மஞ்சுவை முன்னால் அனுப்பிவிட்டுத் தன் நடையின் வேகத்தைக் குறைத்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே மோகனனும் பின் தங்கினான்.
“என்ன? வேற ஏதும் வேணுமா?”
“இல்ல… அது… எனக்கு உங்கட ஃபோனை பாக்கோணும்.”
“ஏன்?” அவள் பார்ப்பதில் அவனுக்கு ஒன்றுமில்லை. ஆனால், திடீரென்று ஏன்? இப்படியெல்லாம் உரிமை எடுத்துக் கேட்கிறவள் இல்லையே அவள்.
“அது சும்மாதான். எடுத்த ஃபோட்டோக்களை பாக்க.” அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்தபடி சொன்னாள்.
ஒரு நொடி அவன் புருவங்கள் சுருங்கின. அடுத்த நொடியே கண்கள் சிவந்தன. நடை நிற்க, “சந்தேகப்படுறீங்களா?” என்றான் பல்லைக் கடித்தபடி.
“இல்ல… அது…”
அவன் விழிகள் அவளை எரித்தன. ராதாவால் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. தவறு செய்துவிட்டோமோ என்று மனது பதறியது.
காற்சட்டைக்குள் இருந்த கைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“செக் பண்ணுங்க.”
“இல்ல வேண்டாம்.” அவள் கைகள் நடுங்கின.
“செக் பண்ணுங்க!” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன்.
“இல்லையில்ல வேண்டாம்.”
“செக் பண்ணைச் சொன்னனான்!” கண்கள் சிவக்க, முகம் கடுக்க அவன் அதட்டி அதட்டில் அவளுக்கு நெஞ்சு சிலீரிட்டது.
கூடவே விடமாட்டான் என்று தெரிந்துபோயிற்று. தொண்டை உதடு எல்லாம் வறண்டுவிட கைப்பேசியை வாங்கி, கேலரிக்குள் சென்று பார்த்தாள்.
உண்மையில் அவள் பயந்ததுபோல் ஒன்றுமே இல்லை. அவள் விழிகள் கலங்கிப் போயிற்று. “சொறி!” என்றபடி கைப்பேசியை அவனிடம் நீட்டினாள்.
“செய்தது பிழை எண்டு உணர்ந்தவனக் கொஞ்சமாவது நம்புங்க!” என்று உறுமியவன், அந்தக் கைப்பேசியை அவளிடமிருந்து பறித்த வேகத்திலேயே பக்கத்தில் இருந்த மரத்தின் மீது ஓங்கி அடித்துவிட்டுப் போனான்.
ராதாவிற்கு மொத்தத் தேகமுமே ஒருமுறை தூக்கிப்போட்டது. இது அவளுக்கு விழவேண்டிய அடி. போகிறவனையே பார்த்தவளுக்குக் கைகால்கள் எல்லாம் உதறின.
நிலத்தில் கிடந்த கைப்பேசியைக் குனிந்து எடுத்தாள். மரம் என்றபடியால் திரையில் வெடிப்பும், விளிம்புகளில் சில இடங்களில் உடைந்தும் இருந்தது. ஆனாலும் கைப்பேசி உயிர்ப்புடன்தான் இருந்தது.
கால்கள் பின்னினாலும் அதனோடு காரை நெருங்கினாள். கண்கள் சிவக்க, தாடை இறுக, கழுத்து நரம்புகள் புடைக்க, ஸ்டியரிங்கை இறுக்கமாகப் பற்றியபடி, நேராகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.
அவனுக்குப் பக்கத்து இருக்கையில் கைப்பேசியை வைத்துவிட்டு பின்னால் ஏறிக்கொண்டாள் ராதா.
அடுத்த நொடியே சீறிக்கொண்டு பாய ஆரம்பித்தது கார்.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் மஞ்சு.
“அண்ணா…”
“நிறையத் தூரம் நடந்தது களைப்பா இருக்கும் மா. கொஞ்சம் நித்திரை கொண்டு எழும்புங்கோ. சரியா நாலு மணித்தியாலத்தில வீட்டை நிற்கலாம்.” என்று, வேறு பேசவிடாமல் செய்தான் அவன்.
ராதாவைத் திரும்பிப் பார்த்தாள் மஞ்சு. அவள் இவளைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
எரிச்சல் மிக, “கொண்டைக்கும் கொண்டைக்கும் என்னடி சண்டை? கதைச்சு லவ்வ டெவலப் பண்ணுவீங்க எண்டு ஒதுங்கிப்போனா சண்டையை டெவலப் பண்ணி வச்சு இருக்கிறீங்க. என்ன ஆக்களடி நீங்க!” என்று அவளின் காதைக் கடித்தாள்.
“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல. சும்மா உளறாத!” என்று சீறினாள் ராதா.
“ஓமோம்! எங்களுக்குக் கண் இல்லத்தானே, சும்மா உளற! நீ ஒழுங்கா கதைச்சுத்தான் அந்த அண்ணாவை இப்பிடி ஆக்கி வச்சிருக்கிறாய் போல! ” என்று சீறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மஞ்சு.
அதன்பிறகு தேவையற்று ஒரு வார்த்தை பேசவில்லை அவன். தவிப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா. அவன் முகத்தின் இறுக்கம் குறையவே இல்லை.
சொன்னது போலவே சரியாக நான்கு மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தது அவன் கார்.
வீடு நெருங்கவும், “முதல் மஞ்சுவ இறக்கி விடுங்கோ. எனக்கு உங்களோட கதைக்கோணும், பிளீஸ்!” என்று, கண்ணீர் அரும்ப குறுஞ்செய்தி அவனுக்கு அனுப்பினாள்.
குறுஞ்செய்தி வந்து விழுந்த சத்தத்தில் திரும்பிக் கைப்பேசியைப் பார்த்தான். கண்ணாடி வெடிப்பின் நடுவே இவளின் பெயர் விழவும் அவன் கண்கள் இன்னுமே சிவந்து போயிற்று. என்ன அனுப்பியிருக்கிறாள் என்று கூடப் பார்க்காமல் அவளின் வீட்டின் முன்னே கொண்டுபோய் காரை நிறுத்தினான்.
ராதாவின் நெஞ்சுக்குள் பெரும் பாரம் ஏறி அமர்ந்துகொண்டது. எப்படி அவனைச் சமாதானம் செய்யப் போகிறாள் என்று தெரியவில்லை. வரவே வராத அடைத்த குரலில், “நன்றி!” என்றுவிட்டு இறங்கிப்போனாள்.


