அங்கிருந்த மூவருக்கும் முகம் கொள்ளா சிரிப்பு. “எங்களுக்கு வேற வழி இல்ல. சித்தப்பா எண்டு இந்தக் குட்டியம்மா அடிச்சுச் சொல்லுறா. அதால இந்தாங்கோ உங்கட கிஃப்ட்.” என்று, அதுவரை முதுகில் தொங்கிக்கொண்டிருந்த தோள் பையில் அடைத்து வைத்திருந்த பரிசினை எடுத்து நீட்டினாள் அவள்.
“எங்கட ‘சப்ரைஸ் பார்ட்டி அன்ட் டெலிவரி’ டீம் சார்பாக இனிய திருமண வாழ்த்துகள். இப்ப ஆர் எண்டு பிரிச்சுப் பாருங்கோ. உங்கட மருமகள் சொன்னது சரியா எண்டு பாப்பம்.”
செவ்வக வடிவில் இருந்த பெட்டியைச் சுற்றியிருந்த சிவப்பு நிற மினுங்கல் பேப்பரை பிரித்தாள் யாழினி. உள்ளே ஒரு பெட்டி. அதையும் திறந்தாள். அதற்குள் இருந்து மூன்று நகைப்பெட்டிகள் வெளியே வந்தன.
அதைக் கவனித்துக்கொண்டு இருந்த மூவர் கொண்ட அந்த டீமுக்கே மூச்சடைத்துப் போனது. எதையாவது காணவில்லை என்றுவிட்டால் அவர்களின் நிலை என்னாகிறது?
ஹாரம் செட், தோடு, காப்பு மூன்று சோடி, மோதிரம், கைச்செயின், தங்கத்திலேயே காற்சலங்கை என்று ஒரு மணப்பெண்ணுக்கான அத்தனை நகைகளையும் அனுப்பி இருந்தான் மோகனன்.
பார்த்த யாழினிக்கு அவன் தன் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்து போயிற்று. சின்னண்ணா திருமணப்பரிசு அனுப்பியிருக்கிறார் என்கிற சந்தோசமே உண்டாக மறுத்தது. விழிகள் உடைப்பெடுக்க முயன்றன.
ஒரு குட்டிப் பெட்டியில், ‘To Midhu Kutty’ என்று எழுதி இருந்ததை எழுத்துக்கூட்டி வாசித்துவிட்டு, “சித்தப்பா எனக்கும் அனுப்பி இருக்கிறார் அத்த.” என்றபடி வேகமாக அதைப் பிரித்துப் பார்த்தாள் மிதுனா.
வெகு அழகான நெக்லஸ், ஜிமிக்கிகள் அதற்குள் இருந்து கண்ணைப் பறித்தன. “நான் சித்தப்பாக்குச் சொல்லப்போறன்ன்ன்…” என்று கூவியபடி மீண்டும் உள்ளே ஓடினாள் அவள்.
அவளின் ஆர்ப்பாட்டத்தில் அங்கிருந்த எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். அவர்களிடம் தன் மனவருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல், “இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்து, பரிசு தந்தத்துக்கு நன்றி!” என்று முறையாக அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைகொடுத்தாள் யாழினி.
அவர்களும் எடுத்த வீடியோவைக் காட்டி, அதைத் தாம் தம்முடைய முகப்புத்தகம், இன்ஸ்ட்டாவில் போடலாமா என்று அனுமதி கேட்டுப் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர்.
அதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டு வந்தார் செல்வராணி. நகைகளைப் பார்த்தவர் பிரமித்துப்போனார். அத்தனை அழகு. அதைவிட மிகுந்த கனம்.
தன் பங்குச் சீதனத்தைக் கொடுத்திருக்கிறான் என்று அவன் சொல்லாமலேயே புரிந்தது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் விலகி நின்று தன் கடமையை மட்டும் செய்கிறானா அவரின் சின்ன மகன்?
இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி அவர்களை வதைக்கப் போகிறான்? சவுதிக்கு அனுப்பியபோது அதை அவனுக்கான தண்டனை என்றுதான் எண்ணினார்கள். இன்றோ, நிரந்தரமாக விலகி நின்று அவன்தான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துக்கொண்டு இருந்தான்.
அம்மாவும் மகளும் அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவருமே உடைந்துவிடுகிற நிலையில் இருந்தனர். வெளிப்படையாகத் தம் மனப்பாரத்தைக் கொட்டிவிடப் பயந்து அடக்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, “அத்தையும் அப்பம்மாவும் வெளில இருக்கினம் சித்தப்பா. பொறுங்கோ குடுக்கிறன்.” என்றபடி கைப்பேசியைக் கொண்டு ஓடிவந்தாள் மிதுனா.
“அத்த, சித்தப்பா உங்களோட கதைக்கப் போறாராம்.” என்று நீட்டினாள்.
வாங்கி, மைக்கை அழுத்திய யாழினி எதுவும் பேசவில்லை.
“யாழி.”
தமையனின் ஆழ்ந்து ஒலித்த குரலே அவளின் கண்ணீர்ச் சுரப்பிகளை உசுப்பிவிடப் போதுமாக இருந்தது. அவளால் பேச முடியவில்லை. அந்தளவுக்கு மனம் குமுறிக்கொண்டிருந்தது.
“யாழி, என்னம்மா? டிசைன் பிடிக்கேல்லையா? வேற வேணுமா?”
“சீதனம் தந்து இருக்கிறீங்களோ அண்ணா? நீங்க வந்து என்ர கலியாணத்தில நிக்கிறதுதான் நான் உங்களிட்டக் கேக்கிற சீதனம். அதைத் தாங்க. எனக்கு இந்த நகை வேண்டாம்!” என்றாள் தழுதழுத்த குரலில்.
மோகனனுக்கு உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் போயிற்று. அவன் சவுதிக்கு வந்த நாளிலிருந்து அவனுடைய ஒற்றைப் பிடிப்பு யாழினி மட்டும்தான்.
இப்போது எல்லோருமே அவனோடு பேசுகிறார்கள்தான். நலன் விசாரிப்பார்கள். வரச் சொல்லுவார்கள். உண்மையான பாசத்தோடுவீட்டு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வார்கள். என்றாலும் அவனால் ஒட்டிக்கொள்ள முடிந்ததே இல்லை.
ஆனால், யாழினி என்றால் அவனுக்கு உயிர். ஒரு காலத்தில் இதே தங்கையை அவன் பொருட்டாக எண்ணியதில்லை. அவளின் உணர்வுகளை மதித்ததில்லை. நான் அண்ணா என்கிற அகங்காரத்தோடு அடக்கியிருக்கிறான்.
அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இன்று அன்பைப் பொழிகிறான். அவளின் அன்பினில் கரைகிறான். அவளின் திருமணத்தில் தானும் நிற்க வேண்டும் என்கிற அவா அவனுக்கும் உண்டு.
இருந்தும் அங்குப் போகப் பிடிக்கவில்லை. மனம் இறுகிப்போயிருந்தது. தன் உறவுகளிடமிருந்து மொத்தமாகப் பிரிந்திருந்தான்.
“வேலை இருக்கு யாழி. இல்லாட்டி உன்ர கலியாணத்துக்கு வராம இருப்பனா? லீவு கிடைக்கேல்ல.” என்றான் மனத்தை மறைத்து.
யாழினி அவனை நம்பாத சிரிப்புச் சிரித்தாள். “மனமிருந்தா மார்க்கம் இருக்கும் அண்ணா. இங்க மனம் இல்லை எல்லோ. என்னால கலியாணத்தை நிப்பாட்ட ஏலாது. ஆருமே அதுக்குச் சம்மதிக்க மாட்டினம். ஆனா, என்ர கலியாணத்துக்கு நீங்க தரப்போற பரிசு என்ன தெரியுமா? காலத்துக்கும் மாறாத காயம். என்ர சின்னண்ணா கடைசிவரைக்கும் என்ர கலியாணத்துக்கு வரேல்ல எண்டுற ஏமாற்றம். அதுதான் உங்கட விருப்பம் எண்டா நான் ஒண்டும் சொல்லேல்ல!” எனும்போதே அடக்க முடியாமல் அவளுக்கு விம்மல் வெடித்தது.
“அம்மாச்சி! என்ன இது? இன்னும் ரெண்டு கிழமையில கலியாணத்தை வச்சுக்கொண்டு இப்பிடி அழுறதே? சும்மா இரு.” என்று மகளின் முதுகை வருடிக்கொடுத்துத் தேற்றிய செல்வராணிக்கும் மனம் பொறுக்கவில்லை.
“அவன் என்ர செத்தவீட்டுக்கு வருவம் எண்டு இருக்கிறான் போல. நீ விடு!” என்றார் அவனுக்குக் கேட்கட்டும் என்றே.
“அம்மா! என்ன கதைக்கிறீங்க.” பதறிப்போய் அங்கிருந்து அதட்டினான் அவன்.
அப்போதுதான், மேலே மாடியில் தங்கள் அறையில் மூன்று வயது மகன் மதுரனை உறங்க வைத்துக்கொண்டிருந்த பிரமிளா, மகள் வந்து சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு, தம்பியாருக்கு அவளைக் காவல் வைத்துவிட்டு இறங்கி வந்தாள். அவளிடம் தலைப்புச் செய்தியைப் போல் சுருக்கமாக விசயம் பகிரப்பட்டது.
ஒற்றைப் பார்வையில் கலங்கிச் சிவந்திருந்த மாமியார், மச்சாள் இருவரின் முகத்தையும் அளந்துவிட்டு, யாழினியின் கையிலிருந்த கைப்பேசியைத் தான் வாங்கினாள்.
“யாழின்ர கலியாணத்துக்குக் கூட வரேலாத அளவுக்கு உனக்கு வேலையா மோகனன்?”
“அண்ணி… அது…” தங்கையிடம் சொன்ன வலுவற்ற சமாதான வார்த்தைகளில் ஒன்று கூட இப்போது வர மறுத்தது.
“இப்ப என்ன, உன்னட்ட நான் மன்னிப்புக் கேக்கோணுமா? அண்டைக்குக் கோபம், பிள்ளையை இழந்த சோகத்தில ரெண்டு வார்த்த கூடக் கதைச்சிட்டன்தான். அண்ணிதானே எண்டு அதை ஒதுக்கி, மறந்து வரமாட்டியா மோகனன்?”
“அச்சோ அண்ணி, என்ன இது? அதெல்லாம் எப்பவோ நடந்தது. எனக்கு நினைவிலேயே இல்ல.” அவசரமாகச் சொன்னான் அவன்.
“அப்ப என்ன? வா! வா என்ன வா? நீ வாறாய். அவ்வளவுதான்!”
தாய் தங்கையிடம் போன்று பிரமிளாவிடம் அவனால் மறுத்துப் பேச முடியாது. மனமும் இடம் கொடுக்காது. வாயும் வராது. அதில், “சரி அண்ணி!” என்றான் வேறு பேசாமல்.
யாழினி, செல்வராணி இருவர் முகமும் பளிச்சென்று மலர்ந்தன. கண்களில் கண்ணீர் பூக்கள் பூத்துப் போனது.
“தேங்க்ஸ் அண்ணி!” என்று பிரமிளாவை இறுக்கி அணைத்துக்கொண்டாள் யாழினி.