அன்று, செல்வராணிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்திருந்தது. மோகனன் வந்துவிட்டான் என்கிற நிம்மதி, அடுத்த வாரமே நடக்கவிருந்த யாழினியின் திருமணம், அது முடிந்ததும் மோகனனுக்கும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் முடித்து வைத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் என்று பலதும் சேர்ந்து அவரை ஆழ்ந்து உறங்க விடவில்லை.
இன்னும் நேரம் இருக்கிறதே என்று எண்ணினாலும் விழித்தே கட்டிலில் கிடக்க முடியவில்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு தேநீரை அருந்திவிட்டு, வேலைகளைத் தொடங்கச் சரியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு அவர்களின் அறையை விட்டு வெளியே வந்தார்.
அப்படி அவர் வருவதற்கும் வீட்டின் கதவு வெளிப்பக்கம் இருந்து சத்தமே இல்லாமல் திறப்பதற்கும் சரியாக இருந்தது.
பயந்துபோனார். இந்த நேரத்தில் இது யார்? அதுவும் வெளியிலிருந்து வருகிறார்கள் என்று பார்க்க, ‘ட்ரெயினிங் செட்’ ஒன்றில் வியர்த்து, உடல் முழுவதும் நனைந்திருக்க, சத்தமே இல்லாமல் வீட்டுக்குள் வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு இருந்தான் மோகனன்.
“தம்பி.” என்றார் மெல்லிய குரலில்.
வேகமாகத் திரும்பினான் அவன். “எழுப்பிட்டனா அம்மா? சத்தம் வராமத்தான் திறந்தனான். எண்டாலும் கேட்டுட்டுது போல.” என்றான் மன்னிப்பைக் கோரும் குரலில்.
“இல்லையில்லை. நானா எழும்பி வரத்தான் நீயும் வாறாய்.” என்றவருக்கு மனத்தில் சஞ்சலம்.
என்னவோ விருந்தினர் வீட்டுக்கு வந்த இடத்தில், அவர்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டது போன்ற தொனி அவனிடம்.
“ரெண்டு நாளா ஸ்போர்ட்ஸ் ஒண்டும் செய்யேல்ல. அதுதான் ஓடிட்டு வாறன்.” என்றபடி அவன் தன் அறையை நோக்கித் திரும்ப, “எத்தின மணிக்குப் போனனீ?” என்றவரின் பார்வை கடிகாரத்துக்குச் சென்றது.
அது ஐந்தரை என்று காட்டியது.
“நாலுக்கு இஞ்ச இருந்து வெளிக்கிட்டன்.”
ஒன்றரை மணி நேரமாக ஓடியிருக்கிறான். “சரி, நீ குளிச்சிட்டு வா!” என்றுவிட்டு நடந்தவரின் மனத்தை ஏதோ ஒரு கலக்கம் போட்டு ஆட்டியது.
படிக்கிற காலத்தில் கூட நேரம் சென்று எழுந்து அரக்கப்பரக்கத்தான் பள்ளிக்கூடம் போவான். பல்கலைக்கழகம் போன காலத்திலும் இதே கதைதான்.
அதை முடித்தபிறகு அவனை யாரும் சென்று எழுப்பக் கூடாது. எத்தனை மணிக்கு என்றாலும் அவனாக எழுந்தால்தான் உண்டு. விதிவிலக்கு கௌசிகன் மாத்திரமே.
உடல் நோக வேலை செய்யமாட்டேன் என்றுதான் எங்கும் வேலைக்குப் போனதில்லை. கௌசிகன் சொல்லுகிற பொழுதுகளில் மாத்திரம் கடையைப் பார்த்துக்கொள்வான்.
அப்படியானவன் இன்று, அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, உடல் நோக ஒட்டிவிட்டு வருகிறான். அவனுடைய தேகக்கட்டும் அதன் இறுக்கமும் இப்படி எத்தனை கடின உழைப்பை அந்த உடலுக்குப் போட்டிருப்பான் என்று சொல்லிற்று. ஏன் இப்படி தன்னைத் தானே வருத்திக்கொள்கிறான்?
முன்னர் போன்று அதிகாரம் இல்லை. ஆணவம் இல்லை. அதட்டல் இல்லை. நான் என்கிற நெஞ்சை நிமிர்த்திய செருக்கு இல்லை. கேட்கிற கேள்விகளுக்கு மாத்திரம் பதில். கூடவே ஒரு விலகல்.
மகன் மாறிவிட்டான் என்று மகிழ முடியாமல் ஏன் இந்தளவுக்குத் தன் மொத்த இயல்பையும் தொலைத்துவிட்டு நிற்கிறான் என்று கலங்கினார் செல்வராணி.
காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, சுவாமி கும்பிடச் சென்றவருக்கு மனத்தின் கலக்கத்தினால் சற்றே நேரம் எடுத்திருந்தது. மனம் அமைதியடையும் வரை வேண்டிக்கொண்டு நின்றுவிட்டு வந்தபோது, குளித்து, உடைமாற்றி, புத்துணர்வோடு குசினிக்குள் நின்று மீண்டும் அதிர்ச்சி தந்தான் அவன்.
“என்ன தம்பி செய்றாய்? தேத்தண்ணி வேணுமா? ஒரு நிமிசம் பொறு, தண்ணி கொதிக்க வச்சிட்டுத்தான் போனனான். இப்ப ஊத்தித் தாறன்.” என்று அவசரம் அவசரமாகச் சொன்னவரின் பக்கம், ஆவி பறக்கும் தேநீர்க் கோப்பையை எடுத்து வைத்தான் அவன்.
