ஓ ராதா 21 – 1

அன்று வெள்ளிக்கிழமை. யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குச் செல்வதற்கு ஆறு தொடக்கம் ஏழு மணித்தியாலங்கள் பிடிக்கும் என்பதில், மாலை மூன்று மணிபோல் மஞ்சுவையும் ராதாவையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் மோகனன்.

காரில் ஏறியதிலிருந்து மிக மிக இறுக்கமாக அமர்ந்திருந்தாள் ராதா. ஒருவிதமான பயமும் பதட்டமும் அவளை ஆட்டிப்படைத்தன. அவன் கண்ணாடி வழியே பார்ப்பானோ, பார்வையால் தொந்தரவு தருவானோ, தன்னைக் கவனிப்பானோ என்கிற எண்ணங்களே அவளின் இயல்பைப் பறித்துக்கொண்டிருந்தன.

அவனுக்குப் பின்னே ஜன்னலை அண்டி அமர்ந்திருந்தவள் காருக்குள் பார்வையைத் திருப்பவே இல்லை. மஞ்சுவோடு கூடப் பேச முடியவில்லை.

“ஏனடி ஒருமாதிரி இருக்கிற?” என்று மஞ்சு இரகசியமாகக் கேட்டும் ஒன்றுமில்லை என்று சமாளித்தாள்.

மஞ்சு கலகலப்பான பெண். ஆனால், மோகனனைப் பழக்கமில்லை. ராதா ஆரம்பித்துவைத்தால் அவளும் சேர்ந்துக்கொள்ளலாம் என்று பார்த்தால், அந்த ராதாவோ வாயைத் திறப்பேனா என்று இருந்தாள்.

‘அந்த அண்ணாவோட கதையடி’ என்று கண்ணால் சைகை செய்து செய்து களைத்துப்போனவள், ‘எருமமாடே, அவர் உன்ர மச்சான்தானே. வாயத் திறந்து எதையாவது கதையன்! அவர் மெனக்கெட்டு எங்களைக் கூட்டிக்கொண்டு போறார். நீ ஊமச்சி மாதிரி வருவியாடி!’ என்று மெசேஜ் அனுப்பினாள்.

மடியில் கிடந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் பார்வையை ஜன்னலின் புறம் திருப்பிக்கொண்டாள் ராதா.

‘இவளை’ என்று பல்லைக் கடித்தாலும் மஞ்சுவினால் அதற்குமேல் அமைதியாக இருக்கமுடியவில்லை.

“அண்ணா, நான் மஞ்சு. வயது 26 வரும் எண்டு நினைக்கிறன். UNHCRல வேலை செய்றன். வெகு கெதியில(விரைவாக) எங்கட வீட்டுக்கு விளக்கேத்த ஒருத்தன் வருவான் எண்டு அம்மா சொல்லியிருக்கிறா. இப்ப நீங்க உங்களை அறிமுகம் செய்ங்கோ பாப்போம்.” என்று நேரடியாகக் களத்தில் இறங்கினாள்.

சிறு சிரிப்புடன் அவளைக் கண்ணாடி வழியே பார்த்து, “நான் மோகனன் மா.” என்றான் அவன்.

“அவ்வ்வ்வ்! நான் மூச்சடக்கிக் கதைச்சதுக்கு இவ்வளவுதான் உங்கட ரியாக்சனா? சரி சொல்லுங்க, இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க? திடீர் எண்டு எங்க இருந்து குதிச்சீங்க? உங்கட வீட்டுக்கு ஆராவது விளக்கேத்த வரப்போயினமா? அந்த விளக்கு ஏத்திற ஆள் நீங்க பாத்ததா, இல்ல உங்கட அம்மா பாத்ததா?” என்று கேள்விகளாகக் கேட்டுத் தள்ளினாள்.

“எங்கட வீட்டில எல்லாமே எலக்ட்ரிக் விளக்குத்தான். சுவிட்ச தட்டினாலே எரியும். அதால விளக்கு எல்லாம் கஷ்டப்பட்டு ஏத்த தேவையில்லமா.” சிரிக்காமல் சொன்னான் அவன்.

“அண்ணாஆஆ! எனக்கு வாற ஆத்திரத்துக்கு… உங்கள!” என்று கழுத்தை நெரிப்பதுபோல் அவள் செய்தாள்.

சற்றுச் சத்தமாக நகைத்த மோகனன் தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லவும் மீண்டும் அவளுக்குக் குதூகலமாயிற்று.

