இதையெல்லாம் ஒருவித மலைப்புடன் பார்த்து முடித்தவளின் விழிகளில், ‘Chity Construction and Engineering’ என்று பெரிதாக பெயர் பொறிக்கப்பட்ட பலகை, வீதியில் போகிறவர்கள் வருகிறவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இரண்டு கம்பங்களில் பொருத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் பட்டது. அதென்ன, ‘Chity?’ என்கிற யோசனை உள்ளே ஓடிற்று.
இதற்குள், அங்கிருந்த கிணற்றில் தன் கைகால்களை நன்றாக அலம்பிக்கொண்டு அவளிடம் வந்தான் அவன். தலையில் கிடந்த துண்டைக் கழற்றி கைகளைத் துடைத்தபடி அவளைப் பார்த்தான்.
அன்றைக்குப் பிறகு இன்றைக்குத்தான் காண்கிறாள். இன்னுமே அந்த முகத்தில் அன்றைய நாளின் இறுக்கம் மிச்சம் இருப்பது போலிருந்தது. அவன் விழிகளை மேற்கொண்டு பார்க்க முடியாமல் செய்த தவறு நெஞ்சுக்குள் நின்று உறுத்தியது. இருந்தும், “உங்களோட கதைக்கோணும்.” என்றாள் தயக்கம் நிறைந்த குரலில்.
“கதைக்க இன்னும் என்ன இருக்கு?” என்றான் அவன் இளக்கம் மருந்துக்கும் இல்லாத குரலில்.
அவளை நிலைகுலையச் செய்ய அதுவே போதுமாக இருந்தது. முகமெல்லாம் என்னவோபோல் ஆகிவிட, “பிளீஸ்…” என்றாள் உதடுகளை மாத்திரம் அசைத்து. சத்தம் தொண்டைக்குள்ளேயே நின்றுகொண்டது.
ஒருகணம் அவள் முகத்தைப் பார்வையால் அளந்துவிட்டு, சற்றுத் தள்ளியிருந்த பலா மரத்தடிக்கு நடந்தான் அவன். அங்கிருந்த மரக்குற்றிகள், சற்றுப் பெரிய கற்கள் எல்லாம் அந்த இடத்தை அமர்வதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லின.
சற்று விசாலமான மரக்குற்றியை அவளுக்குக் காட்டிவிட்டு, தானும் ஒன்றில் அமர்ந்துகொண்டான்.
இருவருக்குமிடையில் பெரும் மௌனம். அவனோடு கதைக்க என்று இவ்வளவு தூரம் அவனைத் தேடிக்கொண்டு வந்தவளுக்கு அவன் முன்னிலையில் வாயே திறக்க முடியவில்லை.
மெல்ல அவனைப் பார்த்தாள். அவனும் அமர்ந்திருந்த குற்றியிலேயே பின் பக்கமாக கைகள் இரண்டையும் ஊன்றிக்கொண்டு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
வேகமாக விழிகளை அகற்றப்போனவளின் பார்வையில் அப்போதுதான் அவன் கையில் இருந்த காயம் பட்டது. “என்ன இது? இப்பிடிக் கீறி வச்சிருக்கிறீங்க?” என்றாள் பதறிப்போய்.
இருந்த நிலையைச் சற்றும் மாற்றாது, அவளின் பார்வை சென்ற இடத்தைக் கவனித்து தலையை மட்டும் திருப்பித் தானும் பார்த்தான் மோகனன்.
வலப்பக்கத் தோளிலிருந்து இறங்குகிற இடத்தில் சற்று ஆழமாகச் சிராய்த்து, இரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. கொஞ்ச நேரமாக அந்த இடத்தில் எரிச்சல் இருந்ததுதான். வேலையில் பொருட்படுத்தாமல் விட்டிருந்தான். இப்போதும் கையில் இருந்த துண்டினால் இலகுவாக அதைத் துடைத்தான்.
“உங்களுக்கு என்ன விசரா? இதுலையே எவ்வளவு தூசு தும்பு இருக்கும். அதாலயே துடைக்கிறீங்க?” என்றபடி, பட்டென்று எழுந்துவந்து அந்தத் துண்டினைப் பறித்து எடுத்தாள் ராதா.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ரகு! அந்த முதலுதவிப் பெட்டியக் கொண்டுவா.” என்று, அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெடியனை ஏவினான் மோகனன்.
அவனும் ஓடிப்போய் வீட்டுக்குள் இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான். அதற்குள் இருந்த பஞ்சை எடுத்து, அதில் டெட்டோலை ஊற்றி, காயத்தைத் துடைக்க முயன்றான் மோகனன்.
அவனே அவனுக்கு வைத்தியம் பார்ப்பது மனத்தை எங்கோ தாக்க, “தாங்க, நான் துடைச்சு விடுறன்.” என்று அவனை இன்னும் நெருங்கினாள் ராதா.
“நோ பிளீஸ்!” அவசரமாகக் கையை நீட்டி அவளைத் தடுத்தான் அவன்.
