அன்று, தீபன் தீபாவின் மகன் பிருந்தனுக்கு எட்டாவது பிறந்தநாள். அவர்களாகத் திட்டமிட்டுப் பெரிதாகக் கொண்டாடுவதில்லையே தவிர, நெருங்கிய உறவுகளும் நட்புகளும் சொல்லாமலேயே வந்து சேர்ந்துவிடுவார்கள். அதனால் மாலையில் வீட்டில் வைத்தே கேக் வெட்டுவதற்கும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தான் தீபன்.
அவர்கள் எதிர்பார்த்தது போலவே அயலட்டை மனிதர்கள், தீபா தீபனோடு நெருங்கிப் பழகும் நட்புக் குடும்பங்கள், உறவினர்கள் என்று எல்லோருமே வருகை தந்திருந்தனர்.
இப்படி எல்லோரும் ஒரே இடத்தில் குழுமிவிட்டால், குழந்தைகளின் கொண்டாட்டத்துக்குச் சொல்லவா வேண்டும்? தீபனும் தன் நண்பன் ஒருவனை மிக்கிமவுஸ் ஆடைக்குள் திணித்து, அவன் கையில் பரிசுப் பொருட்களைக் கொடுத்து, குழந்தைகளோடு சேர்ந்து விளையாடி, அவற்றை அவர்களிடம் பகிர்வதற்கு ஏற்பாடு செய்துவிடவும், அந்த இடமே கலகலத்தது.
தனபாலசிங்கம் சரிதா மற்றும் ராஜநாயகம் செல்வராணி தம்பதியினருக்குத் தம் பேரக்குழந்தைகளைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது.
மற்றவர்களும் வேலை, நாளாந்த வாழ்வின் ஓட்டம் எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, எல்லோரையும் பார்த்து என்ன என்றில்லாமல் அளவளாவிக்கொண்திருந்தனர்.
இதற்கிடையில் பிருந்தன் தன் நண்பர்கள் நண்பிகள் சூழப் பிறந்தநாள் கேக்கினை வெட்டி, எல்லோருடனும் பகிர்ந்துண்டான்.
அதன் பிறகுதான் மோகனன் வந்து சேர்ந்தான். வந்ததுமே தீபனிடம் நேராகச் சென்று நின்று, “கொழும்புக்குப் போயிட்டு இப்பதான் வந்தனான் தீபன். அதுதான் லேட், சொறி!” என்று முறுவலித்தான்.
இப்படி நேராக வந்து பேசுவான் என்று எதிர்பாராததில் சற்றுத் திகைத்துப்போனான் தீபன். இருந்தும் சமாளித்துக்கொண்டு, “இதுல என்ன இருக்கு. கௌசிகன் அண்ணா ஏற்கனவே சொல்லிட்டார்.” என்று தானும் புன்னகைத்தான்.
“பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்!” தீபனின் அருகிலேயே நின்ற பிருந்தகனின் உயரத்துக்குக் குனிந்து, கைகொடுத்து வாழ்த்திவிட்டு, கையோடு கொண்டுவந்திருந்த பரிசுப் பெட்டியை நீட்டினான்.
கூச்சமும் தயக்கமுமாக அவன் வாங்கிக்கொள்ள, “பிரிச்சுப் பாத்துப் பிடிச்சிருக்கா எண்டு சொல்லுங்கோ.” என்றான் மோகனன்.
பெற்றவர்களை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அவனும் பிரித்தான். உள்ளிருந்து பிளே ஸ்டேஷன் செட் ஒன்று வெளியே வந்தது. அவன் விழிகள் இரண்டும் கோலிக்குண்டுகளாக விரிந்து மின்னின.
முகமெல்லாம் சிரிப்பும் அளவற்ற சந்தோசமுமாகப் பெற்றவர்களையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான். அவனைச் சுற்றி நின்ற அவனுடைய நண்பர் நண்பிகளும், “பிளே ஸ்டேஷன்டா!” என்று வாயைப் பிளக்க, அவனுக்கு இன்னுமே பெருமையாயிற்று.
“ஏன் இதெல்லாம்…” என்றான் தீபன் சங்கடத்துடன்.
“இதுல என்ன இருக்கு.” என்று அவனிடம் இலகு குரலில் சொல்லிவிட்டு, “சனி, ஞாயிறு மட்டும்தான் விளையாடோணும், சரியோ. மற்றும்படி படிக்கோணும். பிறகு உங்கட அப்பா எனக்குத்தான் அடிப்பார். ஓகே!” என்று அவன் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டுச் சென்று தமையனின் அருகிலேயே அமர்ந்துகொண்டான்.
