ஓ ராதா 2 – 2

எப்போதுமே அவர்களுக்குள் புரிந்துணர்வுடன் கூடிய உறவு இருந்ததா என்றால் இல்லைதான். இவன் மீது அண்ணா என்கிற மரியாதையும் பயமும் அவனுக்கு உண்டு. இவன் ஏவுகிறவற்றை அவன் செய்வான். ஒன்றாக இருந்த காலத்திலேயே அதைத் தாண்டிச் சகோதரர்களாக, இணக்கமாகப் பேசிக்கொண்டதில்லை.

மோகனன் சவுதிக்கு சென்ற பிறகோ, மிதுனா பிறக்கிற வரைக்கும் கௌசிகன் அவனோடு பேசியதே இல்லை. மருந்து, மாத்திரை, மனக்கவலை, உடல் உபாதைகள் என்று பிரமிளா அனுபவித்த துன்பங்களையெல்லாம் பார்த்தபோது முற்றிலுமாக வெறுத்திருந்தான்.

மகள் பிறந்திருக்கிறாள் என்று சொல்ல மாத்திரமே அழைத்தான். அதன் பிறகு மகன் பிறந்தபோது ஒருமுறை. அன்னையின் மனக்கவலையை உணர்ந்து ஒன்றிரண்டுமுறை இங்கே வந்துவிடு என்று சொல்வதற்குப் பேசியிருக்கிறான். இவ்வளவுதான் அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பு.

அம்மாவும் யாழினியும் தினமும் பேசிக்கொள்வார்கள் என்பதும், மிதுனாவும் அவனும் நல்ல ஒட்டு என்பதும் தெரியும்.

ஆனால் இன்று, அவனை நேரில் பார்த்தபோது அவனது தோற்றத்தைக் கண்டு திகைத்துப்போனான். அப்போதே என்னவோ சரியில்லை என்று மனம் அழுத்திச் சொன்னது. கொழும்பிலிருந்து வீடு வருகிற வரைக்கும் கிட்டத்தட்ட எட்டு மணித்தியாலப் பயணம். அதில்கூட அவசியமற்று ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாகவே வந்தவனைக் கணிக்கவே முடியவில்லை.

பிரமிளா அன்றொருநாள் சொன்னதுபோல, மோகனன் பாதை தவறிப்போனதுக்கு அவனும்தானே காரணம். பக்கத்திலேயே வைத்துத் திருத்துவதை விட்டுவிட்டு, தண்டனை கொடுக்கிறேன் என்று அவனுக்குத் தீங்கிழைத்துவிட்டமோ என்று எண்ணிக் கவலையுற்றான்.

அப்போது, “சாப்பிட வராம என்ன செய்றீங்க?” என்றபடி வந்து அவன் சிந்தனையைத் தடை செய்தாள் பிரமிளா.

“நான் கடையில சாப்பிட்டன். நீ அவனைக் கவனி!”

அப்போதும் அவன் புருவச்சுளிப்பு நீங்கியிருக்கவில்லை என்று கண்டு, “என்ன கௌசி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? ஏதும் பிரச்சினையா?” என்று விசாரித்தாள்.

அதற்குள் அழுகையை நிறுத்திவிட்டு தன்னுடைய மூன்று சக்கரச் சைக்கிளை உருட்ட ஆரம்பித்திருந்த மகனில் பார்வை இருந்தாலும் அவளின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை அவன்.

அங்கே எல்லோரையும் சாப்பிட மேசைக்கு வரச் சொல்லிவிட்டு இவனை அழைக்க வந்தவளுக்கும் வற்புறுத்திக் கேட்க நேரமில்லை.

அதில், “கொஞ்சமா சாப்பிடலாம். நீங்களும் வாங்கோ!” என்று அவனையும் கையோடு அழைத்துக்கொண்டு போனாள்.

இதற்குள், மோகனன் வந்துவிட்டான் என்று அறிந்து ராஜநாயகமும் கடையிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அப்பா மகன் இருவருக்குமே எப்படி மற்றவரை வரவேற்பது என்று தெரியாத நிலை. ஒற்றைத் தலையசைப்பில் ஒருவர் மற்றவரின் வருகையை ஏற்றுக்கொண்டனர். பொதுவான நலன் விசாரிப்பும் நடந்தது.

