பிரமிளாவும் நொடிநேரம் பதறித்தான் போனாள். ஆனால், மோகனனைத் தடுக்கச் செல்வராணியின் கோபத்தால் மாத்திரமே முடியும் என்பதில் அமைதியாக நின்றாள்.
“அம்மாக்கு என்ன? இல்ல தெரியாமத்தான் கேக்கிறன், என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க ரெண்டு பேரும்? காலத்துக்கும் என்னைப் போட்டு வதைக்கோணும் எண்டோ? கொஞ்சக் காலம் என்னை ஒரு மனுசியாவே மதிக்காம இருந்தீங்க. கோயில் கோயிலா அழுதுகொண்டு திரிஞ்சன். அந்தக் கடவுளா பாத்து பிரமிய என்ர கண்ணில காட்டி, அவள் எனக்கு மருமகளா வந்தாள். அதுக்குப் பிறகுதான் நானும் ஒருத்தி உங்களுக்கு அம்மாவா இருக்கிறன் எண்டுறதே உங்களுக்குத் தெரிய வந்தது.” என்றவரின் பேச்சில் மகன்கள் இருவர் முகங்களும் கறுத்துப் போயின.
“இனி எல்லாம் மாறிடும் எண்டு நினைக்க, தண்டனை குடுக்கிறன் எண்டு நீ இவனைக் கண்காணாத தேசத்துக்கு அனுப்பி வச்சாய். எல்லாம் நல்லதுக்குத்தான் எண்டு நினைச்சு பொறுத்துப்போனன். இவன் வராமையே இருந்து என்னை வதைச்சான். அப்பவும் தாங்கிக்கொண்டு இருந்தன். இப்ப இவன் வந்ததும் நான் பட்ட பாடெல்லாம் முடிஞ்சுது, இனி என்ர மூண்டு பிள்ளைகளும் என்ர கண்ணுக்கு முன்னால இருப்பாங்கள், சாகிற வரைக்கும் சந்தோசமா அதுகள் வாழுறதப் பாத்திட்டுப் போவம் எண்டு நினைச்சா விடமாட்டீங்க போலயே?” கண்ணில் கண்ணீர் வழிந்தபோதும் ஆத்திரத்தோடு பொரிந்தவரைப் பார்க்க முடியவில்லை மோகனனுக்கு.
“அம்மா! என்ன கதைக்கிறீங்க? இனிப் போயிட்டுக் கட்டாயம் ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா வந்திட்டுப் போறன், சரியா? முந்தி மாதிரி வராம இருக்கமாட்டன். நீங்க சும்மா கண்டதையும் யோசிச்சுக் கவலைப்படாம பேசாம இருங்க.” என்று அவரின் அருகில் வந்தவனை, “கிட்ட வராத! வந்து என்னைச் சமாளிக்கப் பாக்காத. அங்கேயே நில்லு! இனி நீ எங்கயும் போகேலாது! போகக் கூடாது.” என்றார் அவர் உறுதியான குரலில்.
மோகனனுக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. அவரைச் சமாளிக்க முடியும் போல் தெரியவில்லை. முன்னர் போன்று அவரிடம் கோபப்படவும் இயலவில்லை. அவரின் கண்ணீர் வேறு மனத்தைப் போட்டுப் பிசைந்தது.
செல்வராணிக்கோ மகனின் அமைதி மனத்தை அறுத்தது. “இந்தளவுக்குக் கல்லு மனசா தம்பி உனக்கு? அம்மாக்காக அப்பாக்காக இஞ்சயே இருக்கமாட்டியா நீ? அந்தளவுக்கு அங்க என்ன இருக்கு? இல்ல… எங்களுக்குத் தெரியாம அங்கேயே ஆரோ ஒருத்தியக் கட்டி, பிள்ளை குட்டி எண்டு ஆகிட்டியா?”
அவரின் சந்தேகக் கேள்வி, அவனுக்குக் கோபத்தோடு சேர்த்துச் சிரிப்பையும் வரவழைத்தது. “சும்மா உங்கட கற்பனையைக் கண்டபாட்டுக்கு ஓடவிடாம பேசாம இருங்கம்மா. அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல.” என்று அதட்டினான்.
“பிறகு என்னத்துக்கு அங்க போக நினைக்கிறாய்? அம்மா அப்பா, அண்ணா, தங்கச்சி எண்டு உன்ர சொந்தம் முழுக்க இஞ்சதான் இருக்கு. கடன் கட்ட போறியா? இல்ல, காசு இல்லை எண்டு போறியா? என்ன இஞ்ச இல்லை எண்டு அங்க போக நிக்கிறாய்?”
அவர் இன்றைக்கு அவனை விடப்போவதில்லை என்று புரிந்து போயிற்று. அவருக்கு ஏற்ற பதிலைச் சொல்லமுடியாத இயலாமை வேறு கோபமாக உருவெடுக்க, “எல்லாம் இருந்தும் இல்லாத நிலமை தானேம்மா இஞ்ச எனக்கு. இஞ்ச இருந்து என்ன செய்யச் சொல்லுறீங்க? இன்னுமின்னும் கேவலப்படச் சொல்லுறீங்களா? நான் செய்தது பிழைதான். அதெல்லாம் நடந்து எட்டு வருசம் ஓடிப்போயிட்டுது. ஆனாலும் ஆருமே எதையும் மறக்கேல்லையே. ஏன் நீங்க கூட, ஒரு பிரச்சினை எண்டு வந்ததும் என்னைப் பாத்து என்ன கேட்டீங்க? அப்ப மற்ற ஆக்களைப் பற்றி யோசிச்சுப் பாருங்க. எனக்கு இஞ்ச இருக்கேலாது. இருக்க விருப்பம் இல்ல. என்னைப் பாக்கிற எல்லாக் கண்ணும் வெறுப்போடதான் பாக்குது. கேவலமாத்தான் பாக்குது. எனக்கு அது பிடிக்கேல்ல. நான் போகத்தான் போறன்!” என்றான் முடிவாக.
அங்கிருந்த எல்லோருக்குமே அவனுடைய இந்த வெடிப்பு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிற்று. செல்வராணி நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. அன்றைய தன் சறுக்கலை எண்ணி இப்போதும் வருந்தினார். இருந்தபோதிலும் எதற்காகவும் அவனை இன்னுமொருமுறை பிரிய அவர் தயாராகவே இல்லை.
“இப்ப என்ன, எல்லாரும் உன்னக் கேவலமா பாக்கிறதால ஓடி ஒளிய நினைக்கிறியா தம்பி? இதுதான் உன்ர தைரியமா?” என்றார் நிதானமாக.
“அம்மா!” என்று அதட்டினான் அவன்.
அதைக் குறித்தெல்லாம் அவர் கவலையே படவில்லை.
“நீதானே அந்தக் கேவலமான விசயத்தை எல்லாம் செய்தவன். அப்ப இதையெல்லாம் கடந்து வரவேண்டியவனும் நீதானே. எட்டு வருசம் எங்கயோ போயிருந்திட்டு வந்தா எல்லாம் மாறிடுமா? இல்ல மறக்கத்தான் ஏலுமா? உன்ர நடத்தைதான் உன்னக் கெட்டவனா காட்டினது. அதே நடத்தையால நான் திருந்திட்டன், நல்லவன் எண்டு இஞ்சயே இருந்து காட்டு. இப்ப நீ போனா, திரும்ப எப்ப வாறியோ அப்பவும் இதையெல்லாம் நீ சந்திக்கத்தான் வேணும். அத நீ மாத்த நினைச்சா இஞ்ச இருந்துதான் மாத்த வேணும். ஓடிப்போனா ஒண்டும் மாறாது. அப்பிடியேதான் இருக்கும்.” என்றவரை முறைத்தான் அவன்.
ஓடுகிறானாம், ஒளிகிறானாம். என்ன பேச்சு இதெல்லாம்? எரிச்சல் வந்தது அவனுக்கு.
அவ்வளவு சொல்லியும் வாயைத் திறக்காதவனைக் கண்டு மீண்டும் அழுகை பெருக்கெடுத்தது செல்வராணிக்கு. இனி மூத்தவன் தலையிட்டால் மட்டுமே எதுவும் மாறும் என்று புரிந்துவிட, கண்ணீருடன் அவனின் முன்னால் சென்று நின்றார்.
“பாத்தியா தம்பி, இவ்வளவு கெஞ்சுறன், இஞ்சயே இருக்கிறன் அம்மா எண்டு ஒரு வார்த்த சொல்லுறானா பார்? அவ்வளவு பிடிவாதம் என்ன? இவா என்ன சொல்லுறது நான் என்ன கேக்கிறது எண்டு நினைக்கிறானா? அப்ப இந்த வீட்டில என்ர வார்த்தைக்கு இன்னும் மதிப்பில்ல எண்டுதானே அர்த்தம்?” என்றவரை அதற்கு மேலும் தவிக்க விடவில்லை கௌசிகன்.
சமாதானம் செய்கிறவனாக அவரை அணைத்துக்கொண்டான். “சும்மா சும்மா அழாதீங்க அம்மா. நான் சொல்லுறன், அவன் இனி போகமாட்டான்.” என்றான் முடிவாக.
“அண்ணா.” தமையனை மறுக்க முடியாத இயலாமையோடு தடுமாறினான் மோகனன்.
“என்னடா அண்ணா? என்ர சொல்லுக்கு இன்னும் உன்னட்ட மதிப்பு இருக்கு எண்டு நம்புறன் மோகனன். இல்லை எண்டா உனக்கு விருப்பமானதை நீ தாராளமா செய்யலாம். நா…” என்றவனை மேலே பேசவிடாமல் அவசரமாகக் குறுக்கிட்டு, “அண்ணா பிளீஸ்! நான் போகேல்ல. இஞ்சயே இருக்கிறன். என்னை மறிக்கிறதுக்காக எண்டாலும் இப்பிடியெல்லாம் கதைக்காதீங்க.” என்றுவிட்டு அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் உடைந்துவிட்ட மனத்தோடு வெளியேறினான்.
கௌசிகனின் நிலைதான் மகா மோசமாயிற்று. முப்பத்தியொரு வயது நிரம்பிய முழுமையான மனிதன் அவன். இன்றைக்கும் அண்ணா என்ற சொல்லுக்கு மறுபேச்சு இல்லை. அப்படியானவனை வழி தவற விட்டதில் பெரும்பங்கு அவனுடையதுதானே.
களிமண்ணாகக் கைக்குள் அடங்கி நிற்கிறவனை அவன் நினைத்திருந்தால் எந்த வடிவத்துக்கும் மாற்றியிருக்கலாம். பிழைக்க விட்டுவிட்டானே. அதுசரி, அந்த நேரம் இவனே செருக்கேறிப்போய்த் திரிந்தான். பிறகு எப்படி அவனை நல்வழிப்படுத்தியிருப்பான்?


