அவனுடைய பதில் தந்த திகைப்பிலிருந்து வெளியே வருவதற்கு ராதாவுக்குச் சற்று நேரம் பிடித்தது. வெளியே வந்ததும் வேகமாகத் தன் கைப்பேசியை எடுத்து, ‘உங்களப் பற்றி எனக்கு முழுசாத் தெரியாம இருக்கலாம். ஆனா, நான் சந்தேகப்பட்ட மாதிரி நீங்க இப்ப இல்ல எண்டு மட்டும் நல்லா தெரியும். இனி எந்தக் காலத்திலயும் உங்களைப் பிழையா நினைக்க மாட்டன்.’ என்று ஒருவேகத்துடன் தட்டி அவனுக்கு அனுப்பிவிட்டாள்.
அதன்பிறகுதான் அவள் மனது அமைதியாயிற்று.
அங்கிருந்தே எட்டி ஹோலை பார்த்தாள். யாழினியின் அருகில் அமர்ந்து இருந்தவன் குறுந்தகவல் வந்த ஓசையில் கைப்பேசியை எடுத்துப் பார்ப்பது தெரிந்தது.
மெல்லிய படபடப்புடன் காத்திருக்க, அதை வாசித்துவிட்டு இவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துகொண்டான் அவன்.
‘இவனுக்கு இருக்கிற அழுத்தம் இருக்கே…’ என்று பல்லைக் கடித்தவளுக்கு, கணநேரத்தில் முழு மரத்தையும் அறுத்துவிட்டுப் போகிற மின்னலைப் போன்ற அவன் கோபத்தின் வேகத்தை எண்ணி மலைப்பாய் இருந்தது.
அன்று எவ்வளவு கோபமாகக் கைப்பேசியைத் தூக்கி அடித்துவிட்டுப் போனான். தவறு அவள் மீதாயினும் இது என்ன பழக்கம்? இன்றும் மலையிறங்குகிறானே இல்லையே.
இந்தக் கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி அவனிடம் சொல்ல வேண்டும் என்று மனத்தில் குறித்துக்கொண்டு, கவனத்தை வேலையில் குவித்தபோதுதான் கவனித்தாள், மூன்று கப்புகளில் மாத்திரமே பால்தேநீர் இருந்தது.
ஒரு நொடி புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, வெட்டிய கேரட், தோடம்பழம்(ஒரேஞ்ச்), அதோடு கூடவே நான்கைந்து ஐஸ் கட்டிகள், கொஞ்சம் சீனி சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து எடுத்து, அவற்றை மூன்று கிளாஸ்களில் வார்த்தாள்.
எல்லாவற்றையும் ஒரு ட்ரெயிலேயே எடுத்துக்கொண்டு ஹோலுக்கு சென்று, எல்லோருக்கும் கொடுத்தவள் அவனிடம் ஜூஸ் கிளாஸ் ஒன்றை நீட்டினாள்.
“எனக்கு வேண்டாம்.” என்றான் அவன்.
“ஊத்தியாச்சு. இனி ஒண்டும் செய்யேலாது. குடிங்க!” அவள் அனுப்பிய குறுந்தகவலுக்குப் பதில் சொல்லாத கோபத்தை இதில் காட்டினாள்.
அதற்குமேல் மறுக்காமல் வாங்கிக்கொண்டான் அவன்.
இதையெல்லாம் பார்த்திருந்த ரஜீவனுக்கு முகம் சரியில்லாமல் போயிற்று. மோகனன் சமையலறையிலிருந்து வந்ததைக் கண்டதே அதிர்ச்சிதான். இப்போதோ, அவனைக் கண்டாலே ஒதுங்கிப்போகும் தங்கை, அவன் வேண்டாம் என்று சொல்லியும் பிடிவாதமாக ஜூஸ் கொடுக்கிறாள்.
அவளின் பேச்சில் ஒதுக்கமோ விலகளோ தெரியவில்லை. மாறாக, ஒரு பிடிவாதம் தெரிந்தது.
என்ன நடக்கிறது அவர்களுக்குள்? இந்தச் சுமூகமான உறவு எப்படி ஆரம்பித்தது? அவளை அவனோடு அனுப்பிவைத்தது தவறோ என்று பலதையும் யோசித்த அவன் மனது, மீண்டும் அமைதி இழந்து போயிற்று.
தமையனின் மனநிலையை அறியாத ராதா, மோகனன் போட்ட டீயை அருந்திப்பார்த்தாள். வெகு சுவையாக இருந்தது.
‘அவ்வளவு கோபத்திலயும் டீய டேஸ்ட்டாத்தான போட்டிருக்கிறான்.’ மெச்சிக்கொண்டவளின் உதட்டோரம் குட்டியாய்ச் சிரிப்பு அரும்பிற்று.
கூடவே, சற்றுமுன் கோபத்தில் சீறி, அவளைக் கதிகலங்க வைத்தவனைச் சீண்டிப் பார்க்கும் ஆசையும் எழுந்தது. கண்ணீரோடு மன்னிப்புக் கேட்டும் மலையிறங்காதவனைச் சும்மா விடுவதா?
“அண்ணி, உங்கட அண்ணா போட்ட டீ ஓகேயா இருக்கு. நான் போட்ட ஜூஸ் எப்பிடி இருக்கு எண்டு நீங்க சொல்லவே இல்லையே?” என்றவளின் பார்வை மின்னலாய் அவனை உரசிவிட்டு மீண்டது.
கேள்வி யாருக்கானது என்று புரியாமல் இருக்க அவன் என்ன சிறு பிள்ளையா? அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்தான்.
“நல்ல சுவையா இருக்கு. அம்மா போட்டா இனிப்புக் காணாம இருக்கும். இனி ஒவ்வொரு நாளும் வந்து நீயே போட்டுத்தா ராது.” என்றாள் யாழினி.
“போட்டா போச்சு அண்ணி. என்ர மருமகனுக்காக நான் இதக்கூடச் செய்ய மாட்டனா?”
“அடிப்பாவி! அப்ப, எனக்காக இல்லையா?” என்று பொய்யாக முறைத்தாள் யாழினி.
“எனக்குப் பொய் உள்ள வராது அண்ணி.” என்று சிரித்தாள் ராதா.
அவர்களின் இந்தச் செல்லச் சண்டையின் இடையில், அரைவாசிக்கும் மேல் ஜூஸ் கிளாசில் இருக்க, அதை மேசையில் வைத்துவிட்டு எழுந்தான் மோகனன்.
“நீங்க கதைச்சுக்கொண்டு இருங்கோ. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. வெளிக்கிடப்போறன்.” என்று பரிமளாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
‘அடப்பாவி! எவ்வளவு நாசூக்கா நல்லா இல்லை எண்டு சொல்லிப்போட்டுப் போறான். இவனை…’ பல்லைக் கடித்தாலும் சிரிப்பு வந்தது அவளுக்கு. அவளும் அரைவாசி டீயோடு வைப்போம் என்றால், அவளின் கப்புக்குள் டீயும் இல்லை; அதைப் பார்க்க அங்கே அவனும் இல்லை.
‘கேவலப்பட்டுட்டியே ராது.’ சிரிப்பை அடக்க முடியாமல், அவனுடைய கிளாசோடு சேர்த்து, மற்றவர்கள் அருந்தி முடித்த கப்புகளையும் எடுத்துக்கொண்டு சமையலறைக்கு நடந்தாள்.
போகிறவள் முதுகைப் பார்த்த ரஜீவனுக்கு நெஞ்சின் எங்கோ ஒரு மூலையில் வலித்தது. நடந்த அனைத்தையும் அவனும்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
அவ்வளவு நேரமாக அப்பாவாகிவிட்டேன் என்று அவனுக்குள் குமிழியிட்டுக்கொண்டிருந்த குதூகலம் மங்கிப்போனது. அவனால் மோகனனோடு தங்கையை இணைத்துப் பார்க்கவே முடியவில்லை.
ராதாவுக்கும் அவனைப் பிடிக்காது என்று இருந்த வரையிலும் யார் தலைகீழாக நின்றாலும் எதுவும் கையை மீறிப்போகாது என்று இருந்தான். இன்று, அவளுக்கும் அவனைப் பிடித்துவிடுமோ என்று எண்ணியதிலேயே தன் மொத்த நிம்மதியையும் தொலைத்திருந்தான்.
அவளின் பேச்சைக் கேட்காமல் முதலில் அவளுக்கே திருமணத்தை முடித்திருக்க இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. அதைச் செய்யத் தவறிய தன்னையே நொந்துகொண்டான்.
இனி என்ன செய்வது? இந்தக் கேள்விதான் அவனைப்போட்டு அரித்துக்கொண்டிருந்தது.
இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் வீட்டில் வைத்து எதேற்சையாக மோகனன் எதிர்படவும், “உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்றான் பட்டென்று.
தலையசைப்பைத் தாண்டி வேறு எதையும் தர விரும்பாதவன் திடீரென்று அப்படிக் கேட்கவும் மோகனனின் நடை ஒரு நிமிடம் தேங்கிற்று.
அடுத்த நொடியே எதையும் யோசிக்காது, “சொல்லுங்கோ ரஜீவன், நான் ஏதும் ஹெல்ப் செய்யோணுமா?” என்று கேட்டபடி அவன் முன்னே வந்து அமர்ந்தான்.
இப்படி அவனோடு கதைக்க வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. ராதாவைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தவன் மோகனனைக் காணவும் கேட்டுவிட்டான். இப்போது, என்ன பேசுவது, அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது திணறினான்.