எல்லோரையும் அமரவைத்துப் பரிமாறினாள் பிரமிளா. செல்வராணிக்குக் கண்கள் தன் கசிவை நிறுத்தவே மாட்டேன் என்றன. அவர், கணவர், இரு மகன்கள், மகள், பேத்தி என்று அனைவரும் ஒன்றாக இருந்து உண்ணும் இப்படியான ஒரு உணவுவேளை அமையும் என்கிற நம்பிக்கையை எப்போதோ இழந்திருந்தார். இன்றோ அது நடந்துகொண்டிருந்தது.

மனம் நெகிழ பிரமிளாவைப் பார்த்தார்.

அவரை உணர்ந்தவளாய், “சாப்பிடுங்கோ மாமி!” என்று புன்னகைத்தாள் அவள்.

உணவு முடிந்து, பயணக்களை ஆற என்று தன் பெட்டிகளோடு மோகனன் அவன் அறைக்குச் செல்ல, ஹோட்டலுக்குச் செல்வதற்கு ஆயத்தமானான் கௌசிகன்.

சாப்பாட்டு மேசையையும் கிட்சனையும் ஒதுக்கும் பொறுப்பை யாழினியிடம் கொடுத்துவிட்டு, “தம்பிய ஒருக்கா மேல கொண்டுவந்து தந்திட்டுப் போங்கோ கௌசி. அவருக்கும் உடம்பு கழுவி, சாப்பாடு குடுக்கோணும்.” என்றுவிட்டுப் படியேறினாள் பிரமிளா.

அவன் மகனோடு வந்ததும் கதவைச் சாற்றினாள். மதுரனுக்குப் பில்டிங் ப்ளாக்ஸ் எடுத்துக்கொடுத்து விளையாட விட்டுவிட்டு, “இப்ப சொல்லுங்கோ! இந்த நரைச்ச தலைக்க கிடந்து என்ன குடையுது?” என்று கேட்டபடி அவனருகில் வந்து அமர்ந்தாள்.

கட்டிலின் குறுக்கே தலைக்குக் கைகளைக் கொடுத்தபடி மல்லாந்து சரிந்திருந்தவனின் விழிகள் மூடியிருந்தன. பதில் இப்போதும் வரவில்லை. இதுவே சாதாரண நேரமாக இருந்திருக்க, அவள் சொன்ன, ‘நரைச்ச தலை’க்கு முறைப்பும் அவனுக்கே உரித்தான வழிகளில் தண்டனையும் கிடைத்திருக்கும்.

அப்படி எதுவும் நடவாமல் போனதிலேயே அவனைப் பெரிதாக என்னவோ வாட்டுகிறது என்று புரிந்தது. இதமாக அவன் கேசத்துக்குள் விரல்களை விட்டுக் கோதியபடி, “என்ன எண்டு சொல்லுங்கோவன். இப்பிடிச் சத்தமே இல்லாம இருந்தா நான் எதை எண்டு யோசிக்க?” என்று இதமாய் வினவினாள் அவள்.

“என்னவோ தெரியா ரமி. மனதே சரியில்ல!” என்றவனின் தலை தானாகவே அவளின் மாடிக்கு மாறியது.

“ஏன்? மோகனன் ஏதும் சொன்னவனா?”

“அவன் வாயத் திறந்து கதைச்சாத்தானே ஏதாவது சொல்ல?”

“ஓ…!” என்று கேட்டுக்கொண்டவளின் விரல்கள் தம் வேலையை நிறுத்தவில்லை. அவன் புருவங்களையும் நீவி விட்டாள். நெற்றி பொட்டையும் அழுத்திக்கொடுத்தாள்.

பின், “இவ்வளவு காலம் கழிச்சு வந்திருக்கிறான். என்னை எப்பிடி எதிர்கொள்ளுறது எண்டுற சங்கடம் இருந்திருக்கும். நீங்கதானே அவனை அனுப்பி வச்சனீங்க. அத யோசிச்சு இருப்பான். இனி இஞ்சதானே இருப்பான். எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகும்.” என்று, அவனைத் தேற்ற முயன்றாள் அவள்.

“இல்லயாம். யாழின்ர கலியாணம் முடிஞ்சதும் திரும்பப் போகப்போறானாம். ரெண்டு மாத லீவுலதான் வந்திருக்கிறானாம்.” என்றவனுக்கு அதற்குமேல் எந்தத் தடையும் இருக்கவில்லை.

