மனத்தில் சூழ்ந்த இறுக்கத்துடன் பிடிவாதமாகப் பள்ளிக்கூடத்துக்கு ஸ்கூட்டியைச் செலுத்திக்கொண்டிருந்தாள் பிரமிளா. அவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தில் நெஞ்சின் ஒரு பகுதி உயிரே போவது போன்ற வலியில் துடித்துக்கொண்டிருந்தாலும், ‘நான் எதுக்கு ஓடி ஒழிய வேணும்? வீட்டுக்க முடங்கோணும்?’ என்கிற கேள்விகள் அவளை நிமிர்த்திப் பிடித்திருந்தன.
கல்லூரியின் வாசலை அண்மித்தபோது வெளியே நின்றவர்கள் உள்ளே நின்றவர்கள் என்று அத்தனை பேரின் விழிகளும் அவளைச் சூழ்ந்தன. மாணவியர் வேதனையோடு நோக்க, சிலர் வித்தியாசமாய் நோக்க ஒருநொடி பத்திரிகையில் போட்டிருந்த போட்டோ கண்ணுக்குள் மின்னிமறைந்து அவளைச் சிறுத்துப்போகச் செய்தது.
அதே போட்டோ இங்கிருப்பவர்களின் மனத்திரையிலும் வந்து போகுமே! அதை யார் எத்தனை கேவலமான கோணங்களில் உள்வாங்கினார்களோ தெரியாதே! இதற்கு அவன் அவளை வெட்டிப் போட்டிருக்கலாம்! மீண்டும் மீண்டும் இதுதான் தோன்றிற்று!
‘வந்திருக்கக் கூடாதோ?’
கடவுளே! நெஞ்சுக்கூடு முழுவதுமே நடுங்க, ஸ்கூட்டி ஒருமுறை ஆட்டம் கண்டது.
அடுத்த கணமே நிமிர்ந்தாள். ‘நான் ஏன் வெக்கப்படோணும்? ஃபோட்டோவைப் போட்டவன்தான் வெக்கப்படோணும்.’ ஸ்கூட்டியை வழமையாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து நடந்தாள்.
அவளையே மொய்த்திருந்த கண்களில் அதிர்ச்சி. அவளின் இந்தப் பரிமாணத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்!
அமரன் முதற்கொண்டு தீபச்செல்வன், ரஜீவன், சசிகரன் எல்லோரும் அவளிடம் ஓடிவந்தனர். அன்று பிரமிளா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒருநாள் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த மதுவந்தி கூட, “பிரமி!” என்றுகொண்டு விரைந்து வந்தார்.
தன் முன்னே வந்து நின்றவர்களை நேராக நோக்கினாள். அவளின் விழிகளில் தெரிந்த தீர்க்கமும் பிடிவாதமும் நடந்த அசம்பாவிதத்தைப் பேசவிடாமல் தடுத்துத் தள்ளி நிறுத்தின!
அவர்களின் எவ்விதமான பரிதாபத்தையும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராயில்லை. அது அவளைப் பலகீனப்படுத்தும். அந்தப் பலகீனம் அவளை உடைத்துப்போடும்! தான் உடைவதை அவள் விரும்பவில்லை.
எனவே, “இப்ப என்ன நடந்துபோச்சு எண்டு எல்லாரும் என்னைப் பரிதாபமா பாக்கிறீங்க? போங்க போய் வேலையப் பாருங்க! இங்க சும்மா நிக்க வேண்டாம்!” என்றுவிட்டு விரைந்தவளின் சிந்தனை முழுவதிலும் நிறைந்திருந்தவர் தனபாலசிங்கமே.
அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். என்றாலும், ‘தெரிஞ்சா தாங்க மாட்டாரே. அதுக்கிடையில அவருக்குப் பக்கத்தில நான் நிக்கோணும்!’ தனக்கு ஏற்பட்ட அசிங்கத்தைக் காட்டிலும் அதனால் அவருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றுதான் அஞ்சினாள் அவள்.
அவர் தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்காகவும் சொத்து சுகத்துக்குப் பதிலாகக் கௌரவத்தையும் கண்ணியத்தையும் மட்டுமே சேர்த்து வைத்திருப்பவர்.
நீண்ட கொரிடோரில் வேகமாக நடந்தவளின் நடை எதிரில் வந்தவனைக் கண்டதும் அப்படியே நின்றது. தேகம் முழுவதும் தீப்பற்றி எறிவது போலொரு கோபம். அந்தத் தீயினால் எதிரில் வருகிறவனைப் பொசுக்கிவிட முடிந்தால்? மனிதமே அற்ற மிருகப் பிறப்பு ஒன்று மனித உருவில் நடந்து வருவதைப் போலவே இருந்தது.
ஒருவனைத் தன் வாழ்நாளில் இத்தனை தூரத்துக்கு வெறுப்போம் என்று பிரமிளா கிஞ்சித்தும் எண்ணியதில்லை.
அவளைக் கண்ட பிறகும் அவனுடைய நடையில் மாற்றமே இல்லை. நிதானமான வேக நடையில் அவளை நெருங்கிக்கொண்டு இருந்தான். தடுமாற்றம் இல்லாத பார்வை வேறு. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் அவளின் முன்னே நிமிர்ந்து வருவான்?
