இன்னும் என்ன செய்வது என்று அவளுக்கு விளங்கவில்லை. எப்படியும் மதுவந்தி தன்னுடன் படித்த இன்னும் நான்கு பெரிய தலைகளை அழைத்துக்கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை இருந்தது. நாளைக்கும் பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று எண்ணிக்கொண்டு அப்படியே காவல் நிலையம் சென்று விசாரித்தாள்.
“டிவில வேற மாதிரி நியூஸ் வந்திருக்கேம்மா.” அவளைச் சந்தேகத்துடன் நோக்கியவாறே இழுத்தார் காவல்துறை அதிகாரி.
அயர்ந்துபோனாள் பிரமிளா. கதையை எப்படி மாற்றிவிட்டார்கள். “நீங்க விசாரிச்சுக் கண்டுபிடிச்சீங்க எண்டா உண்மை தெரியவரும்தானே?” கோபத்தைக் காட்டிக்கொள்ளாதபோதும் தயங்காது சொன்னாள்.
“விசாரிச்சுக்கொண்டுதான் இருக்கிறம். கட்டாயம் கண்டுபிடிப்பம். கண்டுபிடிச்சிட்டு உங்களை வந்து சந்திக்கிறன்.” என்றார் அவர் ஒருவிதமான சிரிப்போடு.
ஆக, அவரின் முழுமையான சந்தேகப் பார்வையும் அவர்களின் மீதுதான் விழுந்திருக்கிறது. ஆத்திரம் பொங்கியபோதும் அடக்கி, “ஆர் எண்டு தெரிஞ்சுகொள்ள நானும் ஆவலாத்தான் இருக்கிறன்.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் பிரமிளா.
போகிற இடமெங்கும் ஏமாற்றம் மட்டுமே மிச்சமாய்க் கிடைத்துக்கொண்டிருந்தது. தலையோ விண் விண் என்று வலித்தது. இதமான அம்மாவின் கைத் தேநீருக்கு வறண்டுகிடந்த தொண்டை ஏங்கினாலும் மாணவிகளை எண்ணிப் பிடிவாதமாக எதையும் அருந்தாமல் பள்ளிக்கூடத்துக்கே திரும்பவும் ஸ்கூட்டியை விட்டாள்.
நிர்வாகத்துக்குச் சார்பான ஆசிரியர்கள் அனைவருமே அங்கு நிற்பதைக் கவனித்துப் புருவங்களைச் சுருக்கினாள். ‘இங்கிருந்து போகும்போது இவர்கள் இங்கு இருக்கவில்லையே. இன்றைக்கு என்ன நாடகத்தை நடத்தப்போகிறார்களோ?’ என்னவோ விரும்பத் தகாத ஒன்று நடக்கப்போவதைப் போன்று மனத்தில் சஞ்சலம் வந்து குடியமர்ந்தது.
மாணவர்கள் என்றால் கூட நிலமை வேறு. இது மாணவிகள். மானம் மரியாதை என்கிற சொற்களுக்கே நடுங்கிப்போவார்கள். அப்படியிருக்க அசம்பாவிதம் ஏதும் நடந்துவிட்டால்?
முதலில் தனபாலசிங்கத்தைச் சென்று பார்த்தாள். அவர் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே உறங்கிவிட்டிருந்தார். முகம் ஒரு பக்கமாகச் சரிந்திருக்கத் தோற்றத்தில் மிகுந்த களைப்பு. வேதனையோடு ஒரு கணம் அவரையே பார்த்திருந்துவிட்டு, மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு வந்தாள்.
அப்போது, வடமாகாண ஆசிரியர் சங்கத்துக்குச் சென்றிருந்த திருநாவுக்கரசு அவளை நோக்கி வந்தார்.
“என்னவாம் சேர்?”
“எல்லாம் விளக்கமா சொல்லிப்போட்டு வந்திருக்கிறனமா. பெரும்பாலும் அவேயும் நாளைக்குப் போராட்டத்தில கலந்துகொள்ள வருவினம் எண்டு நினைக்கிறன். அப்படியே, நிர்வாகத்தின் செயலைக் கண்டிச்சு அறிக்கை விடுறோம் எண்டும் சொன்னவே. எல்லாம் நடக்கும், என்ன நாங்க நினைக்கிற அவசரத்துக்கு நடக்காது.” என்று கவலை தொனிக்கச் சொன்னார் அவர்.
“அதுவரைக்கும் இந்தப் பிள்ளைகள் தாக்குப்பிடிக்க வேணுமே சேர். பாவம் எல்லோ. இந்த வெயிலுக்க சாப்பாடு இல்லாம, கொஞ்சம் கூடத் தளராம நாள் முழுக்கப் போராடுதுகள்.”
