ஆனாலும் இருவரின் மனமும் நிறைந்து போயிருந்தது. அவன் மார்புக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு, அந்த மார்பையே தன் தலையணையாக்கி, அவனைக் கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள் பிரமிளா.
ஊடலின் பின்னே வருகிற கூடலின் சுவை எந்த வயதிலும் குறைந்துவிடப் போவதில்லையே. தன் உலகையே அழகாய் மாற்றித் தந்தவளை மார்போடு அணைத்தபடி தானும் உறங்கிப்போனான் கௌசிகன்.
அடுத்து வந்த நாட்களில், சுந்தரத்தின் வீடு மோகனனின் கம்பனியின் பெயருக்கு மாற்றப்பட்டது.
அதன்போது, “இந்தப் பெயரை மாத்தலாமேடா?” என்று வினவிய கௌசிகனை, கேள்வியாக ஏறிட்டான் மோகனன்.
“ராதா சம்மதிப்பாள் எண்டுற நம்பிக்கை எனக்குக் கொஞ்சமும் இல்ல.”
“அவா எந்த முடிவை எடுத்தாலும் எனக்கு அவாதான் எண்டுறதில மாற்றம் இல்ல அண்ணா. பிறகு என்னத்துக்குப் பெயர் மாத்த?”
கௌசிகன் திகைப்புடன் பார்த்தான். அவள் கிடைக்காவிட்டால் இவன் ஒற்றையாகவே நின்றுவிடப் போகிறானோ?
“ஆனா, அவ்வளவு ஈஸியா இன்னொருத்தனிட்ட அவாவைக் குடுக்கவும் மாட்டன்.” என்றான் மென் சிரிப்பை உதட்டினில் மென்றபடி.
இப்போது கௌசிகன் முறைத்தான்.
“சும்மா சும்மா முறைக்காதீங்க அண்ணா. நீங்க பாக்கிறதப் பாத்தா என்னவோ நீங்க கேட்டதும் அண்ணி ஓம் எண்டு சொன்னமாதிரி இருக்கே.” கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டு வேண்டுமென்றே சொன்னான்.
கௌசிகன் அவன் முதுகிலேயே ஒன்று போட்டான். “ஆ ஊ எண்டா என்னையே இழுத்து என்ர வாயையே அடைப்பியா நீ!”
தமையனின் திண்டாட்டத்தைக் கண்டு தோள்கள் குலுங்க நகைத்தான் மோகனன். “இப்பதானே அண்ணா சொல்லி இருக்கிறன். கொஞ்சம் பொறுங்கோ, எல்லாம் மாறும்.” என்றான் நம்பிக்கையோடு.
கௌசிகனுக்கு மீண்டும் மீண்டும் அவனைத் தடுத்துப் பேசவும் மனம் வரமாட்டேன் என்றது. சற்றே சுயநலமாக இருந்த போதிலும், இந்தளவுக்கு விரும்புகிற தம்பியின் ஆசை நிறைவேறினால்தான் என்ன என்று யோசித்தான்.
அதில், “எனக்கு உன்ர மனது விளங்குது மோகனன். அவள் ஓம் எண்டு சொன்னா எனக்கும் சந்தோசமாத்தான் இருக்கும். எண்டாலும், கொஞ்சம் கவனமா கையாளு. உன்ன நான் நம்புறன்.” என்று தோளில் தட்டிக்கொடுத்தான்.
வீட்டின் வேலைகளையும் வேகமாகவே ஆரம்பித்தான் மோகனன். கூடவே நின்று அவர்களின் வேலைகளை, அதை அவர்கள் செய்யும் பாங்கை எல்லாம் கவனித்துக்கொண்டான். தேவையான பொருட்களை அவனே பார்த்து பார்த்து வாங்கினான். அனைத்துக்குமான செலவை ராஜநாயகத்திடம் கடனாகவே பெற்றுக்கொண்டான். அப்பாவும் அண்ணனும் முறைத்தபோது அதைச் சட்டை செய்யவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குமேல் நாட்கள் கடந்து போயிருந்தன. இந்த நாட்களில் ராதாவை அவன் பார்க்கவே இல்லை.
