கௌசிகனுக்கு அவன் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், பொருந்திப்போவது போலொரு காரணத்தைச் சொல்கையில் அதற்குமேல் அதைத் தூண்டித் துருவவும் பிடிக்கவில்லை.
சிலவற்றை ஆராயாமல் அப்படியே கடப்பதே உறவுகள் உடையாமல் இருக்கச் சிறப்பான முடிவு என்று எண்ணினான்.
அதுவரை நேரமும் பெரும்பாடுபட்டுப் பொறுத்திருந்த யாழினி இப்போது ரஜீவனின் பேச்சை மிக உறுதியாகவும் வேகமாகவும் மறுத்தாள்.
“உங்கள் வரையில இவர் சொன்ன காரணம் வேணுமெண்டா சரியா இருக்கலாம் அண்ணா. ஆனா, நான் அவரின்ர வைஃப். இதுதான் யாழி பிரச்சினை, எல்லாம் சரியா நடக்கிற வரைக்கும் ராதாட்ட ஒண்டும் சொல்லாத எண்டு இவர் சொல்லியிருந்தா, நிச்சயமா நான் அதைப் பற்றி ராதாட்ட வாயே திறந்திருக்க மாட்டன். அது அவருக்கும் தெரியும். ராதா நல்லாருக்கோணும் எண்டுற ஆசை எனக்கும் இருக்கு. தெரிஞ்சிருந்தும் சொல்லேல்லை எண்டா வேற என்னவோ காரணம் இருக்கோணும்.” என்றவள் ரஜீவனின் முன்னால் வந்து நின்றாள்.
“அது என்ன காரணம் ரஜீவன்? அம்மா கலியாணப் பேச்ச ஆரம்பிக்க முதல் ஓடிப்போய் அண்ணியோட கதைச்சு, அந்தப் பேச்சையே ராதா நிப்பாட்டின மாதிரி, சின்னண்ணா ஏதும் செய்ய முதல் அவளுக்கு ஒரு கலியாணத்தை முடிச்சிவிடுவோம் எண்டு நினைச்சீங்களா? இல்லாம நீங்க என்னட்ட மறைக்க வேண்டிய அவசியமே இல்லையே.” என்றதும் திகைத்து நின்றான் ராஜீவின்.
“எனக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிறது பத்து வருச காதல் ரஜீவன். என்னைப் பற்றி உங்களுக்கும் உங்களைப் பற்றி எனக்கும் நல்லா தெரியும். அண்ணாட்ட சொன்ன மாதிரி நொண்டிச்சாட்டு எனக்குச் சொல்லாதீங்க. உண்மையச் சொல்லுங்க. ராதாக்கும் சின்னண்ணாக்கும் கலியாணம் நடந்தா நல்லாருக்கும் எண்டு முதன் முதலா ஆசைப்பட்டவள் நான்தான். அதால, இத நீங்க எனக்குச் சொன்னா நான் வீட்டில சொல்லிச் சின்னண்ணாக்கு ராதாவப் பேசிடுவன் எண்டு பயந்தீங்களா? நான் நினைச்சதுதான் நடக்கோணும் எண்டுறதுக்காகச் சுயநலமா நடப்பன் எண்டு நினைச்சீங்களா? இந்தளவுதான் நீங்க என்னை விளங்கி வச்சிருக்கிறதா? சின்னண்ணாவும் ராதா வேண்டாம் எண்டு சொல்லிட்டாரே. அதுக்குப் பிறகு இதைப் பற்றி நான் உங்களிட்ட கதைக்கவே இல்லையே. பிறகும் ஏன் இப்பிடிச் செய்தீங்க?” நெஞ்சில் வேதனை அடைக்கக் கேட்டாள் அவள்.
‘ஆக, இந்த ஒளிப்பு மறைப்பெல்லாம் அவளை நான் கொத்திக்கொண்டு போய்விடுவன் எண்டுற பயத்திலையா? கொத்தினா போச்சு!’ உதட்டோரம் அரும்பிய சிரிப்புடன் ரஜீவனைப் பார்த்தான் மோகனன்.
தன் நெஞ்சையே பிளந்து பாத்தவள் போன்று பேசிய யாழினியிடம் உண்மையை ஒப்புக்கொள்ள முடியாமல் நின்றான் ரஜீவன்.
தனியாகக் கேட்டிருந்தால் கூட, ஆமாம் என்று சொல்லிச் சமாதானம் செய்யலாம். இப்படி எல்லோரையும், முக்கியமாக மோகனனையும் வைத்துக்கொண்டு கேட்டால் என்ன சொல்லுவான்? “யாழி பிளீஸ்!” என்றான் இறைஞ்சலாக.
யாழினி ரஜீவனை விடுவதாக இல்லை. அந்தளவில் அவன் செய்கை காயப்படுத்தியிருந்தது. “இல்ல ரஜீவன். எனக்கு உண்மையான காரணம் தெரியோணும்!” என்றாள் பிடிவாதமாக.
“விடு யாழி!” என்று அடக்கினான் கௌசிகன்.
“இல்லை அண்ணா இவர்…” என்று கண்கள் கலங்க ஆரம்பித்தவளிடம், “உன்ன விடச் சொன்னனான்!” என்றான் மீண்டும் அழுத்தமாக.
அதன்பிறகு அவள் வாயைத் திறக்கவே இல்லை. தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள். மனம் மட்டும் எரிமலைக் குழம்பாகக் கொதிக்க ஆரம்பித்தது.
ரஜீவனின் பயத்தை கௌசிகனால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்கு அவசியமில்லை என்று அறிந்திருந்தாலும், ஒரு தங்கையின் அண்ணனாக அவனை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இதற்கெல்லாம் முடிவு ராதாவின் திருமணம்.
“நீ ஏன் ராதா, கலியாணம் வேண்டாம் எண்டு சொல்லுறாய்? படிச்சாச்சு. வேலையும் இருக்கு. வயசும் சரி. இன்னும் என்ன?” என்ற தமையனின் பேச்சில் இடையிட்டு, “அவா ஆரையும் விருபுறாவோ எண்டு கேளுங்கோ அண்ணா.” என்றான், அதுவரை நேரமும் அமைதியாய் இருந்த மோகனன்.
ரஜீவன், ராதா இருவருமே படக்கென்று அவன் புறமாகத் திரும்பி முறைத்தனர்.
“என்ர தங்கச்சி ஒண்டும் அப்பிடியான பிள்ளை இல்ல.” என்றான் ரஜீவன் சினத்துடன்.
“நீங்க அவாவைக் கேளுங்க அண்ணா!” என்றான் அப்போதும் அவன்.
“அப்பிடி எல்லாம்…” என்று மீண்டும் ஆரம்பித்த ரஜீவனைப் பொறு என்று தடுத்துவிட்டு, “நீ சொல்லு ராதா. அப்பிடி ஏதும் இருக்கா? இருந்தா அவன் நல்லவனா எண்டு மட்டும்தான் பாப்போம். மற்றும்படி உனக்குப் பிடிச்சிருந்தா எங்களுக்கும் சந்தோசம்தான்.” என்றான் கௌசிகன்.
“இல்லை அண்ணா. அப்பிடி எதுவும் இல்ல.”
“உண்மையாவோ? நீ ஆருக்கும் பயப்பிடாமச் சொல்லு.”
கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு. “உண்மையாத்தான் அண்ணா. அப்பிடி ஒண்டும் இல்ல.” என்றாள் கலங்கிச் சிவந்த விழிகளால் கௌசிகனை நேர்கொண்டு பார்த்தபடி.
“அப்ப, எனக்கு அவாவைப் பிடிச்சிருக்கு அண்ணா.” என்றான் மோகனன் சோபாவிலிருந்து நிதானமாக எழுந்தபடி.
அங்கிருந்த எல்லோருமே அதிர்ந்து போயினர். அறைக்குள் இருந்த யாழினி கூட ஓடிவந்து, வாசலில் நின்று சின்ன தமையனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.
இத்தனைக்கும் காரணமானவனோ கௌசிகனின் அருகில் வந்து கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“அடேய்! அடுத்த பிரச்சினையை நீ கிளப்பாத!” என்று அவனை அதட்டினான் கௌசிகன். “அவளும் உன்ன வேண்டாம் எண்டு சொல்லிட்டாள். நீயும் வேண்டாம் எண்டு சொல்லிட்டாய். பிறகு என்ன?”
“அது, தேவையில்லாம யாழின்ர வாழ்க்கையில என்னால எந்தப் பிரச்சினையும் வேண்டாம் எண்டு நினைச்சுச் சொன்னது. அதைவிட, இந்த மேடமும் என்னைப் பிடிக்காது எண்டு சொல்லிட்டா. பிடிக்காதவாவ என்னத்துக்கு வற்புறுத்த எண்டு நினைச்சன். ஆனா இப்ப பிடிக்காட்டியும் பிடிக்க வச்சுக் கட்டுவம் எண்டு நினைக்கிறன்.” என்றான் அவளையே பார்த்துக்கொண்டு.
நம்பவே முடியாத அதிர்ச்சி தாக்கியதில் விரிந்த விழிகளால் அவனையே பார்த்திருந்தாள் அவள். பேசக்கூட முடியாத நிலை. ஒற்றை நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத்தான் அவளும் தாங்குவது?
“இல்லை அத்தான்! இதுக்கு நிச்சயமா நான் சம்மதிக்க மாட்டன். உங்களிட்ட உங்கட தம்பியப் பற்றிக் குறையா எப்பிடிச் சொல்லுறது எண்டுதான் அப்போத நீங்க கேட்டும் சொல்லேல்ல. யாழி சொன்ன மாதிரி எனக்கு இவருக்கு என்ர தங்கச்சியக் குடுக்க விருப்பம் இல்ல. அதாலதான் ஒருத்தருக்கும் தெரியாம மாப்பிள்ளையும் தேடினான். இனி இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ.” என்றான் ரஜீவன் அவசரமாக.
மோகனனின் உதட்டினில் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று. “நாங்களும்தான் ஒருகாலத்தில நீங்க எங்கட தங்கச்சிக்கு வேண்டாம் எண்டு சொன்னோம் ரஜீவன். கேட்டீங்களா நீங்க? இல்லையே? பிறகு எப்பிடி நீங்க சொல்லுறத நான் கேப்பன் எண்டு நினைக்கிறீங்க? அதேமாதிரி இந்த விசயத்தில முடிவு சொல்ல வேண்டியது உங்கட தங்கச்சி. நீங்க இல்ல. விளங்கினதா?” என்றவன், நிதானமாக ராதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மேசையில் இருந்த கார் திறப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.


