‘உண்மைதானா?’ என்று கேட்பதுபோல் சில நொடிகள் அவளையே அவன் பார்க்கவும் அவளுக்கு வியர்க்கும் போலிருந்தது. வேகமாக ஜன்னலின் புறம் திரும்பிக்கொண்டாள்.
“இன்னும் அரை மணித்தியாலத்தில வவுனியாவுக்குப் போயிடுவம். அங்க பார்க்ல நடக்கலாம். இல்ல, அவசரமா நிப்பாட்டோணும் எண்டாலும் நிப்பாட்டுறன்.”
“இல்ல இல்ல. வவுனியாவிலேயே நிப்பாட்டுங்கோ.” என்றாள் அவள்.
சொன்னதுபோலவே, வவுனியா பொது நூலகத்தோடு அமைந்திருந்த பார்க்கின் முன்னால் காரைக் கொண்டுபோய் நிறுத்தினான்.
அவர்கள் இருவரையும் பார்க்குக்குள் அனுப்பிவிட்டு, “நான் இஞ்சதான் இருப்பன், உங்களுக்கு விருப்பமானமாதிரி நடந்திட்டு வாங்கோ!” என்று அனுப்பிவைத்தான்.
“நீங்களும் வரலாமே அண்ணா.” என்று அழைத்தாள் மஞ்சு.
“எனக்கு ஒரு கோல் வரும் மா. நீங்க போயிட்டு வாங்கோ! என்ன எண்டாலும் ஒரு ஃபோன் போடுங்கோ.” என்றவன், “ஹாய்!” என்று ராதாவுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டான்.
மெசேஜ் வந்து விழுந்த சத்தத்தில் கையில் இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்த ராதா, அவன் என்று அறிந்ததும், ‘இவனுக்கு எப்பிடி என்ர நம்பர் கிடைச்சது?’ என்கிற திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.
கண்ணில் சிரிப்புடன், “இதுதான் என்ர நம்பர். என்ன எண்டாலும் கூப்பிடுங்கோ.” என்றான் அவன்.
அவனும் இருந்தால் அவர்களால் இயல்பாகப் பேசிச் சிரிக்க முடியாது என்றுதான் கூட வராமல் தவிர்க்கிறான் என்று இருவருக்குமே புரிந்தது.
இருவருமாகப் பூங்காவினுள் நடக்கையில், “ஆள பாக்கத்தான் பயங்கரமா இருக்கிறார். மற்றும்படி அண்ணா சூப்பர்.” என்று பாராட்டினாள் மஞ்சு.
அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை ராதா. நடந்துகொண்டிருந்த மஞ்சு யோசனையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவளின் முன்னால் வந்து நின்றாள்.
“நீ ஏன் அவரோட கதைக்கிறாய் இல்ல? சொந்தம்தானே. பிறகு என்ன? ஏதும் சண்டையா?” என்றாள் கண்களில் கூர்மையோடு.
“லூசு! சண்டை பிடிச்சுக்கொண்டு கதைக்காம இருக்க நாங்க என்ன சின்ன பிள்ளைகளா? அண்ணின்ர வழில சொந்தம் எண்டாலும் பெருசா எனக்குப் பழக்கம் இல்ல. பழக்கம் இல்லாதவரோட உன்ன மாதிரி அலட்டி, வாங்கிக்கட்டச் சொல்லுறியா?” என்று அதட்டினாள் ராதா.
“எண்டாலும் உன்ர அமைதில வித்தியாசம் இருக்கு. திரும்பி வாறதுக்கிடையில கண்டுபிடிக்கிறன்.”
“இவ பெரிய ஜேம்ஸ் பாண்ட். கண்டயும் மாட்டயும் பிடிக்கப்போறாவாம். வா, நடப்பம். இன்னும் குறைஞ்சது நாலு மணித்தியாலத்துக்கு இருந்தே போகோணும்!” என்றுவிட்டு அவளையும் இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ராதா.
அடுத்துவந்த இருபது நிமிடத்துக்கு வேகநடையை நடந்துவிட்டு அவனிடம் வந்து சேர்ந்தனர்.
இரண்டு குளிர்பானம் அடங்கிய பேப்பர் கப்புகளை அவன் நீட்டியது, காய்ந்து போயிருந்த தொண்டைக்கு வெகு இதமாக இருந்தது. அடுத்த இரண்டு மணித்தியாலமும் மஞ்சுவின் வளவளப்போடே நகர்ந்துபோயிற்று.
