குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டிருந்தான் ரஜீவன். மொத்த வீடுமே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருந்தது.
யாழினியால் நம்பவே முடியவில்லை. அவளுடைய ரஜீவனா அவளிடம் ஒன்றை மறைத்தான்? எதற்காக? தினம்தோறும் அவளோடு கதைத்து, பேசி, சிரித்து, கொஞ்சி, மகிழ்ந்து, கூடவே இருந்தவன் இவ்வளவு பெரிய காரியத்தை மறைத்திருக்கிறான் என்றால் அவள் யார் அவனுக்கு?
பத்து வருடத்துக் காதல் ஒற்றை நொடியில் ஒன்றுமே இல்லாமல் போனதுபோல் உணர்ந்தவளுக்கு நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
பெரிய தமையனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தினால் கொந்தளித்த மனதையும் வாயையும் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டு நின்றாள்.
செல்வராணி கூட ரஜீவனிடமிருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை. ராதாவைத் தவிர்த்து இன்னொருத்தியை சின்ன மகனின் மனைவியாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாதபோதும், அவள் பிரமிளாவிடம் வந்து அழுதபிறகு அதைப் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை.
‘நான் வாய்விட்டுக் கேட்டும் ரஜீவன் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே’ என்கிற வருத்தம் மனத்தில் இருந்தாலும், அதை அவனிடம் அவர் காட்டிக்கொள்ளவில்லை.
அப்படியிருக்க, ஒரே வீட்டிலேயே இருந்துகொண்டு, பெற்ற மகனுக்கு ஒப்பாக அவர்களோடு புலங்கியவன், இப்படி மறைவில் ஒரு காரியத்தை எப்படிச் செய்தான்? அப்படியென்றால் அவன் அவர்களோடு மனத்திலிருந்து பழகவில்லை என்றுதானே பொருளாகிறது? அன்னையைப் போல் அவனைக் கவனித்துக்கொண்ட அவர் உள்ளம் பெரிதாக அடிவாங்கிற்று.
எல்லோரின் முன்னும் குற்றவாளி போன்று நிற்கும் தமையனைக் கண்டு கலங்கி நின்றாள் ராதா.
சற்றும் எதிர்பாராமல் உருவாகிப்போன நெருக்கடியான நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தடுமாறி, அவளின் கையை மீறி எதுவும் நடந்துவிடுமோ என்று பயந்து, எவ்வளவோ கெஞ்சியும் கேட்கமாட்டேன் என்று நின்ற தமையனைச் சமாளிக்க முடியாமல், அவசரப்பட்டுக் கௌசிகனுக்கு அழைத்திருந்தாள்.
அது இப்படி ஒரு திசையில் திரும்பும் என்று எண்ணியே பார்க்கவில்லை.
எதையாவது சொல்லிச் சமாளிப்போம் என்றால் கௌசிகனின் கோப முகம் வாயைத் திறக்க விடமாட்டேன் என்றது. அவளை அறியாமலேயே அவளின் விழிகள் சுழன்று மோகனனைத் தேடின.
இங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் சோபாவில் கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தான் அவன்.
தலைக்குச் சிக்சேக் பேண்ட்(zigzag band) ஒன்றைப் போட்டு, தாடியைப் பின்னி பேண்டில் அடக்கியிருந்தான். மீசை வாய் மீதே படுத்துக் கிடந்தது. கண்களை மூடித் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். கழுத்து, கை எல்லாம் ருத்திராட்சைகளால் நிறைந்து வழிந்தது.
‘இவன் ஒருத்தன் எப்ப பாத்தாலும் அரை லூசு மாதிரி.’ எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
இப்படி எல்லோர் மனநிலையும் ஒவ்வொன்றாக இருக்க, “சொல்லு ரஜீவன், யாழிக்குக் கூடத் தெரியாம ராதாக்கு மாப்பிள்ளை பாக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று நிதானமாக விசாரித்தான் கௌசிகன்.
அதுவே, ரஜீவனைப் பயமுறுத்த, “மறைக்க நினைக்கேல்ல அத்தான். எல்லாம் சரிவந்த பிறகு சொல்லுவம் எண்டு நினைச்சன்.” என்றான் தயக்கத்துடன்.
