கொழும்பில் தன்னுடைய அலுவல்களைப் பார்த்தாலும் அவளின் நீர் திரையிட்ட விழிகளே மோகனனின் நினைவில் நின்று அலைக்கழித்தன. அழைத்து, எப்படி இருக்கிறாய் என்று கேட்போமா என்று பலமுறை நினைத்துவிட்டான்.
அதிகப்படியாக உரிமை எடுப்பதாக நினைத்துக்கொள்வாளோ என்று அடக்கிக்கொண்டான். கைப்பேசி அவன் கையிலேயே இருந்தது. குறுஞ்செய்தி வந்தால் ஒலி எழுப்பும் என்று தெரிந்திருந்த போதிலும், தன் காதுகளை நம்பாமல் ஏதாவது வந்திருக்கிறதா என்று அடிக்கடி பார்த்தான்.
இரவு வரை கடத்தியவனுக்கு அதற்குமேல் முடியவில்லை. “நாளைக்கு விடிய(காலை) எட்டு மணிபோல வரட்டா? இல்ல லேட்டாவா?” இதை ஒரு சாட்டாக வைத்து அவளுக்குக் குறுந்தகவல் அனுப்பினான்.
சில நிமிடங்கள் கடந்தபின், “இல்ல, எட்டு மணிக்கே வாங்கோ.” என்று, அவள் அனுப்பியிருந்தாள்.
‘எஸ்’ என்றோ, ‘ஓகே’ என்றோ சுருக்கமாக இல்லாமல் அவள் தந்த முழுமையான பதிலில் அவன் முகம் சட்டென்று ஒளிர்ந்தது.
அடுத்த நொடியே எப்படி இருக்கிறாள் என்று அறிய நினைத்தான். இன்றைய நாள் எப்படிப் போனது என்று கேட்க நினைத்தான். அவள் தயங்கிய அந்த ஒன்றை நல்லபடியாகக் கடந்தாளா என்று தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.
ஏன், அழைக்கவா என்று கேட்கவும் ஆசைப்பட்டான். கைப்பேசி வாயிலாக அவளின் குரலைக் கேட்க மனம் ஆவல் கொண்டது. பல முறை பல மாதிரி டைப் செய்து செய்து அழித்துவிட்டு, கடைசியில், “உங்கள் சித்தப்படியே மகாராணி!” என்று மட்டும், உதட்டில் முளைத்த சிரிப்புடன் அனுப்பிவிட்டான்.
பதில் வராது என்று தெரியும். அவனும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதைப் பார்த்துவிட்டு என்ன நினைப்பாள் என்று ஓடியது. திட்டுவாளா? அல்லது, அவனைப் போலவே தானாகச் சிரிக்கும் உதடுகளை அடக்க முயல்வாளா? சுகமாக மனத்தைத் தாலாட்டும் அவளின் நினைவுகளோடு விழிகளை மூடிக்கொண்டான்.
காருக்குள் எதேற்சையாகத் தன் பார்வையைச் சந்தித்ததும் அவள் பட்ட பாடு நினைவில் வந்தது. அவள், அவளோடான பயணம், அவளின் பார்வைகள், அவள் கொண்டுவந்த பிரியாணி, கடைசியாக அவளோடு தனியாகப் பேசக் கிடைத்த சில நிமிடத்துளிகள் என்று நேற்றைய நாளை அவனால் என்றைக்குமே மறக்க முடியாது.
அந்த இனிய நினைவுகளோடே உறங்கிப்போனான்.
அடுத்தநாள் காலையில், சரியாக எட்டு மணிக்கு அவனுடைய கார் அந்த வீட்டின் முன்னே நின்றது. அவன் காரை விட்டு இறங்கவும் அந்த வீட்டின் குடும்பத்தலைவி வெளியே வந்தார்.
“வாங்கோ அப்பு வாங்கோ வாங்கோ. நேற்று வீட்டுக்க வராம வாசலோடயே போயிட்டிங்க. இண்டைக்குச் சாப்பிடாம வெளிக்கிடக் கூடாது.” என்று இன்முகமாய் அழைத்துக்கொண்டு சென்றார்.
“நேற்று டைம் இருக்கேல்ல ஆன்ட்டி. அதுதான் வரேல்ல. இண்டைக்கும் தேத்தண்ணி மட்டும் காணும். இப்பவே சாப்பிட்டா கார் ஓடச் சிரமமா இருக்கும்.” அவரோடு கூடவே நடந்தபடி வீட்டுக்குள் வந்தவன், எதிரில் வந்தவளைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான்.
முழங்கால் வரையிலான காப்ரி டெனிம் ஜீன்சுக்கு, பஃப் கை வைத்த ஒரு குட்டி டொப் அணிந்து, முடிகளை எல்லாம் ஒன்றாக்கி உச்சி மண்டையில் கொண்டையாக்கி இருந்தவளிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.
சேலையைக் காட்டிலும் மற்ற ஆடைகள் மிக நன்றாக இருக்கும் என்று அவனே நினைத்தான்தான். என்றாலும் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. அந்தளவில் மனத்தை அள்ளினாள்.
முதலில் தடுமாறினாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு அவள் முகத்தை ஆராய்ந்தான். அது என்றுமில்லாத வண்ணம் இன்று தெளிந்து ஒளிர்ந்தது. அவனைப் பார்த்து வரவேற்பாகத் தலையை வேறு அசைத்தாள் ராதா.
