நேரம் இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. ராஜநாயகமும் செல்வராணியும் வீடு வந்து, உடைமாற்றி, உடல் கழுவி கட்டிலில் சரிந்தபோது மிகவுமே களைத்துப்போயிருந்தனர்.
இருவருமே வயது வந்தவர்கள்தான். அதற்கென்று வயதானவர்கள் அல்லர்! வயதாயிற்று என்று சொல்லிக்கொண்டு தொலைக்காட்சிப் பெட்டி போன்ற குறுகிய வட்டம் ஒன்றுக்குள் தம் உலகத்தைச் சுருக்கிவிடாமல், இன்னுமே உழைப்பதிலும், பெற்ற பிள்ளைகளுக்குத் துணையாக இருப்பதிலும், பேரப்பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதிலும் தம் நாளாந்த வாழ்வை உயிர்ப்புடன் கொண்டோடுகிறவர்கள்.
இன்றும் அப்படியான ஒரு நாளாகத்தான் கழிந்தது. ஆனாலும், சின்ன மகன் மீதான கவலையும் பயமும் அவர்களின் மனத்தோடு சேர்த்து உடலையும் சோரவைத்திருந்தது.
இப்போதெல்லாம் கணவர் உறக்கத்துக்கு என்று அறைக்குள் வந்தபிறகு, அன்றைய நாளைப் பற்றிச் சுருக்கமாகப் பகிர்ந்துகொள்வார் செல்வராணி. அது அவராக அவரின் வாழ்வில் கொண்டுவந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று.
தன்னளவில் மனைவிக்கான இடத்தைக் கொடுக்க முனைந்துகொண்டிருந்த ராஜநாயகமும் இயைந்து வரவே, இப்போதெல்லாம் உறக்கத்துக்கு முன்னான அந்தக் குட்டித் தனிமை, அவர்கள் இருவருக்குமே மிக மிகப் பிடித்த பொழுதாயிற்று.
சில நேரங்களில், மொத்தமாக நடந்த வியாபாரத்தைப் பற்றியோ, சுவாரசியமூட்டிய அல்லது எரிச்சலூட்டிய ஒரு வாடிக்கையாளரைப் பற்றியோ ராஜநாயகமும் பகிர்ந்துகொள்வார்.
அப்படியொன்று நடந்துவிட்டால் அடுத்த நாளைய செல்வராணியின் செயல்களில் தனியானதொரு துள்ளலும் துடிப்பும் குடிபுகுந்திருக்கும். கண்டும் காணாததுபோல் கவனித்துத் தனக்குள் சிரித்துக்கொள்வார் ராஜநாயகம்.
இன்று, அப்படி எதுவுமற்று இருவருமே அமைதி காத்தனர். ஒருமுறை ராஜநாயகம் எழுந்து தண்ணீர் பருகிவிட்டு மீண்டும் சரிந்தார்.
“உங்களக் கேக்காம நானே தம்பின்ர கலியாணத்தைப் பற்றிக் கதைச்சிட்டன் எண்டு உங்களுக்குக் கோவம் வரேல்லயா?” கணவரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார் செல்வராணி.
சற்றுக்கு அமைதியாக இருந்துவிட்டு, “இவ்வளவு காலமும் கோபப்பட்டு, உன்ன மதிக்காம கத்தினது காணாது எண்டு சொல்லுறியா?” என்று, ஒற்றைக் கையைத் தூக்கி தலைமீது வைத்துக்கொண்டு திருப்பிக் கேட்டார் அவர்.
செல்வராணி மெதுவாக முறுவலித்தார். “உங்களுக்குப் பிடிக்காட்டி இப்பவும் கத்துவீங்கதான். என்ன, மற்ற ஆக்களுக்கு முன்னுக்குப் பேசாம தனியா கூப்பிட்டு வச்சு என்ன பிழை செய்தனான் எண்டு சொல்லி, நான் சொல்லுறதயும் கேப்பீங்க. அதால இப்ப நீங்க பேசினாலும் எனக்குக் கவலையா இருக்கிறேல்ல.” என்றுவிட்டு,
“ஆனா, ராதா மருமகளா வாறதுல உங்களுக்கும் விருப்பம் இருக்கு எண்டு தெரிஞ்சது எனக்கு. அதுதான் தைரியமா ரஜீவனிட்ட கேட்டனான்.” என்று தொடர்ந்து சொன்னார்.
