மீண்டும் நிமிர்ந்து அவனைப் பார்வையால் வெட்டிவிட்டு, “தம்புள்ள ராஜமகா விகாரைக்குப் போறம் போல மஞ்சு.” என்றாள், அவனுக்குக் கேட்கட்டும் என்றே.
மோகனனின் உதட்டு முறுவல் விரிந்தது.
“உண்மையாவா அண்ணா?” துள்ளிக்கொண்டு கேட்ட மஞ்சுவுக்கு ஆம் என்று சொன்னவன், அடுத்த பத்தாவது நிமிடத்தில் பொற்கோவில் அமைந்திருந்த மலைப்பாதையில் காரை ஏற்றியிருந்தான்.
இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள எனுமிடத்தில் அமைந்திருக்கும் குடைவரைக் கோயில் அது. குகைகளைக் குடைந்து செய்யப்பட்டிருந்த அந்தக் கோவிலில் புத்தபிரானின் பல சிற்பங்கள், இந்துக் கடவுள்களின் சிற்பங்கள், மன்னர்களின் சிற்பங்கள், இன்று வரையிலும் அழியாத சுவரோவியங்கள் என்று நிறைய உண்டு.
அந்த மலைப்பாதையில் சுற்றி சுற்றி அவர்களின் கார் ஏறுகையிலேயே, பிரமாண்டமாக எழுந்து நின்ற மலையும், அதன் முன்னே அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையும், அதைச் சூழ்ந்து உயர்ந்து வளர்ந்து நின்ற பாக்கு மரங்களும், அதைவிடவும் உயரமாய்த் தங்க நிறத்தில் பிரமாண்டமாய் வீற்றிருந்த புத்தபெருமானும் என்று ஆரம்பமே பிரமிக்க வைத்தது.
காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, புத்த விகாரையைக் கடந்து, மலையைக் குடைந்து செய்திருந்த படிகளினூடு மேலே ஏறினர். மனிதர்களை விடவும் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாய் இருந்தன.
“பயப்படாம வாங்கோ!” என்று இருவரையும் பக்குவமாக அழைத்துச் சென்றான் மோகனன்.
மலையோடு சேர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், மரங்களோடு பின்னிப் பிணைந்திருந்த பெயர் தெரியாத கொடிகள், அவற்றில் மலர்ந்திருந்த மலர்கள், அதிலிருந்து வந்த வாசம், வீசிய காற்று என்று அந்த இடமே மனத்தை மயக்கிற்று.
ஒரு வழியாக மேலே ஏறி, வரவேற்ற தாமரைத் தடாகத்தைத் தாண்டிக்கொண்டு குகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த சிற்பங்களையும் சிலைகளையும் ஓவியங்களையும் கண்டு பிரமித்துப்போனார்கள்.
அதுவும் சயனத்தில் இருந்த மிகப்பெரிய புத்தபெருமானைக் கண்டபோது சிலிர்த்தது. அவரை விட்டு நகர மனமே வரவில்லை. ராதாவும் மஞ்சுவும் சற்று நேரம் அங்கேயே அமர்ந்துகொண்டனர்.
எல்லாமே சின்ன வயதில் பாடமாகப் புத்தகத்தில் படித்தவைதான். ஆனால், அதை முப்பரிமாணக் காட்சியாகக் கண்முன்னே கண்டபோது இமைமூடித் திறக்க முடியவில்லை.
திரும்புகிற இடமெங்கும் அழகு கொட்டிக்கிடந்தது. எத்தனையோ தலைமுறைகளுக்கு முந்தியவர்களின் பாதங்கள் பட்ட இடமல்லவா! அவர்களும் இங்கே வந்திருப்பார்கள், வழிபட்டிருப்பார்கள், எதையாவது பேசிச் சிரித்திருப்பார்கள் என்கிற எண்ணங்கள் தோன்றி உடலையும் மனத்தையும் புல்லரிக்கச் செய்தன.
மலையின் உச்சியில் நின்று பார்த்தபோது, படிந்திருந்த பனித்துகள்களுக்கு மத்தியில், வெகு தொலைவில் சிகிரியா மலைக்குன்று கலங்களாகத் தெரிந்தது. என்றாவது ஒருநாள் அங்கும் செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் ராதா.
அப்படியே நடந்து இன்னொரு பக்கமாக இருந்த இந்துக் கோவிலுக்கும் சென்று கும்பிட்டனர்.
