வயிற்றை நிரப்பியபடி நண்பன் ஒருவனைச் சந்திக்க மட்டக்களப்புக்குச் சென்றுவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அங்கேயே தங்கப்போவதாகத் தெரிவித்தான் மோகனன்.
“விளையாடுறியா நீ? அதெல்லாம் சரிவராது!” என்று உடனேயே மறுத்தான் கௌசிகன்.
“இன்னும் ரெண்டு கிழமையால(வாரத்தால்) வீடு குடிபூரல் இருக்கு. அப்பிடியே வீடும் மாறோணும். தளபாடம் எல்லாம் கொண்டுபோய் இறக்கி ஒழுங்கு செய்யோணும். இதெல்லாம் செய்றதுக்கு நான் நீ இருக்கிறாய் எண்டுற தைரியத்திலதான் இருக்கிறன். நீ என்னடா எண்டா குண்டத் தூக்கிப் போடுறாய். எங்கயும் போகேலாது. என்னோட வா.” என்று கையோடேயே அவனை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
சின்ன சிரிப்புடன் கூட நடந்தவன் அதற்குமேல் எதையும் சொல்லப் போகவில்லை. நேற்றைய குழம்பிய மனநிலை இன்று இல்லை. கூடவே, இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இங்கே இருக்கப் போகிறான். அதுவரை அண்ணாவுக்கு உதவியாக இருப்போம் என்கிற எண்ணமும் சேர்ந்துகொண்டிருந்தது.
அதோடு, அடுத்தடுத்து வந்த சடங்கு, விருந்தழைப்புகள், கோயில்களுக்குச் சென்று வருவது என்று புதுத் தம்பதியினருக்கு வீட்டில் தங்க நேரமில்லை.
அப்படியே, அடுத்த பத்து நாட்களுக்கு ரஜீவன் யாழினியோடு கண்டிக்குப் புறப்பட்டுவிட்டதில் மோகனனும் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டான்.
அடுத்த இரண்டு வாரங்களும் மின்னலாக விரைந்து மறைந்திருந்தன. கௌசிகனின் வீட்டின் குடிபூரலும் வெகு சிறப்பாக, எளிமையாக அவர்களுக்குள்ளேயே நடந்து முடிந்திருந்தது.
செல்வராணிக்குத் தன் மகளையும் மருமகனையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை. அந்தளவில், இருவருமே பார்க்கிறவர்கள் முகங்களையும் இதழ்களையும்கூட மலரச் செய்துகொண்டு இருந்தனர்.
முகமெங்கும் பூரித்து மின்ன, சந்தோசத்தில் மிதந்துகொண்டிருந்தாள் யாழினி. ரஜீவனும் ஒரு சுற்றுப் பெருத்து, நான் புது மாப்பிள்ளை என்று எழுதி ஒட்டாத குறையாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.
வெக்கை அடங்கிய மாலைப்பொழுது. சின்னவர்கள் இருவரும் தம் புது வீட்டில் மாடி ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.
மோகனன் மிதுனாவை கவனித்துக்கொள்ள, கௌசிகன் மதுரனைக் கவனித்துக்கொண்டான். காலையிலேயே கரைத்து, பிரிட்ஜில் வைத்திருந்த ஜூஸுக்கு ஐஸ் கட்டிகளும் சேர்த்து, கண்ணாடிக் குவளைகளில் பிரமிளா வார்த்துக்குக் கொடுக்க, அதைக் கொண்டுவந்து எல்லோருக்கும் பரிமாறினாள் ராதா.
அதை வாங்கிக்கொண்டே, “இனி என்ன அண்ணா, சின்ன மகனுக்கும் ஒரு கலியாணத்தை முடிச்சுவிட்டிங்க எண்டா அவரும் தன்ர வாழ்க்கையைப் பாப்பாரே.” என்று ராஜநாயகத்திடம் சொன்னார் சரிதா.
“ஓமோம்! அடுத்தது அவனுக்குத்தான். தேட ஆரம்பிச்சாச்சு. ஒரு சம்மந்தம் சரிவரும் போலத்தான் இருக்கு. எல்லாம் கூடி வரட்டும், சொல்லுறன்.”
நேற்று மண்டபத்தில் வைத்து மோகனனைப் பார்த்துவிட்டு அவருடைய நண்பர் திருப்தியாகப் புன்னகைத்ததும், மகளோடு கதைத்துவிட்டு நல்ல பதிலாகச் சொல்கிறேன் என்று சொன்னதும் ராஜநாயகத்தை நம்பிக்கையாகப் பதில் சொல்ல வைத்தது.
இதைக் கேட்டுக்கொண்டு மிதுனாவோடு வந்த மோகனன், “இப்ப என்னப்பா அவசரம்?” என்று மறைமுகமாகத் தன் விருப்பமின்மையைத் தெரிவித்தான்.
“என்ன கதை இது? இப்ப என்ன அவசரம் எண்டா அப்ப எப்பதான் கட்டப்போறாய்?” அவன் மறுக்க இடமே கொடுக்கக் கூடாது என்கிற வேகம் இருந்தது செல்வராணியிடம்.
“காலா காலத்தில அதது நடக்கோணும் அப்பு. உங்களுக்கு வயசு காணும்தானே. இவ்வளவு காலமும் தனியா இருந்ததும் போதும்.” என்று தன்மையாக அவனுக்கு எடுத்துரைத்தார் தனபாலசிங்கம்.
அவருக்கு அவன் செய்தவைகள் என்ன? அவர் அவனோடு உரையாடும் பண்பு என்ன? மனம் சுட அவரிடம் அவனால் மறுத்துரைக்க முடியாமல் போனது. அமைதியாக நின்றான்.
“ஓம் மாமா. இனியும் அண்ணாவை விடேலாது. நாங்க விடமாட்டோம். எனக்கு அவசரமா சின்னண்ணி வேணுமே வேணும். பேசாம எங்கட ராதாவையே அண்ணாக்குக் கட்டிவச்சா என்ன? இவரும் ராதுக்குக் கலியாணத்துக்குப் பாத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. எனக்கும் ராது அண்ணியா வந்தா சந்தோசமா இருக்கும். அவளுக்கு நான் அண்ணி. எனக்கு அவள் அண்ணி. எப்பிடி என்ர ஐடியா?” திடீரென்று தோன்றிய தன் எண்ணத்தில் துள்ளிக்கொண்டு சொன்னாள் யாழினி.
அந்த இடமே சட்டென்று அமைதியாயிற்று. அங்கிருந்த யாருமே அப்படியொரு கோணத்தில் யோசிக்கவே இல்லை. ரஜீவனுக்கு ஆத்திரத்தில் முகம் சிவந்து போயிற்று. அவன் வாயைத் திறக்க முதல் முந்திக்கொண்டாள் ராதா.
“இல்லை அண்ணி. அது சரிவராது! எனக்கு இதுல விருப்பம் துளியும் இல்ல! இனியும் எந்தக் காலத்திலயும் மறந்தும் இப்பிடி யோசிக்காதீங்க, பிளீஸ்!” நேராகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
யாழினிக்கு முகம் கன்றிப் போயிற்று. பிடிக்கவில்லை என்பது வேறு. அதைக்கூட இதமாகச் சொல்லியிருக்கலாம். அதை விட்டுவிட்டு மறந்தும் யோசிக்காதே என்றால் என்ன அர்த்தம்? அப்படி யோசிக்கவே கூடாத இடத்திலா அவளின் தமையன் இருக்கிறான்?
ரஜீவனுக்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது. அவன் தங்கை அமைதி ரகம்தான். அதேநேரம், தேவை என்று வருகையில் தன் முடிவுகளைச் சொல்ல அவள் தயங்குவதில்லை என்பதும் அவன் அறிந்ததுதான்.
ஆனாலும், எல்லோருக்கும் முன்பும் வைத்து இப்படி அவன் மூக்கை அறுப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கியபடி மோகனனைப் பார்த்தான்.
அவன் முகம் இறுகிப்போயிருந்தது. இவனுக்கு அதைப் பார்க்க சிறுபிள்ளை போல் மனம் துள்ளியது.
“சரி விடுங்கோ. நாங்க நினைச்சாப்போல எல்லாம் நடந்திடுமா என்ன? ஆருக்கு ஆர் எண்டு அந்த ஆண்டவன் போட்ட முடிச்ச மாத்தேலுமா?” என்று அந்தச் சூழ்நிலையை இலகுவாக்கினார் சரிதா.
அதையே பிடித்துக்கொண்டு எல்லோருமே கவனமாகத் திருமணப் பேச்சைத் தவிர்த்துவிட்டிருந்தனர்.
ஆனாலும், யாழினிக்கு மனம் சமாதானம் ஆகவே மாட்டேன் என்றது. அதுவரை நேரமும் மலர்ந்திருந்த முகம் அப்படியே வாடி, சுருங்கிப் போயிற்று. எல்லோர் முன்பும் எதையும் கதைக்க விரும்பாமல் அவளருகில் வந்து அமர்ந்து, அவளின் தலையைக் கலைத்துவிட்டான் மோகனன்.
கண்ணில் நீருடன் அவள் நிமிர, கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சிரித்தான்.
“சொறி அண்ணா!” அடைத்த குரலில் சொன்னாள் யாழினி.
“விடு யாழி. ஆர் தலைகீழா நிண்டாலும் நினைக்கிறதெல்லாம் நடந்திடுமா? நடக்கிறதுதான் நடக்கும். உண்மைதானே மோகனன்?” என்று கேட்டான் ரஜீவன்.
“உண்மைதான்!” சிறு சிரிப்புடன் ஒத்துக்கொண்ட மோகனனின் பார்வை, நொடிக்கு அதிகமாக அவனில் நிலைத்துப் பின் விலகியது.