“எனக்கு நான் ஊத்திட்டன். இது உங்கட டீ!”
செல்வராணிக்கு அதிர்ச்சியில் நெஞ்சு துடிப்பதையே நிறுத்திவிடும் போலிருந்தது. கிட்சனிலிருந்து தோட்டத்துக்குப் போகும் கதவு வழியாகத் தன் கோப்பையுடன் போகிறவனையே பார்த்தார்.
அவரின் விழிகள் மெலிதாகக் கலங்கிப் போயிற்று. தொண்டை அடைக்கத் தேநீரை எடுத்துப் பருகினார். மிக அருமையான டீ. நாவைக் காட்டிலும் மனம் தித்தித்தது.
சற்று நேரத்திலேயே அவன் தேநீர் ஊற்றிய செய்தி அந்த வீடு முழுவதற்கும் பரவியது.
“டீ அம்மாக்கு மட்டும்தானா அண்ணா? எனக்கெல்லாம் வராதா?” என்றபடி வந்த யாழினியின் குரலோடு, “எனக்கும் பால் வருமா சித்தப்பா?” என்று, வெள்ளைச் சீருடை அணிந்து, பள்ளிக்கூடம் செல்வதற்குத் தயாராகி வந்த மிதுனாவின் குரலும் சேர்ந்து ஒலித்தன.
“என்ர டார்லிங்க்கு இல்லாததா?” என்று அவளைத் தூக்கிக்கொண்டு போய்ச் சமையல் மேசையில் இருத்தினான். அவளைக் கேட்டு, அவள் விரும்பி அருந்தும் பதத்தில் அவளுக்குப் பாலும், யாழினிக்கு பால் தேநீரும் ஊற்றிக் கொடுத்தான்.
“உங்களுக்கு அண்ணி?” என்று கேட்டு, கல்லூரிக்குச் செல்லத் தயாராகி வந்த பிரமிளாவுக்கும் கொடுத்தான். அந்த வீட்டில் இருந்த அனைவருக்குமே அன்றைய காலைத் தேநீர் அவன் கையால்தான் கிடைத்தது. செல்வராணி இன்னுமொரு முறையும் வாங்கிப் பருகினார்.
சொட்டு விடாமல் அருந்தி முடித்ததிலேயே ராஜநாயகத்துக்கும் பிடித்திருக்கிறது என்று தெரிந்தது.
“உண்மையா நல்லாருக்கடா.” அருந்திப் பார்த்துவிட்டுப் பாராட்டினான் கௌசிகன்.
“அவனைப் பாராட்டினா மட்டும் காணாது. நீங்களும் கொஞ்சம் கிட்சன் பக்கம் வரப் பழகுங்கோ கௌசி!” சந்தர்ப்பம் கிடைத்ததும் வாரினாள் பிரமிளா.
“நான் கேக்கமுதல் செய்து தாறதுக்கு எனக்கு என்ர மனுசி இருக்கிறாள். பிறகு என்னத்துக்கு நான் பழக?” என்றான் அவன்.
“பாத்தியா மோகனன் உன்ர அண்ணாவ? வீட்டுவேல செய்யக் கள்ளம். இதுல வாய்வீரத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல. எனக்கு ஏதாவது நீ உதவி செய்ய நினைச்சா உன்ர அண்ணாக்கு கிட்சன கொஞ்சம் பழக்கிவிடு.”
தமையனைச் சிரிப்புடன் பார்த்துவிட்டு, “அண்ணா சொன்னமாதிரி அவர் கேக்க முதலே நீங்க எல்லாம் செய்திடுவீங்க அண்ணி. அதாலதான் அவர் கிட்சனுக்கு வரேல்ல. ஆனா, தேவை எண்டு வந்தா கட்டாயம் செய்வார்.” என்றான் அவன்.
தமையனை விட்டுக்கொடுக்காமல் பேசியவனின் பேச்சில் கணவன் மனைவி இருவருக்குமே புன்னகை அரும்பிற்று.
அப்போதுதான் எழுந்த பேரனுக்கு, முகம் கழுவி, உடை மாற்றிவிட்டுத் தூக்கிக்கொண்டு வந்தார் செல்வராணி. அவனைக் கண்டுவிட்டு, “நீங்க என்ன குடிப்பீங்க சேர்?” என்று கேட்டான் மோகனன்.
அவனைப் பார்த்ததுதான் தாமதம். மீண்டும் வீறிட்டபடி தகப்பனிடம் தாவினான் மதுரன்.
“டேய்! அவன் உன்ர சித்தப்பாடா? ஏன் இப்பிடிப் பேயக் கண்ட மாதிரி வீறிடுறாய்?” செல்லமாக மகனை அதட்டினான் கௌசிகன்.
“மாதிரி இல்ல அண்ணா. லைட்டா அந்தச் சாயல்தான் அடிக்குது. பிறகு எப்பிடி எங்கட மதுக்குட்டி பயப்படாம இருப்பார்? சின்னண்ணா வேற, தலைக்கு முழுகி(குளித்து), முடிய விரிச்சுவிட்டுட்டு, தாடியையும் பரப்பி விட்டுக்கொண்டு நிக்கிறதப் பாத்தா லைட்டா பத்ரகாளி பீல் வருது.” என்று வாரினாள் யாழினி.