மஞ்சு அந்த இடத்தையே வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுப்பதில் கவனமாக இருந்தாள். ராதாவுக்கு நிறைய நாட்களுக்குப் பிறகு மனம் நிர்மலமாய் இருந்தது. அவளும் நிம்மதியாக இருந்தாள்.
ஏதோ ஒன்று உந்த திரும்பிப் பார்த்தாள். கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, அவர்களைச் சுற்றியிருந்த இயற்கையில் பார்வையைப் பதித்திருந்தான் மோகனன்.
அவனருகில் சென்று, “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” என்று விசாரித்தாள்.
திரும்பி அவளைப் பார்த்தான் மோகனன். என்ன எனக்குத் தெரியும் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. “எல்லாம் ஒரு ஊகம்தான்.” என்றான்.
“அதுதான்… அந்த ஊகமும் எப்பிடி வந்தது? அண்ணா, அம்மா ஆருக்குமே தெரியாது.” என்றாள் முணுமுணுப்பாக.
அவன் பார்வை கனிவுடன் நொடிக்கும் அதிகமாய் அவளில் தங்கிப் பின் விலகிற்று. மஞ்சு எங்கே என்று பார்த்தான்.
அவள் சற்றுத் தொலைவில் நிற்கவும், “எனக்குத் தெரிஞ்ச வரையில உங்களிட்ட எப்பவுமே ஒருவித நிதானமும் அமைதியும் இருக்கிறதைக் கவனிச்சு இருக்கிறன். யாழி கலியாணப் பேச்ச ஆரம்பிச்ச அண்டுதான் முதன் முதலா நீங்க அவசரப்பட்டுக் கதைச்சுப் பாத்தனான். என்னைப் பிடிக்காது, வெறுக்கிறீங்க எண்டு தெரியும். அதுதான் போல எண்டு அப்ப நினைச்சன். இருந்தாலும், விழுந்தடிச்சுக்கொண்டு அண்ணிட்டப் போய் நீங்க கதைச்சது லைட்டா உதைச்சது. அப்பவும், என்ர கடந்தகாலம் உங்களுக்குத் தெரியும்தானே. அதால மறந்தும் இவனைக் கட்டிடக் கூடாது எண்டு யோசிச்சுப் புத்திசாலித்தனமா நடந்திருக்கிறீங்க எண்டு நினைச்சன். ஆனா, கோயில்ல வச்சு நீங்க பதறினதும், பட்ட பாடும், உங்கட கண்ணீரும் இல்ல இது வேற என்னவோ எண்டு உறுதியா சொன்னது.” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் ராதா.
அந்தப் பார்வை உண்டாக்கிய சின்ன முறுவலோடு, “உங்களைப் பொம்பிளை பாக்க வந்தது எல்லாம் ஒரு விசயமே இல்ல. உங்கட அண்ணாவ ஈஸியா சமாளிக்க உங்களுக்குத் தெரியாமலும் இல்ல. ஆனாலும் எங்கட அண்ணாவைக் கூப்பிட்டிங்க. காரணம் நீங்க நிதானத்திலேயே இல்ல. எப்பவும் என்னைக் கண்டா அவ்வளவு வெறுப்பா பாப்பீங்க. அண்டைக்கு நான் உங்கட கவனத்திலேயே இல்ல. அதுதான் யோசிக்க வச்சது. அதுதான் நீங்க ஆரையும் விரும்புறீங்களா எண்டு கேக்கச் சொன்னனான்.” என்றான் அவன்.
எவ்வளவு துல்லியமாகக் கவனித்திருக்கிறான். உள்ளூர வியந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “ஆனா, நான் இல்லை எண்டுதானே சொன்னனான்.” என்றாள்.
“இப்பதானே இல்ல. இதுக்கு முதல் இருந்திருக்கலாம். அது தோல்வில முடிஞ்சிருக்கலாம். அது காயமா ஆறாம மனதில தங்கியே போயிருக்கலாம்.” என்றான் அவன் இலகுவாக.
உதட்டைப் பற்றியபடி அமைதியாக நின்றாள் அவள். சற்றுக்கு அவள் முகத்தையே பார்த்துவிட்டு, “இதெல்லாம் ஒரு விசயமா! விடுங்க, அதுதான் இப்ப எல்லாம் சரியாகிட்டுதுதானே.” என்றான் தன்மையாக.
