“எனக்கு எதுவும் வேண்டாம். வேலைய நானே ரிசைன் பண்ணுறன். என்னால ஏலாது பிள்ளை. உன்னை அந்தக் கோலத்தில ஊரே பாத்தபிறகும் இந்தப் பள்ளிக்கூடத்தில என்னால வேலை பார்க்க ஏலாது. எதையும் இழக்கலாம் அம்மாச்சி. மானம் மரியாதையை இழக்கக் கூடாது! பிறகு வாழுறதிலேயே அர்த்தம் இல்லை!” கண்கள் கலங்கிவிடச் சொன்னவரின் துன்பத்தை உணர்ந்தவளின் விழிகள் அங்கு நின்றவனைச் சுட்டுப் பொசுக்கியது!
‘ஏதாவது அவருக்குச் சார்பாகச் சொல்லித் தொலையேனடா!’ அனலைக் கக்கிய விழிகள் மௌனமாய் ஆணையிட்டது. அவனோ இரக்கமற்ற இதயக்காரனாய்க் கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தான்.
‘என்ன மனுசனடா நீ!’ வேகமாக அப்பாவிடம் திரும்பி, “என்னப்பா நீங்க? எங்களை இப்பிடி ஓடவைக்கவேணும் எண்டுறதுக்காகவே செய்த வேலை இது. இதுக்காகப் பயப்படுறதா?” என்றவளை அவர் தடுத்தார்.
“நீ என்ன சொன்னாலும் நான் ரிசைன் செய்யத்தானம்மா போறன். எனக்கு ஒண்டும் வேண்டாம்!” என்றவர், அதற்கான கடிதத்தினைத் தயாரித்துத் தரும்படி திருநாவுக்கரசிடம் வேண்டினார்.
அதைச் செய்ய மனமற்று பிரமிளாவை நோக்கினார் அவர்.
“நாங்களே இப்பிடி ஒரு பிரச்சினையைக் கண்டு ஓடி ஒளிஞ்சா எப்பிடி அப்பா? நிமிந்து நில்லு, தப்பைக் கண்டா தைரியமா எதிர்த்துக் கதை எண்டுறது எல்லாமே பேச்சளவுல மட்டுமாப்பா?” அவர்களின் போராட்டத்துக்கான நியாயமான வெற்றி கிட்டியபிறகும் விட்டுப் போவதை அவளால் ஏற்கவே முடியவில்லை.
அதுவும் ஒரு பெண்ணின் மானத்தில் விளையாடியவனிடம் அதற்காகவே தோற்பதா?
“உனக்கு விளங்கேல்லம்மா. நாங்க அடங்கிப் போகேல்ல. விட்டுக்குடுத்துப் போறோம். பின்வாங்குறதும் ஒருவகை வெற்றிதான் பிள்ள. அதை விளங்காதாவே வேணுமெண்டால் நாங்க தோத்துட்டதா நினைக்கலாம். அதவிட இங்க நாங்க தோக்குறமா வெல்லுறோமா எண்டுறது விசயமே இல்ல. இந்தப் பள்ளிக்கூடம் இனியும் பல வருசத்துக்கு நல்லா நடக்கவேணும். பிள்ளைகள் நிம்மதியா வந்து படிக்கவேணும். எந்தப் பயமும் இல்லாமத் திரும்பி வீட்ட போகவேணும். பயன் பெறவேணும். எங்களால ஒரு பிள்ளைக்குக் கூட எந்த அசம்பாவிதமும் நடந்திடக் கூடாது அம்மாச்சி. விலகிப் போறோமே தவிர விட்டுட்டுப் போகேல்ல. வெளில நிண்டு கவனிப்போம். அப்பிடி என்னதான் செய்யினம் எண்டு பாப்போமே. சிலநேரம் எங்களை விடவும் சிறப்பா நடத்தலாம் தானேம்மா.” பொறுமையாக மகளுக்கு எடுத்துச் சொன்னார் அவர்.
