‘அண்ணா பிளீஸ், அவசரமா பிள்ளையார் கோயிலடிக்கு வாங்கோ. என்ர அண்ணா பொம்பிளை பாக்க மாப்பிள்ளை வீட்டு ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். எனக்கு இதுல விருப்பம் இல்ல. பிளீஸ் அவசரம்.’ ராதா எழுதி அனுப்பி இருந்ததைச் சத்தமாகவே வாசித்த கௌசிகனின் புருவங்கள் சுருங்கிற்று.
ஒரு பெடியனைப் பார்த்து, அந்தக் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, குறிப்புப் பார்த்துப் பொருத்தம் என்று அறிந்த பிறகுதான் பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும்.
இதெல்லாம் ஒரு நாளில் நடந்திருக்கப் போவதில்லை. அப்படியிருக்க இதைப் பற்றி ரஜீவன் ஒரு வார்த்தை கூடச் சொல்லவே இல்லையே. சொல்லவேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால், சொல்லாமல் விடவேண்டிய அவசியம் ஏன் வந்தது?
யாழினிக்கும் தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா? இல்லை என்று நிச்சயமாக நம்பினான். இவ்வளவு பெரிய விடயத்தை அவன் தங்கை சொல்லாமல் இருந்திருக்க மாட்டாள்.
அப்படியானால் யாழினிக்கும் தெரியாமல்தான் இத்தனையையும் செய்தானா ரஜீவன்? அந்தளவில் ரகசியம் காக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அவன் முகம் இறுகிற்று.
அவனின் சிந்தனைகளுக்கு மாறாக மோகனனுக்குள் ஒருவித எரிச்சல் பரவிற்று. “பிடிக்காட்டி முதலே வாயைத் திறந்து சொல்லவேண்டியதுதானே, அண்ணா. அத விட்டுட்டு என்னத்துக்கு உங்களுக்கு மெசேஜ் அனுப்போணும்? அங்க ஒருத்தன வரச் சொல்லிப்போட்டுக் கடைசி நேரத்தில இது என்ன சிறுபிள்ளை விளையாட்டு?” என்று சினந்தான்.
கௌசிகனுக்கும் அதே கேள்விதான். “அவன் எங்களுக்கு இதைப் பற்றி ஒண்டுமே சொல்லேல்ல. அதேமாதிரி அவளுக்கும் முதலே தெரியாதோ என்னவோ. முதல் வா, என்ன எண்டு பாத்துக்கொண்டு வருவம்.” என்று மோகனனின் காரிலேயே இருவரும் புறப்பட்டனர்.
“தெரியாமையா அண்ணா கோயிலுக்குப் போயிருக்கப் போறா?” பிடிக்காவிட்டால் இவள் ஏன் போனாள் என்பதிலேயே நின்றான் மோகனன்.
“என்ன நடந்தது எண்டு அங்க போனா தெரியவரும்தானே. ஆனாடா, உன்னத்தான் வேண்டாம் எண்டு சொன்னாள் எண்டு பாத்தா, இதையும் வேண்டாமாம். வயதும் சரிதானே. ஒரு கலியாணத்தைக் கட்டிட்டாள் எண்டா அவனுக்கும் பொறுப்பு முடிஞ்சிடும்தானே.” என்று அங்கலாய்த்தான் கௌசிகன்.
“அதுக்காக ஆர் எண்டில்லாம கட்ட ஏலுமா அண்ணா. மனதுக்குப் பிடிக்க வேண்டாமா? இந்த மாப்பிள்ளையையும் பிடிக்கேல்ல போல.” வீதியில் ஏற்றிய காரின் வேகத்தைக் கூட்டியபடி சொன்னான் அவன்.
“உன்னக் கட்டி வச்சிடுவமோ எண்டுற பயத்தில ரமிட்ட வந்து அழுதிட்டுப் போனவளுக்காக நீ இவ்வளவு யோசிக்கிறியே. அவள் பேசாம உன்னையே கட்டலாம். ஆனா அவளுக்கு உன்னப் பிடிக்கவே இல்லையாம். நீ வேற, பிள்ளை பிடிக்கிற கொள்ளைக்காரன் மாதிரி இருந்தா ஆருக்குத்தான்டா பிடிக்கும்? முதல் இந்தக் கை, கழுத்தில தொங்குறதையாவது தூக்கி எறி! கன்றாவி ”என்று கடுகடுத்தான் கௌசிகன்.
தமையனின் பேச்சில் சிரிப்பு அரும்ப, “மிதுக்குட்டிய மறந்திட்டுக் கதைக்காதீங்க அண்ணா.” என்றுவிட்டு, “அதுதான் எல்லாருக்கும் முன்னுக்கு விருப்பம் இல்லை எண்டு சொல்லிட்டாதானே. நானும் அம்மாட்ட வேண்டாம் எண்டு சொல்லிட்டனே. பிறகும் ஏன் அண்ணிட்ட வந்து அழுதவா?” என்று விசாரித்தான்.
“உனக்கு அம்மா சொல்லேல்லையா?” என்று கேட்டுவிட்டு, தமையன் சொன்னவற்றைக் கேட்டவன் வாய்விட்டுச் சிரித்தான்.
“கெட்டிக்காரிதான் அண்ணா. அண்ணியச் சமாளிச்சா மொத்த வீட்டையும் சமாளிச்சத்துக்குச் சமன் எண்டு தெரிஞ்சு காய் நகர்த்தியிருக்கு ஆள். அண்ணிக்கும் அவவை(அவளை) விளங்கும் எல்லோ. இதே சிட்டுவேஷன அண்ணியும் கடந்து வந்தவாதானே. என்ன, அதுல அந்த வில்லன் வற்புறுத்தி அண்ணியக் கட்டி இருப்பார். இஞ்ச ஹீரோ வேண்டாம் எண்டு சொல்லியும் கதை இப்பிடிப் போகுது.” என்றான் அடக்கமுடியாத நகைப்பை குரலில் காட்டியபடி.
கௌசிகனுக்கும் முகம் முழுக்கச் சிரிப்பு. “டேய் என்னடா? போகிற போக்கில என்னையே போட்டுத் தாக்கிறாய். இதுல நான் உனக்கு வில்லனோ?” என்று அதட்டினான்.
“அண்ணிக்கு ஆரம்பத்துல நீங்க கொடூர வில்லன்தானே.”
“டேய்! இப்பிடிச் சொல்லாதடா. நீ சொல்லுறதக் கேக்க எனக்கே ஒரு மாதிரி இருக்கு.” என்ற தமையனைப் பார்த்து வாய்விட்டே நகைத்தான் மோகனன்.
கௌசிகனுக்கும் அந்தநாள் நினைவுகள் நினைவு வந்தன. “பாவமடா. அந்தக் கேச வாபஸ் வாங்கின அண்டு(அன்று) என்னைப் பாத்தாளே ஒரு பார்வை. அம்மாடி!” என்றவன் இப்போதும் அதை மறக்க நினைக்கிறவனாகத் தலையை உலுக்கிக்கொண்டான்.
“முறைச்சு முறைச்சே கவுத்திட்டாள். ஆனா அதுக்காக உன்ன ஹீரோ எண்டு சொன்ன பாத்தியா. நீ எமகாதகன்டா!” என்று சிரித்தான்.
“ஆனா, இப்ப நான்தான்டா அவளுக்கு ஹீரோ.” என்றான் தன் டீச்சரம்மாவின் இனிய நினைவுகளில் திளைத்தபடி.
“வேற வழி?” என்று கேட்டு அதற்கும் சிரித்தான் மோகனன்.
இருவருக்குமே மனம் சற்றே இலகுவாயிற்று. இப்படி ஒரு இலகுத்தன்மை இதற்குமுதல் அவர்களுக்குள் இருந்ததே இல்லை. மனத்துக்கு நன்றாய் இருந்தது.
