“யோசிக்காம சொல்லுங்கோ ரஜீவன், என்ன எண்டாலும் சமாளிக்கலாம்.” எதையும் கேட்கத் தயங்குகிறானோ என்று எண்ணித் தைரியமூட்டினான் மோகனன்.
“அது… ராதா அவளுக்கு நீங்க வேண்டாம்.” என்றான் பட்டென்று.
புருவம் சுருக்கி அவனையே கூர்ந்தான் மோகனன். “ஏன்?” என்றான் நிதானமாக.
“உங்கட கோபம், முரட்டுத்தனம் எல்லாம் அவளுக்குப் பொருந்தாது. நீங்க பஞ்ச் பேக்க குத்துறத பாத்தா எனக்கே பயமா இருக்கு.”
“அதை அவா சொல்லட்டும்.” என்றான் இப்போதும் சுருக்கமாக.
ரஜீவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ஆனாலும் நிதானத்தை கைவிட்டுவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் பதில் சொன்னான்.
“எப்பவோ சொல்லிட்டாள். பிறகும் அவளின்ர மனதைக் கலைக்கிற மாதிரி நீங்க நடக்கக் கூடாதுதானே.”
“அப்பிடி நான் என்ன செய்தனான்?”
அதுதானே? குறிப்பிட்டு இதுதான் என்று சொல்ல அவனிடம் எதுவும் இல்லையே. இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனைச் சீண்டியது கூட ராதாதானே.
அவனுடைய பதிலற்ற திகைப்பை உள்வாங்கியபடி, “எனக்கு என்னவோ இந்த மறுப்புக்குப் பின்னால இருக்கிறது உங்களுக்கு என்னில இருக்கிற வெறுப்பு மாதிரி இருக்கே.” என்றான் மோகனன்.
“காரணம் இல்லாம ஆயும் வெறுக்கிற பழக்கம் எனக்கு இல்ல.” என்று வேகமாகச் சொன்னவனுக்கு இப்போது மெல்லிய கோபம் வந்திருந்தது. என்னவோ நல்லவன் மாதிரி கேட்கிறானே. “உங்களை மாதிரி ஒருத்தருக்கு எந்த அண்ணனாவது தன்ர தங்கச்சியக் கட்டி குடுப்பானா?” என்று அவனிடமே நேரடியாகக் கேட்டான்.
மோகனனின் முகத்தில் இறுக்கம் படர்ந்தது. “ஏன், எனக்கு என்ன குறை?” சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு நிதானமாய்க் கேட்டான் அவன்.
மெல்லிய அதிர்வுடன் அவனைப் பார்த்தான் ரஜீவன். இப்படிக் கேட்க எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அத்தனை கேவலங்களையும் அசராமல் செய்தவனுக்குத் தான் என்னவெல்லாம் செய்தோம் என்று தெரியாதா?
அதைப் பற்றியெல்லாம் பேசப்பிடிக்காமல், “எனக்கு உங்களுக்கு என்ர தங்கச்சியத் தர விருப்பம் இல்ல. இத இதோட விட்டுடுங்க. அவளுக்கு நான் நல்ல மாப்பிள்ளையா பாக்கிறன்.” என்றான் முடிவுபோல.
“நீங்க தாராளமா மாப்பிள்ளை பாருங்க. நான் தடுக்க இல்லையே. அதே மாதிரி எனக்குத் தேவை உங்கட தங்கச்சின்ர சம்மதம் மட்டும்தான்!” என்றான் மோகனன்.
எவ்வளவு திமிராகப் பதில் சொல்கிறான்? மனம் கொதித்தது ரஜீவனுக்கு. “அவள் சம்மதிக்க மாட்டாள். அப்பிடியே அவள் சம்மதிச்சாலும், நான் ஓம் எண்டு சொல்ல மாட்டன்!” என்றான் உணர்ச்சிவசப்பட்டதில் குரல் உயர.
“ஏன் நீங்க சம்மதிக்க மாட்டீங்க ரஜீவன்?” என்று, இப்போது கேட்டுக்கொண்டு வந்தது யாழினி.