“ஏர்போர்ட்ல வச்சு அவனைப் பாத்ததும் திகைச்சே போனன் ரமி. ஆளும் தாடியும் கோலமும். என்னவோ ஆணழகன் போட்டிக்குப் போறவன் மாதிரி உடம்ப எப்பிடி வளத்து வச்சிருக்கிறான், பார். எந்தக் கோபத்தைத் தீர்க்க இப்பிடித் தன்னையே வருத்தினானோ எண்டு மனம் குத்துது. அந்த நேரம் நான் கொஞ்சம் நிதானமா அவனை ஹாண்டில் பண்ணி இருக்கோணுமோ, சவுதிக்கு அனுப்பி இருக்கக் கூடாதோ எண்டு காலம் கடந்து யோசிக்கிறன்.” என்று அவளிடம் தன் மனத்தைப் பகிர்ந்தான்.

இதை அன்றே அவள் சொல்லிவிட்டாளே. ஆனால், இப்போது அதைப் பற்றிப் பேசுவதால் எதுவும் மாறாதே. கூடவே அவனை இலகுவாக்கும் நோக்குடன், “இதுக்குத்தான் சொல்லுறது கோபத்தைக் குறைங்கோ எண்டு. நீங்க கேக்கிறீங்களா? இப்பவும் இந்த மூக்கு நுனியிலதானே கோபம் நிக்குது!” என்று அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள் பிரமிளா.

படக்கென்று விழிகளைத் திறந்தவன் அவளை முறைத்தான்.

“என்ன முறைப்பு? நான் என்ன பொய்யா சொல்லுறன்?” அவனை வம்புக்கு இழுத்தவளின் செவ்விதழ்கள் அடக்கமுடியாத சிரிப்பில் துடித்தன.

“உன்ன! எப்படா சான்ஸ் கிடைக்கும் எண்டு பாத்துக்கொண்டே இருப்பியா? அப்போதயும் நரைச்ச தலை எண்டு சொன்னனீ என்ன. நான் கவனிக்கேல்லை எண்டு நினைச்சியா?” என்றவன் கொடுத்த தண்டனையில் சத்தமே இல்லாமல் மகனை விழிகளால் காட்டி அலறினாள் பிரமிளா.

அவளிடமிருந்து சற்று விலகி, “தம்பிய யாழிட்ட விட்டுட்டு வா.” என்றான் கிசுகிசுப்பாக.

அரண்டுபோன பிரமிளா அடுத்தநொடியே அவனைவிட்டுத் துள்ளிக்கொண்டு எழுந்தாள். “அடி வாங்காம எழும்பி வேலையப் பாருங்க கௌசி!” என்றவளின் ஓட்டத்தில் கௌசிகனின் உடல் சிரிப்பில் குலுங்கிற்று.

ஆனாலும் அவள் மதுரனை குளிக்கவார்த்து, உடைமாற்றிக்கொண்டு வருகிறவரைக்கும் அப்படியேதான் கிடந்தான்.

இன்னுமே அவன் முழுமையாகச் சமாதானம் ஆகவில்லை என்று புரிந்தது. மகனை அவன் நெஞ்சில் இருத்திவிட்டு, பக்கத்திலேயே அமர்ந்து, “கௌசி, இஞ்ச பாருங்கோ. அவன் இப்பதான் வந்திருக்கிறான். திரும்பிப் போவம் எண்டுறது அவன் அங்க இருந்து வெளிக்கிடேக்க எடுத்த முடிவா இருக்கும். இன்னும் ரெண்டு மாதம் இஞ்ச நிப்பான்தானே. அதுக்கிடையில மாற்றங்கள் வரலாம். மாமி எப்பிடியும் அவனுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கத்தான் பாப்பா. மாமாவும் லேசுல விடமாட்டார். நீங்க கொஞ்சம் கோபப்படாம இருக்கப் பாருங்கோ. அவன் இப்ப முழுமையான ஆம்பிளை. சின்ன பிள்ளை இல்ல. இந்த எட்டு வருசமும் தனியா வாழ்ந்ததும் நிறைய அனுபவத்தைக் குடுத்திருக்கும். என்ன நடக்குது எண்டு கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். சரியா?” என்றாள் அவனைத் தேற்றும் குரலில்.

அவனும் அப்படித்தான் யோசித்துக்கொண்டிருந்தான். அதில், மறுத்து எதுவும் சொல்லவில்லை.

“சரி, எழும்புங்கோ. எழும்பி முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்கோ. குடிக்க ஏதாவது தாறன்.” என்றபடி அவள் மகனுடன் வெளியேற, அவனும் எழுந்து குளியலறைக்கு நடந்தான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock