அன்று காலையில் முகம் கழுவிக்கொண்டு வந்த பிரமிளா, பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். கல்லூரிக்காலம் கண்முன்னே வந்து போயிற்று.
நேற்றைய நாள் முழுவதும் இரண்டு குடும்பமும் திருக்கோணேஸ்வரர் கோவில், மார்பில் பீச், நிலாவெளி கடற்கரை என்று சுற்றிவிட்டு இரவுணவையும் முடித்துக்கொண்ட பிறகு புறப்பட்டு, நள்ளிரவில் கணவனோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
அடித்துப் போட்டதுபோல் உறங்கி எழுந்து பார்த்தால் வீட்டில் இப்படி ஒரு காட்சி அரங்கேறிக்கொண்டு இருந்தது.
“அம்மாச்சி, எழும்பிட்டியா பிள்ளை. அப்பான்ர கண்ணாடி எங்க எண்டு ஒருக்கா பாரம்மா. தேடுறன் தேடுறன் கண்ணில அம்பிடுதே(அகப்படுதே) இல்ல. நேரம் வேற போகுது!” அவசரமும் அந்தரமுமாகத் தேடிக்கொண்டிருந்தவரைக் கண்ணில் சிரிப்புடன் நெருங்கினாள் பிரமிளா.
தேடல் நிற்க மகளின் சிரிப்பில் தானும் மலர்ந்தபடி, “என்னம்மா?” என்றார் அவர். அவருக்கு நேரம் போகிறது. இந்தப் பிள்ளையானால் சிரிக்கிறாளே! விளையாடுகிற நேரமா இது?
அவளோ, ஒன்றும் சொல்லாமல் அவரின் தலையில் கிடந்த கண்ணாடியை எடுத்து மூக்கில் மாட்டிவிட்டாள்.
“இவ்வளவு நேரமா இது இங்கேயா கிடந்தது.” அவர் முகத்தில் வழிந்த அசடைக் கண்டுவிட்டு அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.
பார்த்தவருக்கு அப்படி ஒரு சந்தோசம். சரிதா கூட ஓடிவந்து ஆசையோடு மகளின் முகத்தையே பார்த்தார்.
“போம்மா! உனக்கு அப்பாவைப் பகிடி பண்ணுறது எண்டா நல்ல சந்தோசம், என்ன?” செல்லக் கோபத்துடன் சொன்ன தனபாலசிங்கத்துக்கு அதற்குமேல் அவளுடன் நின்று கதைக்க நேரமில்லை.
“தம்பி இண்டைக்கு நிக்க மாட்டார். கிரவுண்ட்ல ஸ்விம் பூல் கட்டுற வேல நடக்குது. பக்கத்திலேயே நிண்டு பாத்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும். இல்லாட்டி நாங்க ஒண்டு சொன்னா அவங்கள் இன்னொண்டு செய்துபோட்டுப் போயிடுவாங்கள். நடைபாதை எல்லாம் கம்பு, கட்டை எண்டு எல்லாத்தையும் போட்டு வச்சிருக்கிறாங்கள். வாற கிழமை பள்ளிக்கூடம் தொடங்க முதல் அதையெல்லாம் ஒதுக்கச் சொல்லோணும். அப்பிடியே ஹோட்டலுக்கும் போய்ட்டுத்தான் வருவன். மத்தியானச் சாப்பாடு எனக்குச் செய்ய வேண்டாம். தம்பி பத்தியச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பார்.”
மனைவிக்கும் மகளுக்கும் சேர்த்துக் கதை சொல்லிவிட்டு, வேக வேகமாகத் தன் மோட்டார் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனவரைக் கண்டு, வியப்பும் சந்தோசமுமாகப் பார்த்திருந்தாள் பிரமிளா.
“என்னம்மா நடக்குது இஞ்ச?” நடப்பதை இன்னுமே அவளால் நம்பமுடியவில்லை.
அவர் முகத்திலும் பழைய சந்தோசம். “அதை ஏனம்மா கேக்கிறாய். இப்ப எல்லாம் ஆள் இப்பிடித்தான் விடிய எழும்பினா வெளிக்கிட்டு ஓடிடுவார். தம்பி அதப் பாக்கச் சொன்னவர், இதச் செய்யச் சொன்னவர் எண்டு ஒரே பிசிதான். நான் ஏதும் கேட்டா கூட, ‘நேரமில்லை, ரஜீவனைக் கேள்’ எண்டு சொல்லிப்போடுவார்.”
குறை சொல்வதுபோல் வெளித்தோற்றத்துக்குத் தெரிந்தாலும், எறும்பாகவே வாழ்ந்து பழகிய கணவரின் உற்சாகமும் துள்ளலும் மீண்டும் மீண்டுவிட்டதில் அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியே என்று முகம் சொல்லிற்று.
முறுக்கிக்கொண்டு நின்ற இருவருக்குள் இதெல்லாம் எப்போது நடந்தது? நேற்று முழுக்கக் கூடவே இருந்தவன் இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே! அன்னையிடமிருந்து அவள் அறிந்துகொண்டவை அனைத்தும் கணவன் மீதான நேசமாக மடை திரும்பிற்று!