ஆரம்ப நாட்களில் தொந்தரவு தருவானோ என்கிற பயத்துடன் தன் சுற்றுப்புறச் சூழலைக் கவனத்துடன் அலசிய ராதாவும், இயல்புக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாள்.
ஆனபோதிலும், ‘மறக்கிறதுக்கு நாள் தருகிறேன்.’ என்று அவன் சொன்னது அவ்வப்போது அவளுக்கு நினைவில் வந்து மணியடிக்காமல் இல்லை.
ரஜீவனுக்கும் மோகனனுக்கும் ஒத்துப்போவதில்லை என்பதைக் கணித்திருந்ததிலும், யாழினி ரஜீவன் உறவு ஏதோ ஒரு இடைவெளியிலேயே இருப்பதைக் கவனித்ததிலும், மோகனன் தன்னைச் சந்தித்துப் பேசியதை ரஜீவனிடம் பகிர்ந்துகொள்ளவில்லை ராதா.
இதற்குள், கௌசிகனோடு சேர்ந்து தேடி அலைந்து, இன்னொரு மாப்பிள்ளையைக் கொண்டுவந்தான் ரஜீவன். அதைக் கௌசிகன் கவலையோடு மோகனனிடம் பகிர்ந்துகொண்டான்.
“விடுங்கண்ணா. அதெல்லாம் ஒண்டும் நடக்காது.” என்றுவிட்டு தன் வேலைகளைப் பார்த்தான் அவன்.
அவன் சொன்னதைப் போலவே புகைப்படத்தை முழுதாகப் பார்க்காமலேயே மறுத்தாள் ராதா.
“உனக்கு என்ன பிரச்சினை ராதா? ஆர(யார) காட்டினாலும் வேணாம் வேணாம் எண்டா என்ன அர்த்தம்? ஊர் முழுக்கச் சலிச்சுச் தேடுற நான் என்ன விசரனா?” தன் பயம் புரியாது பொறுப்பற்று மறுக்கிறாளே என்கிற கோபத்தில் அதட்டினான் ரஜீவன்.
அவளைப் பிடித்திருக்கிறது என்று மோகனன் சொன்ன நாளிலிருந்து அவனுடைய உறக்கம் தொலைந்துபோயிற்று. புதிதாக மணமானவன். காதல் மனைவியோடு நேரத்தைச் செலவழிப்பதற்கு மாறாக அவளோடு முறுக்கிக்கொண்டு, தங்கையின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துக்கொண்டு திரிகிறான்.
அவளை நல்லவன் ஒருவனின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் இருவரின் வாழ்க்கையும் நன்றாக மாறிவிடும் என்றுதான் பாடு படுகிறான். இதையெல்லாம் யோசிக்காமல் பிடிக்கவில்லை என்றால் கோபம் வராதா?
“மூண்டு வருசம் போகட்டும் எண்டு நான் கேட்டு நீங்களும் ஏற்கனவே ஓம் எண்டு சொல்லிட்டீங்க அண்ணா. இப்ப வந்து மாப்பிள்ளையப் பார், கலியாணத்தைச் செய் எண்டா எப்பிடி? கொஞ்ச நாள் போகட்டும். ஏன் இப்பிடி அவசரப் படுறீங்க? அண்ணின்ர சின்னண்ணாவ நினைச்சா?” தமையனின் பயம் தேவையற்றது என்று உணர்த்திவிட எண்ணிக் கேட்டாள் ராதா.
“இப்ப என்னத்துக்கு நீ தேவையில்லாம அவனைப் பற்றிக் கதைக்கிறாய்?” தங்கையின் வாயில் அவன் பற்றிய பேச்சு வருவதையே விரும்பாதவன் சிடுசிடுத்தான்.
அவர்கள் வறிய குடும்பத்தவர்கள். அவள் படித்துமுடித்து ஆசிரியையாக வேலைக்குச் செல்கிற வரைக்கும் சாதாரணமான வாழ்வைக்கூட வாழ்ந்தது இல்லை.
