அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில், “சொறி!” என்றாள்.
“பிறகு பாத்தா விட்டுடுங்க எண்டுறாய். நீயும் பக்கத்தில இல்லாம, பிள்ளையும் இல்லாம அந்த நேரம் நான் பட்ட பாடு உனக்குத் தெரியுமா?”
“சொறி…” இதைத்தவிர வேற என்ன சொல்ல இயலும் அவளால்?
அவனுடைய பனித்திருந்த விழிகளைப் பார்க்க முடியாமல் தன் கரங்களால் துடைத்துவிடப் போக, “போடி! பாசக்காரி மாதிரி நடிக்காத!” என்றான் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு.
விடாமல் பற்றி அவன் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துவிட்டாள். “ஆரம்பம் முதலே எனக்கு ஒரு மனப்பயம் இருந்தது கௌசி. உங்கட சரி பிழைகளால பிள்ளைக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு. அதுவே நடக்கவும் நான் நானா இல்ல கௌசி. அந்த நேரம் கதைச்சதை எல்லாம் பெருசா எடுக்காதீங்க, பிளீஸ்!” என்றாள், என்னைப் புரிந்துகொள்ளேன் என்கிற தவிப்புடன்.
அதற்குமேல் கோபம் காட்ட முடியாமல் அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “பரவாயில்லை. விடு!” என்றான் அவன், குரலைச் செருமிச் சீர் செய்தபடி.
“கவலையா இருந்ததா?” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன்.
“என்னில நிறையக் கோபம் வந்திருக்கும் என்ன?” என்றவளுக்கு அப்போதும் தன் அணைப்பை இறுக்கி அதையே பதிலாக்கினான் அவன்.
“சொறி. அப்ப நான் உங்களப் பற்றி யோசிக்கவே இல்ல.”
“இப்ப…” என்றான் சிறு சிரிப்புடன்.
அவள் இதழ்களிலும் மெல்லிய முறுவல் தானாக மலர்ந்தது. “நீங்க மட்டும்தான் மண்டைக்க நிண்டு குடையிறீங்க. உங்கள மறந்து ஒரு வேலை செய்ய முடியேல்ல!” என்றாள், அவன் கண்களைச் சந்திக்காது.
வாய்விட்டுச் சிரித்தான் கௌசிகன். அவன் மடியில் அமர்ந்துகொண்டு தன் அன்பைக் சொல்கிறாள் அவனுடைய மனைவி!
ஆசையோடு அவள் உதட்டினில் தன் உதட்டினை ஒற்றி எடுத்துவிட்டு, “அடியேய் டீச்சரம்மா. இப்பிடியாடி லவ்வ சொல்லுவாய்?” என்று கேட்டான்.
“வேற எப்பிடியாம்? எனக்கு இப்பிடித்தான் வருது!” அவனுடைய கழுத்தினில் தன் கைகளைக் கோர்த்து, அவனைத் தன்னிடம் இழுத்து, அவனுடைய கன்னத்தில் தன்னால் முடிந்தவரைக்கும் இதழ்களை அழுத்தி ஒற்றி எடுத்தாள்.
அவன் கண்களில் கிறக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. “சும்மாவே உன்னில பைத்தியமா அலையிறவன சட்டையெல்லாம் கிழிச்சுக்கொண்டு தெருவில அலைய வைக்காம விடமாட்டாய் போல!” என்றவனின் வேகத்தைச் சமாளிப்பதற்குள் பெரும் போராட்டமே போராடி முடித்திருந்தாள் அவள்.
“இது சரி வராது! விடுங்க, நான் வீட்டை போகப்போறன்!” என்று எழுந்தவளை விடாமல் பற்றி மடியில் மீண்டும் அமர்த்தியபடி, “இனியும் வீட்டை போற கதை ஏதாவது கதைச்சியெண்டா(கதைத்தாய் என்றால்) ரெண்டு போடவும் யோசிக்க மாட்டன்!” என்றவனின் வார்த்தைகளில் கோபம் கொண்டு முகத்தைத் திரும்பியவளின் விழிகளில் பட்டது, அவன் மேசையில் இருந்த ஃபோட்டோ.
பிரேமில் அடக்கி நிமிர்த்தி நிறுத்தி இருந்தான். கௌசிகனுக்கு மனைவியின் பார்வை போன இடத்தைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒருமுறை பக் என்றது. அசைவற்று அவனும் இருக்க, அவளின் விழிகளில் மளுக்கென்று நீர் நிறைந்து போயிற்று.
கைகள் நடுங்க எட்டி அந்த ஃபோட்டோவை எடுத்தாள். பரிதவிப்புடன் விழிகள் ஒருமுறை கணவனிடம் பாய்ந்துவிட்டு வந்தன. கலங்கிவிட்ட விழிகளினூடு காட்சி தெளிவில்லாமல் தெரிய உற்றுப் பார்த்தாள். சாயலே சொல்லிற்று அது அவள் இழந்த பொக்கிஷம் என்று! அடைப்பு உடைபட்டு விழுந்த கண்ணீர் துளிகள் பிரேமில் பட்டுத் தெறித்தன.
