“உங்களுக்கும் சேத்து நானே போடுறன். நீங்க இஞ்சால வாங்கோ.” என்றவன், தண்ணீரைக் கொதிக்க வைத்துவிட்டு, கோப்பைகளை எடுத்து வைத்துத் தேநீரை ஆற்றும் அழகைச் சற்றுநேரம் ரசித்துப் பார்த்தார்.
“அப்பிடி என்னம்மா பாக்கிறீங்க?” கவனம் கைவேலையில் இருந்தாலும் சிறு சிரிப்புடன் வினவினான் அவன்.
“இதெல்லாம் செய்றது நீயா எண்டு நம்பேலாமா இருக்கப்பு. சந்தோசமாவும் இருக்கு.” என்று நெகிழ்ந்த குரலில் சொன்னார் அவர்.
“நம்பேலாமா இருக்கு எண்டா கிள்ளிப் பாருங்கோவன்.” அவர் புறமாகக் கையை நீட்டியபடி சொன்னான் அவன்.
செல்ல முறைப்புடன் அந்தக் கையில் ஒரு அடியைப் போட்டார் செல்வராணி. “போ தம்பி! அம்மாக்குச் சந்தோசமா இருக்கு எண்டு சொல்லுறன். உனக்கு அது பகிடியா இருக்கு என்ன?”
அதே இலகுத் தன்மையோடு, “அதுதான் இனி சவுதிக்குப் போகமாட்டன் எண்டு சொல்லிட்டியே தம்பி. அப்ப ராதாவ உனக்குப் பேசட்டுமா?” என்று நயந்த குரலில் வினவினார்.
“அம்மா!” என்றான் மோகனன் நொடியில் பொறுமையை இழந்துவிட்ட குரலில். “எப்ப பாத்தாலும் இதையே கதைப்பீங்களா? எரிச்சலா இருக்கு. இவ்வளவு நாளும் இஞ்ச இருக்கிற ஐடியா மருந்துக்கும் இல்ல. அதால எதைப் பற்றியும் யோசிக்கேல்ல. ஆனா இனி என்ன தொழில் செய்றது, எதிர்காலம் என்ன எண்டு யோசிக்கோணும். அதுக்கான வேலைகளைப் பாக்கோணும். இப்ப வந்து கலியாணம் அது இது எண்டு அரியண்டம்(தொல்லை) தராதீங்க. கொஞ்சம் என்னை என்ர பாட்டுக்கு விடுங்க.” என்றான் இறுக்கம் நிறைந்த குரலில்.
“இதென்ன கதை கதைக்கிறாய்? எங்கட கடை இருக்க நீ ஏன் வேற தொழில் செய்ய நினைக்கிற? அண்ணா அது உனக்குத்தான் எண்டு எப்பவோ சொல்லிப்போட்டான். அப்பாக்கும் அதுதான் விருப்பம். யாழிக்குத் தேவைக்கு மேலயே சீதனம் குடுத்தாச்சு. பிறகு என்ன?” என்று கேட்டார் அவர்.
அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தேநீரை ஊற்றி அவருடையதை அவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடையதைப் பருகினான் அவன்.
“என்ன தம்பி? என்ன யோசிக்கிறாய் எண்டு வாயைத் திறந்து சொல்லன்?” அவருக்கு அவனுடைய அமைதி காரணமில்லாக் கலக்கத்தை உண்டாக்கிற்று.
“இப்போதைக்கு எதுவும் என்னட்டக் கேக்காதீங்க. கொஞ்ச நாள் பொறுங்க பாப்பம்.”
“சரி, அத விடு. கலியாணமும் இப்ப நீ செய்ய வேண்டாம். ஆனா ராதா, அவள் அருமையான பிள்ளை. உனக்கும் அவளுக்கும் பேசி, ஒரு நிச்சயம் மாதிரி செய்துவிட்டா, பிறகு நீ எப்ப சொல்லுறியோ அப்ப கலியாணத்தைச் செய்றது தானேய்யா.”
“அந்தப் பெட்டையே(பெண்ணே) எல்லாருக்கும் முன்னுக்கும் என்னைப் பிடிக்கேல்ல எண்டு சொல்லிட்டா. பிறகும் என்னத்துக்கு அவவைப் பற்றியே கதைக்கிறீங்க?” மெல்லிய சினத்துடன் திருப்பிக் கேட்டான் அவன்.
“அவளை ஓம் எண்டு சொல்ல வைக்கிறது எங்கட பொறுப்பு. அதைப் பற்றி நீ ஏன் யோசிக்கிறாய்? உன்ர விருப்பத்தைச் சொல்லு. ராதாவைப் பிடிச்சிருக்குத்தானே?” அவர் அவனை விடுவதாக இல்லை.