“அதுதான் ஏன்? முதலே சொன்னா என்ன நடந்திடும் எண்டு சொல்லாம விட்டனி? நானும் சேர்ந்து விசாரிச்சு இருப்பன். இல்ல, இன்னும் நல்ல மாப்பிள்ளையா பார்த்திருக்கலாம். ராதாக்குக் கூடச் சொல்லாமக் கொள்ளாமக் கூப்பிட்டுக் காட்டுற நிலமை ஏன் வந்தது?”
அவனுடைய தீர்க்கம் நிறைந்த கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறினான் ரஜீவன்.
“மோகனனுக்கும் ராதாக்கும் நடந்த கலியாணப் பேச்சு காரணமா?” என்றான் கண்களில் கூர்மையுடன்.
“இல்ல இல்ல. அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” பதற்றத்துடன் பார்வை மோகனனிடம் சென்றுவர அவசரமாகச் சொன்னான்.
அவ்வளவு நேரமாகக் கண்களை மூடிக்கொண்டிருந்த மோகனன் விழிகளைத் திறந்து ரஜீவனைக் கூர்ந்தான். தலையில் கிடந்த பேண்டை எடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை தள்ளிவிட்டான்.
ரஜீவனுக்கோ பதற ஆரம்பித்தது. ஒரேயொரு தங்கை. அவளை நல்லவன் ஒருவனின் கையில் பிடித்துக் கொடுத்துவிடுவதற்குள் அவன் அரையுயிர் ஆகிவிடுவான் போலவே. எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாமல் திணறினான்.
“அவள் உன்ர தங்கச்சி. அவளுக்குக் கலியாணம் பேசுறது உன்ர சொந்தப் பிரச்சினை. அதுல தலையிடுற உரிமை எங்களுக்கு இல்லை எண்டு சொல்லு, இதைப் பற்றி நான் கதைக்கவே இல்ல” என்றான் கௌசிகன் ஒருவித அழுத்தத்துடன்.
“அண்ணா…”
“அத்தான்…” என்று பதறினர் அண்ணனும் தங்கையும்.
“உங்களை நான் பிறத்தியா நினைக்கவே இல்ல. அதுதான், ஒரு பிரச்சனை எண்டதும் உங்களைக் கூப்பிட்டனான். அதால இப்பிடிக் கதைக்காதீங்கோ அண்ணா, பிளீஸ்!” என்றாள் ராதா கெஞ்சலாக.
ரஜீவனுக்குமே மனதுக்குக் கஷ்டமாகிப் போனது. அவனுக்குத் தான் செய்வது தவறு என்று முதலே தெரியாமல் இல்லை. மோகனனால் உண்டான பயம்தான் இப்படியெல்லாம் நடக்க வைத்தது.
ஒரு தங்கையின் அண்ணனாக, அவளின் நல்வாழ்வுக்காக என்று மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, தனக்குக் கெட்டபெயர் வந்தாலும் பரவாயில்லை என்றுதான் அனைத்தையும் செய்தான்.
ஆனால், கௌசிகன் அவனுடைய ஆஸ்தான நாயகன்; வழிகாட்டி; மரியாதைக்குரியவன். அவனைக் காயப்படுத்தியது சுட்டது.
அதில், வேகமாகக் கௌசிகனின் அருகில் வந்தான். “அத்தான் பிளீஸ், நான் சொல்லாம விட்டதும் மறைச்சதும் பிழைதான். அதுக்காக உங்களை ஆரோவா நினைச்சேன் எண்டு மட்டும் நினைக்காதீங்கோ. ராதா கலியாணம் இப்ப வேண்டாம் எண்டு நிக்கிறாள். யாழிட்டச் சொன்னாளோ உங்களிட்டச் சொன்னாளோ ராதான்ர சம்மதம் இல்லாம இதைச் செய்ய விடமாட்டீங்க. அதுதான் எப்பிடியாவது அவளைச் சம்மதிக்க வச்சிட்டா, பிறகு உங்களிட்டச் சொல்லலாம் எண்டு நினைச்சன். வேற ஒண்டுமில்ல.” என்றான் அவசர தொனியில்.