அதன் பிறகு அப்பாவைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் பிரமிளா.
‘தம்பி சொன்னவர்’, ‘தம்பி செய்தவர்.’, ‘தம்பி கேட்டவர்’, ‘தம்பிக்கு நேரமில்லையாம்’ இப்படி அவருக்கு எல்லாமே அந்தத் தொம்பி மயம்தான்.
இவன் என்ன சொன்னது போலவே அவளை விட்டுவிட்டு இரண்டாம் தாரமாக அப்பாவை மணந்துகொண்டானோ? அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மற்றவர்களிடம் பேசுகையில் கூட, ‘எங்கட மருமகன் நல்ல கெட்டிக்காரன்’ என்றோ, ‘ஆள் நல்ல மூளைசாலி’ என்றோ கணவனைக் குறித்தான இப்படியான வார்த்தைகளைத் தந்தையிடமிருந்து கேட்கையில் மனது மகிழ்ந்து போயிற்று.
நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை அவள் போற்றி நேசிக்கும் ஒரு மனிதர் அவளின் தந்தை. அப்படியான அவரே அவனை மதிப்பது, அவனைக் குறித்துச் சிலாகித்துப் பேசுவது மிகுந்த நிறைவைத் தந்தது.
ஆனால், அந்தக் கள்ளன் அன்று இரவு நல்லபிள்ளை போல் அவளை இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டான். வீட்டுக்குள் வரவே இல்லை.
அன்று, திருநாவுக்கரசு வந்து அவரிடம் ஏதோ உதவி கேட்டபோது, “கொஞ்சம் பொறுங்கோ! மருமகனை கேட்டுட்டு என்ன செய்யலாம் எண்டு சொல்லுறன். அவருக்குத்தான் இதெல்லாம் நல்லா தெரியும்.” என்றுவிட்டு அவனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லிவிட்டு, வெகு தீவிரமாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.
பார்க்க பார்க்க மனம் பூரித்துப் போயிற்று. அந்தப் பக்கத்தில் இருப்பவன் அவளின் கணவன் அல்லவா! அதற்குமேல் முடியாமல் அவனைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரமிளா.
“இப்ப இவர் எங்க அப்பா நிப்பார்?” என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டாள்.
ஸ்கூட்டியை கொண்டுபோய்க் கரையாக நிறுத்திவிட்டு ஹோட்டலை நிதானமாகப் பார்த்தவள் அசந்துதான் போனாள். அந்தளவில் அட்டகாசமாக இருந்தது அவனின் உழைப்பு. முதன்முறை அவள் வந்தபோது பத்தோடு பதினொன்றாகச் சாதாரணத் தோற்றத்தில் இருந்த ஒரு ஹோட்டலை இப்படித் தலைகீழாக மாற்றமுடியுமா?
வீதியிலிருந்து சற்றே உள்ளுக்கு எடுத்துக் கட்டியிருந்தான். ஒரு பக்கம் கார் பார்க்கிங். மற்றப் பக்கம் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி, சைக்கிலுக்கான பார்க்கிங்.
அங்கே நிறுத்திவிட்டு நடந்து போவதற்குக் கற்கள் பதித்த நடைபாதை. அதன் இரு மருங்கிலும் பச்சை வர்ண செடிகொடிகள்.
ஹோட்டலின் வாசலில் அகன்ற கண்ணாடிக் கதவுகள் உள்ளே வந்துவிடு என்று அழைத்தன. அதன் இரு மருங்கிலும் அவளின் இடுப்பளவினால அகன்ற பெரிய சாடியில் இரண்டு வாழை மரங்கள் நின்று, வாழை இலைகள் காற்றிலாடி வரவேற்ற காட்சி, உள்ளுக்குள் நுழைய முதலே ஒரு இனிய உணர்வை அவளுக்குள் பரப்பிற்று.
‘மிருதுளா? அது யார்?’ பிரமாண்டமாக எழுந்துநின்ற அந்தப் பெயரைப் பற்றி யோசித்தபடி வாசலை நோக்கி நடந்தாள். கண்ணாடிக் கதவுகள் இரண்டும் பிரிந்து அவளுக்கு வழிவிட, சில் என்று தாக்கிய ஏசி மேனியை நனைத்தது.
சாதாரண நாற்காலிகள் மேசையாக அல்லாமல், வட்ட அமைப்பில் சோபாக்களை இட்டு, நடுவில் மேசை போட்டிருந்தான். வருபவர்கள் அவசர கதியில் உண்ணாமல் ஆறி அமர்ந்திருந்து உண்ண வைப்பதற்கான வழி!
குழந்தைகளுக்கென்று பிரத்தியேகமான இருக்கைகளும் ஒரு பக்கமாக வைத்திருந்தான். ஒரு மூலையில் குட்டிச் சறுக்கு மரம், பிரத்தியேகமான ஸ்பாஞ்சில் அமைக்கப்பட்ட விளையாட்டு வீடு, குட்டி மேசை கதிரை போட்டு அதன் அருகே ஒரு ஸ்டான்டில் கலர் பென்சில்கள், வெள்ளை பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன.