“இப்பிடி நீங்க சோக கீதம் வாசிக்கிற அளவுக்கு இஞ்ச ஒண்டுமே நடக்கேல்ல. அதை முதல் விளங்கிக்கொள்ளுங்கோ. அதோட, பழைய மோகனனையே நினைவில வச்சுக்கொண்டு வெறுக்காம, இப்ப அவர் எப்பிடி இருக்கிறார் எண்டு கண்ணைத் திறந்து பாருங்க அண்ணா. அப்பதான் அவரின்ர மாற்றம் உங்களுக்கும் தெரியவரும். ” என்றாள் தன்மையாக.
ஒன்றும் சொல்லாமல் அவளையே கதைக்கவிட்டான் அவன்.
“உங்களை மாதிரித்தான் நானும். கெட்டவர், பொல்லாதவர் எண்டு நினைச்சு ஒதுங்கி இருந்தனான். அப்பிடி இல்லை எண்டு நிறைய விசயத்தில காட்டி இருக்கிறார். நாங்கதான் கவனிக்கேல்ல. என்னைப் பிடிச்சிருக்கு எண்டு அவர் சொல்லி ஒரு மூண்டு மாதம் இருக்குமா? இந்த மூண்டு மாதத்தில ஒரு நாள் என்னைப் பின்தொடர்ந்தது இல்ல. அசூசையா உணர வச்சதே இல்ல. தொந்தரவு தந்தது கிடையாது. அவர் என்னோட கதைச்சது எல்லாமே எங்களைச் சுத்தி ஆக்கள் இருந்த நேரத்தில மட்டும்தான். கண்டிக்குப் போகேக்க கூடப் பயந்துகொண்டுதான் போனனான். ஆனா, தேவை இல்லாம ஒரு பார்வை கூடப் பாக்கேல்லை அண்ணா. உண்மையயைச் சொல்லப்போனா நான்தான் அவரைச் சந்தேகப்பட்டுக் கோபப்படுத்தினான்.”
“என்ன நடந்தது?” என்றான் உடனேயே.
அவனுடைய அந்த வேகத்தில் கோபம் வந்தது அவளுக்கு. இவ்வளவு சொல்லியும் மோகனனை நம்பமாட்டேன் என்றால் எப்படி? “அது என்னத்துக்கு உங்களுக்கு? பிறகு அதைப்பற்றியும் யோசிச்சு அடுத்த பிரச்சினையை ஆரம்பிக்கவா?” என்று பட்டென்று திருப்பிக் கேட்டவளின் கேள்வியில் அவன் முகம் கறுத்துப்போனது.
பார்க்கப் பாவமாக இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
“உண்மையிலேயே அண்டைக்கு நான் செய்தது சரியான பிழை. கிட்டத்தட்ட அவரை அவமானப்படுத்தினான்; சந்தேகப்பட்டனான். ஆனாலும் பிழையா ஒரு வார்த்த கதைக்கேல்ல. ஒதுங்கித்தான் போனவர். என்னை விடுங்க. அவரும் நீங்களும் மச்சானும் மச்சானும். காலத்துக்கும் சேர்ந்து இருக்க வேண்டிய ஆக்கள். இப்பிடி எவ்வளவு நாளைக்குச் சண்டையும் சச்சரவுமா இருக்கப் போறீங்க?” என்றவளின் கேள்விக்கு மெய்யாகவே அவனிடம் பதில் இல்லை.
“முக்கியமா அண்ணியப் பற்றி யோசிக்கவே மாட்டீங்களா? நீங்களும் அவரும் இப்பிடி எப்பவும் முட்டிக்கொண்டு இருந்தா அவா ஆருக்காக நிப்பா? கொஞ்சம் அவாவையும் யோசிச்சுப் பாருங்கோ. இப்பிடி நீங்க ஒரு பக்கமும் அவா ஒரு பக்கமும் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கிறதுக்கா இத்தின வருசம் விரும்பிக் கட்டினீங்க? அண்டைக்கு நீங்க அவரிட்ட என்னைப் பற்றிக் கதைச்சே இருக்கக் கூடாது. தேவையில்லாம நீங்க பயந்து, அதால ஒரு பிரச்சினையை உண்டாக்கி, ஆளாளுக்குக் கோவப்பட்டு, காயப்பட்டு எண்டு எவ்வளவு நடந்துபோச்சுச் சொல்லுங்க? இதெல்லாம் நல்லாவா இருக்கு?”
உண்மைதான். இப்போதெல்லாம் எல்லோரும் சகஜமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் அது உண்மை இல்லை. உள்ளார்ந்த அன்போடு யாராலும் யாரின் முகத்தையும் பார்க்க முடியவில்லை.
இந்த ஒரு வாரமாக அவனுக்கு வீட்டுக்குப் போகவே பிடிப்பதில்லை. முடிந்தவரை தள்ளிப்போட்டு இனியும் தவிர்க்க முடியாது என்கிற நிலையில்தான் போவான்.
அடிக்கடி அழைத்துப் பேசுகிற கௌசிகன் கூட இந்த ஒரு வாரமாக அவனுக்கு அழைக்கவே இல்லை. எல்லாவற்றையும் நினைக்க நினைக்கப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு.
“ஒருத்தர்ல ஒருத்தர் மதிப்போடயும் மரியாதையோடயும் பழகவேண்டிய உறவுக்காரர் நாங்க எல்லாரும். அதை விட்டுப்போட்டு… நானும் கோவப்பட்டு, நிறையக் கதைச்சு, அவரையும் காயப்படுத்தி… ப்ச்!” என்றவளுக்கு மேலே பேசமுடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது.
அடங்காத காளையாகத் திமிறிக்கொண்டு நின்றவன், அசைவே இல்லாமல், ‘இதே போதும்’ என்று சொன்னதே கண்ணுக்குள் நின்றது. அன்று, அவன் பார்த்த பார்வை இன்றுவரை அவளை உறங்க விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.
‘நீங்க எனக்குத்தான்!’ என்ற அவனின் திமிர் எங்கே போனது? ‘என்னைக் கட்டிக் காலம் முழுக்கத் தண்டனை தாங்க!’ என்றவனின் நிமிர்வு எங்கே? ஒற்றை விரலினால் அவளின் முகத்தை வட்டமடித்துக் காட்டி, ‘அப்பிடியே மின்னுது’ என்றவனின் அந்தச் சிரிப்பை எப்படி மீட்கப் போகிறாள்?
யாருக்குமே தெரியாத, அவள் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பெரும் பாரத்தை, அவள் சொல்லாமலேயே புரிந்துகொண்டவன். உனக்கு நான் இருக்கிறேன் என்று உணர்வுகளால் நம்பிக்கை தந்தவன். ‘அவரின்ர பிள்ளைக்கு உங்கட பெயரையோ வச்சிருக்கிறார்?’ என்று கேட்டு அவளை இலகுவாக்கியவன். இப்படியெல்லாம் அவளைத் தாங்கியவனுக்குப் பிரதியுபகாரமாக என்ன செய்து வைத்திருக்கிறாள் அவள்?
“நானும் நீங்களுமா சேர்ந்து அவரை நல்லாவே காயப்படுத்திட்டோம் அண்ணா.” என்றாள் தன்னை மறந்து தவித்த குரலில்.
அதிர்வுடன் திரும்பித் தங்கையைப் பார்த்தான் ரஜீவன். அவள் சுயத்தில் இல்லை என்று புரிந்தது. எதிர்புறத்தில் முகத்தைத் திருப்பியிருந்தாலும் அலைபாய்ந்துகொண்டிருந்த விழிகள் அவளின் மனநிலையைச் சொல்லின.
“அண்ணி அவருக்கு முன்னால உங்களக் கேள்வி கேட்டதே பிழை எண்டா எல்லாருக்கும் முன்னால வச்சு அவரிட்ட நான் கதைச்சது மகா பிழை அண்ணா. அப்பிடிக் கதைச்சே இருக்கக் கூடாது. எவ்வளவு பெரிய அவமானம். எப்பிடித் தாங்கினாரோ தெரியேல்ல. அப்பகூட ஒண்டுமே சொல்லாம பேசாமத்தான் இருந்தவர். என்ன செய்து அவரைச் சமாதானம் செய்யப் போறனோ தெரியா.” என்று சொன்னபோது, கண்ணீர்த் துளி ஒன்று உருண்டு கன்னத்தை நனைத்துக்கொண்டு ஓடியது.
“உங்களக் கெஞ்சிக் கேக்கிறன் அண்ணா, இனியும் அவரோட சண்டைக்குப் போகாதீங்க, பிளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.
அசையக்கூட மறந்தவனாக அவளையே பார்த்திருந்தான் ரஜீவன்.