மிக எதிரில் வந்துவிட்டவனை வெறுப்பை உமிழ்ந்த விழிகளால் பொசுக்கினாள்!
“உன்ர வெற்றிக்காக என்னவும் செய்யக்கூடிய ஆள் இல்லையா நீ. நீயே சொல்லியும் நம்பாம விட்டது என்ர பிழைதான். என்ன, எப்பிடியும் ஒரு பொம்பிளையின்ர வயித்திலதானே பிறந்திருப்பாய் எண்டு பிழையா நினைச்சிட்டன். இது எனக்கு வந்த அவமானம் இல்ல. உன்னப் பெத்து வளத்த பொம்பிளைக்கு வந்த அவமானம். தன் இனப் பெண்களை எப்படி மதிக்கவேணும் எண்டு சொல்லித்தரத் தவறின அந்தப் பொம்பிளைதான் தலைகுனிய வேணும். நான் இல்ல!” தன் உயரத்துக்கு முழுவதுமாக நிமிர்ந்து நின்று பேசியவளின் பேச்சில் அவன் முகம் இறுகியது.
“ஆரைப் பற்றி என்ன கதைக்கிறாய்?” என்றவனை இன்றைக்கு அவள் பேசவிடவில்லை.
“கதைக்க வச்சது நீ! உன்ர தரமில்லாத செய்கை!” என்றாள் பட்டென்று!
“செய்ய வச்சது நீ!” அப்படிச் சொன்னவனை அற்பமான புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தாள்.
“ச்சேய்! இப்படிச் சொல்ல வெக்கமா இல்ல! தைரியம் இருக்கிறவன் நேருக்கு நேரா நிண்டு மோதோணும். அதைவிட்டுட்டு…” என்றவள், அவனுக்குப் பின்னால் பதட்டத்துடன் ஓடிவந்த திருநாவுக்கரசைக் கண்டதும் கேள்வியும் இனம் புரியா பயமுமாக அவரை நோக்கினாள்.
“அம்மா… பிரமிமா. ஓடிவாம்மா… வந்து அப்பாவைப் பார்.” அடுத்த நொடியே அவனைத் தாண்டிக்கொண்டு தனபாலசிங்கத்தின் அறைக்கு ஓடினாள் பிரமிளா.
அங்கே, உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருக்க, நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் சரிந்திருந்தார் அவர்.
“அப்பா!” பயமும் பதட்டமுமாக அவரை நெருங்கியவளின் விழிகளில் பட்டது அவரின் மேசையில் கிடந்த புதினம். ஒருகணம் ஓட்டம் நிற்க வேதனையோடு தந்தையை ஏறிட்டாள்.
ஒரு அப்பா வயதுக்கு வந்த தன் பெண்ணைப் பார்க்கக்கூடாத கோலம்! பார்த்துவிட்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரின் இதயம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருந்தது. தன்னால் தன் பெண்ணின் மானம் போயிற்றே என்று நெஞ்சுக்குள் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் தனபாலசிங்கம்.
அவரிடம் பாய்ந்து சென்றாள். “ஐயோப்பா. கண்டதையும் நினைச்சுக் கவலைப்படாதீங்கோ. அதெல்லாம் ஒண்டும் இல்லை. நீங்க எதையும் யோசிக்காதீங்கோ.” என்று தவிப்புடன் சொல்லியபடி விரைந்து செயலாற்றினாள்.
முதலில் அவரை நாற்காலியில் நேராக்கி, அணிந்திருந்த ஷர்ட்டின் பட்டன்களைத் திறந்துவிட்டு நெஞ்சை நீவிவிட்டாள். “திருநாவுக்கரசு சேர், அந்த ஜன்னலைத் திறந்து விடுங்கோ. ஃபேனையும் போட்டு விடுங்கோ. ஆரும் இப்ப அப்பாவைப் பாக்க வர வேண்டாம்.” என்று பணித்துவிட்டு ஓடிப்போய்த் தண்ணீர் எடுத்துவந்து அருந்தக் கொடுத்தாள்.
வியர்த்துப் போயிருந்தவரின் முகத்தைக் கைக்குட்டையால் ஒற்றி எடுத்தாள். மேசையில் கிடந்த புத்தகத்தை எடுத்துக் காற்றை விசுக்கினாள்.
“எல்லாம் என்னால தானேம்மா?” கண்கள் கலங்க அவளின் கையைப் பற்றிச் சொன்னவரைக் கனிவுடன் நோக்கினாள் அவரின் மகள்.