“பெற்றோர்களையும் நாளைக்கு வரச்சொல்லி இருக்கிறன் பிரமிளா.” என்று வந்தார் சசிகரன்.
“ம்ம்… எல்லாப் பக்கமும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். பாப்போம் இனி என்ன நடக்குது எண்டு.” என்றவள், அவர்களிடம் நிர்வாகத்திற்கு சார்பான ஆசிரியர்களின் நடமாட்டத்தைக் குறிப்பிட்டு மாணவிகளைச் சற்றே கவனமாகக் கவனிக்கச் சொன்னாள். அமரனோடு பேச எண்ணி, யாரின் காதிலும் விழாத தூரத்துக்குச் சென்று அழைத்தாள்.
அழைப்புச் சென்றுகொண்டே இருந்தது. அவன் எடுக்கக் காணோம் என்றதும் மீண்டும் அழுத்தப் போனவளின் காதில், “ஏய்! நீ என்ன பெரிய இவளா? என்னவோ நல்லவள் மாதிரியும் ஊருக்கே சேவை செய்யப் பிறந்தவள் மாதிரியும் ஆருக்கு நாடகம் போடுறாய்?” என்கிற கடுமை மிகுந்த ஆண்குரல் ஒன்று பாய்ந்தது.
திகைத்துத் திரும்பினாள் பிரமிளா. யாரோ ஒருவன். முகத்தில் மிகுந்த கடுமையோடு அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தான்.
அப்படி அருகில் நின்றதாலா அல்லது அவனது உயரமே அதுதானா, பிரமிளா அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“என்ன பாக்கிறாய்? இன்னும் என்ன கூத்தெல்லாம் போடுறதுக்குத் திட்டம் போட்டு வச்சிருக்கிறாய்?” என்று அதட்டினான் அவன்.
முகத்தில் சினச் சிவப்பு ஏற, “கதைக்கிறதை மரியாதையா கதைங்க! முதல் நீங்க ஆர்? உங்களுக்கு இங்க என்ன அலுவல்?” என்று அதட்டினாள் அவள்.
அவனுடைய உதடுகள் ஏளனமாக வளைந்தன! “என்னைத் தெரியாது உனக்கு! இத நான் நம்போணும். என்ன நடிப்பு! ஆனா நீ கவலைப்படாத! இனித் தெரியவரும்! நல்ல்…ல்லா தெரிய வைப்பன்!”
உள்ளுக்குள் துணுக்குற்றாள் பிரமிளா. ஒரு மனிதனுக்குள் இத்தனை ஆணவமா? அந்தளவில் அப்படி எதைச் சாதித்தானாம்? எதுவாயினும் அது அவனோடு!
நேராக அவனை நோக்கி, “தெரியவேண்டிய தேவை வரேக்க தெரிஞ்சுகொள்ளுறன்! அத அப்ப பாப்பம்! இப்ப வெளில நடவுங்க!” என்றாள் ஒற்றை விரலால் பள்ளிக்கூட வாசலைக் காட்டி.
நொடியில் அவன் முகத்தில் சினச் சிவப்பு ஏறிற்று! “ஆரைப் பாத்து வெளில போகச் சொல்லுறாய்? இந்த நிமிசம், இந்த நொடி உன்ன வெளில அனுப்ப என்னால ஏலும்! கதறிக்கொண்டு ஓட வைப்பன்! ஆனா, கடைசியா உனக்கு ஒரு சான்ஸ் தாறன்! போராடுறன் குரல் கொடுக்கிறன் எண்டு கூத்தடிக்காம… இப்ப இதுதானே ட்ரெண்ட், நீதிக்குக் குரல் குடுக்கிறன், நியாயத்துக்குப் போராடுறன் எண்டு சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு வசனம் பேசிக்கொண்டு வருவீங்க. உங்களுக்கு எவனாவது நாலுபேர் உங்களையே கவனிக்கோணும். அதுக்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழ இறங்கி வேலை செய்வீங்க. கேவலமான ஒரு நாடகத்த இப்ப நீ நடிக்கிறியே இத மாதிரி. அதுக்கு எங்களை மாதிரி நாலு பெரிய தலை தலைகுனிஞ்சு நிக்க வேணுமோ? இதையெல்லாம் நீ வேற ஆரிட்டயும் காட்டோணும். என்னட்டக் காட்ட நினைச்சியோ இருக்கிற இடம் தெரியாம அடியோட அழிச்சிடுவன்! நீ ஹீரோயின் ஆகிறதுக்கு ஊரையே ஏமாத்துவியா? அந்தளவுக்குப் பதவி வெறி!”
ஆவேசத்துடன் கேட்டவனைக் கண்டு அவள் விழிகளில் அதிர்ச்சி மின்னியது. என்னவெல்லாம் சொல்கிறான். கனவிலேனும் நினைத்துப் பாராதவை. அவளை அவளிடமே எத்தனை கேவலமாகச் சித்தரிக்கிறான்.
“பெயருக்கும் காசுக்கும் அலையுற கூட்டத்துக்கு இந்தப் போராட்டம் அப்பிடித்தான் விளங்கும். மனிச உணர்வுகள் விளங்குறதுக்கு மனுசத் தன்மை கொஞ்சமாவது வேணும்! அதெ…” என்றவளை மிகுந்த வேகத்தில் கையை விசுக்கித் தடைசெய்து,
“அதெல்லாம் கூலிக்கு மாரடிக்கிற கூட்டத்துக்குத்தான் தேவை!” என்றான் பட்டென்று.
கொதித்துவிட்டாள் பிரமிளா.
“கூலிக்கு மாரடிக்கிற கூட்டமா? என்னை மாதிரி ஆரோ ஒரு டீச்சர் உங்களை வச்சு கூலிக்கு மாரடிச்சதாலதான் நீங்க இந்தளவுக்கு வளந்து நிக்குறீங்க. அத மறந்துடாதீங்க. கூலிக்கு மாரடிக்கிறவன் இல்லாட்டி நீங்க குந்தியிருந்து சாப்பிடேலாது! அந்தச் சின்ன பிள்ளைகளின்ர போராட்டத்தை விளங்கிக்கொள்ள முடியாத நீங்க…” என்றவள் பேச்சை மீண்டும் இடை வெட்டினான் அவன்.
“என்னடி பெரிய போராட்டம்?அந்தப் பிள்ளைகளைத் தூண்டி விட்டதே நீதான்! நான் நினச்சா இந்த நிமிசமே உன்னோட சேர்த்து இங்க இருக்கிற அத்தனை பொம்பிளை பிள்ளைகளையும் ஓடவைப்பன். வச்சுக் காட்டவா? சொல்லு வச்சுக் காட்டவா? அந்தப் பிள்ளைகளாலதான் நீ தப்பியிருக்கிறாய் எண்டு சந்தோசப்படு! அதுவும் இன்னும் ஒரு நாளைக்குத்தான். உனக்கு நாளைக்கு மட்டும்தான் டைம்! உன்னையெல்லாம் வச்சு வடிவு பாத்துக்கொண்டு இருக்கேலாது! நாளையோட நீ எல்லாத்தையும் விட்டுட்டு போகோணும். இல்லையோ போக வைப்பன்!” கண்களில் வெறி மின்னக் கர்ஜித்தவனை உண்மையிலேயே மெல்லிய அச்சத்துடன் நோக்கினாள் பிரமிளா.
இவன் கையில் எல்லாம் பள்ளிக்கூடம் கிடைத்தால் என்னாகும்?
‘கடவுளே! விட்டுவிடக் கூடாது!’ மனம் பதற அதை அவனிடம் காட்டாமல், “எப்பிடி? இந்த ரெண்டு நாளா ஓட வச்சீங்களே அப்பிடியா?” என்று இதழோரம் வளையக் கேட்டாள் அவள்.
நக்கலாய்ச் சிரித்தான் அவன். “இது நடக்கேக்க நான் நிக்கேல்லையே எண்டு சந்தோசப்படு. என்ர தம்பி சின்ன பிள்ளை. உன்னை எல்லாம் டீல் பண்ணுற அளவுக்கு அவனுக்கு அனுபவம் காணாது. நாளைக்கு நீயா முடிவுக்குக் கொண்டுவரவேணும்: நானா கொண்டுவந்தா காலத்துக்கும் கவலைப்படுற மாதிரி ஆயிடும். உனக்காகவும், உன்ர ஸ்டுடென்ட்ஸுக்காகவும்தான் சொல்லுறன். எனக்கு இஞ்ச நிக்கிற யாரும் முக்கியம் இல்ல. நான் நினைச்சது நடக்கோணும். அதுக்கு என்னவும் செய்வன்!” என்று எச்சரித்துவிட்டுப் புயலென அங்கிருந்து வெளியேறினான் அவன்.
அதிர்ந்து அசைவற்று போகிறவனின் முதுகையே வெறித்தவண்ணம் நின்றாள் பிரமிளா.