ஓ ராதா 19 – 1

அடுத்த பஞ்ச்பேக்கும் மோகனனிடம் மாட்டி, கதறிக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தது. விடாமல் குத்திக்கொண்டே இருந்தான். அவனுக்கு யார் மீதும் கோபம் இல்லை. யார் மீதும் எந்தக் குறைகளும் இல்லை. குற்றச் சாட்டுகளும் இல்லை. அனைத்தும் அவன் மீதுதான்!

சுந்தரம் அண்ணாவிடம் போக வேண்டும், நானே வீட்டை வாங்குகிறேன் என்று சொல்ல வேண்டும், விலையைப் பற்றிப் பேச வேண்டும், பத்திரப் பதிவுக்கான பத்திரங்களைச் சரிபார்த்து, பதிவிற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.

இப்படி இன்றைக்கே முடித்தாக வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. ஆனாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு அவனைப் போட்டு அழுத்தும் ஆத்திரத்தை, கோபத்தை, சினத்தை வியர்வையாக வடிய விட்டுக்கொண்டிருந்தான்.

அவன் ஒன்றும் ராதாவின் மறுப்பை எதிர்பாராமல் இல்லை. இப்படி அவள் அவனை அடிமனத்திலிருந்து வெறுப்பதற்கான காரணத்தை அறியாமலும் இல்லை. ரஜீவனை இவன் அடித்த அந்த நாட்களில் அவள் ஒரு பள்ளி மாணவி. மனத்தைப் பாதிக்கிற எதுவும் கல்வெட்டாகப் பதிந்துவிடுகிற பருவம்.

அப்படிப் பதிந்துவிட்ட வெறுப்பு மாறுவதற்கோ மறப்பதற்கோ சந்தர்ப்பங்கள் அமையாமல் அவளுக்குள் நிரந்தரமாகவே தங்கிப் போயிருக்கிறது.

இதையெல்லாம் அறிந்திருந்த போதிலும், பொதுவில் வைத்து அவளைப் பிடித்திருக்கிறது என்று சொன்னவன், அதைத் தனியாக ஒருமுறை சொல்லவும், அவளோடான பேச்சை ஆரம்பிக்கவும் மாத்திரமே விரும்பினான்.

அது எல்லாம் சரிதான். அதற்குப் பிறகு அவள் சொன்னவைதான் அவனைக் கூறு போட்டன. அவள் சொன்னவற்றில் எதை அவனால் மறுத்துப்பேச முடிந்தது? நீ தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறாய், நடந்தது இதுதான் என்றாவது காரணம் சொல்ல முடிந்ததா? இல்லையே!

அவன் உதட்டோரம் சுயவெறுப்புடன் வளைந்தது! இன்னும் ஆவேசத்துடன் வேகம் கொண்டு குத்தினான். அத்தனையும் அவன் முகத்திலேயே விழவேண்டியவை. பஞ்ச்பேக் வாங்கிக்கொண்டு வாய் விட்டுக் கதற முடியாமல் தத்தளித்தது.

எவ்வளவு நேரம் கடந்ததோ, வெளியே நடமாட்டம் கேட்க ஆரம்பிக்கவும்தான் கட்டுப்பாட்டுக்குள் வந்தான். விசுக் விசுக் என்று அங்கும் இங்குமாய்ப் பறந்த பஞ்ச்பேக்கினை பிடித்து நிறுத்தினான். இப்போதுதான் மனதின் புழுக்கம் கொஞ்சமேனும் அடங்கியது. மூச்சு வாங்கும் வேகம் நிதானத்துக்கு வரும் வரையில் அப்படியே நின்றான்.

அதன் பிறகு வேகம்தான். குளித்து, உடைமாற்றிக்கொண்டு புத்துணர்வுடன் வெளியே வந்தவன், அன்று செய்ய நினைத்தவற்றைச் செய்துவிட்டே ஓய்ந்தான்.