“அவள் எல்லாருக்கும் முன்னுக்கும் முகத்தில அடிச்ச மாதிரி வேண்டாம் எண்டு சொன்னவள். உனக்குக் கோபம் வரேல்லையாடா?” தம்பியின் குணத்தை அறிந்திருந்த கௌசிகன் திடீர் என்று கேட்டான்.
“இல்லையே.” என்றவனுக்கும் உள்ளூர வியப்புதான்.
சின்ன அவமானத்தைக் கூடப் பொறுக்க முடியாதவன். மெலிதாகச் சீண்டினாலே மொத்தமாக அடித்துச் சாய்க்கும் அளவுக்குக் கோபம் அல்ல வெறியே வரும்.
அவளோ அவனின் சொந்தங்களின் முன்னாலேயே வைத்து அவனை வேண்டாம் என்று சொன்னவள். அவள் மீது கோபம் வரவே இல்லையே.
உண்மையைச் சொல்லப்போனால் இப்போது தமையன் சொன்னவற்றைக் கேட்டபோது கூட அவளின் அந்தப் புத்தி சாதுர்யம் அவனுடைய ரசனைக்குரியதாகத்தான் இருந்தது. கோபம் மருந்துக்கும் வரவில்லை.
‘கெட்டிக்காரி!’ என்று உதட்டில் பூத்திருந்த சிரிப்புடன் மெச்சிக்கொண்டான்.
கோயிலுக்கு முன்னிருந்த மர நிழலின் கீழ் இவன் காரை நிறுத்தும்போதே, இவர்களை நோக்கி ஓடிவராத குறையாக வேகமாக வந்தாள் ராதா.
யாரின் கார், அதை யார் ஓட்டி வருகிறார்கள் என்றெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. டிரைவரின் பக்கத்துக் கதவு திறக்கவும், அருகில் ஓடிவந்து, “அண்ணா, எனக்கு ஒண்டும் தெரியாது. பள்ளிக்கூடத்தால வந்த என்னை, வா கோயிலுக்குப் போயிட்டு…” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் அந்தப் பக்கத்திலிருந்து இறங்கியவனைக் கண்டு திகைத்து, இரண்டடி பின் நகர்ந்து நின்றாள்.
“அண்ணா அந்தப் பக்கம்…” என்று கையைக் காட்டியவனின் கவனம் முழுவதும் அவள் முகத்தில்தான் இருந்தது.
எப்போதுமே இவனை வெறுப்புடன் நோக்கும் அவள் இன்று இவனைக் கவனிக்கும் நிலையிலேயே இல்லை. கலங்கிப் போயிருந்தாள். கல்லூரிக்குச் சென்றுவந்த களைப்பும் சேர்ந்து அவள் முகம் இன்னுமே வாடிப்போயிருந்தது. தலை கலைந்திருந்தது. தன் தோற்றத்தைக் கவனிக்கும் நிலையிலும் அவள் இல்லை.
அந்தப் பக்கமிருந்து இறங்கிய கௌசிகனிடம் விரைந்தாள்.
“எனக்கு விருப்பம் இல்லை எண்டு எவ்வளவோ சொல்லீட்டன் அண்ணா. கேக்கிறாரே இல்ல. எனக்கு நல்லதுக்குத்தான் செய்றாராம், ஓம் எண்டு சொல்லட்டாம் எண்டு சொல்லுறார். சும்மா வந்து அந்தப் பெடியனப் பாத்திட்டுப் போகட்டாம். விருப்பம் இல்லாம எப்பிடி அண்ணா? நீங்க சொன்னா என்ர அண்ணா கேப்பார். இது வேண்டாம் எண்டு சொல்லுங்கோ அண்ணா, பிளீஸ்.” தன் கையறு நிலையை எண்ணிக் கலங்கிய விழிகளுடன் பரிதவித்தாள் அவள்.


