கைகள் இரண்டும் தலைக்குக் கீழே கோர்த்திருக்க விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் கிடந்தான் மோகனன். நள்ளிரவையும் தாண்டிப் பொழுது அடுத்த நாளின் விடியலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.
இருந்தும் அவன் இமைகள் மூடவேயில்லை. எப்போதுமே அவனுக்கான அமைதியை, ஆழ்ந்த உறக்கத்தை பஞ்ச்பேக் வழங்கிவிடுவது வழமை. உடல் சோர்ந்து விழுகிற அளவுக்குக் குத்திவிட்டு, நன்றாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு வந்தான் என்றால், அடுத்த பத்தாவது நிமிடம் உறங்கிவிடுவான்.
இன்றோ, எதுவுமே அவன் நெஞ்சின் பாரத்துக்கு மருந்தாக மாட்டேன் என்றது.
ஏன் அவனுக்கு இந்த நிலை? அவனை அறவே வெறுக்கிற ஒருத்தியின் மீது அவன் மனம் ஏன் மையல் கொண்டது? வாழ்வின் விடியலைத் தொலைத்துவிட்டு ஓடிக்கொண்டு இருந்தவனின் பாதையில் ஒருநாள் வெளிச்சமாய்த் தெரிந்தாளே, ஏன்?
ஒரு சொல் தவறினாலும் பொறுக்க மாட்டான். சொல்லுக்குச் சொல் பல்லுக்குப் பல் என்று நிற்கிறவன். அவளோ மொத்தக் குடும்பத்தின் முன்னும், நீ எனக்கு வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று ஒருமுறை இரண்டு முறை அல்ல, பலமுறை சொல்லித் தூக்கி எறிந்துவிட்டாள்.
அப்போதும், திரும்ப திரும்பக் கரையை நாடும் அலையாக, அன்னையின் மடியைத் தேடும் குழந்தையாக, நான் உனக்கு வேண்டாமா என்று உதடு பிதுக்கி அழுதுகொண்டிருக்கிறான் அவன்.
இன்னும் கூடப் பொட்டுத் தூக்கம் வரமாட்டேன் என்றது. நேரத்தைப் பார்த்தான்; மூன்றைத் தொட பத்து நிமிடங்கள் இருப்பதாகச் சொல்லியது அது. எழுந்து உடையை மாற்றிக்கொண்டு ஓட வீதிக்கு இறங்கினான்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன. பிரச்சனை பேசித் தீர்க்கப்பட்டதா என்றால் இல்லை. ஆனால், யாரும் எதையும் பேசாமல் அப்படியே அடக்கி வைத்தனர்.
‘விளக்கம் சொல்கிறேன், மன்னிப்புக் கேட்கிறேன் என்று எதுவும் பேசாதே. கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இரு.’ என்று யாழினிக்கு வலியுறுத்தி இருந்தாள் பிரமிளா.
கணவன் மனைவி இருவரும் காயப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் எதைப் பேசினாலும் அது பிழையாகிப் போகும் என்றும் விளக்கியிருந்தாள். அதேபோல, இதை மனத்தில் வைத்துக்கொண்டு நடக்காமல், எப்போதும்போல இயல்பாக இருங்கள் என்று செல்வராணியிடமும் சொல்லியிருந்தாள்.
அப்படியே, பரிமளா அம்மாவிடமும் சென்று நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து, இனி இப்படி நடக்காது என்றும் சொல்லி, ஓரளவுக்கு அனைத்தையும் சமாளித்து இருந்தனர் கௌசிகனும் பிரமிளாவும்.
இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு வகையில் அணுகியவர்களால் மோகனனை நெருங்கவே முடியவில்லை. கௌசிகன் பேசப் போனபோது கூட, “அண்ணா பிளீஸ், இப்போதைக்கு எதையும் கேக்கிற நிலைமையில நான் இல்ல. என்னை என் பாட்டுக்கு விடுங்க!” என்று அவன் முந்திக்கொண்டிருந்தான்.
ராதாவின் நிலை அவளே எதிர்பாராத அளவில் மிக மோசமாக இருந்தது. என்ன இருந்தாலும் அது அவளின் அண்ணி வீடு. மாமா, மாமி, கௌசிகன் அண்ணா, பிரமிளா அக்கா, அண்ணி என்று அனைவருமே அவளை விடவும் வயதில் பெரியவர்கள். அவளின் மதிப்பிற்குரியவர்கள். அவர்களின் முன்னே கோபப்பட்டிருக்கிறாள். கேள்விகளாகக் கேட்டு இருக்கிறாள். இனி எப்படி அவர்களின் முகம் பார்ப்பாள்? அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
‘குடும்பம் என்று வந்தால் சண்டையும் வந்து போகும்தான். அதற்கென்று வீட்டை விட்டு வெளியே வருவதா? போ தம்பி.’ என்று அன்னை எவ்வளவோ சொல்லியும் கேட்க மறுத்த அவளின் தமையன், கடைசியில், ‘இதால உன்ர தங்கச்சிக்கும் நல்ல வாழ்க்கை அமையாதப்பு’ என்றதும் அதிர்ந்துபோய் நின்றதுதான் அவளை நிலையிழக்க வைத்திருந்தது.
நடக்கிற அத்தனை பிரச்சனைகளிலும் ஒரு காரணியாக அவளின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கிறதே. என்ன இது? அந்தக் கோபத்தில்தான் எதைப் பற்றியும் யோசிக்க முடியாமல் வீடேறிச் சென்று கேள்வியாகக் கேட்டுவிட்டு வந்துவிட்டாள்.
நிதானம் வந்தபிறகோ, ‘கடவுளே… என்ன வேல பார்த்து வைத்திருக்கிறோம்’ என்று திரும்ப திரும்பத் தன்னையே நொந்து கொண்டாள்.
இதற்கெல்லாம் காரணம் அவளின் அண்ணா. காரணமேயற்ற அவனுடைய பயம். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்! தன் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தொட்டிருந்த ராதா, அவனை அழைத்து, அவர்களின் வீட்டருகில் இருக்கும் பூங்காவுக்கு வரச் சொன்னாள்.
அவனும் வந்தான்.
அங்கிருந்த ஒற்றை வாங்கிலில் இருவரும் அமர்ந்துகொண்டனர்.
இன்னும் தெளிவடைந்திராத முகமும், அதில் படர்ந்து கிடந்த ஒரு வாரத்துக்கான தாடியும் பார்க்கவே சகிக்கவில்லை.
“ஏன் அண்ணா இப்பிடி இருக்கிறீங்க?” எந்த முகப்பூச்சும் இல்லாமல் ஆரம்பித்தாள் அவள்.
அவன் குழப்பத்துடன் புருவங்களைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.
“கண்டிக்குப் போயிற்று வந்த பிறகு நீங்க பயப்பிடுற மாதிரி அவர் இல்லை எண்டு உங்களுக்குச் சொன்னேனா இல்லையா? பிறகும் ஏன் கண்டதையும் யோசிச்சு, அவரிட்டத் தேவை இல்லாம கதைச்சு, இப்பிடிப் பிரச்சனைகளை வளத்து வச்சிருக்கிறீங்க?”
காரணம் நீதான் என்று வாயைத் திறந்து சொல்லமுடியாமல் நின்றான் ரஜீவன். என்னவோ எல்லாமே விட்டுப்போன உணர்வு. அவளைக் குற்றவாளியாக்கி மட்டும் என்ன காணப்போகிறான் என்கிற சலிப்பு.
யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியவில்லை. எல்லாவற்றையும் அப்படியே உள்ளுக்குள் விழுங்கிக்கொள்ளவும் இயலவில்லை. குழந்தையைத் தாங்கும் மனைவியைக் கூடத் தாங்க முடியாமல் இருவர் மனத்திலும் மிகுந்த கசப்பும் காயமும். இரண்டு கைகளாலும் தலையைப் பற்றிக்கொண்டவனுக்கு இந்தப் பிரச்சனைகளை எல்லாம் எப்படித் தீர்ப்பது என்று தெரியவேயில்லை.
ராதாவுக்கு அவனைப் பார்க்க மிகுந்த பரிதாபமாயிற்று. “அண்ணா.” இதமாய் அழைத்து அவன் கையைப் பிடித்து அசைத்தாள்.
நிமிர்ந்து பார்த்தான் அவன். உறக்கமே இல்லாமல் திரிகிறான் என்று சிவந்து கிடந்த விழிகள் சொல்லிற்று.