அவள் முகம் சுருங்கிப் போனது. ஒரு உதவிதான் செய்ய நினைத்தாள். அதற்கு இப்படியா விழுந்தடித்துக்கொண்டு தடையிடுவது?
அவன் மீண்டும் தனக்குத்தானே துடைக்க முயல, அவளுக்குக் கோபம் வந்தது. அவன் தடுத்ததையும் மீறி அவன் கையிலிருந்த பஞ்சைப் பறித்துத் தானே துடைத்தாள்.
“என்ன செய்றீங்க எண்டு விளங்குதா?” தன் புஜத்தைப் பற்றித் துடைத்துக்கொண்டு இருந்தவளைப் பார்த்து அதட்டினான் அவன்.
அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது. கண்ணையும் கருத்தையும் காயத்தில் குவிக்க முயன்றபடி, “சில நேரங்கள்ல என்ன செய்றன், என்ன கதைக்கிறன் எண்டு தெரியாம நடந்திடுவன்தான். ஆனா இப்ப தெரிஞ்சுதான் செய்றன்.” என்றாள் அவள்.
அப்போதும் அவன் பார்வையில் மாற்றமில்லை. அவளுக்கும் தன் செய்கையில் மெல்லிய அதிர்வுதான். அதில் அவனைப் பார்க்கவும் முடியவில்லை. “நீங்க இப்பிடி என்னையே பாத்தா நான் காயத்தைப் பாக்கிறேல்லையா?” என்றாள் முணுமுணுப்பாக.
கையை அவளிடமே விட்டுவிட்டு பார்வையை அகற்றிக்கொண்டான் அவன். நன்றாகத் துடைத்து, துப்பரவு செய்த பிறகு மீண்டும் டெட்டோலால் ஒற்றிவிட்டாள்.
“காய விடுங்கோ. அப்பதான் ஆறும்.” என்றுவிட்டு அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தவள், “சொறி!” என்றாள் அவன் முகம் பார்த்து.
“உண்மையா உங்களை நோகடிக்க நினைக்கேல்ல. ஆனா நோகடிச்சிட்டன். அப்பிடி நான் நடந்திருக்கக் கூடாது. ஆனா, எப்ப என்ன பிரச்சினை வந்தாலும் அது எல்லாத்துலயும் என்ர பெயர் அடிபடுதே எண்டுற கோபம். அண்ணா அண்ணிக்கிடையில என்னால பெரிய சண்டை வந்திடுமோ எண்டுற பயம் எண்டு…” என்று சொல்லிக்கொண்டிருந்தவளை, “நான் உங்களிட்ட எந்த விளக்கமும் கேக்கேல்லையே.” என்று இடைமறித்தது அவனுடைய அமைதியான குரல்.
அது என்னவோ முகத்தில் அறைந்தது போலாகிற்று. அவள் விழிகள் கரகர என்று கண்ணீரைக் கன்னத்தில் இறக்க ஆரம்பித்தன. ஒரு நொடி அவளையே பார்த்தவன் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவன் விழிகளில் சிவப்பு ஏறிற்று. தாடை இறுகியது. கை நரம்புகள் புடைப்பது அவளுக்கே தெரிந்தது. பயந்துபோனாள் ராதா.
“இல்ல இல்ல. நான் அழ இல்ல. நீங்க கோபப்படாதீங்க.” அவசரமாகச் சொன்னவள் அதைவிட அவசரமாகத் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
ஒருவித அதிர்வுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன். “இப்பிடி எல்லாத்துக்கும் கோபப்படாம நீங்களும் கொஞ்சம் என்னைப் பற்றியும் யோசிக்கோ.” என்றாள் அவள்.
அவன் புருவங்கள் சுருங்கிற்று.
“எப்ப பாத்தாலும் நீங்களும் அண்ணாவும் முட்டிக்கொண்டு நிக்கிறீங்க. நான் அண்ணாக்காகக் கதைப்பேனா, இல்ல உங்களுக்காகக் கதைப்பேனா? உங்க ரெண்டு பேர்ல ஆர் காயப்பட்டாலும் எனக்கு வலிக்குது. என்னை என்ன செய்யச் சொல்லுறீங்க? அண்ணி மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் நடுவில நிண்டு அல்லாடச் சொல்லுறீங்களா?” என்றாள் கலங்கிய விழிகளோடு.
அசைய மறந்தவனாக அவளையே பார்த்தான் அவன். அந்த விழிகளில் தெரிந்த தவிப்பு அவன் நெஞ்சுக்குள் புகுந்து என்னவோ செய்ய ஆரம்பித்தது.
“அவர்தான் யோசிக்காம கதைக்கிறார் எண்டா நீங்களும் வாடிவாசல்ல நிக்கிற காளை மாதிரி முட்டுறதுக்கு ரெடியாவே நிக்கிறீங்க. என்ன செய்வீங்க ஏது செய்வீங்க எண்டெல்லாம் எனக்குத் தெரியாது. இனி அண்ணாக்கும் உங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது! அதுக்கு நீங்கதான் பொறுப்பு.” என்றாள் அவள் உத்தரவாக.