அவனை எதிர்கொள்கையில் அவளின் பார்வைகளும், அதில் தெரியும் வெறுப்பும் அவன் மனத்திரையில் மின்னி மறைந்தன. கூடவே, ரஜீவன் இதற்குச் சம்மதிக்கவே மாட்டான் என்றும் தெரியும். அப்படியே அவளைச் சம்மதிக்க வைப்பது இவர்களின் பொறுப்பு என்றால், மறைமுகமாக அவளிடம் பேசி, வற்புறுத்தி, சம்மதம் வாங்கப் போகிறார்கள்.
அந்த வேதனை எதற்கு அவளுக்கு? நேற்றைய அவளின் கலக்கம் நிறைந்த முகம் வேறு கண்முன்னே வந்து போனது. மனம் இதையெல்லாம் அலசியபோதும், அன்னையின் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல் மௌனமாகவே டீயைப் பருகினான் அவன்.
அதுவே, அவனுக்கும் அவளைப் பிடித்திருக்கிறதோ என்கிற கேள்வியை அவருக்குள் விதைத்தது. அதில், “அவளும் டீச்சர் அப்பு. அருமையான பிள்ளை. வடிவுக்கும் குறையில்ல. குணத்திலையும் உன்ர அண்ணி மாதிரித்தான். அப்பாவும் இது சரிவந்தா சந்தோசம் எண்டுதான் சொன்னவர். ஓம் எண்டு சொல்லய்யா. அண்ணாவை மாதிரி உனக்கும் சந்தோசமான வாழ்க்கை அமையும்.” என்று ஆசை காட்டினார்.
“ப்ச்! விடுங்கம்மா. வேண்டாம் எண்டு சொன்ன பிள்ளையை வற்புறுத்தாதீங்க.” என்றான் அவன் காரணமறியா எரிச்சலுடன்.
“அப்ப அவள் ஓம் எண்டு சொன்னா உனக்கு ஓகேதானே?”
அவர் அவனை விடுவதாகவே இல்லை. அது கொடுத்த எரிச்சலில், “இல்லை அம்மா. எனக்கு விருப்பம் இல்ல. இனி இதைப் பற்றிக் கதைக்காதீங்க!” என்று சிடுசிடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
*****
கல்லூரிக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள் ராதா. இரவிரவாக உறக்கமே இல்லை. யாழினி கேட்டதைவிடவும் செல்வராணி கேட்டாராம் என்று தமையன் சொன்னதுதான் அச்சமூட்டிக்கொண்டிருந்தது.
அவளும் பல்கலைக்குச் சென்றதிலிருந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இங்கே வசிக்கவில்லை. விடுமுறைகளின்போது மட்டும்தான் வந்துபோனாள். இனி அம்மா அண்ணாவோடு சொந்த ஊரிலேயே இருப்போம் என்றுதான் இங்கே வந்தாள். இப்போதோ, பேசாமல் கண்டியிலேயே தொடர்ந்து வேலை பார்த்திருக்கலாமோ என்று ஓடியது.
வேறு யாரும் என்றால் தன் மறுப்பில் அவளால் உறுதியாக இருந்துவிட முடியும். இங்கே அப்படியன்று! அன்பும் பாசமும் அவளை முடக்கியது.
நேற்றைய அவளின் பேச்சே மதிப்பற்ற செயல்தான். அப்படி வெடுக்கென்று சொல்லியிருக்கக் கூடாது. தன்னை மீறிச் சொல்லிவிட்டுத்தான் பொறுமையாகக் கையாண்டிருக்கலாமோ என்று நினைத்தாள்.
ஆனால், அவளின் மௌனமே சம்மதத்தின் சமிக்சையாகிவிடுமோ என்று பயந்துபோனாள்.
அன்னை பரிமளாவிடம் சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டபோது அவருமே கலங்கிப்போனார். மகன் அவர்கள் வீட்டுப் பெண்ணைக் கட்டியிருந்தாலும் கூட இன்னுமே அவரால் அவர்களோடு ஒன்றாகக் கலந்து பழக முடிவதில்லை.
ஒருவிதப் பயமும் விலகளும் இருந்துகொண்டேதான் இருந்தன. அதுவும் அந்த மோகனன் அவனின் உருவமே பயமூட்டுவதாக இருக்க, அவனுக்கு அவரின் மகளா? அவனின் உக்கிர முகத்தைப் பார்த்தவராயிற்றே.
“இனி என்னம்மா செய்றது? அண்ணா என்ன சொன்னவன்?” என்று கவலையோடு விசாரித்தார்.
“அவர் இன்னும் ஒண்டும் சொல்லேல்லை அம்மா. வேல முடிஞ்சு இஞ்ச வருவார் எண்டு நினைக்கிறன். அப்ப கேப்பம். நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்க. கௌசிகன் அண்ணா முந்தி மாதிரி இல்ல. நான் இண்டைக்குப் பிரமிளா அக்காவோட கதைக்கப்போறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டவள் கல்லூரி முடிந்ததும் நேராகப் பிரமிளாவிடமே சென்று நின்றாள்.