பிணம் தின்னிக் கழுகுகள் போல் பணம் பார்க்க நிற்கும் இவர்களா சிறப்பாக நடத்துவார்கள்? நம்பிக்கையே இல்லை அவளுக்கு.
“எல்லாம் சரி அப்பா. ஏன் இப்ப நீங்க ரிசைன் செய்ய நினைக்கிறீங்க. நாங்க எப்பவும் போல நல்லபடியா பள்ளிக்கூடத்தை நடத்தலாம்தானே? நீங்க ஓய்வுக்குப் போனபிறகு அவே நடத்தட்டும். அந்தப் பிள்ளைகள் போராடி வாங்கித் தந்த வெற்றி அப்பா. நியாயத்துக்குக் கிடைச்ச பரிசு. இத்தனை வருசம் சேவையாற்றின ஒரு அதிபரை, நீங்க நினைச்ச மாதிரி தூக்கி எறியேலாது எண்டு அவேக்கு முறையா பாடம் படிப்பிச்சு இருக்கிறோம். இப்ப நீங்க ரிசைன் செய்தா அந்தப் பிள்ளைகள் பட்ட பாட்டுக்கு என்னப்பா பொருள்?”
இவ்வளவு பெரிய அசிங்கம் நடந்தபிறகும் தன் முடிவில் மாற்றமில்லாமல் அவள் நிற்க, இந்த அப்பா ஏன் இப்படிச் சொல்கிறார் என்றிருந்தது அவளுக்கு.
“அம்மாச்சி உனக்கு விளங்கேல்லையா? எதுக்காக இருந்தாலும் நடந்தது உன்னோட மட்டுமே போகட்டும். நாளைக்கு உன்னை மாதிரி இன்னொரு பொம்பிளைப் பிள்ளைக்கு நடக்கூடாத ஒண்டு நடந்தா என்ன செய்வாய்? உன்னை மாதிரி பக்குவமும் தெளிவும் இல்லாத சின்னக் குழந்தைகள் அம்மா. அதுகள் தாங்காதுகள். வேண்டாம் பிள்ளை. இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பிள்ளைகள் படிக்குதுகளோ இல்லையோ மானம் மரியாதையோட வாழட்டும். நல்லாருக்கட்டும். நடந்தது எல்லாம் எங்களோட போகட்டும்!” அதிசயமாய்க் கோபம் கொண்டு சொல்லிக்கொண்டு வந்தவரின் குரல், கடைசியில் கரகரத்து அடைத்துக்கொண்டது.
“அப்பா!” அதிர்ந்தாள் பிரமிளா.
ஆக, இதற்கும் பணியாவிட்டால் மாணவிகளின் மானத்தையும் வாங்குவதாக அப்பாவிடம் சொல்லியிருக்கிறான். அதனால்தான் அவர் இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார். இவன்தானே அப்பாவின் அறைக்குள் இருந்து வந்தவன். அதற்குப் பிறகுதானே அவருக்கு முடியாமல் போனது.
பெற்ற தந்தையிடம் பெண்ணின் அலங்கோலக் காட்சியைக் காட்டியதும் அல்லாமல் அதற்கும் மேலே மாணவிகளின் மானத்தையும் வாங்குவேன் என்று சொல்லுகிற அளவுக்கு இவனுடைய இதயம் என்ன இரும்பிலா செய்யப்பட்டிருக்கிறது? இவன் எல்லாம் என்னவிதமான ஜந்துப்பிறவி? மிகுந்த அருவருப்புடன் அவனை நோக்கினாள் பிரமிளா.
தன் செய்கையை எண்ணி எந்தவிதமான வெட்கமும் கொள்ளாமல், அவளின் பார்வையைக் கூர்மையாக உள்வாங்கியபடி அசையாது அங்கேதான் நின்றிருந்தான் அவன்!
அப்படி என்னதான் செய்துவிடுவான் பார்ப்போமே என்று இப்போது அவளால் நினைக்க முடியவில்லை. அவன் செய்வான்! சொன்னதற்கும் மேலே கூடச் செய்வான்! பத்திரிகைகளில் படித்த அசம்பாவிதங்கள் எல்லாம் நினைவில் வந்து அவளின் தேகத்தை நடுங்கச் செய்தன. தன்னைப் பற்றிக் கவலைப்படாதவளால் எப்படி மாணவிகளைப் பற்றி யோசிக்காமல் இருக்க முடியும்?
இந்த நொடி வரை காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறாள்தான். ஆனால், அவளின் உள்ளம் படுகிற பாட்டை, துடிக்கிற துடிப்பை, அவமானத்தில் உழல்வதை அவள் அறிவாளே. அவன் முன்னே நிற்பதை எண்ணிக்கூட அவளின் உடலும் உள்ளமும் கூசிக்கொண்டுதான் இருக்கின்றன. இதே வலியை இன்னும் பன்மடங்காக ஒரு சிறு மாணவிக்கு எப்படி அவளால் வழங்க முடியும்?
வென்றும் கூடத் தோல்வியை ஏற்க வைத்தவனைத் தன் வாழ்வில் மொத்தமாய் வெறுத்தாள் பிரமிளா!
“சரி அப்பா. ரிசைன் செய்ங்கோ. எப்பவும் எல்லாருக்கும் காய்ச்ச மரத்துல மாங்கா பிடுங்கத்தான் விருப்பம். நட்டு தண்ணி ஊத்தி வளத்தவனுக்குத்தான் அதின்ர(அதனுடைய) வலியும் வேதனையும் தெரியும். பேராசைக்காரனுக்கு அதுல காய்ச்சு நிக்கிற காய்தான் தெரியும். பேராசை பெரும் நட்டமாம்! நட்டப்பட்டு நடுரோட்டில நிப்பாங்கள்! நிக்கோணும்! அப்ப தெரியும் இந்த வலி என்ன எண்டு!”
தனக்குத்தான் சாபமிடுகிறாள் என்று விளங்காமல் இருக்குமா அவனுக்கு? தாடை இறுக அவளையே பார்த்தான்.
கண்கள் கலங்க மகளைப் பார்த்தார் தனபாலசிங்கம். எப்போதுமே சமயோசிதமாகச் சிந்தித்துச் செயல்படும் அருமையான பெண் அவள். அப்படியானவளின் போராட்டம் அருகில் நிற்பவனுக்கு ஏன் விளங்காமல் போயிற்று?
அவர் பார்வை அவனிடம் திரும்பியது. சுளித்த புருவங்களுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லையாம். பிடிக்காதுதான். பிடிக்க, அவளின் மனவேதனை விளங்கியிருக்க வேண்டும், ஏன் போராடுகிறாள் என்று தெரிந்திருக்க வேண்டும்.
அவர் பார்ப்பதை உணர்ந்தவன் அவரின் புறம் தன் பார்வையைத் திருப்பி, “நீங்களா நல்ல முறையில இங்க இருந்து விலகிப்போனா யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. நானும் எல்லாத்தையும் சுமூகமா முடிக்கத்தான் நினைக்கிறன்.” என்றான்.
“எப்பிடிச் சுமூகமா? என்ர போட்டோ பேப்பர்ல வந்துதே அப்பிடியா? சேறு எண்டு தெரிஞ்ச பிறகும் அதுக்க காலை வச்சுக்கொண்டு நிக்கேலாது. அதாலதான் விலகிப்போறோம்!” அப்பா இருக்கிறார் என்பதையும் மறந்து அவள் சீற, “அம்மாச்சி! தேவையில்லாத கதைகள் வேண்டாம். நடக்கவேண்டியதைப் பார்!” என்றார் தனபாலசிங்கம் மனதே விட்டுப்போன குரலில்.
அதற்குமேல் அவளும் தாமதிக்கவில்லை. மனிதர்களோடு போராடலாம். மனிதத் தன்மை உள்ளவர்களுக்கு நம் உணர்வைப் புரிய வைக்கலாம். அக்கிரமம் நிறைந்த அநியாயக்காரனின் அருகில் நிற்பதே பாவமாய்ப் பட்டது.
விறுவிறு என்று அவரின் ராஜினாமா கடிதத்தைக் கணனியில் தானே தட்டச்சுச் செய்தாள். அவர் கையெழுத்திட்டுக் கொடுத்ததும், “வாங்கப்பா போவம்!” என்று அழைத்தாள்.
மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்தவரின் தேகம் நடுங்கியது! ஆனாலும் அவனைப் பார்த்து, “நான் போறன். இனி இந்தப் பள்ளிக்கூடம் உங்கட பொறுப்பு. ஆனா, கொஞ்சமாவது மனிதாபிமானத்தோட நடந்துகொள்ளுங்கோ. இங்க படிக்கிறதுகள் எல்லாம் உலகம் அறியாத பச்சக் குழந்தைகள்.” என்றார் மன்றாடலாக.
பிரமிளாவுக்குப் பொறுக்கவில்லை. அப்பா அவனிடம் கெஞ்சுவதா? “மனிதாபிமானத்தோட நடக்கிறதுக்கு மனிதத் தன்மை கொஞ்சமாவது இருக்கோணும் அப்பா. ” என்றவள், அடக்க முடியாமல் அவனிடம் திரும்பினாள்.
“இப்பவும் எனக்கு நடந்ததுக்காக நான் இதைச் செய்யேல்ல. பயந்தும் போகேல்ல. அந்தப் பிள்ளைகளுக்காக மட்டும்தான். அந்தப் பிஞ்சு நெஞ்சுகளுக்கு இந்தக் கோரத்தை எல்லாம் தாங்குற சக்தி இல்ல. அதே நானும் நீங்களும் மட்டும் எண்டு ஏதாவது வந்தா, உங்களுக்குத் தோல்வியை நான் கட்டாயம் காட்டுவன். அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு அமையோணும்.” ஆத்திரத்துடன் அவனிடம் மொழிந்தாள் அவள்.
சற்றுத் திகைத்தாலும், “அமையட்டும்!” என்றான் அவனும் கோணல் சிரிப்புடன்!
அதில் சீற்றம் கொண்டு, “வெற்றி அடைஞ்சதா மட்டும் நினைச்சிட வேண்டாம். வெற்றி எங்களுக்குத்தான். வசதி இருந்து என்ன, செல்வாக்கு இருந்து என்ன, நிர்வாகமே உங்கட கைக்க இருந்து என்ன ஒரு கூலிக்கு மாரடிக்கிறவளிட்ட தோத்துப் போயிட்டீங்க. ஒரு சாதாரண டீச்சர் உங்களைத் தோக்கடிச்சிருக்கிறாள். வாழ்க்கையில அதை மறந்திடாதீங்க.” என்றாள் கடுமையான குரலில்.
அவன் சிரிப்பு மறைந்து போயிற்று!
“வாங்கோப்பா!” நடுங்கிய கால்களால் எழுந்தவர் தடுமாற, வேகமாக உதவிக்கு விரைந்து வந்தான் கௌசிகன். தன் அக்கினிப் பார்வையிலேயே அவனை அசையவிடாமல் செய்தாள் பிரமிளா.
தோள்களைக் குலுக்கிவிட்டு நகர்ந்து நின்றான் அவன்.
“நீங்களும் ஒரு கட்டாயத்துல தோப்பீங்க. தோல்வி உங்களுக்கும் வரும். திக்குத் திசை தெரியாம, உங்கட பலம், பணம், செல்வாக்கு என்ன இருந்தும் எதுவும் செய்ய முடியாம, கண்ணக் கட்டிக் காட்டுல விட்ட மாதிரி இருக்கும். அண்டைக்கு விளங்கும், கட்டாயத்தில தோக்கிறதோட வலி என்ன எண்டு.” அவன் கண்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனவளைக் கண்டு, அவன் முகம் கோபத்தில் சிவந்தது.