
அவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடிற்று. பார்வையைத் திருப்பி அவனை நோக்கினாள். அவன் விழிகளும் அவளின் விழிகளைச் சந்தித்தன. விலகாத அவளின் விழிகளின் வழியே அவளின் மனத்தைப் படிக்க முனைந்துகொண்டிருந்தான் கௌசிகன்.
தன்னை விலக்க முனையாத அவளின் நிலையே அவள் மனத்தை உணர்த்த சிறு சிரிப்புடன் அவளின் இதழ்கள் நோக்கிக் குனிந்தான்.
இத்தனை நாள் பிரிவை இதழ்களுக்குள் கரைத்துவிட்டு அவன் நிமிர்ந்தபோது, அவளின் தலை தாழ்ந்து போயிருந்தது.
அவளைத் திருப்பி, தன் முகம் பார்க்க வைத்து, “சுகமா இருக்கிறியா?” என்றான் கன்னம் வருடி.
அந்த விரல்களின் மாயத்தில் அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. “ம்ம். நீங்க?” என்று கேட்டாள்.
“இருக்கிறன்!” என்றான் அவன்.
இது என்ன பதில் என்று பார்த்தாள் அவள்.
“நீயில்லாம நான் எப்பிடிச் சுகமா இருக்க?” என்றவன், அவளின் தலையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். விழிகள் தானாக மூடிற்று. தன்னவள் தன் கைக்குள் இருக்கிறாள் என்பதை ஆத்மார்த்தமாக மனதோடு உணர்ந்துகொண்டிருந்தான்.
அவனிடம் மட்டுமே கிடைக்கும் இந்த ஆறுதலுக்காக அவளின் ஆழ்மனமும் அவளறியாமல் ஏங்கிப் போயிருந்ததோ என்னவோ, விழியோரம் கசிய அவன் கைகளுக்குள் பேசாமல் அடங்கினாள். அதை உணர்ந்தவனும் தன் அணைப்பை இறுக்கினான். ஒருவருக்கு மற்றவரின் அண்மை ஆறுதலாகி, தேவையாகி, தேடலாகிப் போய் எல்லை மீறும் நொடியில் சிறு சிரிப்புடன் அவளை விடுவித்தான் அவன்.
முகத்தை நிமிர்த்தமுடியாமல் அவள் நிற்க, நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “வீட்டுடுப்பு பாக்ல இருக்கு; எடுத்துவை. குளிச்சிட்டு வாறன்.” என்றுவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான் அவன்.
அமைதியாக அவன் சொன்னதைச் செய்து வைத்தாள். இனி? அந்த ஒற்றைச் சொல் கேள்வியிலேயே சிக்குண்டு நின்றது மனது. பேசாமல் சென்று படுத்துக்கொண்டாள்.
அவனும் வந்தான். உடையை மாற்றிக்கொண்டு, விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தான். அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. இப்படி ஆளுக்கொரு திசையில் இருக்கத்தான், திட்டமெல்லாம் தீட்டி அங்கிருந்து மெனக்கெட்டு வந்தானா?
“பக்கத்தில வா! நீ பயப்பிடுற ஒண்டும் நடக்காது!” என்றபடி தன் கைகளுக்குள் அவளை அள்ளிக்கொண்டான்.
“கௌசி பிளீஸ்!” அவளுக்கு முகமெல்லாம் சூடாகிற்று.
அவன் சிரித்தான். “இந்த, ‘கௌசி பிளீஸ்’ க்காக இன்னும் நிறையச் செய்யலாம் போல இருக்கே!” என்றான் கிறக்கத்துடன்.
அவன் மார்பில் முகத்தைப் புதைத்தபடி கையிலேயே அவள் ஒன்று போட்டாள். சத்தமற்றுச் சிரிப்பில் குலுங்கியவனுக்கு இன்னும் சிலபல அடிகளைப் போட மாத்திரமே முடிந்தது அவளுக்கு.
மனைவியின் தலையை நேசத்துடன் வருடிக்கொடுத்தான் கௌசிகன். அவள் மாறியிருக்கிறாள். அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். அந்த மாற்றம் மிக நன்றாகவே தெரிந்தது.
அதுவே அவனுக்கு மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்க அவளை மார்பில் தாங்கியபடி நிம்மதியாக விழிகளை மூடிக்கொண்டான்.