அவன் தொழிலிலும் அவள் வேலையிலும் புகுந்த பிறகுதான் கையில் பணம் புழங்க ஆரம்பித்தது. அதில்தான், அவள் மூன்று வருடங்கள் போகட்டும் என்று சொன்னபோது, எந்தப் பொறுப்பும் கடமையும் கவலையும் இல்லாமல் கொஞ்ச நாட்களுக்குச் சந்தோசமாக இருக்கட்டும் என்று எண்ணிச் சம்மதித்தான்.
அவளுக்கு முதல் தன் திருமணம் நடப்பதற்குச் சரி என்றதும் அதனால்தான்.
ஆனால், மோகனன் என்கிற ஒருவன் வந்து, அனைத்தையும் தலைகீழாக மாற்றிப்போடுவான் என்று அவன் என்ன சாத்திரமா பார்த்தான்.
“இதென்ன அண்ணா அவன் இவன் எண்டு கதைக்கிறீங்க? அவர் அண்ணின்ர அண்ணா. உங்களை விடவும் வயசு கூட.” என்று கண்டித்தாள் தங்கை.
“பெரிய வயசு! அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு. அத நான் பாக்கிறன். நீ தேவையில்லாம அவனைப் பற்றிக் கதைக்காத!” என்று அப்போதும் எரிந்து விழுந்தான் அவன்.
உறவுகளுக்குள் வீண் பிளவுகள் வேண்டாமே என்று சொன்னால் புரிந்துகொள்கிறான் இல்லையே என்று கவலையாயிற்று அவளுக்கு.
“நானா கதைக்கேல்ல. கதைக்க வைக்கிறது நீங்கதான். அவர் வந்ததுக்குப் பிறகுதான் என்ர கலியாணத்துக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க. ஆனா, நீங்க பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்காது அண்ணா. அவரும் இப்ப அவ்வளவு மோசம் மாதிரி தெரியேல்ல. வீண் பிரச்சினைக்கு வரமாட்டார். என்னைப் பற்றி யோசிச்சுக் கவலைப்படுறதை விட்டுப்போட்டு அண்ணியோட சந்தோசமா இருங்கோ.” அப்போதும் தன்மையாக எடுத்துரைத்தாள் ராதா.
அப்படி அவள் மோகனனைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னது ரஜீவனுக்கு இன்னுமே சினத்தையும் எரிச்சலையும்தான் உண்டாக்கிற்று.
அதில், “இஞ்ச பார். மூண்டு வருசம் எல்லாம் இனித் தரேலாது. நானும் உனக்குக் கெடுதியா(கெட்டதா) எதையும் செய்யப்போறேல்ல. இவனைப் பிடிக்காட்டி வேற பாக்கிறன். நீ கட்டுறாய். அவ்வளவுதான்!” என்று ஒரே முடிவாக முடித்துவிட்டு எழுந்துபோனான்.
அப்படியே அமர்ந்துவிட்டாள் ராதா. நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது. ஏன் இப்படித் தமையன் தன்னைப் புரிந்துகொள்கிறானே இல்லை என்று எண்ணி வேதனையுற்றாள்.
இதையெல்லாம் பார்த்திருந்த அன்னை பரிமளாவும், “அண்ணாவும் பாவம் எல்லாம்மா. அவன் பயப்படுறதிலயும் அர்த்தம் இருக்குத்தானே. அந்தத் தம்பி பொல்லாதது. நாளைக்கு பிடிக்காத ஒண்டு நடந்திட்டா நீதான் இதைவிடவும் கவலைப்படுவாய். காலத்துக்கும் கலியாணம் செய்யாமையா இருக்கப்போறாய்? இல்லை தானே. கொஞ்சநாள் கழிச்சுக் கட்டுறதை இப்பவே கட்டிட்டாய் எண்டால் அவனும் தன்ர வாழ்க்கையைச் சந்தோசமா வாழுவானே பிள்ளை.” என்று எடுத்துரைத்தார்.
அன்னையின் பேச்சுப் புரியாமல் இல்லை. ஆனால், அவள் மனது இசைய வேண்டுமே. அதை யாரிடம் என்ன என்று சொல்லுவாள்? ஒன்றுமே சொல்லாமல் சென்று படுத்துக்கொண்டாள்.