வியப்புடன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் ராஜநாயகம். அவர்களுக்குள் மெல்லிய அன்னியோன்யம் ஒன்று வந்துவிட்டதுதான். என்றாலும் தன் மனத்தைப் படிக்கிற அளவுக்கு அது வளர்ந்திருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
“என்ன பாக்கிறீங்க? யாழி சொன்னதும் சோடிப்பொருத்தம் இருக்கா எண்டு நீங்க தம்பியையும் ராதாவையும்தான் மாறி மாறிப் பாத்தனீங்க. அதோட, ராதா விருப்பம் இல்லை எண்டு சொன்னதைக் கேட்டதும் உங்களுக்குக் கோபம் வந்திருக்கோணும். அதுவும் வரேல்ல. அப்பவே உங்களுக்கும் இதுல விருப்பம்தான் எண்டு நான் கண்டுபிடிச்சிட்டன்.” என்று சொன்ன மனைவியைத் தனக்குள் மெச்சிக்கொண்டார் ராஜநாயகம்.
“ரஜீவன விடவுமே ராதா அருமையான பிள்ளை. கடைய நல்லா பாப்பா. அதவிட எல்லாத்திலயும் கட் அண்ட் ரைட்தான். பொறுப்பும் இருக்கு பொறுமையும் இருக்கு. உன்ர சுடுதண்ணி மகன அந்தப் பிள்ள கட்டுக்க வச்சிருப்பா. இவனுக்குச் சத்தமே இல்லாம இவனை அடக்கிற ஒரு பிள்ளைதான் சரியாவும் வரும்.” என்று தன் மனத்தையும் பகிர்ந்துகொண்டார் அவர்.
செல்வராணிக்கு உண்மையிலேயே கணவரின் பேச்சு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. “நானும் அப்பிடித்தானப்பா நினைச்சன். ஆனா விருப்பம் இல்லை எண்டு அந்தப் பிள்ளை சொல்லிப்போட்டாவே. இவன் வேற சுடுதண்ணியா நிக்கிறான்.”
ராஜநாயகத்தின் சிந்தனையும் அதுதான். பழைய ராஜநாயகமாக இருந்திருக்க அந்த மறுப்பை பொருட்படுத்தியே இருக்கமாட்டார். இன்றைய மனிதரோ எப்படி இதை ஒப்பேற்றுவது என்று யோசித்தார்.
அதைவிட, அவருக்கும் மோகனனுக்கும் இடையில் மிகப்பெரிய பள்ளம் ஒன்று உருவாகிப்போயிருந்தது. அவன் பாதைமாறிப் போனதற்கு தன் அகம்பாவமும் மெத்தனமும் ஒரு காரணம் என்று உணர்ந்ததாலோ என்னவோ, அவனிடம் அவரால் எதையும் உரிமையாகச் சொல்லவோ கேட்கவோ முடிவதில்லை.
செல்வராணியும் எந்தவகையில் இதை முன்னெடுக்கலாம் என்று யோசித்தபடியே கண்ணயர்ந்துபோனார்.
ராஜீவன் யாழினி தம்பதியருக்குள் திருமணத்தின் பின்னான முதல் ஊடல். இருவருமே அதைக் கூடலாக்க முனையவில்லை. இவ்வளவு நேரமாகியும், தமக்கான தனியறைக்குள் வந்த பின்பும், அவள் மனமுடைந்து அழுததைப் பார்த்தும் சமாதானம் செய்ய வராத ரஜீவனின் செய்கை, அவளை இன்னுமே காயப்படுத்தியது.
அதுவே, அவன் கோபத்தையும் சொல்ல, அழுகை நின்று தன்பக்கத் தவறு என்ன என்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள்.
ரஜீவனின் சிந்தனைக்குள்ளோ தற்சமயம் யாழினி இல்லவே இல்லை. அந்தளவில் அவனுக்குள் அபாயச்சங்கு ஊதிக்கொண்டே இருந்தது.
ராதாவையும் வைத்து மோகனன் புகைப்படம் எடுத்த அன்றே காரணமறியாத கலக்கம் ஒன்று அவனுக்குள் உருவாகிப்போயிருந்தது. அப்போதே, ராதாவுக்கும் திருமணத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
இன்றோ, யாழினி யோசிக்காமல் சபையின் முன்னே அவனையும் ராதாவையும் இணைத்துப் பேசிவிட்டாள். ராதா மறுத்துவிட்ட போதிலும் பிரமிளாவுக்கும் அதில் விருப்பம் என்பதை அவளின் பேச்சிலேயே காட்டிவிட்டாள். அவனுடைய மாமியாரோ ஒரு படி மேலே வந்து அவனிடம் பெண்ணே கேட்டுவிட்டார்.
மோகனன் இடையில் புகுந்து பிரச்சனையை வேறு வடிவில் திருப்பியதால், அவன் பதில் சொல்லும் அவசியமற்றுப் போயிற்று. இல்லாமல் இருந்திருந்தால் என்ன சொல்லி மறுத்திருப்பான்?
