நேற்றைய இரவின் தடுமாற்றம் மோகனனை நிம்மதியாக உறங்கவிடவில்லை. அதனாலோ என்னவோ அதிகாலையிலேயே விழிப்பும் வந்திருந்தது. எழுந்து, ட்ரெயினிங் செட்டை மாட்டிக்கொண்டு வீதிக்கு இறங்கினான்.
கவிழ்ந்திருந்த இருளை விரட்டியடிக்க முனைந்துகொண்டிருந்த அந்தப் பொழுதும், சில் என்று தேகம் நனைத்துப்போகும் மெல்லிய குளிர்காற்றும், புறச்சத்தம் ஏதுமற்ற அமைதியும் அவனுக்கு மிக மிகப் பிடித்தமானவை.
கூடவே, காற்சட்டைக்குள் இருந்த கைப்பேசியிலிருந்து கசிந்த இசையை, அவன் மாட்டிக்கொண்டிருந்த ஹெட்போன்கள் இழுத்து அவன் செவிகளுக்குள் நிறைக்க ஆரம்பித்திருந்தது.
நிதான நடையில் ஆரம்பித்து, அதை வேக நடையாக்கி, பின் மெல்ல ஓட ஆரம்பித்து இப்போது நல்ல வேகமெடுத்திருந்தான். அவனுடைய ஓட்டத்துக்கு ஏற்பச் சிந்தனையும் வேகமெடுத்திருந்தது.
ஏன், எதனால் அப்படி நின்றான்? இதெல்லாம் அவன் வாழ்வில் கடந்து வந்துவிட்ட நிலைகளாயிற்றே. அதுவும் யாரைப் பார்த்து? இது ரஜீவனுக்குத் தெரியவந்தால் என்ன ஆகும்?
நினைக்கையிலேயே அவன் உதட்டினில் சிரிப்பு முளைத்தது. அந்தச் சிரிப்பு அவனின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்த, அவனுக்குள் மெல்லிய நிதானமும் தெளிவும் உண்டாயிற்று.
யாழினியின் திருமணம், காதலர்களாக இருந்து தம்பதியராக மாறிய அவர்களின் முகத்தில் தெரிந்த பொலிவும் மகிழ்ச்சியும், அவன் வயதை ஒட்டிய எல்லோரும் குடும்பங்களோடு நிற்க அவன் மட்டும் தனியாளாக நின்றதன் பாதிப்பு, மண்டபத்தில் அவனைப் பார்த்த எல்லோரும், ‘எப்போது உன் திருமணம்?’ என்று கேட்ட கேள்வி என்று இவைதான் அவனை அந்தத் திசையில் சிந்திக்க வைத்திருக்கின்றன.
அண்ணாவின் அழகிய குடும்பம் வேறு கண்ணையும் மனதையும் நிறைத்ததே. அந்த நேரம் பார்த்து அவளும் கண்ணில் பட்டுவிடச் சற்றே தடுமாறிவிட்டான். இதையெல்லாம் சட்டையில் படிந்த தூசு போல் தட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு அவன் பார்த்த காரியம் என்ன? தன் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி மீண்டும் சிரித்துக்கொண்டான்.
மனம் தெளிந்துவிட, தன் ஓட்டத்தின் திசையை வீடு நோக்கித் திருப்பினான்.
அவன் வந்தபோது வீடும் விழிக்க ஆரம்பித்திருந்தது. குளித்து, உடைமாற்றி, காலை உணவுக்கு வந்தபோது அங்கே செல்வராணியின் அருகே ராதாவும் அமர்ந்திருந்தாள்.
அவளின் பிரசன்னம் இப்போது அவனுக்குள் எந்தத் தடுமாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒற்றைப் பார்வையில் அவளையும் உள்வாங்கியபடி கௌசிகனுக்கு அருகில் இருந்த இருக்கையில் தன்னை நிரப்பிக்கொண்டான்.
“அப்பா எங்க அம்மா? இன்னும் எழும்பேல்லையா?” காலையிலேயே கடைக்குப் புறப்பட்டுவிடுகிறவரின் கார் இன்னுமே அங்கு நின்றதில் விசாரித்தான்.
“இல்லையப்பு. இன்னும் எழும்ப இல்ல. உடம்புக்கு ஏலாம இருக்கு எண்டு இரவே சொன்னவர். அதுதான் கொஞ்சம் படுத்து எழும்பட்டும் எண்டு நானும் எழுப்ப இல்ல. சுந்தரம் அண்ணாக்கு எடுத்துக் கடையைப் பாத்துக்கொள்ளச் சொல்லீட்டன்.” என்ற செல்வராணியின் விழிகள் அவனையே அவனறியாமல் ஆராய்ந்தன.
அவன் முகத்தில் நேற்றைய நிகழ்வுக்கான எந்த இறுக்கத்தையும் அவரால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
அவனைத் தனியே பிடித்து, ‘யோசிக்காமல் கதைத்துவிட்டேன் தம்பி. மனதில் வைத்துக்கொள்ளாதே’ என்று சொல்லிவிட வேண்டும் என்று காத்திருந்தவருக்கு, அப்படி ஒரு சமயம் அமையவே மாட்டேன் என்றது.
அதைவிட, கைப்பேசியைக் கல்லில் குத்தி உடைக்கிற அளவுக்கு ஆவேசம் கொண்டவன், அதன்பிறகு அப்படி எதுவுமே நடவாதது போன்று வெகு இயல்பாக நடந்துகொள்ளும் விதம் இன்னுமே அவரைக் கவலைக்குள்ளாக்கியது.
இப்படி, எத்தனையைப் போட்டுத் தனக்குள்ளேயே அடக்கி வைத்திருக்கிறான்? எல்லோருக்கும் முன்பு வைத்து எதையும் பேசவும் முடியவில்லை.
சின்னவர்கள் இருவரும் இன்னுமே விழித்திருக்கவில்லை. அதில் இவர்கள் ஐவருக்குமான தேநீரை ஒரு ட்ரேயில் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டுத் தானும் அமர்ந்துகொண்டாள் பிரமிளா.
அந்தக் கோப்பைகளில் ஒன்றை மோகனன் புறமாக நகர்த்திவிட்டு, “உன்ர பஞ்ச்பேக் ஏன் வெளில கிடக்கு?” என்று விசாரித்தான் கௌசிகன்.
“குவாலிட்டி சரியில்ல அண்ணா. அடிப்பாகம் உடைஞ்சிட்டுது. கேரண்டி இருக்கிறதால குடுத்து மாத்தலாமா எண்டு கேக்கோணும்.”
“குவாலிட்டி சரியில்லையா, இல்ல நீ ஓவரா குத்திட்டியா?”
“குவாலிட்டி நல்லா இருந்தா ஓவரா குத்தினாலும் ஒண்டும் நடக்காதுதானே அண்ணா. அதால குவாலிட்டிதான் சரியில்ல.” சிரித்துக்கொண்டு சொன்னான் மோகனன்.
இது எதிலும் கலந்துகொள்ளவில்லை ராதா. தேநீரை வேகமாகப் பருகிவிட்டு, பெண்கள் இருவரிடம் என்னவோ மெல்லிய குரலில் சொல்லிவிட்டு எழுந்துகொண்டாள்.
“நான் வெளிக்கிடப்போறன் அண்ணா. அம்மா பாத்துக்கொண்டு இருப்பா.” என்று கௌசிகனிடமும் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்த அவளின் ஹாண்ட்பேக்கையும் ஸ்கூட்டியின் திறப்பையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
இப்போதும் அவன் ஒருவனும் அங்கிருக்கிறான் என்று மருந்துக்கும் காட்டிக்கொள்ளாதவளின் செய்கை, சிறு சிரிப்பை அவனிடத்தில் தோற்றுவித்தது.
“அவேன்ர அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. அதில அவா நேரத்துக்கே வீட்டுக்குப் போயிட்டா. ‘நீயும் போய் அம்மாவைக் கவனி, மிச்ச வேலைய நாங்க பாக்கிறோம்.’ எண்டு சொல்லியும் கேக்காம, அவேன்ர வீட்டு ஆக்கள் சார்பா நிண்டு எல்லாம் செய்தது ராதாதான். நாங்க எல்லாரும் மண்டபத்தை விட்டு வரவே சாமம் ஆகிட்டுதுதானே. அதுக்குப் பிறகு அங்க அனுப்பேலாது எண்டு இரவு இங்கயே தங்கச் சொல்லிட்டேன்.” அவள் அவனைப் பொருட்படுத்தாததைக் கவனித்த செல்வராணி, அவன் கேளாத விளக்கத்தைக் கொடுத்துச் சமாளிக்க முனைந்தார்.
அதற்குள் மதுரன் சிணுங்கிக் கேட்கவும் பிள்ளைகளைக் கவனிக்க விரைந்தாள் பிரமிளா. செல்வராணி மகன்கள் இருவருக்கும் காலை உணவைப் பரிமாறினார்.