“இப்பிடி விழாவே முடிஞ்ச பிறகுதான் வருவியா? கொஞ்சம் நேரத்துக்குக் கொழும்பில இருந்து வெளிக்கிட்டிருக்க வேண்டியதுதானே?” என்று அதட்டினான் தமையான்.
“டிராபிக் அண்ணா. அம்பது தாண்டி கார் ஓடவே ஏலாம போச்சு.” என்றவன் கௌசிகனின் மடியில் இருந்த மதுரனைப் பார்த்து வேண்டுமென்றே புருவங்களை உயர்த்தினான்.
அந்தளவுதான். அடுத்த நிமிடமே தகப்பனிடமிருந்து நழுவிக்கொண்டு அன்னையிடம் ஓடினான் அவன்.
“ஏன்டா?” என்றான் கௌசிகன் சிரிப்புடன். “இனி அவளை வேல செய்ய விடமாட்டான், பார்.” என்றவனின் பார்வை மகனின் பின்னாலேயே சென்றது.
“சித்தப்பா எண்டு என்னைக் காட்டி வளர்க்காம விட்டது நீங்க. இப்ப என்னைக் குறை சொல்லுவீங்களா?” என்றவனின் பார்வையும் சிரிப்புடன் பெறாமகனின் பின்னாலேயே சென்றது.
அந்தக் குட்டியனோ குடுகுடு என்று ஓடிப்போய், “சிட்டி!” என்று ராதாவிடம் தாவினான். அவளைக் கண்டதும் மோகனனின் விழிகள் இரண்டும் மின்னின.
இங்கே வர வேண்டும் என்று அவசரமாக வேலைகளை முடிப்பதில் கவனம் செலுத்தியதிலும், இரண்டு நாள் அலைச்சலாலும், ஒரு மாதிரி வந்துவிட்டோம் என்கிற ஆசுவாசத்திலும் அவளும் வருவாள் என்பதை யோசிக்கத் தவறியிருந்தான். இப்போது அவளைக் கண்டது இனிய அதிர்ச்சியே.
கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பிறகு பார்க்கிறான். இன்றும் சேலைதான் அணிந்திருந்தாள். போகிற போக்கில் இந்த உலகிலேயே அவன் வெறுக்கிற ஆடையாக இந்தச் சேலை மாறிவிடும் போலிருந்தது.
அளவான உயரத்தில் மெல்லிய உடல்வாகுடன் இருக்கும் அவளுக்குச் சேலையைக் காட்டிலும் மற்றைய ஆடைகள் அழகு சேர்க்கும் என்பது அவன் கணிப்பு.
வேலையாக இருந்த ராதா, மோகனன் வந்ததைக் கவனிக்கவில்லை. தூக்கச் சொல்லிக் கைகளை உயர்த்திய மதுரனைத் தூக்கிக்கொண்டு, இவன் ஏன் ஓடிவந்தான் என்று கௌசிகன் புறம் பார்த்தபோதுதான், மோகனனைக் கண்டாள்.
அவனும் இன்னும் அவளையேதான் பார்த்திருந்தான். அவளுக்கு அது மெல்லிய பதட்டத்தைக் கொடுத்தது. மதுரனோடு வேகமாக வீட்டுக்குள் சென்று மறைந்துகொண்டாள்.
மோகனனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பவும் மீசையைத் தடவிக்கொடுத்தான்.
சற்று நேரத்தில் மீண்டும் அவர்களிடமே வந்தாள் ராதா. வேறு வழியற்று வருகிறாள் என்று அவள் முகமே சொல்லிற்று. கவனமெடுத்துக் கௌசிகனை மாத்திரம் பார்த்து, “தம்பிய இறக்கி விடாம, உங்களை வச்சிருக்கட்டாம் எண்டு அக்கா சொல்லிவிட்டவா அண்ணா. அங்க வேலை செய்ய விடுறார் இல்ல.” என்றபடி மதுரனை அவனிடம் கொடுத்தாள்.
மதுரனும் ராதாவைப் போலவே இவன் புறமே திரும்பாமல் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் தோளில் முகம் புதைத்துக்கொண்டான்.
மகனின் செயலில் கௌசிகன் சிரித்தான். “இவன் என்னடா பொம்பிளைப் பிள்ளைகளைவிட மோசமா வெக்கப்படுறான்.”
உண்மையிலேயே கௌசிகனுக்கு மதுரனையும் மோகனனையும் எப்படிச் சேர்ப்பது என்று தெரியவே இல்லை. அவனும் பலமுறை முயன்று தோற்றிருந்தான்.


