மாலை மயங்கும் பொழுது. தன் பேத்திக்கு எப்படியாவது இரவுணவைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்பதில் முழு மூச்சாக இறங்கியிருந்தார் செல்வராணி.
ஆறு வயது மிதுனாவோ அந்தக் காணி முழுவதிலும் சைக்கிளை மிதித்து, அவரை இளைக்க வைக்க முயன்றுகொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்துக்குமேல் அவரால் முடியவில்லை. மூச்சு வாங்கியது. வீட்டிலிருந்து கேட் வரையிலான நடைபாதையின் இரு மருங்கிலும் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்த குரோட்டன்ஸ் பூச்சாடிகளுக்கு நடுவில் இருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டார்.
“செல்லக்குஞ்சு, அப்பம்மா பாவம் எல்லோ. ஓடி ஓடி மூட்டு எல்லாம் வலிக்குதம்மா. வந்து ஒரு வாய் வாங்கிக்கொண்டு போங்கோ.” என்றார் கெஞ்சலாக.
அடுத்த கணமே, “சோ சொறி அப்பம்மா!” என்றபடி ஓடிவந்து, அவரின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் மிதுனா. அதன்பிறகு அவள் அசையவே இல்லை. பள்ளிக்கூடக் கதைகள் பேசியபடி, நல்லபிள்ளையாக உணவை வாங்கினாள்.
இந்த வருடம்தான் முதலாம் வகுப்புக்குப் பாடசாலை செல்ல ஆரம்பித்திருந்தாள். சிறகு முளைத்த பட்டாம் பூச்சி தோற்றுவிடும். அந்தளவுக்குச் சேட்டையும் விளையாட்டும் காட்டுவாள்.
அப்பப்பா, அப்பா, அத்தை என்று வீட்டிலிருக்கும் அனைவருக்குமே செல்லப்பெண். பிரமிளா வீட்டுக்கும் இவள்தான் மூத்த பேத்தி. ஆனாலும் எந்தச் சேட்டையும் எல்லை தாண்டிப் போகாது.
கற்பது, விளையாடுவது, உறங்குவது என்று எல்லாவற்றிலும் நேர்த்தி இருக்கும். இதோ இப்போதும் அவர் அழைத்ததும் சைக்கிளை வழமையாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டுத்தான் வந்தாள்.
சொதியில் போட்டிருந்த விளை மீனைக் கவனமாக முள்ளெடுத்து, முட்டையோடு சேர்த்துப் பருப்பையும் குழைத்து ஊட்டிய சோற்றின் கடைசி வாயையும் வழித்துக் கொடுத்துவிட்டு, “என்ர செல்லக்குஞ்சு கெட்டிக்காரி. ஒரு சோறு விடாம சாப்பிட்டு முடிச்சிட்டா!” என்று, ஒற்றைக் கையால் பேத்தியை அணைத்துப் பாராட்டினார் செல்வராணி.
அப்போது, அவர்களின் வீட்டுக் கேட்டைத் திறந்துகொண்டு வந்தனர் மூன்று இளம் பிள்ளைகள். இவர்கள் இருவரும் கேள்வியாகப் பார்க்க, “இங்க யாழினி எண்டு…?” என்று கேள்வியாக இழுத்தாள் அங்கிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி.
“என்ர அத்தைதான். நீங்க ஆரு?” என்று விசாரித்தாள் மிதுனா.
“உங்கட அத்தைய ஒருக்கா பாக்கோணும். வீட்டில நிண்டா வரச் சொல்லுறீங்களா செல்லம்?” என்று அவளின் உயரத்துக்குக் குனிந்து, நயமாக வினவினாள் அந்தப் பெண்.
சரி என்று தலையை ஆட்டிவிட்டு, “பொறுங்கோ கூட்டிக்கொண்டு வாறன்.” என்று நல்லபிள்ளையாகப் பதிலும் சொல்லிவிட்டு, “அத்தோய்ய்ய்…! உங்களைத் தேடிக்கொண்டு ஆரோ வந்திருக்கினம்.” என்று கூவியபடி வீட்டுக்குள் ஓடினாள் மிதுனா.
“இப்ப வருவா, கொஞ்சம் பொறுங்கோ!” என்ற செல்வராணிக்கும் இவர்கள் யார் என்கிற யோசனைதான் ஓடிற்று.
யாழ் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியாற்றுகிறாள் யாழினி. அன்று, செமினார் ஒன்று இருந்ததில் சற்று முன்னர்தான் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
மிதுனாவின் கூவல் காதினுள் விழ, அறையை விட்டு வெளியே வரவும் மிதுனா அறைக்குள் வரவும் சரியாக இருந்தது.
“என்ர குண்டுமணிக்குத் தெரியாம ஆரு அத்தையத் தேடி வந்தது?”
“தெரியா அத்த. ஆனா உங்களைப் பாக்கோணுமாம் எண்டு சொன்னவே.”
“சரி, வாங்கோ! ஆர், என்ன எண்டு கேப்பம்?”
பொதுவாக யாழினியின் நண்பர்கள், நண்பிகள், கூட வேலை செய்கிறவர்கள் என்று அனைவரையும் மிதுனாவுக்கும் தெரியும். அவளுக்குத் தெரியாமல் அது யார்? அவளின் கரம் பற்றியபடி வெளியே வந்தாள் யாழினி.
அவளுக்கும் அங்கு நின்ற மூவரையும் தெரியவில்லை. அவர்களோ ஒரு மைக், குட்டி கேமரா சகிதம் அங்கு நிகழ்பவற்றை படம் பிடித்தபடி நின்றனர்.
ஒன்றும் விளங்காமல், “நான்தான் யாழினி. நீங்க ஆர் எண்டு எனக்குத் தெரிய இல்லையே?” என்றாள் கேள்வியாக.
“நாங்க, ‘சப்ரைஸ் பார்ட்டி அன்ட் டெலிவரி’ல இருந்து வாறோம். சப்ரைஸா உங்களுக்கு ஒரு கிஃப்ட் வந்திருக்கு. ஆர் அனுப்பினது எண்டு சொல்லுங்கோ பாப்பம்?” என்று குதூகலக் குரலில் கேட்டாள் மைக்கைப் பற்றியிருந்த பெண்.
“ஆர் அப்பிடி?” வாய்விட்டே யோசித்தவளுக்கு ரஜீவனோ என்று ஓடியது.
இன்னும் பதினைந்து நாட்களில் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அது அவனுடைய நீண்ட காத்திருப்பு. அதனால் பரிசு தந்து தன் மகிழ்ச்சியைக் காட்ட நினைத்தானோ?
நிச்சயம் அவனாகத்தான் இருக்கும் என்று அவள் யோசிக்கையிலேயே, “சித்தப்பாவா? அத்த சித்தப்பாதான் என்னவோ அனுப்பி இருக்கிறார். நான் கண்டு பிடிச்சிட்டன். சித்தப்பாதான்.” என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு நின்ற இடத்திலேயே துள்ளினாள் சின்னவள்.
“செல்லக்குஞ்சு சொன்ன பிறகுதான் நானும் யோசிக்கிறன். தம்பியாத்தான் இருக்கும். அப்ப என்ன உன்ர கலியாணத்துக்கும் வரமாட்டானாமோ?” அதுவரை நேரமும் யார் என்று யோசித்துக்கொண்டு இருந்த செல்வராணியின் முகம் அப்படியே வாடிப் போயிற்று.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேலாயிற்று. போனவன் வரவே மாட்டேன் என்று நிற்கிறான். அழுது, கெஞ்சி, ஏங்கி என்று எதற்கும் மசியவில்லை. மகளின் திருமணத்தைச் சாட்டியாவது எப்படியாவது வரவழைத்துவிடலாம் என்று எண்ணியிருந்தார்.
இப்போது அதுவும் நடக்காதோ என்று நினைத்த மாத்திரத்தில் அவரின் விழிகள் குளம் கட்டின. வெளியாட்களின் முன் எதையும் காட்டிக்கொள்ளப் பிடிக்காமல், “கை காயுது. கழுவிக்கொண்டு வாறன்.” என்று முணுமுணுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு வேகமாக அகன்றார்.
யாழினிக்கும் மிகுந்த வருத்தம். அதை மறைத்துக்கொண்டு, “என்ர சின்னண்ணா சவூதில இருக்கிறார். அவராத்தான் இருக்கும்.” என்று சின்ன முறுவலோடு சொன்னாள்.
“அவரோ? வடிவா தெரியுமோ? வேற ஆரும் இல்லையோ? வடிவா யோசிங்கோ. எங்களுக்கு வெளிநாட்டில இருந்து வர இல்லையே.” என்று விளையாட்டுக்குக் குழப்ப முயன்றாள் அந்தப் பெண்.
“இல்ல இல்ல! சித்தப்பாதான். இப்ப நீங்க சொல்லோணும். இல்லையோ நான் சித்தப்பாக்கு எடுத்துக் கேப்பன்.” என்று யாழினியை விடவும் முந்திக்கொண்டு நின்று ஆரப்பரித்தாள் மிதுனா.