இரவுணவுக்காக ஒரு ஹோட்டலில் நிறுத்தினான் அவன்.
“நான் சாப்பாடு கொண்டுவந்தனான். சாப்பிட்டு ஏதும் குடிக்கிறதுக்கு வேணும் எண்டால் இஞ்ச வாங்குவம்.” என்றாள் ராதா அவனைப் பாராமல்.
வியப்புடன் அவளை நோக்கினான் மோகனன். ஆனாலும் ஒன்றும் சொல்லவில்லை. காரில் வைத்தே சாப்பிட்டனர். சிக்கன் பிரியாணியின் சுவை வெகு அருமையாக இருந்ததில் கூச்சமே படாமல் இரண்டாம் தரமும் வாங்கிச் சாப்பிட்டான் மோகனன்.
“ஆர் செய்தது?”
“நான்தான்…” இப்போதும் இன்னொரு கரண்டி மஞ்சுவுக்குப் போடும் சாட்டில் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துக்கொண்டு சொன்னாள் ராதா.
“நல்லா சமைப்பீங்க போல…” என்றவனுக்கு அவள் பதில் சொல்வதைத் தவிர்க்க, “சமையல் மட்டும் இல்ல அண்ணா. கேக், பிஸ்கட் எல்லாம் சூப்பரா செய்வாள். எங்கட கம்பஸ்(பல்கலை)ல இவள்தான் பெஸ்ட் குக்!” என்றாள் மஞ்சு.
“ஓமோம்! நான் பெஸ்ட் குக். நீ பெஸ்ட் தின்னிப் பண்டாரம்! வாய மூடிக்கொண்டு சாப்பிடடி விசரி!” என்று அவளை அடக்கினாள் ராதா. என்னவோ, அவனிடம் தன்னைப் பற்றிப் பேசுவது அவளுக்கு ஒருமாதிரி இருந்தது.
அந்த ஹோட்டலிலேயே தம் தேவைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, ஆளுக்கொரு இஞ்சித் தேநீர் பருகிவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தனர்.
இப்போது, காரை சூழ்ந்திருந்த இருள் ராதாவை இன்னுமே ஆசுவாசப்படுத்தியது. கிட்டத்தட்ட ஐந்து மணித்தியாலங்களாக அவனுடன் கூடவே பயணிக்கிறாள். ஒரு நொடியில் கூட ஏனடா இவனோடு புறப்பட்டு வந்தோம் என்று நினைக்க வைக்கவே இல்லை.
அனுராதபுரத்தைத் தாண்டி வருகையில் மெல்லிய இருள் கவிழ்ந்திருந்த போதிலும் ஒரு ஆற்றங்கரையோரமாகக் காரை நிறுத்தி, சலசலக்கும் காற்றை வாங்கியபடி மீண்டும் சற்றுத் தூரம் நடந்ததும், அதன்போது அவர்கள் இருவரையும் முன்னால் விட்டுவிட்டுப் பாதுகாப்பாக அவன் பின்னால் வந்ததும், அங்கிருந்த படிக்கட்டால் இறங்கி ஆற்றில் கால் நனைத்ததும் கூட மிக நன்றாக இருந்தது.
இன்னுமொரு இடத்தில் ஆச்சி ஒருவர் ரம்புட்டான் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்தார். கடைசி வியாபாரம் என்று அவரிடம் இருந்த முழுவதையும் வாங்கிக்கொண்டு, அவரின் அந்தக் குட்டிக் கடையை இவர்களும் சேர்ந்து மூடிக்கொடுத்தது இனிய அனுபவம்.
இதோ, இப்போது அவர்களின் பயணம் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதுவரை நேரமும் இருந்த இயல்பை மீண்டும் பறிகொடுக்க ஆரம்பித்திருந்தாள் ராதா.
இப்போது அவன் பார்வை இரண்டு மூன்று தடவைகள் அவளைத் தொட்டுச் சென்றதைக் கூட அவள் கவனிக்கவில்லை.
கடைசியாக அவர்களின் தோழியின் வீட்டின் முன்னால் கொண்டுவந்து காரை நிறுத்தினான் மோகனன்.
“அண்ணா, தேங்க்ஸ் அண்ணா. பயணம் சூப்பரா இருந்தது. ஞாயிறு நீங்க கொழும்பில இருந்து வெளிக்கிடேக்க ராதாக்கு மெசேஜ் போட்டுவிடுங்கோ. அப்ப, நீங்க வரேக்க நாங்க ரெடியா இருப்போம்.” என்றுவிட்டு மஞ்சு இறங்குவதற்குள் அந்தத் தோழியும் இவர்களிடம் ஓடி வந்திருந்தாள்.
இன்னும் சில தோழர் தோழிகள் அங்கு ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தனர். இவர்கள் காரை விட்டு இறங்கிய நொடியிலேயே சிரிப்பும் கனைப்புமாக அந்த இடமே களைகட்டத் தொடங்கியிருந்தது. மோகனனும் இறங்கி, அவர்களின் பயணப்பைகளை எடுத்துக்கொடுத்தான்.
“அண்ணா, நீங்களும் வாங்கோ. லேட்டாயிட்டுது எல்லா. இரவுக்கு இஞ்சயே தங்கிட்டு நாளைக்கு வெளிக்கிடலாம்.” என்று இவனையும் அழைத்தாள் அந்தப் பெண்.
“இல்லையம்மா. நான் விடிய எட்டு மணிக்கு அங்க நிக்கோணும்.” என்று இன்முகமாகவே மறுத்துவிட்டு, புறப்படுகிறேன் என்பதுபோல் ராதாவிடம் தலையசைத்தான்.
அவளின் தலையும் அதுபாட்டுக்கு அசைந்து விடைகொடுத்தது. நண்பர்கள் குலாம் தேனீக்கள் போல வீட்டை நோக்கி நகர்ந்தது. ஏறுவதற்காகக் காரின் கதவைத் திறந்தவன் பின் திரும்பி, “ராதா!” என்று அழைத்தான்.
நடந்துகொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்த்தாள்.
தலையை அசைத்து அவளைத் தன்னிடம் அழைத்தான் மோகனன்.
அவளும் வந்தாள்.
“இவ்வளவு நேரமா இல்லாத பதட்டம் இப்ப ஏன் வந்தது?” என்றான் அவளிடம் மற்றவர்களுக்குக் கேட்காத மெல்லிய குரலில்.
அவள் உதட்டைப் பற்றியபடி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“ஆரையாவது நேருக்கு நேரா சந்திக்கிறதுக்குத் தயங்குறீங்களா?”
அதிர்விலும் திகைப்பில் விழிகள் விரிய அவனைத் திரும்பிப் பார்த்தாள் ராதா.
சிறு சிரிப்புடன், “சின்ன ஊகம்தான்.” என்றான் அவன்.
“இதே சூழ்நிலையக் கடந்து வந்தவன்தான் நானும். நாங்க தயங்கிற ஒரு சந்திப்ப சந்திக்காத வரைக்கும்தான் இந்தத் தேவை இலலாத பயம், பதட்டம் எல்லாம் இருக்கும். சந்திச்சிட்டம் எண்டா இதுக்கா இந்தப் பாடு பட்டம் எண்டமாதிரி இருக்கும். நீங்க கெட்டிக்காரி. எந்த இடத்துலயும் நிமிந்து நிக்கோணும். நான் அவ்வளவு கோவமா கதைச்சும் பயப்படாம பதில் சொன்ன ஆள். இதுக்கெல்லாமா பதறுவீங்க? ஒண்டுக்கும் யோசிக்காம போங்க. நாளைய நாள சந்தோசமா என்ஜோய் பண்ணுங்கோ. என்ன பிரச்சினை எண்டாலும் கொஞ்சமும் யோசிக்காம எனக்குச் சொல்லோணும். சரியா? உடன வருவன்.” என்றான் கனிவோடு.
விழிகளில் மெலிதாக நீர் திரையிடச் சரி என்று தலையை ஆட்டினாள் அவள்.
“அல்லது… இஞ்சயே எங்கயாவது ரூம் போட்டுக்கொண்டு நிக்கவா?” என்னவோ அவளை அப்படி விட்டுவிட்டுப் போக மனம் வரமாட்டேன் என்றது அவனுக்கு.
“இல்ல இல்ல. நீங்க போயிட்டு வாங்கோ. ஏதும் எண்டால் கட்டாயம் சொல்லுவன்.” வார்த்தைகளில் சொல்லத் தெரியாத இதம் ஒன்று மனத்தைச் சூழ, அவன் முகம் பார்த்துச் சொன்னாள் அவள்.
அவன் முகமும் தெளிந்தது. “கவனம் என்ன. நான் வாறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டான்.
எந்த உணர்வு உந்தியதோ, அவன் கார் மறைகிற வரைக்கும் அங்கேயே நின்றுவிட்டு வீடு நோக்கி நடந்தாள் ராதா.