*****

மிதுனாவுக்குப் பிரமிளா வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கும்வரை மகனைக் கவனித்துக்கொண்டான் கௌசிகன். அம்மாவுக்கும் மகளுக்கும் அடுத்தநாள் பள்ளிக்கூடத்துக்குத் தேவையானவற்றை அவள் எடுத்துவைத்துவிட்டு வந்தபோது, சின்னவனைக் குளிக்கவார்த்து முடித்திருந்தான்.

அதன்பிறகு பிள்ளைகள் இருவருக்கும் உணவு கொடுத்து, உறங்கவைத்தாள் பிரமிளா. கணவன் மனைவி இருவரினதும் இரவு உணவும் இயல்பாகவே நகர்ந்தது. இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டுக் கௌசிகன்

உறங்க வந்தபோது, தன் பள்ளிக்கூட வேலைகளை முடித்திருந்தாள் பிரமிளா.

பிள்ளைகளுக்கு என்று தனியாக ஒரு அறை இருந்தாலும், பகல் பொழுதில் மாத்திரமே அவர்கள் அதைப் பயன்படுத்துவது வழக்கம். உறக்கம் இவர்களோடுதான். எந்தப் பக்கத்தாலும் உருண்டு விழுந்துவிடாதபடிக்கு கம்பிகளால் ஆன பெட்டி போன்ற அமைப்பில், இருவர் உறங்க வசதியான கட்டில் ஒன்றை தங்களின் அறையிலேயே வாங்கிப் போட்டிருந்தான் கௌசிகன்.

இறங்குவதற்கு வசதியாகக் குட்டி கேட் ஒன்றும் இருந்தது. அதன் கொழுக்கியை கழற்றிவிட்டு கீழ்நோக்கி அழுத்தினால் அது கீழே இறங்கிக்கொள்ளும். மதுரன் அடிக்கடி அப்படி இறக்கி விட்டுவிட்டு வந்து, தாய் தகப்பனுக்கு நடுவில் படுத்துக்கொள்வான். மிதுனாவுக்குத் தனிக்கட்டிலில் தனியாக உறங்குகிறோம் என்பது பெருமை. அதில் அவள் வருவதில்லை.

இன்றும், உறங்கிவிட்ட இருவரின் தலையைக் கோதி நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு, “குட் நைட் ரமி!” என்றபடி தங்களின் கட்டிலில் சரிந்து கண்களை மூடிக்கொண்டான் கௌசிகன்.

அவனைப் பார்த்திருந்த பிரமிளாவுக்கு உதட்டோரம் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று. குளியலறைக்குச் சென்றுவிட்டு வந்து, பிள்ளைகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அருந்துவதற்குப் போதுமான தண்ணீர் இருக்கிறதா என்றும் கவனித்து, பெரிய விளக்கை அணைத்து விடிவிளக்கை ஏற்றிவிட்டு வந்து தானும் படுத்தவளுக்குச் சத்தமாகச் சிரித்துவிடுவோமோ என்று பயமாயிற்று.

அப்படிச் சிரித்தாளோ இன்றைக்கு அவன் கோபத்தைச் சமாளிப்பது மிகவும் சிரமமாகிப் போய்விடும். சற்றுநேரம் பேசாமல் இருந்து பார்த்தாள். அவன் வருவதாக இல்லை.

இலேசாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். நெற்றியின் மீது ஒற்றைக் கையைப் போட்டுக்கொண்டு படுத்திருந்தான். அதற்குமேல் முடியாமல் அவனை நெருங்கி, அவன் மார்பில் தலையை வைத்து, அவன் இடுப்பையும் கட்டிக்கொண்டு படுத்தாள் பிரமிளா. அவன் கை தானாக வந்து அவளை அணைத்துக்கொண்டது. ஆனாலும், எதையும் பேசவில்லை.

“என்ர கௌசிக்கு என்னில என்ன கோவமாம்?”

“…”

“கௌசி?”

“நீ இன்னும் பழசையெல்லாம் மறக்கேல்ல என்ன.” ஆதங்கத்தோடு சொன்னான் அவன்.