“அக்கா, சொறி. நேற்று நான் எல்லாருக்கும் முன்னால வச்சு அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. பிறகு பொறுமையா சொல்லியிருக்கலாம். ஆனா, என்ர அமைதியே எனக்கும் இதில விருப்பம் எண்டு நினைக்க வச்சிடுமோ எண்டு பயந்திட்டன்.” என்றாள் கண்களில் பெரும் கலக்கத்தோடு.
பிரமிளாவுக்கு அவளின் உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடிந்தது. அதில், “அதுக்கு ஏன் சொறி சொல்லுறாய்? யாழி தன்ர விருப்பத்தைச் சொன்னமாதிரி, நீ உன்ர முடிவைச் சொல்லியிருக்கிறாய். அவ்வளவுதான். அதைப் பற்றி யோசிக்காத. ஆனா, உண்மைய சொல்லு, உனக்கு ஏன் விருப்பம் இல்ல? அவன் முந்திச் செய்த பிழைகளை யோசிக்கிறியா?” என்று தன்மையான குரலில் வினவினாள்.
அவளின் அந்த அணுகுமுறை மனத்துக்குள் இருந்து குமுறும் அனைத்தையும் கொட்டிவிடத் தூண்டியது. ஆனால், அதுவே அவள் கடந்து வந்துவிட்டவற்றை மீண்டும் நினைவூட்டுவதாக இருந்துவிடுமோ, அவளை நோகடித்துவிடுமோ என்று எண்ணித் தயங்கினாள் ராதா.
அவளைப் படித்தவள் போன்று, “எதைப் பற்றியும் யோசிக்காம வெளிப்படையா கதை ராதா.” என்று ஊக்கினாள் பிரமிளா.
அதுதான் சரி என்று ராதாவுக்கும் தோன்றியதில், “அது அக்கா, என்னால இன்னுமே பழசை எல்லாம் மறக்கேலாம இருக்கு. ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைகளக் கேவலப்படுத்தி இருக்கிறார். அண்ணா அவரிட்ட அடிவாங்கி வந்து விழுந்துகிடந்த கோலம் இன்னும் கண்ணுக்கையே நிக்குது. என்னதான் கோபம் எண்டாலும் சக மனுசன இந்தளவுக்கு அடிக்கேலுமா? அப்பிடி அடிக்கிற ஒரு ஆளின்ர(ஆளின்) மனம் எந்தளவுக்குக் கடினமானதா இருக்கும், சொல்லுங்கோ? இண்டைக்கு அவர் திருந்தி இருந்தாலும் ஒருத்தரின்ர அடிப்படைக் குணம் மாறுமா? இல்லைதானே?” என்றவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவள் முடிக்கிறவரை காத்திருந்தாள் பிரமிளா.
“இது எல்லாத்தையும் விட, எனக்கு அவரைப் பிடிக்கவே இல்ல. என்னால அவரோட சாதாரணமா கதைக்கவே ஏலாது. அவர், அவரின்ர தோற்றம், அவரின்ர இயல்பு எதுவுமே எனக்கு ஒத்துவராது அக்கா. எனக்கு எளிமையான, நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கைதான் வேணும். அதுதான்… நீங்க ஆராவது கேட்டா என்னால மறுக்கேலாது. நீங்க கேட்டுப் பிடிக்காத வாழ்க்கைக்க போகவேண்டிய கட்டாயம் வந்திடுமோ எண்டு பயமா இருக்கு அக்கா.” என்றவளுக்கு அதற்குமேல் முடியாமல் தொண்டைக்குள் எதுவோ வந்து அழுத்தியது.
அவளின் கலக்கத்தையும், பிடிக்காத வாழ்க்கைக்குள் தள்ளிவிடுவார்களோ என்கிற அச்சத்தையும் பார்த்த பிரமிளாவுக்கு, ஒரு காலத்தில் கலங்கித் தவித்த தன்னையே பார்ப்பது போலிருந்தது. அவள் மனதும் கலங்கிப்போயிற்று. அதோடு, இந்தளவு தூரத்துக்கு விருப்பமே இல்லை என்று சொல்கிறவளை வற்புறுத்துவதும் நியாயமாகாதே.
அதில், “உனக்கு விருப்பம் இல்லாத எதுவும் நடக்காது ராதா. நான் மாமியோட கதைக்கிறன். இனி ஆரும் இதைப் பற்றி உன்னட்டக் கதைக்காயினம்(கதைக்க மாட்டார்கள்), சரியா? சின்ன ஆக்கள் பாக்கினம் பார். அழுறதை விட்டுட்டுப் போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா. நான் சாப்பிட ஏதாவது கொண்டுவாறன்.” என்று, அவளைக் குளியலறைக்குள் அனுப்பிவிட்டுக் குசினிக்கு நடந்தாள்.
உண்ணவும் அருந்தவும் கொடுத்து, சற்றுநேரம் சின்னவர்களோடு விளையாடவிட்டு அவளை ஆசுவாசமாக்கிய பிறகே அனுப்பிவைத்தாள்.