“ஓம் அப்பா. எல்லாமே உங்களாலதான். நான் இந்தப் பூமிக்கு வந்தது என்ர அப்பாவால. நல்லா படிச்சது என்ர அப்பாவால. டீச்சர் ஆகோணும் எண்டு ஆசைப்பட்டது என்ர அப்பாவால. எதுக்கும் பயப்படாம துணிஞ்சு நிக்கோணும் எண்டு படிச்சதும் அப்பாவாலதான். செய்யாத பிழைக்காகக் கவலைப்படக் கூடாது எண்டு எனக்குச் சொல்லித் தந்ததும் என்ர அப்பாதான். வாழ்க்கையில பிரச்சனை வரத்தான் செய்யும். அதைத் தீர்க்கிறது எப்பிடி எண்டு பாக்கிறதுதான் கெட்டித்தனம் எண்டு சொல்லித் தந்ததும் என்ர அப்பாதான். உங்களாலதான் எண்டு இதுல எதை அப்பா குறிப்பா சொல்லுறீங்க?” அவரின் கன்னம் தடவிக் கனிவுடன் பேசியவளை வாஞ்சையுடன் பார்த்தார் பெற்றவர்.
“என்னப்பா?”
எத்தனை பெரிய அவமானத்தைச் சந்தித்து இருக்கிறாள். அவள் தனக்குள் என்ன பாடுபடுவாள் என்று அவருக்குத் தெரியாதா? இருந்தும் நடந்தது என்னவோ ஒன்றுமே இல்லை என்பதுபோலத் தன்னைத் தேற்றியவளின் தலையை மிகுந்த பிரியத்துடன் வருடிக்கொடுத்தார்.
“அருமையான பிள்ளையம்மா நீ.”
ஒருகணம் தன் நடிப்பெல்லாம் தொலைந்துவிடத் துடித்துப்போய் அவரைப் பார்த்தாள் பிரமிளா. சேலை விலகிய அவளின் கோலம் கண்ணுக்குள் மின்னி மறைய, அவரின் மடியில் தலை சாய்த்துக் கதறிவிடுவோமோ என்று பயந்துபோனாள்.
‘இல்ல! நான் உடையக் கூடாது!’ நெஞ்சம் அழுத்திச் சொல்ல முகத்தில் சிரிப்பைக் கொண்டுவந்து, “இத இப்பதானப்பா சொல்லுறீங்க. இவ்வளவு நாளும் சொல்லேல்ல பாத்தீங்களா?” என்று, அவரின் சிந்தனையைத் திசை திருப்பியவளை அன்புடன் நோக்கினார் பெற்றவர்.
“என்னப்பா பாக்கிறீங்க? இப்ப பரவாயில்லையா?”
“எனக்கு ஒண்டும் இல்லையம்மா. திடீரெண்டு பாத்ததும்…” என்றவரை இடைமறித்து, “நீங்க கொஞ்சம் திருநாவுக்கரசு சேரோட கதைச்சுக்கொண்டு இருங்கோ. நான் டொக்டருக்கு ஃபோன் செய்திட்டு வாறன்.” என்று தன் கைப்பேசியை எடுக்கப்போனவளிடம், “ஃபோன் செய்திட்டன். டொக்டர் இப்ப வந்திடுவார்.” என்றான் கௌசிகன்.
அப்போதுதான் அவன் ஒருவனும் அங்கு நிற்பதைக் கவனித்தவளின் விழிகளோ அவனை எரித்துச் சாம்பலாக்கின.
வார்த்தைகளால் குதறிவிட வாய் உந்தியபோதும் தந்தையை எண்ணி அவள் அடக்கிக்கொள்ள வைத்தியரும் வந்து சேர்ந்தார்.
ஓய்வில்லாமையும் உறக்கமில்லாமையும் கூடவே அளவுக்கு அதிகமான மன அழுத்தமும்தான் காரணம் என்று மாத்திரைகள் கொடுத்தார் அவர்.
“உண்ணாவிரதம் எல்லாம் பிள்ளைகள் பாக்கட்டும் தனபாலசிங்கம் சேர். நீங்க நல்லா சாப்பிடுங்கோ. அப்பதான் அந்தப் பிள்ளைகள் வெற்றி பெற்ற பிறகு நீங்க அதிபரா இங்க தொடர்ந்தும் இருக்கலாம்.” என்று அவரின் தோளைத் தட்டிவிட்டுப் போனார் அவர்.
வைத்தியரின் உடல் நலம் குறித்த கேள்விகளில் சற்றே நடந்ததை மறந்திருந்தவர், “கடவுளே! எனக்கு ஒரு பதவியும் வேண்டாம். போதும் அம்மாச்சி! போவம்.” என்று
மனமும் முகமும் கசங்க வேதனையுடன் அரற்றினார்.
“அப்பா அமெரிக்க மிஷன் ஓகே எண்டு சொல்லி மெயில் அனுப்பி இருக்கு. இனி நீங்கதான் பிரின்சிபல். ஆறு மாதத்துக்கு இல்ல உங்கட எழுபது வயசுவரைக்கும். நீங்களா விட்டாத்தான் உண்டு. யாராலயும் எதையும் மாத்தேலாது. இங்க பாருங்கோ. நிர்வாகசபையே மாறப்போகுது! எங்களுக்குத்தான் வெற்றி கிடச்சிருக்கு!” என்று அவர்கள் அனுப்பியிருந்த மெயிலைக் காட்டினாள் பிரமிளா.
அவர் அதைத் திரும்பியும் பார்க்க மறுத்தார்.