அவள் அவனைக் கேள்வியோடு ஏறிட்டாள். அது எப்படித் தெரியும் என்று கேட்கிறாள்.
சிறு சிரிப்புடன் ஒற்றை விரலினால் அவளின் முகத்தை வட்டமடித்துக் காட்டி, “அப்பிடியே மின்னுது.” என்றான்.
அவனை நன்றாக முறைத்துவிட்டு வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள் ராதா. அவன் உதட்டினில் இளஞ்சிரிப்பு மலர்ந்தது.
“நேற்று அவரும் வந்திருந்தவரா?” மெல்ல விசாரித்தான்.
“ம்! இப்ப அவருக்கு ஒரு மகளும் இருக்கிறா. நேற்று முழுக்க அவா என்னோடதான். எங்கட மதுரனை மாதிரி கியூட் குட்டி!” ரசித்துச் சொன்னாள்.
“ஓ! மகளுக்கு உங்கட பெயரையா வச்சிருக்கிறார்.” என்றான் வேண்டும் என்றே.
“உங்களுக்கு என்ன விசரா? அவர் ஏன்…” என்று கோபமாக ஆரம்பித்தவள் அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில், அவனை நன்றாக முறைத்தாள்.
“சரி விடுங்க. நாங்க எங்கட மகனுக்கு அவரின்ர பெயரை வைப்பம்.” என்றான் அப்பட்டமாக நகைக்கும் குரலில்.
“உங்கள… என்ன கதைக்கிறீங்க? கன்றாவி!” என்று அதட்டியவள் அவன் சொன்னதை முழுமையாக உள்வாங்கவில்லை என்று தெரிந்தது. முகம் கொள்ளா சிரிப்புடன் அவளையே பார்த்தான் மோகனன்.
அவனுடைய அந்தக் கேலியும் கிண்டலும் அவளை இன்னுமே இலகுவாக்கியிருந்தன. அதில், “அது… எனக்குத்தான் அவரைப் பிடிச்சிருந்தது. நானே தைரியமா போய்ச் சொல்லிட்டன். கடைசிவரைக்கும் அவர் ஓம் எண்டு சொல்லவே இல்ல. அது அந்த நேரம் பெரிய தோல்வி மாதிரி இருந்தது. அவருக்குக் கலியாணம் நடந்த நேரம் பெரிய பாதிப்பா இருந்தது. பிறகும் ஒருமாதிரி அவமானமா, வலியா என்ன எண்டு சொல்லத் தெரியேல்ல. கவலையாவும் இருக்கும். அதைத் தாண்டி வரவே ஏலாம இருந்தது. ஆனா இப்ப…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“நேற்று நான் நடுங்காத குறை. நீங்க கூப்பிட்டுக் கதைக்காட்டி எப்பிடிச் சமாளிச்சு இருப்பனோ தெரியாது. ஆனா இப்ப… நீங்க சொன்ன மாதிரி இவ்வளவுதானா எண்டு இருக்கு.” என்று மனத்தைத் திறந்தாள்.
புரிகிறது என்பதுபோல் சிறு தலையாட்டலைக் கொடுத்தான் அவன். அவனும் அதைக் கடந்தவன்தானே.
அவள் திரும்பவும் கேள்வியாகப் பார்த்தாள்.
“தீபா” என்றான் சுருக்கமாக. “இந்த எட்டு வருசம் வராம இருந்ததுக்கு அவாவைச் சந்திக்கப் பயந்ததும் ஒரு காரணம். ஆனா, எதிர்பாராம ரெண்டு பிள்ளைகளோட பாத்ததும் ஒரு அம்மாவாத்தான் தெரிஞ்சா. மனதுக்கு அவ்வளவு நிம்மதியா இருந்தது.” என்றான் அவன்.
உண்மையாக நேசித்திருக்கிறான் போலும். அதற்கென்று அவன் செய்தவைகள்? அவை நினைவில் வரவும் அவள் முகம் அப்படியே சுருங்கிப் போனது. அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அந்த ஒற்றை முகத்திருப்பலில் மிக ஆழமாகக் காயப்பட்டான் மோகனன். அதுவரை நேரமாக இருந்த இதமான மனநிலை கலைந்து போயிற்று. சுர் என்று ஒரு கோபம் அவனுக்குள் இருந்து பொங்கிக்கொண்டு வர, விருட்டென்று அவளிடமிருந்து விலகிப்போனான்.


