“எனக்கு உங்களப் பாக்கோணும்.”
ராதாவின் இந்தக் குறுந்தகவல் புலனத்தின் வாயிலாக மோகனனுக்கு வந்து இரண்டு நாட்களாயிற்று. வந்ததிலிருந்து அதையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
இறுக்கம் படர்ந்துவிட்ட மனது எதற்கும் இளகிக்கொடுக்க மாட்டேன் என்று நின்றது. இருந்தபோதிலும் அந்த மூன்று வார்த்தைகளும் அவன் நெஞ்சுக்குள் புகுந்து என்னென்னவோ செய்துகொண்டிருந்தன.
இத்தனை கலவரங்கள் அவனுக்குள் நிகழ்ந்தபோதிலும் பிடிவாதமாகப் பதில் போடவில்லை அவன்.
அப்படி, அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமலேயே இருக்க, ராதாவின் மனத்தில் தவறு செய்துவிட்டோம் என்கிற உணர்வு அதிகரித்துக்கொண்டே போயிற்று. என்ன செய்துவைத்திருக்கிறாய் என்று மனது அரிக்கத் தொடங்கியது.
அது, இனி முடியாது, அவனைப் பார்த்துப் பேசியே ஆக வேண்டும் என்கிற நிலைக்கு அவளைக் கொண்டுவந்து நிறுத்தியது.
அதுவரையில் நானாகப் போய் எப்படி அவனைப் பார்ப்பது என்று தயங்கிக்கொண்டு இருந்தவள், அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் புறப்பட்டாள்.
தினமும் காலையிலும் இரவிலும் அவன் செல்லமுத்து நகைமாடத்துக்குப் போவான் என்று ஒருமுறை யாழினி சொன்னது நினைவில் இருந்தது. அன்று சனிக்கிழமையாகவும் இருந்ததில் காலையிலேயே ஸ்கூட்டியை நகைமாடத்துக்கு விட்டாள்.
அங்கு அவன் இல்லை. ராஜநாயகம்தான் இருந்தார். அவளுக்கு அவரை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மோகனனைத் தேடி வந்தது மறந்துவிட, “சொறி மாமா!” என்றாள் எழும்பாத குரலில்.
ஒன்றும் சொல்லாமல் சற்றுக்கு அவளைப் பார்த்தவர், “சாப்பிட்டியாம்மா? இல்ல, ரெண்டு தோசைக்குச் சொல்லவா?” என்று வினவினார்.
அவள் விழிகள் கலங்கிப் போயிற்று. அவரின் பெருந்தன்மை சுட்டது. “உங்களுக்கு முன்னால நான் அப்பிடியெல்லாம் கதைச்சிருக்கக் கூடாது மாமா. உண்மையா சொறி. கோபத்தில யோசிக்காம…” அன்றைய தன் நிலையை விளக்க முடியாமல் அவளுக்குப் பேச்சுத் திக்கியது.
“அப்ப, நீ கதைச்சதெல்லாம் பிழையாம்மா?” நிதானமாகக் கேட்டார் அவர்.
இவர் என்ன சொல்கிறார்? அவள் கதைத்தது சரி என்கிறாரா? அந்தக் கேள்வியை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நின்றாள் அவள்.
அவள் விழிப்பதைக் கண்டு சிரித்தவாறு, “நீ ஏன் இப்ப இங்க வாறேல்ல?” என்று வினவினார் ராஜநாயகம்.
“அது மாமா…” இந்தக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை.
இப்போதெல்லாம் மூக்குக் கண்ணாடி அணிந்தாலும் அவரால் முன்னர் போன்று நிறைய நேரத்துக்குக் கணக்கு வழக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க முடிவதில்லை. அதனால், தினமும் மாலையில் வந்து அதைச் செய்து கொடுப்பது அவள்தான்.
மோகனன் வந்ததும், அந்த நேரம் அவன் மீதிருந்த வெறுப்பில் தானாகவே ஒதுங்கிக்கொண்டிருந்தாள். இப்போது இதை எப்படி அவரிடம் சொல்வாள்?
“மோகனனாலயாமா?” என்று கேட்டவர் தானே பதிலையும் சொன்னார். “அவன் வீட்டு வேலையில பிஸியாகிட்டான். சும்மா ஒருக்கா வந்து பாத்துக்கொண்டு போவானே தவிர, நிண்டு கவனிக்கிறேல்ல. நீ வந்தா எனக்குப் பெரிய உதவியா இருக்கும்.” என்றார் மீண்டும்.
“சரி மாமா, இனி நானே வாறன்.” உடனேயே ஒத்துக்கொண்டவளுக்கு அவனை எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை.
அன்றைக்கு அவருக்கு முன்னாலேயே அவனிடம் அப்படிப் பேசிவிட்டு இன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கேட்பாள்?
“என்னம்மா? ஏதும் கேக்கோணுமா?” அவளைக் கவனித்து அவரே கேட்டார்.
“அது… அவர்… மோகனன்… அவரப் பாக்கத்தான் வந்தனான்.” கோர்வையாகக் கேட்க முடியாமல் தடுமாறினாள் ராதா.
அவருக்கு அது வித்தியாசமாக இல்லை போலும். “அவன் வாங்கின வீட்டுலதான் நிக்கிறான். நீ சுந்தரத்திட்டக் கேளு, இடம் சொல்லுவார். போய்ப் பார்.” என்றார் வெகு சாதாரணமாக.
சரி என்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்து, சுந்தரத்திடம் கேட்டுக்கொண்டு புறப்பட்டாள்.
ஒரு வழியாக அந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தாள். டிராக்டர், பகர் வந்து போவதற்கு ஏற்ப, கழற்றிவிடப்பட்டிருந்த வேலியின் வாயிலாக இவளின் ஸ்கூட்டி நுழைந்தது.
தலையைச் சுற்றித் துணி ஒன்றைக் கட்டிக்கொண்டு, ஜீன்சை முழங்கால் வரை மடித்துவிட்டு, வேலையாட்களோடு தானும் ஒருவனாக நின்று சீமெந்து குழைத்துக்கொண்டு இருந்த மோகனன், யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.
ஒரு தென்னையின் கீழே ஸ்கூட்டியை கொண்டுவந்து நிறுத்தினாள் ராதா. அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு கைகால்கள் எல்லாம் மெலிதாக நடுங்கின. ஏன் வந்தாய் என்று கேட்டு, ஓடு என்று துரத்திவிடுவானோ என்று பயந்தாள்.
அதைவிட, ஒரு பழைய வீட்டை வாங்கித் திருத்துகிறானாம் என்று கேள்விப்பட்டபோது, என்னவோ பெயிண்ட் அடித்து, வீட்டைத் துப்பரவு செய்து, காடு மாதிரி வளர்ந்து நிற்கும் புற்களை வெட்டுவானாக இருக்கும் என்று சாதாரணமாகத்தான் நினைத்திருந்தாள்.
ஆனால் இங்கோ, மணல், சல்லி என்று ஒரு பக்கம் குவித்து வைக்கப்பட்டிருக்க, இன்னொரு பக்கம் சீமெந்து பாக்குகள் மழையில் நனையாதபடிக்கு ஒரு தட்டியின் கீழ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஒரு பக்கம் இருவர் கற்கள் அரிந்துகொண்டு இருந்தனர். ஏற்கனவே அரிந்த கற்கள் வெயிலில் பரப்பி, காயவைக்கப்பட்டிருந்தன. பகர் ஒன்று என்னவோ செய்துகொண்டிருக்க, ஒரு பக்கம் சுவர் எழும்பிக்கொண்டு இருந்தது.
இதில், அந்த வீட்டிலிருந்து பிடுங்கப்பட்ட கதவுகள், யன்னல்கள், கம்பிகள், குழாய்கள் என்று ஒரு பக்கம் மலைபோல் கிடந்தது.