“ரமி!” தவிப்புடன் அவளைத் தன் நெஞ்சில் தாங்க முனைந்தான் அவன்.
அதற்கு மறுத்தபடி, “மிருதுளா?” என்றாள் கண்ணீர்க் குரலில்.
அவன் விழிகளும் பனித்துப் போயிற்று. “ரமி பிளீஸ். அழாத!”
“எப்பிடி அழாம இருப்பன்?” ஃபோட்டோவை மார்போடு சேர்த்தபடி கேவியவளை வலுக்கட்டாயமாகத் தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டான் அவன்.
“என்ர செல்லம் எல்லா. அழாதயடி!” ஆறுதலும் அன்புமாகக் கெஞ்சிக் கெஞ்சி மெதுவாக அவளைத் தேற்றினான் அவன்.
“இப்பிடி நடந்திருக்க வேண்டாம்தானே?” தழுதழுத்த குரலில் ஆதங்கத்துடன் கேட்டாள் அவள்.
மெதுவாக அவளின் கையில் இருந்த ஃபோட்டோவை வாங்கி, மேசையின் இழுப்பறைக்குள் வைத்தபடி, “நடந்திருக்கக் கூடாதுதான்!” என்றான் அவனும்.
“நான் நினைச்சே பாக்கேல்ல கௌசி. இருந்திருந்தா இப்ப உடம்பு பிரட்டி, தவழ ஆரம்பிச்சு இருப்பா.” எனும்போதே மீண்டும் கண்கள் கலங்கிற்று அவளுக்கு.
“போதும் ரமி. எங்கட குழந்தை கடவுளிட்ட பக்குவமா இருப்பாள். எங்களோடையும் இருப்பாள். அதாலதான் மிருதுளா எண்டு இந்த ஹோட்டலுக்குப் பெயர் வச்சனான். காலகாலத்துக்கும் எங்கட பிள்ளை எங்களோடயேதான் இருப்பா.” அவன் சொன்னதைக் கேட்டு அவளின் நெஞ்சிலும் அந்த ஹோட்டல் மீது புதுச் சொந்தம் ஒன்று உண்டாயிற்று.
சற்று நேரம் மௌனத்திலேயே கழிய, “நாங்க இன்னும் மூண்டு பிள்ளைகள் பெறவேணும்.” என்றாள் அவள்.
“ம்… சரி!”
“மூண்டும் பொம்பிளைப் பிள்ளைகளா பிறந்தாலும் வடிவா படிப்பிச்சு, நல்லபடியா வளத்து, கட்டிக் குடுக்கோணும் நீங்க.”
“ம்… சரி!” என்றான் அவளின் கலைந்து கிடந்த கேசத்தை ஒதுக்கியபடி.
“எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிக்க வைக்கோணும்.”
சிறு முறுவலுடன், “சரி.” என்றான் அதற்கும்.
“அப்பா நிர்வாகி, அம்மா டீச்சர் எண்டு எந்தச் செல்லமும் குடுக்கக் கூடாது!”
இதை இவள் முதல் பிள்ளைக்கும் யோசித்து வைத்திருக்க வேண்டும் என்று புரிந்தது அவனுக்கு. எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளைச் சொல்ல விட்டான்.
“உங்களை மாதிரிப் பொல்லாத பிள்ளைகளா வளக்கிறேல்ல.” அவள் விழிகளில் மெல்லிய முறைப்பு வந்து அமர்ந்தது.
முறுவல் அரும்ப அவளின் நெற்றியில் முட்டிவிட்டு அதற்கும், “சரியடியப்பா!” என்றான் அவன்.
“பிள்ளை வளப்பில நீங்க தலையிடக் கூடாது! அது என்ர பொறுப்பு. என்னை மாதிரி நல்ல பிள்ளையாத்தான் நான் வளப்பன்.”
இப்போது அவன் அவளை முறைத்தான். “நீ நல்ல பிள்ளையாடி டீச்சரம்மா? இவ்வளவு காலமா என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாய்? உன்ர தங்கச்சி என்னவோ உன்ன அப்பாவி எண்டு சொல்லுறாள். எனக்கு மட்டும்தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய அடப்பாவி எண்டு.” என்றவனின் கோபத்தில் அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.
முதன் முதலாக மனைவி முத்துப் பற்கள் மின்ன அவனிடம் சிரிக்கிறாள். கோப முகம் கண்டே கள்ளுண்ட வண்டாகக் கிறங்கிப் போனவன் அவன். முகமெல்லாம் மலர நகைத்தால் என்ன ஆவான்? ஆசையோடு அவளின் இதழ்களில் தொலைந்துபோனான்.
“என்ன இப்ப சத்தத்தையே காணேல்ல?” என்றவனின் கண்களைச் சந்திக்க இயலாமல், “நீங்க ஆக மோசம் கௌசி!” என்றவள் கணவனின் மார்பினில் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
இது போதுமே அவனுக்கு!
அப்படியே அவளைத் தன் மார்பில் தாங்கியபடி கண்களை மூடிக்கொண்டான். மனது நிறைந்துபோயிருந்தது!
முற்றும்.