ஆக, அவள் கலங்கிய அந்த ஒன்றை நல்லபடியாகக் கடந்திருக்கிறாள். அவளின் மனத்தின் சுமைகள் நீங்கிவிட்டது. பதில் தலையசைப்பை அவளுக்குக் கொடுத்தவனின் மனதும் அப்போதுதான் அமைதியாகிற்று.
அவளுக்கும் அவன் தன் முகத்தை ஏன் ஆராய்ந்தான் என்று தெரியாமல் இல்லையே. உண்மையில் மனத்தின் தளைகள் எல்லாம் அகன்றுதான் இருந்தன. அவனுக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட மனம் உந்தியது. அந்தளவில் அவர்களுக்குள் சீரான எந்த உறவும் இல்லாததால், தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாமல் நின்றாள்.
“ஹாய் அண்ணா, குட் மோர்னிங்! சொன்ன மாதிரியே வந்திட்டீங்களே…” என்றுகொண்டு வந்த மஞ்சு, சட்டென்று நின்று இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“சொல்லிவச்சு ஒரே மாதிரி உடுப்புப் போடுறதக் கேள்விப்பட்டு இருக்கிறன். ஆனா ஒரே மாதிரிக் கொண்டை போடுற ஆக்களை இப்பதான் பாக்கிறன்.” என்று அவள் சொன்ன பிறகுதான் ராதாவும் கவனித்தாள்.
அவனும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து வாரிக் கொண்டைதான் போட்டிருந்தான். இப்படி மானத்தை வாங்கிவிட்டானே. அவளுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்து பொங்கின.
அவனை முறைக்கலாம் என்றால் சிரிக்கும் உதடுகளை மீசையை நீவியபடி மறைத்துக்கொண்டிருந்தான் அவன். அவன் கண்கள் வேறு பிரத்தியேகமாகச் சிரித்தபடி அவளையேதான் நோக்கிக்கொண்டிருந்தன.
அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்துகொண்டாள் ராதா.
மஞ்சு அவனுடன் கலகலக்க ஆரம்பிக்க, பால் தேநீருடன் ஒரு தட்டு நிறைய முறுக்கு, சீனி அரியதரம், தட்டுவடை, கொக்கிஸ் என்று இன்னும் நிறையப் பலகாரங்களைக் கொண்டுவந்து கொடுத்தார் அந்த வீட்டுப் பெண்மணி.
அவரின் மனம் கோணாதபடி இரண்டு பலகாரங்களை வாயில் இட்டவன் தேநீரை அருந்தி முடித்துவிட்டு, ராதா மஞ்சு இருவரோடும் புறப்பட்டான்.
பிரதான வீதியில் காரை ஏற்றியதும், “பிறகு, எப்பிடிப் போச்சுக் காலியாண வீடு?” என்று பொதுவாக விசாரித்தான்.
அந்தளவே மஞ்சுவுக்குப் போதுமாயிற்று. மணமகன் மணமகளை அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து செய்த சேட்டையிலிருந்து, சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து, பிடித்த சண்டைகள் என்று அனைத்தையும் அவள் சொல்லி முடித்தபோது இரண்டு மணித்தியால தூரத்தைக் கடந்திருந்தனர்.
“ரெண்டு மணித்தியாலமா கார்தான் நிக்காம ஓடுது எண்டு பாத்தா…” மிகுதியைச் சொல்லாமல் சிரிப்புடன் மஞ்சுவைப் பார்த்தான் மோகனன்.
ஒரு நொடி அசடு வழிந்தாலும் அவனை முறைத்தாள் அவள்.
“நக்கலடிக்கிறீங்க என்ன? என்னை என்ன உங்கட உறவுக்காரி மாதிரி ஊமச்சி எண்டு நினைச்சீங்களா? ஒரு கலியாண வீட்டுக்கு வராமலேயே வந்த ஃபீல உங்களுக்கு நான் தந்தேனா இல்லையா?”
“அது என்னவோ உண்மைதான்!” என்ற மோகனன், கேள்வியும் குழப்பமுமாகக் கண்ணாடி வழியே தன்னை நோக்கியவளைக் கண்டு கண்ணால் சிரித்தான்.
கடந்த பத்து நிமிடங்களாக அவள் இப்படித்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவனும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறான். ஆனாலும், அவனாக ஒன்றும் சொல்லவில்லை. அவளாகக் கேட்கட்டும் என்று காத்திருந்தான்.
அவன் பார்வையும் சிரிப்பும் அவளைக் கண்டுகொண்டான் என்று சொல்லிற்று. சொல்லாமல் கூட்டிக்கொண்டு போனால் பயந்து நடுங்குவாள் என்று நினைக்கிறானோ? பார்ப்போமே அப்படி எங்கேதான் போகிறான் என்று.
சவாலாக அவனை நோக்கிவிட்டு, கைப்பேசியில் கூகிள் ஆண்டவரின், ‘ஜிபிஎஸ்’ ஐ ஓன் செய்தாள். தற்போது அவர்கள் பயணித்துக்கொண்டிருப்பது தம்புள்ளை(Dambulla) என்கிற இடத்தின் கிளைப்பாதை என்று காட்டியது.
அந்தப் பாதை எங்கே போகிறது என்று திரையை இழுத்து நகர்த்திப் பார்க்கத் தம்புள்ளை பொற்கோவில்(Dambulla golden temple) இருப்பது தெரிந்தது.