அவனுடைய மாமனாருக்கும் விருப்பம்தான் என்பதை அவரின் அமைதியே காட்டிக்கொடுத்துவிட்டது. கௌசிகனுக்கு கூடப்பிறக்காத இன்னொரு தங்கைதான் ராதா. ஆக, அவனும் மறுப்பதற்குக் காரணமே இல்லை.
அப்படியிருக்க, கௌசிகன், பிரமிளா, செல்வராணி, ராஜநாயகம் இதில் யார் ஒருவராயினும், ‘சம்மதி ரஜீவன், மறுக்காதே’ என்று உரிமையோடு கேட்டுவிட்டால் அவனால் மறுக்கவே முடியாது.
விருப்பமில்லை என்று சொன்ன ராதாவைக்கூட சம்மதிக்க வைக்கிற பொறுப்பும் சேர்ந்து அவன் தலைக்கு வந்துவிடும்.
அவர்களைப் பொறுத்தவரை மோகனன் திருந்தியவன்; மாறிவிட்டான். ரஜீவனுக்கு அந்த நம்பிக்கையே இல்லை. மெலிதாகச் சீண்டிய அந்த நொடியிலேயே அவனுக்கும் யாழினிக்குமிடையில் சண்டையை மூட்டிவிட்டவன். திருமண மேடையில் வைத்தே கழுத்தை நெரிக்காத குறையாக மிரட்டியவன். அவனைப் போய் ராதாவுக்கா?
அதைவிட, ராதா அவள் பாவம் இல்லையா? இவனைப் போன்ற ஒரு முரடனோடு எப்படி வாழ்வாள்? குழந்தையின் கையில் அடுக்கிய பசிலை(puzzle) கொடுப்பதற்குச் சமன், இவனுக்கு ராதாவைக் கொடுப்பது.
அப்படியெல்லாம் நடப்பதற்கு முதல் அவன் முந்திக்கொள்ள வேண்டும். அவள் அவனுடைய தங்கையாக இருக்கிற வரைக்கும்தானே இந்தப் பேச்செல்லாம் வரும்? அவளை இன்னொருவனின் மனைவியாக்கிவிட்டால்? குறைந்த பட்சமாக இன்னொருவனின் எதிர்கால மனைவி என்கிற நிலையை உருவாக்கிவிட்டால் கூடப் போதுமே. தங்கை தப்பிவிடுவாளே.
அதைச் செய்துவிட மனம் பரபரத்தது. இப்படியொரு நிலையில் தன்னை நிறுத்திவிட்ட யாழினியின் மீது சினம்தான் எழுந்தது. வாயைத் திறந்தால் நிச்சயம் அது சண்டையில்தான் முடியும் என்பதில் இறுக்கிக் கண்களை மூடிக்கொண்டான்.
மனம் மட்டும் அவசரமாக ஒரு மாப்பிள்ளைக்கு எங்கே போவேன் என்று தேடி தேடிக் களைத்தது.
அடுத்தநாள் காலை எழுந்துவந்த செல்வராணிக்கு வீடே வெறிச்சோடிப் போனதுபோலொரு தோற்றம். பிரமிளாவின் நடமாட்டமில்லை. சின்னவர்களின் சத்தம் இல்லை. அவர்களை நேரத்துக்கே தயார் செய்துவிட வேண்டும் என்கிற பரபரப்பில்லை. பெரியவன் சாப்பிட வரப்போகிறான் என்கிற அவசரம் இல்லை.
என்னவோ மனம் சின்னவர்களைத் தேடியது. யாழினிக்கு ஒரு பிள்ளை பிறந்தபிறகு அவர்கள் தனியாகப் போயிருக்கலாம் என்று யோசித்தபடியே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.
காலை உணவை முடித்துக்கொண்டு யாழினி பல்கலைக்கும் ரஜீவன் வேலைக்கும் புறப்பட்டனர். இருவருக்குள்ளும் நிலவிய அமைதி, அவர்களுக்குள் என்னவோ சரியில்லை என்று செல்வராணிக்குச் சொல்லிற்று.
அப்போதுதான், தான் கேட்டதற்கு ரஜீவன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதை அவர் மனம் குறிப்பெடுத்தது. ராஜநாயகம் எப்போதும்போலக் கடைக்குப் புறப்பட்டிருந்தார். இவன் இன்னும் என்ன செய்கிறான் என்று மோகனனைப் பற்றி அவர் யோசித்துக்கொண்டு இருக்கையிலேயே, வெளியே செல்லத் தயாராகி சமையலறைக்கே வந்தான் அவன்.
“டீ தரவாய்யா?” இனி வெளிநாடு போகமாட்டேன் என்றதும், குசினிவரை வருகிற அவனுடைய மாற்றமும் அவர் மனத்தை நெகிழ்த்தியிருந்ததில் வாஞ்சையோடு வினவினார்.