“நீங்க உடம்ப வளத்திட்டு இந்தத் தாடி முடியெல்லாம் வளத்தீங்களா? இல்ல, தாடி முடிய வளத்திட்டு உடம்ப வளத்தீங்களா?” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

“பேசாம இரடி” என்று ராதா சத்தமில்லாமல் அதட்டியதைக்கூட அவள் காதில் விழுத்தவில்லை.

“ரெண்டையும் ஒண்டாத்தான் வளத்தனான்மா.” என்றான் அவன் சிறு சிரிப்புடன்.

அவள் ஏதோ ஒரு வகையில் யாழினியை நினைவூட்டவும் அவனாலும் அவளோடு இயல்பாகப் பேச முடிந்திருந்தது.

“தாடியையும் முடியையும் நினைச்சா வெட்டலாம். ஆனா இந்த உடம்ப என்ன செய்யலாம்?” என்றவளின் கேள்விக்கு, “இன்னும் வளக்கலாம்.” என்று முடித்துவைத்தான் அவன்.

“இன்னுமா? இந்தப் பூமியும் தாங்காது. உங்களைக் கட்டுறவளும் பாவம்!” என்று ஒரு பேச்சு வேகத்தில் மஞ்சு சொல்லிவிடவும், “எரும! வாய மூடடி!” என்று அவள் கையிலேயே ஒன்று போட்டிருந்தாள் ராதா.

சிறு சிரிப்புடன் வாகனம் செலுத்துவதில் கவனம் செலுத்திய மோகனன் பதிலேதும் சொல்லவில்லை. மஞ்சுவும் எதையும் நினைத்துச் சொல்லவில்லை. ஆனாலும் ஒரு மாதிரியாகிவிட, “அது அண்ணா… சொறி… நான் சும்மா…” என்று தடுமாறினாள். எல்லை தாண்டிப் பேசிவிட்டோமோ என்றெண்ணி அவளுக்கு விழிகளும் கலங்கிப் போயிற்று.

“தெரியும் மா. விடுங்கோ.” என்றான் அவன் இலகுவாகவே.

அதன்பிறகு மஞ்சு நல்லபிள்ளையாகத் தன் வாயை அடக்கிக்கொண்டாலும் அவன் மீது நல்லபிப்பிராயம் உண்டாகியிருந்தது.

ராதாவுக்கு அவனை எண்ணி உள்ளூர ஆச்சரியம். அவள் அறிந்த மோகனன், அல்லது மோகனன் என்கிறவனுக்கு அவள் கொடுத்திருந்த உருவகம் என்பது வேறு.

அவன் ஒரு சிடுமூஞ்சி, கோபக்காரன், ஆத்திரக்காரன், அநாகரிகமானவன், கேவலமானவன். சண்டை சச்சரவு என்று வீண் அகம்பாவம் பிடித்து ஆடுகிறவன். ஆனால் இங்கே, அவள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மோகனன் வித்தியாசமானவனாக இருந்தான்.

அவர்கள் புறப்பட்டு ஒரு மணித்தியாலம் கடந்திருந்தது. திரும்பவும் அவனோடு வளவளத்த மஞ்சுவை நன்றாகவே அசடு வழிய வைத்துக்கொண்டிருந்தான். இருந்தும் ஒரு வார்த்தையோ பார்வையோ தவறவேயில்லை. அவளே அவளறியாமல் இறுக்கம் தளர்ந்திருந்தாள். இலகுவாய் அமர்ந்துகொண்டாள்.

இப்போதுதான் தூரப் பயணம் ஒன்றை அனுபவிக்கும் உற்சாகம் அவளுக்குள் வியாபிக்க ஆரம்பித்தது. அவனுடைய அளவான வேகமும் தளம்பாத ஓட்டமும் பயமற்று அந்தப் பயணத்தை அனுபவிக்க வைத்தது.

எதைப் பற்றிய யோசனையும் இல்லாது, ஓடும் காருக்குள் இருந்து, வீதிக்கரையோரமாக நகரும் ஊரைப் பார்ப்பது மனதுக்கு மிகுந்த உற்சாகத்தைச் சேர்த்தது.

சற்றுநேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, ‘எங்க இந்த மஞ்சுன்ர சத்தத்தையே காணேல்ல…’ என்று திரும்பிப் பார்த்தாள்.

ஹெட்போன்களைக் காதுக்குள் மாட்டிக்கொண்டு ஜன்னலோரம் தலையைச் சாய்த்திருந்தவள் உறக்கத்தின் வாயிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தாள்.

அவள் அப்படித்தான். ஒன்றில் வளவளப்பாள். இல்லையோ உறங்கிவிடுவாள். சிறு சிரிப்புடன் திரும்பிய ராதாவின் விழிகள், கண்ணாடி வழியே தெரிந்த மோகனன் மீது படிந்தது.

அவர்களின் பயணம் ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது. இதுவரையில் அவளைப் பார்க்கவில்லை. அவளோடு பேசுவதற்கும் முயலவில்லை. தன்னை நாயகனாகக் காட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. பின் எதற்காக அவர்களைக் கூட்டிக்கொண்டு போக முன்வந்தான்?

நேராகக் கொழும்பு சென்றுவிட்டுத் திரும்புகிறவனுக்கு, கண்டிக்கு வந்து அவர்களை இறக்கிவிட்டுப் பின் கொழும்பு சென்று அங்கிருந்து மீண்டும் கண்டிக்கு வந்து யாழ்ப்பாணம் திரும்புவது உண்மையிலேயே அலைச்சலான காரியம். இருந்தும் ஏன் செய்கிறான்?

வீதியோரம் விழிகளைத் திருப்பிக்கொண்டவளின் சிந்தனை அவனிடமே சிக்குண்டு நின்றது.

பிடித்திருக்கிறது என்று எல்லோரின் முன் வைத்தும் சொன்னவன் அதன்பிறகு அவளைச் சந்திக்க முனையவே இல்லை. அவளின் பார்வையில் கூடப் படவில்லை.

பிறகு தனியாக அழைத்துச் சென்று பேசியபோது, ‘நீங்க எனக்கு வேணும். உங்கள நான் இன்னொருத்தனிட்டக் குடுக்க மாட்டன்.’ என்று எவ்வளவு தைரியமாகச் சொன்னான். அதன் பிறகும் அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அவள்தான், ஏதும் செய்துவிடுவானோ என்கிற பயத்துடனும் மிகுந்த கவனத்துடனும் நடமாடிக்கொண்டிருந்தாள்.

இப்படி, எந்த வேலைகளும் அற்று, சும்மா இருக்கும் பொழுதுகள் அவளுக்கு அமைவதில்லை. அதனால், இதுவரையில் அவனைப் பற்றி அவள் பெரிதாக யோசித்ததும் இல்லை. இன்று அப்படியான நேரம் அமைந்ததும், கண்ணுக்கு முன்னால் அவன் இருந்ததும் அவனைப் பற்றி அவளை அறியாமலேயே சிந்திக்க வைத்தது.

அவள் பார்வை மீண்டும் அவனிடம் திரும்பிற்று. காருக்குள் யாரையும் தொந்தரவு செய்யாத மெல்லிய இசை. அவன் கவனம் வீதியில் மாத்திரமே. அவ்வப்போது அழைப்புகளும் வந்துகொண்டிருந்தன. ஒற்றைக் காதில் மட்டும் மாட்டியிருந்த ஹெட்போனின் வழியே கேட்டுப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

அடிக்கடி அவனுடைய ஒற்றைக்கை ஒன்று உயர்ந்துவந்து இரு பக்கத்துத் தாடை மயிர்களையும் தடவிவிட்டுக்கொண்டு இருந்தது. செல்லமாகச் சொறிந்தும் விட்டது.

‘கடி சொறி ஏதும் இருக்குமோ? பின்ன, இப்பிடிக் காடுமாதிரி வளத்து வச்சா காத்து படுமா, இல்ல தண்ணிதான் படுமா?’ தடையற்ற சிந்தனையின் போக்கில் அப்படி நினைத்துவிட்டவளுக்குச் சிரிப்பை அடக்கமுடியாமல் போயிற்று. வேகமாகத் தலையைக் குனிந்துகொண்டாள்.

திடீர் என்று அவன் குரல் கேட்கவும், தன்னைக் கவனித்துவிட்டானோ என்கிற பதட்டத்தோடு நிமிர்ந்தாள். அவனுக்கு அழைப்பு வந்திருக்கிறது என்று பிறகுதான் புரிந்தது. அதற்குள், தற்செயலாக விழிகளை உயர்த்தியவன் அவளின் பார்வையைக் கண்ணாடி வழியே நேர்கோட்டில் சந்தித்து இருந்தான்.

நொடி நேரம் திகைத்து விழித்துவிட்டு அவசரமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள் ராதா.

அழைப்பை முடித்ததும், “நிப்பாட்டுறதா?” என்றான் அவன்.

“அது… ஓம்… கால் ரெண்டும் மரத்த மாதிரி இருக்கு. கொஞ்சம் நடந்தா நல்லம்…”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock