அவளின் பேட்டியைத்தான் மோகனனும் பார்த்திருந்தான். ‘ராஜநாயகத்தின் மகனாம்! எவ்வளவு தைரியம் இவளுக்கு! அப்பான்ர பெயரை அவ்வளவு அலட்சியமா சொல்லுறாள்! பள்ளிக்கூடத்திலேயே இருந்துகொண்டு என்னவெல்லாம் செய்றாள். அகங்காரம் பிடிச்சவள்! இவளுக்குப் பாடம் படிப்பிச்சால் தான் அடங்குவாள்.’ அவன் மனம் கருவியது.
கௌசிகன் சொன்னபடியே பத்திரிகையாளர்களை அழைத்து அவர்களுக்கு அவசரப் பேட்டி ஒன்றை வழங்கினார் ராஜநாயகம்.
“இது தனியார் கல்லூரி. கல்லூரியின் நிர்வாகம் எடுப்பதுதான் முடிவு. இந்த நிர்வாகம் இத்தனை ஆண்டுகளாகச் சிறப்பான முறையில் முடிவுகளை எடுத்து, மிகச் சிறப்பாகத்தான் பள்ளிக்கூடத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. அப்படியிருக்கத் திடீரென நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்துவது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
அதோடு, நிர்வாகத்தின் முடிவுகளை மாற்றும் உரிமை அமெரிக்க மிஷனைத் தவிர்த்து யாருக்கும் இல்லை. அதன்படி நடக்கவேண்டியதுதான் ஆசிரியர்களின் கடமையும். அதை விட்டுட்டுப் போராட்டம், கோஷம் என்று மாணவிகளைத் தூண்டிவிட்டு, அதில் அவர்கள் குளிர்காய்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக எத்தனை மாணவர்கள் தூண்டிவிடப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். இப்படிப் பதவியைப் பெறுபவர்கள் அப்படி என்ன நல்லது செய்துவிடப் போகிறார்கள்? அல்லது பதவியில் இருந்தால் மாத்திரம்தான் பள்ளிக்கூடத்துக்கு நல்லது செய்ய முடியுமா, என்ன? அல்லது அவர் அதிபராக முதல் அந்தப் பள்ளிக்கூடம் இயங்கவில்லையா என்ன? பதவியைத் தா நான் நல்லது செய்கிறேன் என்பது என்னவிதமான கேலிக்கூத்து?
எல்லாவற்றையும் விட அவர்களின் பதவி ஆசைக்குப் பிள்ளைகளைத் திசை திருப்பிப் போராட்டம் என்று கலகம் செய்கிறவர்களை மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்!
காடையர்களைக் கல்லூரிக்குள் எங்கள் நிர்வாகம் எப்படி அனுமதிக்கும்? எனக்கு என்னவோ அது அவர்களின் இன்னொரு விதமான திட்டம் தானோ என்கிற சந்தேகம் எழுகிறது. பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதை கேள்விப்பட்டதில்லையா நீங்கள்? இதோ இன்றைக்கு மாணவியர் அமைதியாகத்தான் போராடுகிறார்கள். நாங்கள் எந்தவிதமான இடைஞ்சலையும் கொடுக்கவில்லை. அமைதியாக இருந்து எங்களின் கருத்தை அவர்களுக்கு விளங்கவைக்கவே முயல்கிறோம்.
நிர்வாகம் நினைத்தால் அத்தனை ஆசிரியர்களையும் கண்டித்துப் பதவி நீக்கம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அத்தனை ஆசிரியர்களும் அடுத்த நிமிடமே கல்லூரியிலிருந்து வெளியேற வேண்டி வரும். பிறகு எப்படிப் போராடுவார்களாம்?
ஆனாலும் நங்கள் அதைச் செய்யவில்லை. எங்களுக்கும் நியாய அநியாயம் தெரியப்போய்த்தான் பொறுமையாக நின்று கதைச்சுக்கொண்டு இருக்கிறோம். தங்களின் பதவி ஆசைக்காக மாணவிகளின் கல்வியைக் கெடுக்கும் அவர்கள் மனம் மாறி, போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்!” என்று தன் பேட்டியை முடித்துக்கொண்டார் அவர்.
அதை அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. பார்த்த பிரமிளா கொதித்துப்போனாள். பதவி ஆசை அவர்களுக்கா? அவர்கள் பிள்ளைகளைத் தூண்டி விடுகிறார்களா? என்ன அநியாயம்? எவ்வளவு அக்கிரமம்? நாக்கூசாமல் இப்படியெல்லாம் பேச எப்படி முடிகிறது? பதவியை முறையற்று ஏன் பறித்தீர்கள் என்று கேட்டதற்கு பதவிக்காகப் போராடுகிறார்கள் என்று திரித்துவிட்டார்கள்!
அது சரி! ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு வந்துநின்று எதிர்கொள்ளத் தெரியாமல் மகனை அனுப்பிவைத்துவிட்டு எங்கோ ஒளிந்திருந்து பிரஸ் மீட்டினை மட்டும் கொடுக்கும் அந்த மனிதரிடம் வேறு எதை அவள் எதிர்பார்க்க முடியும்?
கோழைகள்! இப்படித்தான் கேவலமாகப் பேசுவார்கள்! ஏளனமாய் எண்ணிக்கொண்டவளுக்கு அந்த மனிதரின் மீது துளியும் மதிப்பில்லை.
அவர் சொன்னதுபோல நிர்வாகம் எடுப்பதுதான் முடிவு. அது உண்மைதான். ஆனால், அந்த நிர்வாகத்தையே கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்க மிஷனுக்கு மட்டுமே உண்டு. அவர்களோ அவள் அனுப்பிய இரண்டு மெயிலுக்குமே பதில் இல்லை.
கல்லூரி மட்டுமே போராடுவதைக் காட்டிலும் பழைய மாணவிகள் அதுவும் நல்ல பதவியில் இருப்பவர்கள் கலந்துகொண்டால் போராட்டத்துக்கு அது இன்னுமே வலுச்சேர்க்கும் என்று எண்ணினாள் பிரமிளா.
எனவே, தந்தையிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். சசிகரனிடம் அப்பாவைப் பார்த்துக்கொள்ளச் சொன்னாள். கூடவே, “சசி சேர்! அந்த ராஜநாயகம் குடுத்த பிரஸ்மீட் பற்றின விசயம் அப்பாக்குத் தெரிய வேண்டாம். பிறகு இன்னும் யோசிச்சுக் கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளுவார். அப்பப்ப அப்பாவப் பாத்துக்கொள்ளுங்கோ. நான் ஒருக்கா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அந்த ரவுடிக்கும்பல் ஆர் எண்டு தெரிஞ்சதா எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஸ்கூட்டியில் விரைந்தாள்.
வீட்டு வாசலில் கால் வைக்கும்போதே, நேற்றுக் காலையில் எத்தனை ஆனந்தமாக எழுந்து தயாரானோம், இன்றைய நிலை என்ன என்று எண்ணியவளின் மனத்தில் பெரும் வேதனை. அமைதியாக அழகிய நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த அவர்களின் நாட்கள் இப்படித் தலைகீழாக மாறிப்போயிற்றே!
இந்த உலகத்தில் நீதி நியாயம் எல்லாம் வெற்றுப் பேச்சுத்தானா? வசதியும் செல்வாக்கும் இருந்தால் எதையும் எப்படியும் மாற்றிப் போடலாமா என்ன? மனம் வலிக்கக் குளித்துத் தயாராகி வந்தவளைச் சாப்பிடச் சொன்னார் சரிதா.
“பசியில்லம்மா!” என்றுவிட்டுச் செருப்பை மாட்டியவளைக் கவலையோடு பார்த்தார் அவர்.
“அப்பாவும் சாப்பிடேல்லை. நீயும் சாப்பிடேல்லை எண்டால் என்னம்மா இது? ஏற்கனவே வெயிலுக்க நாள் முழுக்க நிக்கிறீங்கள். அலைச்சல், ஒழுங்கான நித்திரை இல்ல. இதுல சாப்பாடும் இல்லாட்டி?” மனம் தாளாமல் கேட்டார் அவர்.
“இதே மாதிரித்தானேம்மா அந்தப் பிள்ளைகளுக்கும் இருக்கும். அதுகள் பட்டினி கிடக்க நாங்க சாப்பிடுறது நியாயமா அம்மா? அவே போராடுறது எங்கட அப்பாக்காக!” அதற்குமேல் அவரோடு நின்று கதைக்க நேரமற்று பிரதேச செயலகத்துக்கு விரைந்தாள்.
அங்கே பிரதேச செயலாளர் மதுவந்தியைச் சென்று சந்தித்தாள். அவரும் பழைய மாணவிதான். “கட்டாயம் நீங்க வரோணும் அக்கா.” என்று உரிமையுடன் அழைத்தாள்.
இவள் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்றபோது மதுவந்தி உயர்தரத்தில் மாணவத் தலைவியாக இருந்தவர்.
அவர் தயங்கவும் அவளுக்குக் கோபம் வந்தது.
“நிர்வாகம் ஏன் ஆரோ ஒருத்தரை அதிபரா நியமிக்க நினைக்கினம் எண்டு உங்களுக்கும் தெரியும் அக்கா. தெரிஞ்சும் அமைதியா இருக்கிறீங்க எண்டுறது கவலையா இருக்கு. நீங்க இண்டைக்கு இந்தப் பதவியில மதிப்பும் மரியாதையுமா இருக்கிறீங்க எண்டால் அதுக்குக் காரணம் மிஸ்டர் தனபாலசிங்கமும் அந்தக் கல்லூரியும்தான். உங்களை மாதிரி அடுத்த தலைமுறையும் நல்ல இடத்துக்கு வரவேணும், எந்தப் பணம் தின்னிகளின்ர கைலயும் அந்தப் பள்ளிக்கூடம் போகாம நடுநிலையா இயங்கோணும் எண்டு நினச்சா மட்டும் ஒரேயொரு நாள் வந்து நிண்டு உங்கட நியாயமான ஆதரவைச் தெரிவிச்சிட்டுப் போங்க. இல்ல, அந்தப் பிள்ளைகளின்ர போராட்டம் தவறு எண்டு நினச்சா, நிர்வாகம் சொன்ன மாதிரி அப்பா தன்ர பதவிக்காகத்தான் பிள்ளைகளைத் தூண்டி விட்டிருக்கிறார் எண்டு நினைச்சா வராதீங்க!”
ஆத்திரத்தில் பொங்கிவிட்டு அவள் வெளியேற, “பிரமி நில்லடி! உனக்கு இவ்வளவு கோபம் கூடாது!” என்று அவள் கை பற்றித் தடுத்தார் அவர்.
அவளோ வறட்சியாய்ச் சிரித்தாள். “கோபமா? இது கையாலாகாத ஒருத்தியா நிக்கிறன் எண்டதால வந்த வேதனை அக்கா. அங்க வந்து பாருங்க, ஒரு பொம்பிளைப் பிள்ளைக்குப் படக்கூடாத இடத்தில அடி பட்டு அவளுக்கு ரெண்டு நாளா யூரின் போகேல்ல. எத்தினையோ பிள்ளைகள் சாப்பிடவே மாட்டன் எண்டு மயங்கி விழுந்தும் அந்த இடத்தை விட்டு அசையேல்ல. அப்பா… அவருக்கு எவ்வளவு நோய் இருக்கு எண்டு உங்களுக்கே தெரியும். பிள்ளைகள் சாப்பிடாம பச்சைத் தண்ணி கூடக் குடிக்கமாட்டன் எண்டு நிக்கிறார். ஆனா நீங்க, ஏசி அறைக்க குந்தியிருந்து யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்க. இத்தனை பேரை உருவாக்கின அந்தப் பள்ளிக்கூடத்தைக் காப்பாத்த முடியாத ஒரு விசரியா நான் நிக்கிறன். நாங்க எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில படிச்ச மனுசர் எண்டு சொன்னால் அந்தப் பள்ளிக்கூடத்துக்கே கேவலம். ஏறி வந்த ஏணியைத் தள்ளி விழுத்திறது ஒண்டும் புதுசு இல்லையே!” என்று படபடத்துவிட்டு அவரின் கையை உதறிவிட்டு வந்துவிட்டாள் பிரமிளா.