“எத மறக்கேல்லையாம்?” அவளின் கையொன்று உயர்ந்து வந்து அவன் கன்னம் வருடி மீசையோடு விளையாடியது.

அந்தக் கையைப் பிடித்து வைத்துக்கொண்டு, “எது எண்டு உனக்குத் தெரியும் ரமி!” என்று சொன்னான் அவன்.

அவன் முகம் பார்ப்பதுபோல் திரும்பிப் படுத்தாள் பிரமிளா. அப்போதும் அவன் கண்களைத் திறப்பதாக இல்லை என்றதும் அவன் உதட்டில் அழுத்தி முத்தம் ஒன்றைப் பதித்தாள். அவன் விழிகள் படக்கென்று திறந்துகொண்டன.

“சும்மா சின்ன பிள்ளை மாதிரி முகத்தைச் சுருக்கிறேல்ல. எனக்கும் உங்களுக்குமான வாழ்க்கையில அதை நினைவு வச்சு நான் ஏதாவது கதைச்சாத்தான் நீங்க கவலைப்படோணும். அப்பிடி நான் கதைக்கேல்ல எல்லா. கதைக்கிற அளவுக்கு என்ர கௌசியும் இல்ல. என்ர கௌசிக்கு நான் எண்டா உயிர் எண்டு தெரியும். எனக்காக அவர் எந்தளவுக்கு மாறியிருக்கிறார் எண்டும் தெரியும். இப்பிடி நிறைவான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கையை எனக்குத் தந்தது என்ர கௌசிதான். ஆனா இது வேற.” என்றாள் அவள்.

அவன் பார்வை அவளிடமே இருந்தது.

“எங்களுக்க நடந்தது எல்லாம் அவனுக்கும் தெரியும்தானே. அதையே நினைவுபடுத்திச் சொன்னா அவனுக்கு இன்னும் கூடுதலா விளங்கும். இன்னும் கவனமா இருப்பான். நடக்கக் கூடாத ஏதாவது நடந்திட்டா அவன்ர பெயர் இன்னுமே கெட்டுப் போயிடும் கௌசி. ராதாவும் மொத்தமா வெறுத்திடுவாள். அவளும் காயப்பட்டுடுவாள். இது எதுவும் நடக்காம, ராதாவும் மனம்மாறி, அவே ரெண்டுபேரும் சேருறதுக்கு அவன் நிதானமா இருக்கோணும் கௌசி. அதுக்காகத்தான் அதச் சொன்னனான். இப்ப இந்த அரைக்கிழவனுக்கு விளங்குதா?” என்றாள் அவள்.

அவன் இன்னும் நன்றாக முறைக்க, அவனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினாள் பிரமிளா.

அவன் விழிகள் மின்னின. உதடுகள் சிரிப்பில் துடித்தாலும் அடக்கிக்கொண்டு, “இன்னும் நான் கோவமாத்தான் இருக்கிறன்.” என்றபடி மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

“ஓகோ! ஆனா இந்த நரைச்ச மீசைக்கடியில ஒளிஞ்சு இருக்கிற ஏதோ ஒண்டு சிரிப்பில துடிக்கிற மாதிரி இருக்கே. அத என்ன செய்வம்?” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, படக்கென்று மீண்டும் விழிகளைத் திறந்தவன் அவளை முறைத்தான்.

“அது என்ன ஏதோ ஒண்டு? என்ன எண்டு உனக்குத் தெரியாதா? இல்ல அது என்ன செய்யும் எண்டு தெரியாதா? எப்ப பாத்தாலும் நரைச்ச மீசை, அரைக்கிழவன் எண்டுகொண்டு. நான் உனக்கு அரைக்கிழவனாடி டீச்சரம்மா?” கோபத்தோடு அவளைத் தனக்குள் கொண்டுவந்து ஆக்கிரமிக்கத் தொடங்கியவனின் வேகத்தில், “கௌசி பிளீஸ்!” என்று, கெஞ்சிக் கெஞ்சியே களைத்துப் போயிருந்தாள் பிரமிளா.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock