மொத்த வீடும் அதிர்ந்துபோய் நின்றது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே புரியாத திகைப்பு. நம்பவே முடியவில்லை. அந்த வீட்டின் மருமகன் வீட்டை விட்டுப் போய்விட்டானாம் என்றால், என்ன இது?
அயலட்டைக்குத் தெரியவந்தால் என்ன நினைப்பார்கள்? முதல், இது என்ன வீட்டை விட்டு வெளியில் போகிற வரைக்கும் ஒரு பிரச்சனையைக் கொண்டுவருவது? கௌசிகன், ராஜநாயகம், செல்வராணி, பிரமிளா என்று அனைவரின் கோபமும் யாழினியின் புறம்தான் திரும்பிற்று.
அவளும் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கட்டுப்பாடற்ற கோபமும், நிதானத்தை இழந்த நிலையும் எதிர்பாராத நிகழ்வுகளை நிகழ்த்தி முடித்திருந்தன. அதிர்ச்சி ஒரு பக்கம், அழுகை ஒரு பக்கம் என்று திக்பிரமை பிடித்தவள் போன்று அமர்ந்து இருந்தாள்.
ராஜநாயகத்துக்கு இது மிகப்பெரிய கௌரவப் பிரச்சனையாக மாறியிருந்தது. ‘என்ன வளர்ப்பு வளர்த்து வைத்திருக்கிறாய்?’ என்று, மகள் மீது காட்டமுடியாத கோபம் முழுவதையும் செல்வராணி மீது காட்டினார்.
இந்த நேரத்தில் எதைப் பேசினாலும் அது பிரச்சனையைப் பெரிதாக்கும் என்று அறிந்த செல்வராணி, மகளுக்காக அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றார்.
கௌசிகனுக்குத் தங்கையை வறுத்தெடுக்கும் அளவுக்கு ஆத்திரம் பொங்கியது. ஆனாலும் பல்லைக் கடித்து அடக்கினான். அவள் இப்போதுதான் தாய்மை அடைந்திருக்கிறாள்; சரியோ பிழையோ இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக அவளை நோகடிக்க வேண்டாம்; குழந்தைக்கு ஏதும் நடந்துவிட்டால் அது எல்லாவற்றையும் விடப் பெரும் துன்பமாய் முடிந்துவிடும் என்று எவ்வளவோ சொல்லி, அவனைக் கட்டுப்படுத்தியிருந்தாள் பிரமிளா.
அதில் தன் கோபத்தை மோகனனின் புறம் திருப்பினான் கௌசிகன்.
“அவளுக்குத்தான் அறிவில்லை எண்டா, நீ ஏனடா போக விட்டனி?”
நடந்தவற்றால் அவனும் இறுக்கித்தான் போயிருந்தான். தமையனின் கேள்வி வேறு முகத்தைக் கறுக்க வைத்தது. “மறிச்சனான் அண்ணா. அவர் கேக்கேல்ல. அதையும் தாண்டி நான் தடுக்கப் போயிருந்தா, அது இன்னும் பெரிய பிரச்சினையிலதான் முடிஞ்சிருக்கும். அவரின்ர கோபமே என்னிலதான்.” என்றான் தலையை ஒற்றைக் கையால் தாங்கியபடி.
அவனால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று எவ்வளவு கவனமாக இருந்தான். கடைசியில் அவனாலேயே தங்கையின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதைத் தீர்க்க என்ன செய்யப் போகிறான்?
நேரடியாக அவன் இறங்க முடியாது. இவன் தலையிட்டாலே ரஜீவன் இன்னும் கோபம் கொள்வான்.
ஆனாலும் அவன்தான் இதை முடித்து வைக்க வேண்டும். அதேபோல, இது அவனில்தான் முடியவும் போகிறது.
இனி நடக்கப்போவதைக் கணித்தவனின் உள்ளத்தைப் பெரும் பாரம் வந்து அழுத்தியது. அதை அடக்கிக்கொண்டு நிமிர்ந்து தமையனைப் பார்த்தான்.
“அண்ணா, நீங்களும் அண்ணியும் போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாங்கோ. அவர் போய்ட்டார் எண்டு நாங்க விட்டுட்டு இருந்தா அது இன்னும் பிழையா போயிடும். நான் வரேலாது. வந்தா, ரஜீவன் இன்னும் கோபப்படுவார், பிரச்சனை பெருக்கும்.” என்றான் கௌசிகனிடம்.
அதைத்தான் கௌசிகனும் யோசித்துக்கொண்டு இருந்தான். அவன் சொன்னால் ரஜீவன் கேட்பான். நிச்சயம் வருவான். ஆனால், மனத்தால் ஒத்து வருவானா?
மூத்தவனின் புருவச் சுளிப்பைக் கவனித்துவிட்டு, “ஓம் அப்பு. தம்பி சொல்லுறதுதான் சரி. ஆர்ல சரியோ பிழையோ இது குடும்பத்துக்கு அழகில்லை. போய்க் கூட்டிக்கொண்டு வாய்யா.” என்று, கெஞ்சலாகச் சொன்னார் செல்வராணி.
“இதையெல்லாம் உங்கட மகளுக்குச் சொல்லிக்குடுக்க மாட்டீங்களா?” பட்டென்று சீறினான் கௌசிகன்.
தாய் மகள் இருவருமே திடுக்கிட்டுப் போயினர். யாழினியின் விழிகளில் கரகரவென்று கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.
“எல்லாரும் சேர்ந்து வாழுற குடும்பத்தில ஒரு பிரச்சினையை எப்பிடி அணுகிறது எண்டு தெரியாதா? அவன் இவனோடதானே கதைச்சவன். இவள் என்னத்துக்கு நியாயம் கேக்கிறன் எண்டு நடுவுக்க புகுந்தவள்? முதல் இவள் என்ன தைரியத்தில் வீட்டை விட்டு வெளிக்கிட்டவள்? இவள் வெளிக்கிட்டதாலதானே அவன் போனவன்.” என்றவனின் அதீத கோபத்தில் பயந்து தேம்ப ஆரம்பித்தாள் யாழினி.
“வாழுற வீட்டை விட்டு வெளிக்கிடுறது எல்லாம் என்ன பழக்கம்? என்ன செய்தாலும் பாதுகாக்க ஒண்டுக்கு ரெண்டு இளிச்சவாய் அண்ணன்கள் இருக்கிறாங்கள் எண்டுற திமிரா? முதல் என்ன பிரச்சினை நடந்தாலும் நடுவுக்க வாற பழக்கத்தை நிப்பாட்டச் சொல்லுங்க!” என்றவனின் உறுமலில் வெடித்து அழக்கூட முடியாமல் நடுங்கி, மூச்சு வாங்கமுடியாமல் தவிக்க ஆரம்பித்தாள் யாழினி.
மகளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று செல்வராணி பயந்துபோனார். அவளைப் பார்ப்பாரா, அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பார்ப்பாரா? இல்லை, மகளின் வாழ்க்கையை யோசிப்பாரா? ‘அவனைச் சமாளி!’ என்று பிரமிளாவுக்குக் கண்ணால் சைகை செய்தார்.
கணவனின் கோபத்தை அறிந்த பிரமிளாவும், “கௌசி, இப்ப இதையெல்லாம் கதைக்க நேரம் இல்ல. வாங்கோ, நாங்க போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருவம். யாழி, நீ மதுரனை கூட்டிக்கொண்டு அறைக்க போ. மிது, அப்பம்மாவோட குழப்படி செய்யாம இருக்கோணும், சரியோ. நாங்க போயிட்டு ஓடிவாறம். நீங்க வாங்கோ கௌசி!” என்று அவனைக் கையோடு கூட்டிக்கொண்டு வாசலுக்கு வர, அங்கே ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் ராதா.
அவள் முகம் கோபத்தில் கொதித்துக்கொண்டு இருந்தது.