செல்வராணி கோயிலுக்குச் சென்றிருந்தார். உடம்பு சற்றுச் சோர்வாகத் தெரியவும் கட்டிலில் சரிந்து இருந்தாள் யாழினி. இவர்கள் இருவரினதும் பேச்சுக்குரல் கேட்கவும் ஆச்சரியமாயிற்று. இவர்களுக்கிடையில் ஒத்துப்போகாதே, பிறகும் என்ன பேசுகிறார்கள் என்று அறியத்தான் எழுந்து வந்தாள்.
ரஜீவனுக்கு மோகனன் மீதிருந்த கொதிப்பு அப்படியே அவள் புறமாகத் திரும்பிற்று. “அவர் உனக்கு அண்ணா. அந்தப் பாசம் உன்ர கண்ண மறைக்கலாம். ஆனா, கொஞ்சம் ராதாக்கு அண்ணியாவும் யோசிக்கப் பழகு. உன்ர அண்ணாவ மாதிரி ஒரு பொ…” என்றவனைச் சொல்லிமுடிக்க விடாமல் வேகமாகக் குறுக்கிட்டு, “ரஜீவன்! கொஞ்சம் நிதானமா கதைங்கோ!” என்றாள் யாழினி பதட்டத்தோடு. அவள் விழிகள் பயமும் தவிப்புமாகத் தமையனைத் தொட்டு மீண்டது.
மோகனனின் தேகம் விறைத்து நிமிர்ந்தது. ரஜீவனுக்குப் பதிலடி கொடுத்துவிட அவனுடைய கூர்மை மிகுந்த நாக்குத் துடித்தது. ஆனாலும் தாய்மை அடைந்திருக்கும் தங்கையை எண்ணி அடக்கினான்.
“நான் என்ன கதைக்கோணும் எண்டு எனக்குத் தெரியும். எல்லாத்துக்கயும் வந்து தலையப்போடாம நீ கொஞ்சம் பேசாம இருக்கப் பழகு. என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் நீ. உன்னில் உயிரா இருக்கிறன் எண்டுறதுக்காக நீ சொல்லுற எல்லாத்துக்கும் அடங்கிப் போவன் எண்டா? முதல் நீ உள்ளுக்குப் போ! போடி உள்ளுக்கு!” என்றான் ரஜீவன் ஆத்திரத்தை அடக்கமுடியாமல்.
மோகனன் பல்லைக் கடித்தான். “ரஜீவன்! உங்கட கேள்விக்கான பதில நான் சொல்லியாச்சு. சோ, இதோட இந்தப் பேச்ச விடுங்க. தேவையில்லாம யாழியோட சண்டைக்குப் போக வேண்டாம்!” என்றான் தன்னை அடக்கியபடி. கூடவே, “பிரச்சினையைப் பெருசாக்காம நீயும் போம்மா!” என்றான் தங்கையிடம்.
“போறன் அண்ணா. போகத்தான் போறன். அதுக்குமுதல் இவரோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்றுவிட்டு ரஜீவனிடம் திரும்பினாள்.
“அது என்ன டீ போட்டு அதட்டுறீங்க? அண்ணாவில இருக்கிற கோபத்தை என்னட்டக் காட்டுறீங்களா? கலியாணம் கட்டிட்டம், பிள்ளை வேற வரப்போகுது, இனி என்ன செய்தாலும் நீ அடங்கித்தான் போகோணும் எண்டு எனக்குச் சொல்லுறீங்களா? இல்ல, நான் சொல்லுறத நீ கேக்காட்டி உன்ர தங்கச்சிய இப்பிடித்தான் நடத்துவன் எண்டு அண்ணாவை மறைமுகமா வெருட்டுறீங்களா ?” என்றாள் கோபத்தை அடக்கிய நிதானக்குரலில்.
“திரும்பத் திரும்ப உன்ர வீட்டு ஆட்களுக்கு முன்னால கேள்வி கேட்டு என்னைக் கேவலப்படுத்தாத யாழி!” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரஜீவன்.
அவள் வறட்சியாகச் சிரித்தாள். “கொஞ்சத்துக்கு முதல் நீங்களும் அதைத்தான் எனக்குச் செய்தனீங்க. என்ர அண்ணாக்கு முன்னால என்னைக் கேவலப்படுத்தி அவரைக் காயப்படுத்தினீங்க. உங்களுக்குப் பதில் சொல்ல அவருக்குத் தெரியாது எண்டு நினைச்சீங்களா? அப்பிடி இல்ல. எனக்காகத் தன்ர கோபத்தை அடக்கிக்கொண்டு பேசாம நிக்கிறார். இதைத்தானே நீங்க எதிர்பாத்தீங்க?” என்றவள் மோகனனின் புறம் திரும்பினாள்.
“அண்ணா, ராதாக்கு வயது காணும். அவளுக்கு என்ன வேணும், வேண்டாம் எண்டு முடிவெடுக்கிற தெளிவும் இருக்கு. அவளுக்கு உங்களப் பிடிச்சிருந்தா இவரைப் பற்றி நீங்க யோசிக்கக் கூடாது. அவளைத்தான் கட்டோணும். நான் வாறன் போயிட்டு.” என்றவள் அருகில் நின்ற கணவனைத் திரும்பியும் பாராமல் வெளி வாசலை நோக்கி நடந்தான்.
“யாழி, எங்க போறாய்?” அதிர்ந்துபோனான் மோகனன். இப்படி ஏதாவது நடந்துவிடக் கூடாது என்றுதானே வாயை மூடிக்கொண்டு நின்றான்.
ஓடிவந்து அவளைத் தடுத்தான் ரஜீவன். “என்னை விளங்கிக்கொள்ளவே மாட்டியா நீ? இது என்ன சண்டை பிடிச்சுக்கொண்டு வெளில போறது? இன்னுமின்னும் என்னைக் கேவலப்படுத்திறாய்.” என்றான் வேதனையும் ஆற்றாமையுமாக.
“இல்ல ரஜீவன். நீங்கதான் என்ன காயப்படுத்திட்டிங்க. அன்புக்கு அடங்குறது வேற. ஆனா, உங்கட அதிகாரத்துக்கும் அதட்டலுக்கும் அடங்கேலாது. எனக்கு முன்னால நீங்க ரெண்டுபேரும் பிடுங்குப்பட்டா நான் எப்பிடிப் பாத்துக்கொண்டு நிப்பன்? நீங்க எனக்கு மனுசன் எண்டா, அவர் எனக்கு அண்ணா. இத நீங்க யோசிச்சு இந்தப் பிரச்சினையையே தவிர்த்து இருக்கோணும். அதை விட்டுட்டு என்னை அதட்டுறீங்க.” என்றவள் மோகனனிடம் திரும்பி, “என்னைக் கொண்டுபோய் பெரியண்ணா வீட்ட விட்டுவிடுங்கோண்ணா. ஸ்கூட்டில போகப் பயமா இருக்கு.” என்றாள் கலங்கிய விழிகளோடு.
துடித்துப்போனான் மோகனன். “என்னம்மா நீ…” என்று இரண்டெட்டில் அவளை அணுகி அணைத்துக்கொண்டான். “சும்மா சும்மா அழுறேல்ல!” என்றான் அவளின் தலையை வருடி. அந்த ஒற்றை அணைப்பில் உடைந்து விம்மினாள் யாழினி.
இதையெல்லாம் பார்த்திருந்த ரஜீவனுக்குத் தான் என்னவோ அவளை விட்டு வெகு தூரமாய்ப் போய்விட்டதைப் போலொரு மாயை. மனம் விண்டுபோயிற்று. எல்லாமே கசந்து வழிந்தது. “உன்னாலதான் இந்த வீடு எனக்குச் சொந்தம். நீ வெளில போனா நான் ஏன் இஞ்ச இருக்க? நீயே இரு, நான் போறன்.” என்றான் வெற்றுக்குரலில்.
“ரஜீவன் பிளீஸ்! கொஞ்சம் அமைதியா இருங்க. என்ன இது ஆளாளுக்கு வீட்டை விட்டு வெளிக்கிடுறது?” என்று அதட்டினான் மோகனன்.
“இது எனக்கும் என்ர மனுசிக்கும் இடையில நடக்கிறது. இதுல நீங்க தலையிடாதீங்க!” இறுக்கத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ரஜீவன். மோகனன் எவ்வளவு தடுத்தும் நிற்கவில்லை.
முற்றிலும் உடைந்து அழ ஆரம்பித்தாள் யாழினி.



